சுகாவின் புத்தகங்களை படித்திருப்பவர்களுக்கு பாட்டையா, சினிமா விரும்பிகளுக்கு நிரந்தர முதல்வர், பால் ஹனுமான் தள வாசகர்களுக்கு நவீன நளன், பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகங்களை படித்திருப்பவர்களுக்கு நல்ல எழுத்தாளர் என்று பலரால் பலவிதமாக அறியபடும் மணி, பாரதிமணி அவர்களின் புத்தகம். பல நேரங்களில் பல மனிதர்கள் தொகுப்பில் வந்த கட்டுரைகளுடன் பல புதிய கட்டுரைகளையும் சேர்த்து இதுதான் எனது கடைசி புத்தகம் என்று வெளியிட்டுள்ளார். பலிக்காமல் போகக்கடவது......
ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு வேறுவிதமாக பரிச்சியமான பலரைப் பற்றிய தகவல்களை கூறுவதுடன் பாரதிமணி என்னும் ஒரு மகத்தான மனிதரைப்பற்றியும் நமக்கு கூறுகின்றது. முதலில் அவர் காட்டும் பிரபலமனிதர்களின் சித்திரங்கள் பல புதியவை, சிலரை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள உதவும். நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ஷேக் ஹசீனா, பிர்லா, எம்.ஜி.ஆர், அண்ணாதுரை என்று நீளுகின்றது. ஒவ்வொருவருடன் அவருடைய சந்திப்புகள் அனைத்தும் சுவாரஸ்யங்கள், அதைப்பற்றி எழுதி படிப்பவர்களின் அனுபவத்தை கெடுப்பதாயில்லை, படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தனிமனிதனாக அவரைப் பற்றி கொஞ்சம் கூறியிருந்தாலும் அவர் மீது ஒரு பெரு மதிப்பு வருகின்றது. ஒரே ஒரு கட்டுரை போதும், அவரது திருமணத்தைப் பற்றிய கட்டுரை. கநாசுவின் மகளை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார், திருமண செலவு அவருடையது. கடன் வாங்கி திருமணம். அதன் பின் அவருடைய பிரச்சினைகள், அவற்றை எதிர் கொண்டவிதம் அபாரம். அது போன்ற ஒரு துணிவு வரவேணும் என்றால் மனதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். அவரது தொழிலைப் பற்றி நிறையவே கூறியிருக்கின்றார். கொஞ்சம் அசந்தால் சுழலில் இழுக்கும் இடத்தில் ஜாலியாக கடந்து வந்திருக்கின்றார்.