31 டிசம்பர் 2019

A Century Is Not Enought - Saurav Ganguly

Harsha: "Do you think Sachin will be more popular than you in that Kolkata Test match?"
Ganguly: "Yes, but only for those five days!"

படிக்கும் போதே அவரது குணம் தெரிகின்றது அல்லவா. தன்னம்பிக்கை. தன் மாநில மக்கள் தன்னை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை. தன் திறமை மீது கொண்ட நம்பிக்கை. புத்தகம் முழுவதும் விரவிக் கிடப்பது அதுதான். முதல் மாதம் அணியின் கேப்டனாக இருந்தவர், அடுத்த மாதம்  அணியிலிருந்தே விலக்கப்படுவது எல்லாம் கனவில் நினைக்க முடியாத விஷயம், அதைத் தாண்டி எப்படி மீண்டு வந்தார் என்பதை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

கங்கூலியின் ஆரம்ப கிரிக்கெட் வாழ்வில் பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை. பலரை போன்ற நிதானமான முன்னேற்றம், சில பல சிறப்பான ஆட்டங்கள், பல மோசமான ஆட்டங்கள். அணியின் உள்ளே வெளியே என்று சென்று கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் அணித்தலைவர் ஆன பின் வரும் நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை. 

அதுவரை இருந்த இந்திய அணி, மன்மோகன் சிங்கின் அரசாங்கம் மாதிரி. வெளிநாட்டுக்காரன் ரெண்டு கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவது. போராட்ட குணமற்ற ஒன்று.  கபில்தேவ் உண்டாக்கிய அணியின் அணுகுமுறை மாறி, உள்ளூர் குழி பிட்சுகளில் ஸ்பின்னை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தது. சச்சினை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலை. சச்சினையும் அணித்தலைவராக ஆக்கி, அவர் ஆட்டத்தையும்  கெடுத்து வைத்திருந்தது. கங்கூலி அணித்தலைவரான பின் அவர் அணியை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியிருந்தது. அதை அவர் செய்ததன் விளைவுதான் உலகக் கோப்பை. 

27 டிசம்பர் 2019

ஆப்பிளுக்கு முன் - சரவண கார்த்திகேயன்

காந்தியின் சர்ச்சைக்குரிய பரிசோதனைகளை வைத்து எழுதப்பட்ட புனைவு, ஆப்பிளுக்கு முன். தலைப்பை பைபிள் கதையிலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்நாவலை எழுதியுள்ளவர் சரவணகார்த்திகேயன். அவரது மற்ற புத்தகங்களைப் படித்ததில்லை. அவரது ஃபேஸ்புக் கருத்துக்களைப் பார்த்ததாலோ என்னவோ, அவரது எந்த எழுத்துக்களையும் படிக்க தோன்றவில்லை. ஒருவித எரிச்சலூட்டும் எழுத்துதான் இவருடையது. இருந்தும் படிக்க தோன்றியது கதையின் களம்தான். 

காந்தி மீது பலதரப்பட்ட பார்வை உண்டு. எந்தளவுக்கு அவர் புகழப்படுகின்றாரோ அதே அளவு விமர்சனமும் வைக்கப்படுகின்றது. பள்ளிப் பருவத்தில் அனைவருக்கும் அவர் ஒரு ஹீரோ. அதைத்தாண்டி பள்ளிகளில் ஏதும் கற்று தருவதில்லை. பள்ளிப் படிப்பைத் தாண்டி படிக்கும் போது மெதுவாக அவர் மீது விமர்சனங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அவர் மீது அனைவருக்கும் ஏதாவது ஒரு விமர்சனம் இருக்கும். ஹிந்துத்துவர்களுக்கு அவர் பேசும் ஒரு பக்க மதச்சார்பின்மை, திராவிடக்கட்சியினர் காந்தியார் என்று ஒரு மார்க்கமாக அழைப்பார்கள், அப்படி அழைப்பதே கடுப்பாகத்தான் இருக்கும். அவர் மீது விமர்சனம் சற்றுமில்லாத அவரது பக்தர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு. அந்த பக்தர்களையே எரிச்சலடைய வைத்த விஷயம் அவரது பாலியல் சோதனைகள்.

வெறுமனே பாலியல் சோதனை என்றால் விபரீத அர்த்தம் வருகின்றது. அவர் செய்த சோதனைகள் எல்லாம் அவர் மீதுதான், ஆனால் அந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் உயிர் உள்ளவை. அவரது பேத்தி முறை கொண்ட மநு காந்தி அவருடன் இந்த சோதனைகளில் பங்கு பெற்றுள்ளார். அவரை மையமாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. 

26 ஜனவரி 2019

பொண்டாட்டி நாவல் - அராத்து

ஃபேஸ்புக்கில் சிலர் பதிவுகளை பின்தொடர்வதில் பல அனுகூலங்கள், எந்த புத்தகம் ஓசியில் கிடைக்கும், எதற்கு டிஸ்கவுண்ட், புதிய புத்தங்களைப் பற்றிய குறிப்புகள் போன்றவற்றைதெரிந்து கொள்ளலா. ஆன்லைனில் மட்டுமே புத்தகம் வாங்கும் போது இது போன்ற பதிவுகளே நமக்கு துணை. ஜெயமோகன், ஆர்.வி, பா.ரா, ஹரன்பிரசன்னா என்று பலரின் பரிந்துரைகளை நம்பி  புது / தெரியாத தலைப்புகளில் வரும் புத்தகங்களை   வாங்குவது வழக்கம். சாருநிவேதிதாவின் பரிந்துரைகளை ஓரளவிற்கு நம்பலாம் என்ற எண்ணம் இருந்தது. புயலிலே ஒரு தோணி, கரமுண்டார் வூடு அவரின் அறிமுகம். அவரது நண்பர் அராத்து எழுதிய பொண்டாட்டி நாவலுக்கு நோபல், ஆஸ்காரிலிருந்து கலைமாமணி வரை அனைத்து விருதுகளும் கிடைக்கும் என்று புகழ்ந்து தள்ளியிருந்தார். அப்படிப்பட்ட புத்தகத்தை படிக்காமல் விட்டால் வாசகனாக இருந்து என்ன பயன் என்று கிண்டில் அன்லிமிட்டடில் படித்தேன். 

இனி எவன் பரிந்துரையும் நம்பக்கூடாது என்ற எண்ணத்தை தந்துவிட்டது. இதற்கு முன்னால் ஒளிர்நிழல் என்ற ஒரு சூடு, இப்போது இது. முதல் பத்து பக்கங்களுக்குளே தூக்கம் சுழட்டியடித்தது. எப்புத்தகத்தையும் பாதி படித்துவிட்டு விடும் வழக்கமில்லை. எப்படியும் முழுவதையும் படித்துவிடுவது வழக்கம். எப்படிப்பட்ட மொக்கையாக இருந்தாலும் சரி. பேருந்தில் செல்லும் போது வழக்கமாக தூக்கம் வராது. படிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, எழுத்துகள் குதிக்க ஆரம்பித்துவிட்டது. பின் நவீனத்துவ நாவல் இல்லையா, எழுத்துக்கள் எல்லாம் சிறிது சிறிதாக உதிர்ந்து, மொபைலும் விழுந்து, பல நாள் கழித்து பேருந்தில் நல்ல தூக்கம். 

முயற்சியில் சற்றும் மனந்தளராத நான் அடுத்த நாள் இழுத்து பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.