27 மார்ச் 2014

கணேஷ் - வசந்த் கதைகள் - 1

என்னடா மறுபடியும் சுஜாதாவா என்பவர்களுக்கு, சாரி, என்ன செய்வது மனநிலையை பொறுத்துதான் படிக்கும் புத்தகமும் இருக்கும். ஜாலியான, கலகலப்பான புத்தகங்களை படிக்கலாம் என்பதால் சுஜாதா மட்டுமே மேஜையில்.

சுஜாதாவின் பிரபல நாயகர்கள் கணேஷ் - வசந்த். சீரியசான ஒரு சீனியர், அவனுக்கு ஜாலியான ஒரு ஜூனியர். ஏதோ ஆங்கில நாவலாசிரியரின் கதபாத்திரங்களின் இன்ஸ்ப்ரேஷன் என்று ஒரு வதந்தி கூட உண்டு. அவர்கள் தோன்றும் அனைத்து கதைகளும் சிறப்பானவை என்று கூற முடியாது. பெரும்பாலான கதைகள் பல பத்திரிக்கைகளுக்கு தொடர்கதைகளாக எழுதப்பட்டவை. பத்திரிக்கைகளின் தரத்தை பொறுத்தும் கதையின் தரம் வேறுபடும்.

உயிர்மை அவரின் பெரும்பாலான எழுத்துக்களை தொகுத்துள்ளது. அதில் குறுநாவல் வரிசையில் இது மூன்றாவது தொகுதி, கணேஷ் - வசந்த் கதைகளில் முதல் பகுதி. அதில் உள்ள கதைகள் பற்றி இனி

22 மார்ச் 2014

பள்ளிகொண்டபுரம் - நீல பதமநாபன்

திருவனந்தபுரத்தை மையமாக வைத்து நீல.பத்மநாபன் எழுதிய கதை.

அனந்தன் நாயரின் இரண்டு தினங்கள்தான் நாவல். பத்மநாபன் பள்ளிகொண்டுள்ள கோவிலில் ஆரம்பிக்கும் கதை, அனந்தன் நாயரின் வீட்டில் முடிகின்றது. அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்தநாள் காலையில் ஆரம்பிக்கும் கதை அவரின் மரணத்தில் முடிகின்றது. அடுத்த இரண்டு நாட்களும் அவரது நினைவில் சுழன்றடிக்கும் அவரது வாழ்க்கை சூறாவளிதான் கதை. மிகச்சாதரண கதையாக போயிருக்க வேண்டிய கதை, அந்த நகருடன் கொண்ட பிணைப்பினால் ஒரு நல்ல கதையாக உருவெடுத்துள்ளது.

அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி, இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவருடன் ஓடிவிடுகின்றாள். அவளின் நினைவை ஒதுக்க முடியாமல் "மருந்தை குடிக்கும் போது குரங்கை நினைக்ககூடாது" கதையாய் அவளை மறக்க முயற்சி செய்கின்றார். 

ஒரு மனிதனுக்கு தான் செய்வது என்பது என்றும் தவறாக தோன்றாது, தோன்றுவது வெகு அபூர்வம். அதோடு அவன் செய்யும் செயல் மற்றவரிடம் வேறுபட்டால், மற்றவர்களை விட ஒரு படி மேலானாதாக தோன்றினால் கேட்கவே வேண்டாம். அனந்தன் நாயருக்கு அவரின் மனைவி அவரை விட்டு ஓடிய பிறகு தனியாக வாழ்ந்து அவரின் மக்களை வளர்த்தது ஒரு பெருமையாகவும், அதன் காரணமாகவே அவருக்கு நடக்கு எதிர்மறை நிகழ்ச்சிகள் அனைத்தும் நியாயமற்றவையாகவும் தோன்றுகின்றது.

19 மார்ச் 2014

நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் வெகுநாட்கள் முன்னர் வெளிவந்தவை. சமீபகால எழுத்தாளர்களில் ஜெயமோகனை தவிர யாரையும் படித்ததில்லை. காரணம் ஒரு தயக்கம், எப்படி இருக்குமோ என்று. ஆர்வி சிபாரிசினால் பெருமாள் முருகனின் இப்புத்தகத்தை வாங்கினேன்.

சினிமா தியேட்டர். தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். டூரிங் டாக்கிஸில் ஆரம்பித்து மல்டி ப்ளெக்ஸில் நிற்கின்றது. எங்கள் ஊரில் எங்களது நிலத்தில் ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. நான் மிகச்சிறுவனாக இருந்த போது போன நினைவு வெகு மங்கலாக வருகின்றது. அப்பாவுடன் பல படங்களுக்கு போயிருக்கின்றேன். சிறிய ஒரு அறையில் பெஞ்சு / சேர் (நினைவில்லை), மண் சுவர் தடுப்பிற்கு அந்தப்பக்கம் தரை டிக்கெட். எங்கள் நிலம் என்பதால் சினிமா ஓசி. 

