அரவிந்தன் நீலகண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரவிந்தன் நீலகண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 நவம்பர் 2016

நம்பக்கூடாத கடவுள் - அரவிந்தன் நீலகண்டன்


ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று உப தலைப்புடன் வந்துள்ளது. தமிழ்பேப்பர் இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு

பலருக்கு ஹிந்த்துதுவம் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ள சில தடைகளிருக்கும். காரணம், தங்களுக்கு தாங்களே ஒரு நேர்மையாளன் பட்டம் தந்திருப்பார்கள். அடுத்தவன் என்ன நினைப்பானோ என்ற கவலை வேறு. தான் நம்பும் ஒரு விஷயம் உயர்ந்தது என்பதை நம்ப மறுப்பவர்கள், தான் நம்பும் சில விஷயங்களால் ஒரு தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள்.  இவர்களை மாற்றுவது என்பது எளிதல்ல. இன்னொரு வகை, ஹிந்துத்துவம் என்பதை ஒரு அடிப்படைவாத குழு என்ற வகையில் நினைப்பது. தவறான புரிதல். உண்மையில் இத்தகையவர்களே அதிகம். இதற்கு காரணம் கூட நமது பாரம்பர்யம் கற்று தந்திருக்கும் பெருந்தன்மையே. ஒரு வகையில் அவர்களும் இந்துத்துவர்களே.

பலர் நமது பாரம்பர்யம் என்பதை பக்தியோடும், புராணங்களோடும் நிறுத்திக் கொள்கின்றனர். பலருக்கு உண்மையில் நமக்கு இருக்கும் பாரம்பர்யம் எத்தகையது என்பதை பற்றிய் முழு பார்வையும் கிடையாது.  இந்த கட்டுரைகள் அதை நமக்கு கற்று தருகின்றன.


அரவிந்தன் நீலகண்டன், பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வரும் சிந்தனையாளர். எந்த ஒரு விஷயத்தையும் போகின்ற போக்கில் அள்ளி விடாமல் அதற்கான தரவுகளை பல இடங்களிலிருந்து தருவது சிறப்பு. அதற்கான உழைப்பு பெரியது. ஆச்சர்யத்தை தருவது.

02 செப்டம்பர் 2016

ஹிந்துத்துவ சிறுகதைகள் - அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்ஹிந்து தளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைப்பெயரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கதைகளின் தொகுப்பு. 

அரவிந்தன் நீலகண்டனை எனக்கு அறிமுகம் செய்தது திண்ணை இணைய தளம். அவரது பல கட்டுரகள் எனக்கு பல புதிய அறிமுகங்களை தந்துள்ளன. அவரின் கம்யூனிசம் பற்றிய புத்தகம் வெகு சுவாரஸ்யமான, விவரங்கள் நிறைந்த ஒரு புத்தகம். 

சிறுகதைகள் என்பது மிகக்கடினமான ஒரு வடிவம். பலர் அதை பலவிதமாக கையாண்டுள்ளனர். அதில் ஒரு வகை சிறுகதைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது. கல்கி மதுவிலக்கை பற்றி ராஜாஜியின் இதழ்களில் பல கதைகள் எழுதியிருக்கின்றார். அவை மிக வெளிப்படையான பிரச்சாரக்கதைகள். அவற்றில் அவர் கூறவந்த கருத்து வெகு தெளிவாக, வெளிப்படையாக வரும். பேங்கர் வினாயக்ராவ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது ஆனால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இக்கதைகள் அனைத்தும் அத்தகையவை அல்ல. ஒரே ஒரு சிறுகதையை மட்டும் அப்படி முழுக்க முழுக்க பிரச்சாரக்கதை என்று கூறலாம். மற்றவை அனைத்தும் சிறந்த சிறுகதைகள் என்ற அளவிலேயே படிக்கலாம். வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்.

14 ஜனவரி 2014

பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிசம்

ஊரில் சிறுவனாகத் திரிந்து கொண்டிருக்கும் போது, தெருமுனையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடந்தது, பக்கத்து வீட்டு அண்ணன், "டேய் வர்றியா கம்யூனிஸ்ட் கூட்டத்துல போய கல்லெறியலாம்" என்று விளையாட்டிற்குக் கேட்டுவைக்க, அன்று யாரோ நிஜமாகவே கல்லெறிந்து கலவரம் ஆனது. அப்படித்தான் கம்யூனிசம் அறிமுகம். அவர்களின் பெருங்கூட்டம் சைக்கிள்காரர்களுக்குக் கூட தொந்தரவின்றி அடிக்கடி நடக்கும். இவர்களை விடத் தீவிர கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் எங்கள் கோவில் சுவரில், மகாபாரத்தத்தைக் கொளுத்துவோம், ராமாயணத்தை எரிப்போம் என்று வந்தார்கள். நானும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஏதாவது நடக்குமா என்று காத்திருப்பேன். ஒன்றும் நடந்ததாக நினைவில்லை. 

பள்ளியில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்த நினைவு. பரிட்சைக்குப் படித்ததால் அப்போதே மறந்துவிட்டது. ஓரளவிற்கு அறிவு வந்ததும், கம்யூனிஸ்டுகள் மீது ஒரு மரியாதை வந்தது. காரணம் அவர்கள் மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள் என்பதும், தைரியமாக இறங்கி போராடுகின்றார்கள் என்பதும். தலைவர்கள் மீது எக்காலத்திலும் எந்த மரியாதையும் கிடையாது. அவர்களுக்கு பதவி மட்டும்தான் குறி.

இணையத்தில் படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது ஏகப்பட்ட புரட்சியாளர்கள் இருப்பது. அவர்களுக்கு கீ போர்ட் இருந்தால் போதும். நாலுவரி கோபமாக எழுதிவிட்டு, புரட்சி வாழ்க என்றோ அல்லது புரட்சியே இதற்கு தீர்வு என்று கூறினால் போதுமானது, முக்கியமாக தோழர் என்றழைப்பதே அனைத்தையும் விட முக்கியமானது. நாட்டில் நடக்கும் அனைத்தையும் குற்றம் சொல்ல வேண்டியது. பொதுவாக அனைவரும் முட்டாள்கள், மட்டிகள். அவர்களுக்குப் புரட்சி மூலம் ஞானஸ்தானம் அளிக்க வேண்டும். யாரையும் எவரையும் ஏதாவது ஒரு வகையில் வர்க்க எதிரியாளர்களாக்கி விடும் திறமை உண்மையில் மெச்சத்தகுந்தது. ஏதோ ஒரு வகையில் அவர்களால் ஒரு மரத்தைக் கூட வர்க்க எதிரி என்று நிரூபிக்க முடியும். இவர்களைப் படிக்கும் போது எனக்குத் தெரிந்த ஒரு பாட்டிதான் நினைவில் வருகின்றார். அவரால் முடிந்தது திட்டுவது. அனைவரையும் திட்டுவார், என்ன செய்தாலும் திட்டுவார். அதுதான் இதுவும்.