ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று மட்டும் பலரால் அறியப்படும் தேவன் பல வித்தியாசமான முயற்சிகளையும் செய்துள்ளார். ராஜத்தின் மனோரதம் என்னும் கதை முழுக்க முழுக்க ஒரு வீடு கட்டுவதை அடிப்படையாக கொண்டது. சி.ஐ.டி சந்துரு ஒரு இரண்டு நாளில் பல இடங்களில் நடக்கும் கதையை சொல்வது, துப்பறியும் சாம்பு அனைவருக்கும் தெரியும்.
ஜஸ்டிஸ் ஜகந்நாதன், முழுக்க முழுக்க ஒரு நீதிமன்ற விசாரணையை காட்டும் ஒரு நாவல். ஒரு கொலை வழக்கை பற்றிய கதை. ஒருவன் தன் மாமனாரை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்கின்றான். அவன் கொலை செய்தான் என்று கூறும் சாட்சிகள், இல்ப்லை செய்திருக்க மாட்டான் என்று நிரூபிக்க வரும் சாட்சிகள், ஜுரிகள், நீதிபதி, வக்கீல்கள் இவர்களே பாத்திரங்கள்.
மொத்த கதையும் விசாரணைகள் மட்டும்தான். ஒவ்வொரு சாட்சியையும் அரசாங்கத்தரப்பு, எதிர்தரப்பு வக்கீல்களின் விசாரணை செய்வதை வைத்தே மொத்த கதையையும் நகர்த்திச் சென்றிருக்கின்றார். விருமாண்டிக்கு முன்னோடி. ஒரே சம்பவத்தின் பலவித வெர்ஷன்கள். கேள்வி - பதில் வாயிலாக மொத்த சம்பவங்களையும் காட்டி விடுகின்றார். குற்றவாளியா இல்லையா என்பதை கூட சொல்வதில்லை.