கரிசல் காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரிசல் காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 பிப்ரவரி 2021

அஞ்ஞாடி - பூமணி

காவல் கோட்டம், ஆழி சூல் உலகு வரிசையில் மற்றுமொரு பெரிய நாவல்.2014ம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற நாவல்.  நூற்றாண்டு கால கதையை சொல்லும் நாவல். சுமார் 1200 பக்கங்கள். படித்து முடிக்க இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்டது 

அஞ்ஞை என்றால் அம்மா என்று பொருளாம். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று பொருள் கொள்ளலாம். படித்து முடித்ததும், அம்மாடி எவ்வளவு பெரிய நாவல் என்றுதான் கூற முடிகின்றது. 

கலிங்கல் கிராமத்தில் வாழும் இரண்டு குடும்பங்களின் கதையோடு, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை தந்துள்ளார். மிகப்பெரிய நாவல். அத்தனை குடும்பங்கள். கலிங்கல் என்னும் ஊரில் வாழும் இரண்டு சிறுவர்கள் ஆண்டி - மாரி. ஆண்டி நிலபுலங்களுடன் வாழும் ஒரு சம்சாரி குடும்பத்து சிறுவன், மாரி கலிங்கல் கிராமத்து மக்களின் அழுக்குகளை வெளுக்கும் குடும்பத்து சிறுவன். இருவரின் நட்பு, மெதுவாக வளர்ந்து, பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது. அவர்களின் குடும்ப கதையோடு, அந்த பிரதேச வரலாறும் சேர்ந்து சொல்லப்படுகின்றது.

09 ஜனவரி 2017

வெக்கை - பூமணி

கரிசல் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். அஞ்ஞாடி நாவலுக்கு விருது பெற்றவர். அஞ்ஞாடி வாங்க ஆசைதான், முதலில் ஒரு சாம்பிள் பார்ப்போம் என்று வெக்கை நாவலை வாங்கினேன். ஜெயமோகன் எழுதிய ஒரு கதையை நினைவு படுத்தியது. தன் நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்த ஒருவனை வெட்டிவிட்டு சிறைக்கு செல்லும் ஒருவரை பற்றிய கதை. அதே மாதிரியான ஒரு கதை. நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்து அது முடியாமல், தன் அண்ணனை கொன்ற வடக்கூரானை கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் செலம்பரத்தின் நினைவுகளாக, அவனுக்கும் அவன் தந்தைக்குமான உரையாடல்களாக செல்கின்றது.

முதல் பாராவிலேயே கதை ஆரம்பித்து விடுகின்றது. எவ்வித ஆர்ப்பாட்டமும், வர்ணனைகளும் இல்லாத ஆரம்பம். கரிசல் மண் சார்ந்த கதை என்று சொல்வதற்கில்லை. எங்கும் நடந்திருக்க கூடிய கதை. 

தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கொஞ்சம் யூகிக்க முடிகின்றது. அவ்வளவே, எங்கும் ஜாதி பற்றிய குறிப்புகள் இல்லை. வடக்கூரானை சிதம்பரம் கொல்வதில் ஆரம்பிக்கும் கதை அவர்கள் காவல்துறையில் சரணடைய செல்வதில் முடிகின்றது. பெரும்பாலும் உரையாடல்களாகவே கதை நகர்கின்றது. சிதம்பரத்தின் தந்தையும் இதே காரணத்திற்காக ஒருவனை கொன்ற கதை, தலைமுறைகள் மாறினாலும் பிரச்சினைகள் மாறுவதில்லை என்பதை சிறிய கோடாக காட்டிவிட்டு போகின்றது.

