தேசிகனின் புதிய புத்தகம். அவரது கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலனவை அவரது தளத்தில் வெளிவந்தவை. ஏற்கனவே சிலவற்றை படித்திருந்தாலும், ஆன்லைனில் படிப்பதை விட புத்தகத்தில் படிப்பது எனக்கு பிடித்திருக்கின்றது.
கட்டுரைகளை அவரே வகைப்படுத்தியுள்ளார்.அனுபவம், சுஜாதா, பொது, அறிவியல், பயணங்கள்.
முகவுரையில் கடுகு அவர்கள் கூறுவது போல யூசர் ஃப்ரெண்ட்லிதான் இப்புத்தகம். எளிமையாக சொல்வது எளிதல்ல, அதுவும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும், அதோடு மிகவும் எளிமையாக போய் தினதந்தி ஸ்டைலில் போய்விடக் கூடாது. தேசிகன் இவையனைத்தையும் சமாளித்து எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளார்.
தலைப்பு கட்டுரை என் பெயர் ஆண்டாள். ஆண்டாள் அழகான தமிழ் பெயர். அப்பெயரின் சரித்திரம் சுவாரஸ்யமானது. அனைவருக்கும் தினமும் அனைவருக்கும் பற்பல அனுபவங்கள் கிடைக்கின்றன, அதை எழுத்தில் அப்படியே கொண்டுவருவது கடினம், அப்படியே வந்தாலும் அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பாதியிலேயே தூக்கம் வந்துவிடும். இவரின் கட்டுரையில் அந்த சுவாரஸ்யம் குறையாமல் இருக்கின்றது. அனுபவத்துடன் கொஞ்சம் கைச்சரக்கும் இருக்கும்தான். அதில் எது கைச்சரக்கு என்று கண்டுபிடிப்பது வாசகனுக்கான சவால்.