14 ஜனவரி 2014

பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிசம்

ஊரில் சிறுவனாகத் திரிந்து கொண்டிருக்கும் போது, தெருமுனையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடந்தது, பக்கத்து வீட்டு அண்ணன், "டேய் வர்றியா கம்யூனிஸ்ட் கூட்டத்துல போய கல்லெறியலாம்" என்று விளையாட்டிற்குக் கேட்டுவைக்க, அன்று யாரோ நிஜமாகவே கல்லெறிந்து கலவரம் ஆனது. அப்படித்தான் கம்யூனிசம் அறிமுகம். அவர்களின் பெருங்கூட்டம் சைக்கிள்காரர்களுக்குக் கூட தொந்தரவின்றி அடிக்கடி நடக்கும். இவர்களை விடத் தீவிர கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் எங்கள் கோவில் சுவரில், மகாபாரத்தத்தைக் கொளுத்துவோம், ராமாயணத்தை எரிப்போம் என்று வந்தார்கள். நானும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஏதாவது நடக்குமா என்று காத்திருப்பேன். ஒன்றும் நடந்ததாக நினைவில்லை. 

பள்ளியில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்த நினைவு. பரிட்சைக்குப் படித்ததால் அப்போதே மறந்துவிட்டது. ஓரளவிற்கு அறிவு வந்ததும், கம்யூனிஸ்டுகள் மீது ஒரு மரியாதை வந்தது. காரணம் அவர்கள் மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள் என்பதும், தைரியமாக இறங்கி போராடுகின்றார்கள் என்பதும். தலைவர்கள் மீது எக்காலத்திலும் எந்த மரியாதையும் கிடையாது. அவர்களுக்கு பதவி மட்டும்தான் குறி.

இணையத்தில் படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது ஏகப்பட்ட புரட்சியாளர்கள் இருப்பது. அவர்களுக்கு கீ போர்ட் இருந்தால் போதும். நாலுவரி கோபமாக எழுதிவிட்டு, புரட்சி வாழ்க என்றோ அல்லது புரட்சியே இதற்கு தீர்வு என்று கூறினால் போதுமானது, முக்கியமாக தோழர் என்றழைப்பதே அனைத்தையும் விட முக்கியமானது. நாட்டில் நடக்கும் அனைத்தையும் குற்றம் சொல்ல வேண்டியது. பொதுவாக அனைவரும் முட்டாள்கள், மட்டிகள். அவர்களுக்குப் புரட்சி மூலம் ஞானஸ்தானம் அளிக்க வேண்டும். யாரையும் எவரையும் ஏதாவது ஒரு வகையில் வர்க்க எதிரியாளர்களாக்கி விடும் திறமை உண்மையில் மெச்சத்தகுந்தது. ஏதோ ஒரு வகையில் அவர்களால் ஒரு மரத்தைக் கூட வர்க்க எதிரி என்று நிரூபிக்க முடியும். இவர்களைப் படிக்கும் போது எனக்குத் தெரிந்த ஒரு பாட்டிதான் நினைவில் வருகின்றார். அவரால் முடிந்தது திட்டுவது. அனைவரையும் திட்டுவார், என்ன செய்தாலும் திட்டுவார். அதுதான் இதுவும்.