09 பிப்ரவரி 2022

நெஞ்சம் மறப்பதில்லை - சித்ரா லட்சுமணன்

சித்ரா ராமு-லட்சுமணன் திரைப்படத்துறையில் பிரபலமானவர்கள். சித்ரா லட்சுமணன், தற்போது டூரிங்க் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு யூட்யூப் சானல் நடத்தி வருகின்றார். அதில் வரும் பேட்டிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. பிரபலமானவர்களுடன், அட இவர்தானா அது என்று வியக்கும் சிலரையும் பேட்டி எடுப்பதுதான் இவரின் சிறப்பு. அதோடு பேட்டி எடுக்கும் விதமும் சிறப்பானது, குறுக்கே விழுந்து பேசாமால், விருந்தினரை பேச வைத்துப் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளி கொண்டு வருகின்றார். அவரின் பத்திரிக்கை உலக அனுபவமும், மக்கள் தொடர்பாளர் பணியும் அவருக்கு பெரிய உதவி செய்கின்றது. படத்தில் பணிபுரிந்தவரே மறந்து போன பல விஷயங்களை இவர் நினைவு படுத்துவதைப் பார்க்கும் போது ஆச்சர்யம்தான் வருகின்றது. 

அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் எழுதிய தொடரை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நல்ல டிஸ்கவுண்ட் கிடைத்ததால் வாங்கி விட்டேன். மூன்று பாகம், கிட்டத்திட்ட 150 கட்டுரைகள்.

சினிமா உலகம் என்று அல்ல, பொதுவாக வாழ்க்கை வரலாறு, வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை படிப்பது எனக்கு பிடிக்கும். அடுத்தவர் டைரியை எட்டிப்பார்ப்பது போன்ற ஒரு அல்ப குஷி என்றும் வைத்துக் கொள்ளலாம். நிஜவாழ்வில் நடக்கும் பல விஷயங்கள் நம் கற்பனையில் கூட வராது. நிஜத்தில் நடக்கும் பல சம்பவங்கள் எவ்வித தர்க்கத்திலும் அடங்காது.