28 நவம்பர் 2016

கூகை - சோ. தர்மன்

சோ.தர்மன் எழுதிய மற்றொரு நாவல். தூர்வைக்கு பின் வெளிவந்தது. அப்படியே தூர்வைக்கு நேர் எதிரான ஒரு நாவல். தூர்வை ஒரு ஆனந்தமான வாழ்க்கையிலிருந்து மெதுவாக சரியும் ஒரு கதை. இது போராட்டத்திலேயா வாழ்ந்து முன்னேறி மெதுவாக சரியும் ஒரு கதை. இரண்டையும் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை என்றாலும், இரண்டுமே அக்கால தலித் மக்களின் வாழ்க்கையின் பகுதிகளை காட்டுகின்றது என்ற வகையில் ஒப்பிடவே தோன்றுகின்றது.

நாவலின் மொழி இதில் வேறுவிதமாக அமைந்துவிட்டது. இரவில் மட்டும் விழித்திருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த பறவை, பகலிலேயெல்லாம் குட்டி குட்டி பறவைகளாலும் துன்புறுத்தப்படும் கூகை இங்கு தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக வருகின்றது என்று அனுமானித்துக் கொள்ளலாம். 


இதில் அனைத்து ஜாதிகளின் பெயர்களும் தெளிவாக கூறப்படுகின்றன. அவர்களுக்கிடையிலான வித்தியாசங்கள், உழக்கில் கிழக்கு மேற்கு என்பது போன்று அவர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் வந்து போகின்றன. சீனிக்கிழவனை மையமாக கொண்டு கதை போகின்றது. கூலிக்காரர்களாகவும், ஜமீன் நிலங்களிலும், மற்ற உயர் சாதி நிலங்களிலும் ஓசிக்கும் வாரச்சோற்றுக்கும் வேலை செய்யும் மக்களிடம், ஒரு பிராமணர் தன் நிலத்தை ஓப்படைத்து செல்கின்றார். அதை வைத்து முன்னேறும் அவர்கள், வேறு வகையில் மீண்டும் அதே பெரிய மனிதர்களிடம் மாட்டிக் கொள்வதுடன் கதை முடிகின்றது.

29 அக்டோபர் 2016

தூர்வை - சோ. தர்மன்

தூர்வை

தூர்வை என்ற வார்த்தையே இப்புத்தகத்தின் மூலமே கேள்விப்படுகின்றேன். தூர் என்றால் வேர் என்ற அர்த்தமுண்டு என்பது தெரியும் ஏதோ வேர் சம்பத்தப்பட்ட வார்த்தை என்று யூகித்தேன். சரிதான். அருகம்புல்லுக்கு அந்த பெயர். அருகம்புல்லின்  வேர் ஆழமானதாகவும், படர்ந்தும் இருக்கும். எளிதில் முழுவதும் அழிக்க முடியாது. மறுபடியும் துளிர்க்கும். 

ஒரு காலகட்டத்தை பற்றிய பதிவே இந்த தூர்வை. கோபல்ல கிராமம் நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் கரிசல்காட்டு வாழ்க்கையை பேசுகின்றது, கிராமத்து வாழ்க்கை. ஒரு குடும்பத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கதை வழியாக ஊரின் கதையை சொல்வது. இரண்டிலும் உள்ள முக்கிய அம்சம், கதை. எழுதும் கதைகள் வேறு, சொல்லும் கதைகள் வேறு. சொல்லும் கதைகள் சுருக்கமானவை, அதில் ஒரு சுவாரஸ்யம், சொல்பவனின் கற்பனையும் கலந்தது இருக்கும். காதுகள் வழியே சென்று நமக்கு கற்பனானுபவத்தை தரும்.

தூர்வை அது போன்று கதைகளின் கலவை. மினுத்தான் - மாடத்தி குடும்பத்தை வைத்து ஒரு உருளக்குடி கிராமத்து கதையை சுவையாக கூறுகின்றார். எழுதவில்லை. கூறுகின்றார். நாம் எழுத்து வடிவில் கேட்கின்றோம். அத்தியாயம் என்று எதுவும் கிடையாது. எவ்வித பகுப்பும் இல்லை. எங்கு எப்பகுதி ஆரம்பித்து முடிகின்றது என்பதெல்லாம் கிடையாது. அவர் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே செல்கின்றார். கேட்ட, கண்ட அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ. ஆனால் எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை.