யானை ஒரு வலிமையான மிருகம். அதைவிட வலிமையானது அதன் மனம். யானை எதையும் மறப்பதில்லை அதன் வலிமையை கூட, அதை தேவையில்லாமல் பயன்படுத்துவதில்லை. அது தன்னை அடக்கியாள்வதை அனுமதிக்கின்றது. ஒரு சிறிய தளைக்கு கட்டுபட்டு நிற்கின்றது. ஒரு எல்லை வரை. அதை தாண்டினால் எல்லாம் தூசு. நமது இந்தியாவையும் அப்படி ஒரு யானையுடன் ஒப்பிடலாம். நமது நாட்டின் வலிமை அளப்பறியது. அந்த வலிமையை பலர் அடக்கியாண்டார்கள். இன்று வரை வேறு வேறு வடிவங்களில் அது அடக்கி ஆளப்பட்டு வருகின்றது. கடைசியில் காந்திவழியே தன் வலிமையை அறிந்து திருப்பி அடித்தது. ஆனால் இன்று மீண்டும் அடங்கியுள்ளது. எப்போது மறுபடியும் தன் வலிமையறியுமோ? அந்த யானையை கட்டியிருந்தது வெள்ளையர்களின் தளை. பயம் என்னும் இழையாலும், அதிகாரம் என்னும் இழையாலும் செய்யப்பட்ட தளை. அதன் ஊடே அதை உறுதியாக்க உதவியது நமது ஜாதியடுக்கு என்னும் மற்றொரு இழை.
வெள்ளையானை - கதையின் ஆரம்பத்தில் வரும் ஐஸ் ஹவுஸின் பெரிய பனிப்பாளத்திற்கு உவமையாக வருகின்றது. இறுதியில் கூறப்படுவது போல வெள்ளையானை என்பது ஒரு நோயுற்ற யானை. நம் நாட்டிற்கும் உவமையாகலாம்.
நம்மை முழுவதும் சுரண்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அந்த சுரண்டலின் விளைவு கொடிய பஞ்சங்கள். அத்தகைய கொடிய பஞ்சம், தாது வருட பஞ்சம் என்றழைக்கப்பட்ட பஞ்சம். 1876 - 78ல் கொடிய பஞ்சம் தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் ஒரு கோடிக்கு மேல் எனப்படுகின்றது. கணக்கில் வந்ததே ஒரு கோடி என்றால் கண்டிப்பாக அதற்கு மேலாகவே இருக்கும்.