ஆரூர் பாஸ்கர், நான் எழுதுவதை படிக்கும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர். இதற்கு முன் அவர் ஒரு கவிதை நூலும், பங்களா கொட்டா என்னும் நாவலும் எழுதியிருக்கின்றார். இத்தகவல் எல்லாம் இன்று தெரிந்து கொண்டவை.
பல நாட்களாக படிக்க நினைத்துக் கொண்டிருந்த புத்தகம், ஐடி துறை பற்றியது என்பதாலேயே பயந்து கொண்டிருந்தேன். காரணம், ஐடி துறை பற்றிய நாவல் என்றாலே கள்ளக் காதல் நாவல் என்று நினைத்துக் கொள்கின்றனர். வெளியாட்கள் எழுதினாலும் பரவாயில்லை, அந்த துறையில் இருப்பவர்கள் கூட அதைத்தான் எழுதுகின்றார்கள். ஒரு வேளை அவர்களின் அனுபவம் அது மட்டும் தானோ என்ன எழவோ. கிண்டில் அன்லிமிட்டடில் கிடைப்பதால் துணிந்து படித்தேன். தகவல் தொழில் நுட்பத்துறையை மையமாக கொண்ட ஒரு நாவல்.
தகவல் தொழில்நுட்பத்துறையை பற்றி மாயைகள் அதிகம். அதிக பணம், அதிக உழைப்பில்லாத வேலை, வேலைக்கு அதிகமான சம்பளம், நிரந்தரமற்ற வேலை, உழைப்பை உறுஞ்சுவார்கள், கொத்தடிமைகள், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் என்று ஒன்றுக்கொன்று முரண்பாடான பல பார்வைகள். தேவைக்கேற்ப கோணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஐடியில் வேலை செய்பவர்களுக்கே கொஞ்சம் இந்த மாயை உண்டு. கார்ப்பரேட் அடிமைகள், கூலிகள் என்று தங்கள் தலையில் செருப்பால் அடித்துக் கொள்வார்கள். இந்த பார்வை அத்துறையை பற்றி எழுதுபவர்களிடமும் வந்து சேரும். நல்ல வேளை இந்நாவலில் அது இல்லை. முக்கியமாக அடுத்தவன் மனைவியை தள்ளிக் கொண்டுபோகும் இளைஞர்கள் இல்லை. அதற்காகவே பாராட்ட வேண்டும்.