அதே தியேட்டர் நகர்ந்து ஊருக்குள் வந்தது. சேர், பெஞ்ச் என்று. இப்போது டிக்கெட் வாங்க வேண்டியிருந்தாலும், சலுகையால் மெயின் கேட் வழி உள்ளே போய்விடுவோம். ஒரு முறை அதிக ஆர்வத்தில் சென்று, முதல் ஷோவின் க்ளைமேக்ஸ் காட்சியை ப்ரொஜெக்டர் ரூமின் ஓட்டை வழியாக பார்த்து கொண்டிருந்தேன். ராஜ சின்ன ரோஜா. சினிமாவிற்கு போவதே பாப்கார்னும், ஐஸ்கீரீமும் சாப்பிடத்தான். ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டுமானால் பக்கத்து ஊர் தியேட்டருக்கு போக வேண்டும், கொஞ்சம் புதிய படம் வரும். தியேட்டரின் திரை தூக்குவதை பார்க்கவும் அப்போது ஒலிக்கும் இசையை கேட்கவுமே எப்போதும் சீக்கிரம் போக வேண்டும் என்று விரும்புவேன். சைட் ஸ்பீக்கரில் திடீர் என்று கேட்கும் ஒலி எப்போதும் குஷிதான்.

15 மார்ச் 2014

கொலையுதிர் காலம் - சுஜாதா

பரபரபரபரபரபர

மேற்கண்ட வரியை சுமார் அத்தியாத்திற்கு ஒன்று என்று படித்துக் கொள்ளவும். அத்தனை பரபரப்பு. நேற்று இரவுதான் வந்தது, பேய்க்கதை என்பதால் இரவில் படிக்காமல் பகலில் படித்தேன். இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்துவிடலாம். 

சுஜாதாவின் வழக்கமான கணேஷ் வசந்த் கதைகளில் எனக்கு தெரிந்து இதுதான் செம விறுவிறுப்பு. அமானுஷ்ய கதைகள் என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும். அதுவும் சுஜாதாவின் கதை என்றால் இன்னும் வேகம்.

லீனா வியாச குடும்பத்தின் வாரிசு. அவளது பதினெட்டாம் வயதில் குடும்ப சொத்துக்கள் அனைத்தும் அவளின் சித்தப்பா குமார வியாசரிடமிருந்து வர வேண்டும். அதை சரிபார்க்க லீனாவின் காதலனால் அனுப்பப்படும் கணேஷ் வசந்த் அங்கு விபரீத சூழலில் மாட்டிக்கொள்கின்றனர். லீனா மீது ஆவி இறங்கி ஒருவனை அடித்து ரத்தம் குடித்தது என்று குமார வியாசன் சொல்வதை ஆராய்வதில், அவர்கள் கண்ணிற்கும் அந்த ஆவி தரிசனம் கிடைக்கின்றது. மற்றொரு கொலை. 

08 மார்ச் 2014

வசந்த் வசந்த் - சுஜாதா

ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு தளத்தை எடுத்துக் கொள்ளும் சுஜாதா இக்கதைக்கு எடுத்துக் கொண்டது சரித்திரம்.

சரித்திர பேராசிரியரின் மகளுக்கு ரூட் போடும் வசந்த், அப்பேராசிரியரின் தொலைந்து போன கட்டுரையை தேடி போய், இக்கதையை ஆரம்பித்து வைக்கின்றனர். வழக்கம் போல ஆக்‌ஷனை வசந்தும், லாட்ரல் திங்கிங்கை கணேஷும் பிரித்துக் கொள்கின்றனர்.  இந்த கதையில் வசந்திற்கு ஆபத்து கொஞ்சம் ஓவர் டோஸாக் போய், சினிமா கதையாக மாறிவிட்டது.

அதிகம் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாத கதை. குற்றவாளிகளுக்கு தேவையில்லாத அந்த கட்டுரையை ஏன் திருட வேண்டும் என்ற கேள்வியை கேட்டாலே கதை ஓவர். கட்டுரையை வைத்து கதையை எழுத நினைத்து, பின்னால் மனசு மாறி கதையை வேறு எங்காவது ஓட்டிச் சென்றிருக்க வேண்டும். கடைசி வரை முடிவை யூகிக்க முடியாமல்தான் கதை நகர்த்தியிருக்கின்றார். 

05 மார்ச் 2014

விடிவதற்குள் வா! - சுஜாதா

ஆழி சூழ் உலகில் பல விஷயங்களிருந்தாலும் அதில் வரும் முக்கிய விஷயமான கிறிஸ்துவ மத மாற்றம் சம்பந்தமான உரையாடல்கள் அதிகம் கவர்ந்தது. கிறிஸ்துவர்களை தவிர மற்ற மதத்தினர் அவர்கள் மதத்தை பற்றி அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. பேசுவார்கள், பரஸ்பர ஆர்வத்தை பொறுத்து. கோவில்களில் அல்லது பண்டிகை நாட்களில் இது போன்றுதான் இருக்கும். ஆனால் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் போதனை செய்யும் பல கிறிஸ்துவர்களை கண்டுள்ளேன். போதனை, தங்கள் மதத்தின் சிறப்பு, அவர்களது பெருமை. அதோடு இருந்தால் பரவாயில்லை மற்றவர்களை வம்பிழுப்பதுதான் பிரச்சினை.

எனது ஊரில் இப்போது ஒவ்வொரும் மணிக்கும் பைபிள் வசனம் ஒலிப்பெருக்கி வழியே ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் என் வீடு வரை கேட்கின்றது. அனுமதி இலவசம். எங்கள் கோவில் ஊருக்கு வெளியே மலையடிவாரத்திலிருக்கின்றது. பெரும்பாலும் யாரும் வருவதில்லை, சனிக்கிழமைகளில் ஒன்றிரண்டு பேர் வருவதுண்டு. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் நல்ல கூட்டமுண்டு. இந்த கூட்டம் கண்ணை உறுத்தி அங்கு சர்ச் கட்ட இடம் வாங்கி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது. இது போன்று பல கோவில்களுக்கு அருகில் கட்டப்பட்ட சர்ச்சுகளின் கதைகள் ஏராளம்.