ஆங்கிலப் புத்தகங்களை பெரும்பாலும் படிப்பதில்லை. முதல் காரணம், அந்தளவிற்கு ஆங்கில அறிவு கிடையாது. 12 வரை தமிழ் மீடியம் என்பதால், ஆங்கிலத்தை மூளைக்குள் மொழி பெயர்க்காமல் படிக்க முடியாது. பொறுமை தேவை. ஆங்கில அகராதியை வைத்து கொண்டு படிக்கும் பொறுமையெல்லாம் கிடையாது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் நடை கொஞ்சம் படிக்கின்றபடி இருக்கும். சேத்தன் பகத்தின் முதல் மூன்று, நான்கு நாவல்களை படித்திருக்கின்றேன்ன். ஆர்வக்கோளாறு என்ன செய்ய. குப்பை நாவல்கள் என்பதை தவிற வேறு எதுவும் கூற இல்லை. மூன்றாம்தர சினிமா கூட பரவாயில்லாமல் இருக்கும். மட்டமான மசாலா. குழந்தைகள் பிறந்தபிறகு அப்புத்தகங்களுக்கு பயன் இருந்தன.
சேத்தன் பகத் தந்த நம்பிக்கையில் வேறு எதையும் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பவில்லை. சிவா டிரையாலஜி, விளம்பரம் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டிருந்து. இந்தியாவின் டோல் கின் என்ற அடைமொழி வேறு. (டோல் கின்னின் கதைகள் பாதி படித்து அந்தரத்தில் நிற்கின்றது). பல மில்லியன் விற்ற நாவல் என்பதாலும், சும்மா ஒரு மாறுதலுக்காகவும் வாங்கினேன். தமிழில் மொழி பெயர்த்திருந்தாலும், ஆங்கில நூலை வாங்கியதன் முக்கிய காரணம் விலை குறைவு. மூன்று புத்தகங்களும் சேர்ந்து 500க்குள் வந்ததுதான். இரண்டாவது, மொழி பெயர்ப்பாளர்கள் மீது இருக்கும் அதீத நம்பிக்கை.
புராணங்களை மீண்டும் எழுதுவது என்பது வழக்கமான ஒன்று. மகாபாரதம் அப்படி பல முறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் புராண பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு கதையை பின்னுவது என்பதை இப்போதுதான் படிக்கடிகின்றேன். முழுக்க முழுக்க கற்பனையான ஒரு மசாலா நாவல். ஆனால் அமீஷ் திரிபாதி, புத்திசாலித்தனத்துடன் எழுதியுள்ளார். புராண பாத்திரங்ளை மனிதர்களாக கற்பனை செய்து, சில நிகழ்ச்சிகளை கற்பனையாக சேர்த்து எழுதியுள்ளார். சிவன் அழிக்கும் கடவுள். தீயவற்றை அழிப்பது அவர் வேலை. அதுவே இதன் அடிப்படையும். நாம் படிக்கும் போது சிந்து சமவெளி நாகரீகம் என்று இருந்தது இன்று சரஸ்வதி சிந்து சமவெளி நாகரீகமாக மாறியுள்ளது. அதை ஒரு அடிப்படையாக வைத்து கொண்டு, அன்றைய பாரதத்தை காட்ட ஒரு முயற்சி செய்திருக்கின்றார்.