30 அக்டோபர் 2018

வனநாயகன் - ஆரூர் பாஸ்கர்

ஆரூர் பாஸ்கர், நான் எழுதுவதை படிக்கும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர். இதற்கு முன் அவர் ஒரு கவிதை நூலும், பங்களா கொட்டா என்னும் நாவலும் எழுதியிருக்கின்றார். இத்தகவல் எல்லாம் இன்று தெரிந்து கொண்டவை. 

பல நாட்களாக படிக்க நினைத்துக் கொண்டிருந்த புத்தகம், ஐடி துறை பற்றியது என்பதாலேயே பயந்து கொண்டிருந்தேன். காரணம், ஐடி துறை பற்றிய நாவல் என்றாலே கள்ளக் காதல் நாவல் என்று நினைத்துக் கொள்கின்றனர். வெளியாட்கள் எழுதினாலும் பரவாயில்லை, அந்த துறையில் இருப்பவர்கள் கூட அதைத்தான் எழுதுகின்றார்கள். ஒரு வேளை அவர்களின் அனுபவம் அது மட்டும் தானோ என்ன எழவோ. கிண்டில் அன்லிமிட்டடில் கிடைப்பதால் துணிந்து படித்தேன்.  தகவல் தொழில் நுட்பத்துறையை மையமாக கொண்ட ஒரு நாவல்.

தகவல் தொழில்நுட்பத்துறையை பற்றி மாயைகள் அதிகம். அதிக பணம், அதிக உழைப்பில்லாத வேலை, வேலைக்கு அதிகமான சம்பளம், நிரந்தரமற்ற வேலை, உழைப்பை உறுஞ்சுவார்கள், கொத்தடிமைகள், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் என்று ஒன்றுக்கொன்று முரண்பாடான பல பார்வைகள். தேவைக்கேற்ப கோணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஐடியில் வேலை செய்பவர்களுக்கே கொஞ்சம் இந்த மாயை உண்டு. கார்ப்பரேட் அடிமைகள், கூலிகள் என்று தங்கள் தலையில் செருப்பால் அடித்துக் கொள்வார்கள். இந்த பார்வை அத்துறையை பற்றி எழுதுபவர்களிடமும் வந்து சேரும். நல்ல வேளை இந்நாவலில் அது இல்லை. முக்கியமாக அடுத்தவன் மனைவியை தள்ளிக் கொண்டுபோகும் இளைஞர்கள் இல்லை. அதற்காகவே பாராட்ட வேண்டும்.

27 அக்டோபர் 2018

சோவின் சில புத்தகங்கள்

ஒசாமஅசா

இது போன்று தலைப்புகள் எல்லாம் இந்த மனிதருக்குத்தான் தோன்றும். சோவின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் தொடரின் நீட்சி என்று இதை  சொல்லலாம். அந்த தொடரில் வந்த பல சம்பவங்கள் இதிலும் இருக்கின்றன. அதில் வந்த சில சம்பவங்களின் நீட்சியும் உண்டு.  உண்மையில் சோவிற்கு அதிர்ஷ்டம் என்பது உண்டு, அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் தந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள், ஒசாம அசா இரண்டையும் சேர்த்து ஒரே புத்தகமாக மாற்றலாம். செலவு குறையும்.

திரையுலகை திரும்பிப்பார்க்கின்றேன்

சோவின் திரையுலக அனுபவங்கள். அதிக சுவாரஸ்யம் ஏதுமில்லை. முடிந்தவரை யாரையும் புண்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்  எழுதியிருக்கின்றார். கட்டுரைகளை விட, இணைப்பாக வந்திருக்கும்  ஒரு நான்கு வயது மாணவன் தேர்வு எழுதப்போகும் கதை படும் பாடு சுவாரஸ்யம். பல நாள் கழித்து பயங்கரமாக சிரித்து, வீட்டு கொலுவிற்கு வந்தவர்கள் பீதியடைய காரணமாக இருந்தது.

காமராஜரை சந்தித்தேன் 

காமராஜரை பற்றிய ஒரு நல்ல சித்திரம் உண்டாக்கும் கட்டுரைத் தொகுப்பு. காமராஜர் இறந்த வேகத்தில் எழுதியதால் வழக்கமான பாணியில் இல்லாமல், வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கின்றார். கட்டுரையும் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வு. காமராஜரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகளும் சேர்ந்துள்ளது. 

இன்றைக்கு மீம்ஸ் மட்டும் படித்துவிட்டு அரசியல் புளிகளாக இருப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. அரசியல் என்பது எப்படி இருந்து இன்றைய கதியை அடைந்திருக்கின்றது என்பதை காட்டும் கட்டுரைகள்.

24 அக்டோபர் 2018

என்னை நான் சந்தித்தேன் - ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், புத்தகம் படிக்கும் அனைவருக்கும்  தெரிந்த பெயர், பெரும்பாலும் படித்திருப்பார்கள். சிலர் படித்திருந்தாலும் படிக்காத மாதிரி காட்டி கொள்வார்கள். சுமார் 1500 நாவல்களுக்கு மேல் எழுதி குவித்தவர், எழுத்தை முழு நேர வாழ்க்கையாக கொண்டவர்.  குற்றப் பிண்ணனியில் கதைகள் எழுதும் ஆசிரியர்களில், ராஜேஷ்குமார்தான் தலைசிறந்தவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சிறிய உதாரணம், ஜெயமோகனின் உலோகம். சாகச நாவல் என்ற பெயரில் எழுதப்பட்ட நாவல். பல இடங்களில் கண்ணை சுழட்டியது. ஆனால் ராஜேஷ்குமாரின் நாவல்கள் நம்மை கீழே வைக்க விடாது. ராஜேஷ்குமார் போலவே, சுபா, பட்டுக்கோட்டை பிராபகர், ஆர்னிகா நாசர் என்று பலர் க்ரைமை எழுதினாலும் ராஜேஷ்குமாரின் நாவல்களில் வரும் புதுமை இவர்களிடம் இல்லை. பெரும்பாலும் அரைத்த மாவு ப்ளெஸ் சண்டை ஆக்‌ஷன்.  சுஜாதா க்ரைம் எழுதினாலும் அது வேறுவகையாக தெரியும். ராஜேஷ்குமாரின் சைன்ஸ் ஃபிக்‌ஷன் வேறுவகையாக இருக்கும். 

ஒரு குற்றம் நடக்க ஆசைதான் காரணமாக இருக்கும் என்பது பலரின் எண்ணம். விழைவை மிஞ்சி, பல காரணங்கள் இருக்க கூடும், காரணமேயின்றி கூட குற்றங்கள் நிகழக்கூடும் என்பதை அவரது பல கதைகளில் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார். அவரது ஆயிரக்கணக்கான நாவலகளில் குறைந்தது சில் நூறு நல்ல நாவலக்ள் தேறும். பல சும்மா இடது கையில் எழுதிய வகையறா, பத்து பதினைந்து நிமிடங்களில் படித்துவிட முடியும். ப்ளாக்மெயில் கதைகள், தெரியாமல் கொலை செய்துவிட்டு அதை மறைக்க திண்டாடும் அப்பாவிகளின் கதைகள் என்று ஒரே பேட்டர்ன் பல கதைகளில் உண்டு. அவையெல்லாம், சரி எழுதி தொலைப்போம் என்று அரைத்தூக்கத்தில் எழுதிய வகைதான். இருந்தும் அதில் ஏதாவது ஒரு சிறிய எதிர்பாராத அம்சத்தை வைத்துவிடுவார். 

22 அக்டோபர் 2018

சொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்

முழுவதும் படிக்க முடியவில்லை. படித்தவரை ஒன்றும் புரியவில்லை. மகாபரதக்கதை கொஞ்சமே கொஞ்சம் வருவதால் பரவாயில்லை. பிறகு படிக்கலாம்.

சொன்னால் நம்பமாட்டீர்கள் - சின்ன அண்ணாமலை

புனைவுகளை விட வரலாறு சுவாரஸ்யமானது, நிஜத்தில் நடக்கும் பல விஷயங்கள் கற்பனையில் கூட நடக்காது. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது வாழ்க்கை. அதனாலேயே, அனுபவங்களை கூறும் புத்தகங்கள் எனக்கு சுவாரஸ்யமாக படும். அந்த வகையில் படித்த ஒரு நல்ல சுவாரஸ்யமான நூல் "சொன்னால் நம்பமாட்டீர்கள்". தமிழ்ப்பண்ணை என்ற பெயரில் பல நல்ல தமிழ் நூல்களை பதிப்பித்த சின்ன அண்ணாமலை அவர்கள் எழுதியது.

சின்ன அண்ணாமலை, கல்கி யின் நெருங்கிய நண்பர். காங்கிரஸ்க்காரர். தப்பாக நினைக்க வேண்டாம். இது ஒரிஜினல் காந்தி காங்கிரஸ். போலிகளை நினைத்து திட்டாதீர்கள். பொது வாழ்வில் நேர்மை, தூய்மை, ஒரு லட்சிய வேகம் போன்றவற்றை கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வந்த ஒரு காலகட்டத்தின் சிறிய பார்வை.  காந்தியின் ஆளுமை எந்தளவிற்கு பரவியிருந்தது என்பதற்கு சின்ன அண்ணாமலை ஒரு உதாரணம். காந்தியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்து, அதனால் சிறையில் அடைப்பட்டவர். திருவாடனையில் சிறை வைக்கப்பட்ட அவரை ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு சென்று, சிறையை உடைத்து கொளுத்தி அவரை விடுதலை செய்திருக்கின்றார்கள் என்பது வியப்பான செய்தி. அந்நிகழ்ச்சியில் பலர் உயிரையும் இழந்திருக்கின்றனர். மக்களிடையே அக்காலத்தில் ஏற்பட்ட சுதந்திர வெறியின் உச்சம். 

ராஜாஜியின் மீது அதிக பக்தி கொண்டவர். டிகேசி, ம.பொ.சி, ஏ.கே.செட்டியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்று பலருடன் நெருக்கமாக இருந்துள்ளார். நமக்கு தெரிந்த பல பிரபல சம்பவங்களுக்கு பின்னால் இவர் இருந்திருப்பது இப்புத்தகம் மூலமே தெரிகின்றது.  

11 அக்டோபர் 2018

மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்

தமிழின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். பல சிறந்த திரைப்படங்களை இயக்கிய அவருடன் பரத்வாஜ் ரங்கன் என்னும் சினிமா விமர்சகர் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு.

ஆங்கில் உரையாட்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். மணிரத்னத்தின் முதல் படத்தில் ஆரம்பித்து கடல் வரையிலான படங்களை பற்றிய உரையாடல்கள். திரைப்பட நுணுக்கங்கள் அந்தளவிற்கு என்னை ஈர்க்கவில்லை. சின்ன சின்ன தகவல்கள் மட்டுமே புத்தக்த்தை ஓரளவிற்கு படிக்க வைத்தது.

இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், கமல், ரஜினி என்று அவருடன் பணிபுரிந்தவகள் பற்றிய தகவல்கள், திரைப்படங்கள் உருவான கதை அவை மட்டுமே சுவாரஸ்யமாக உள்ளது.

பேட்டியை மொக்கையாக்குவது பரத்வாஜ் ரங்கன். மணிரத்னத்திற்கே தெரியாத பலவற்றை அவர் படத்தில் கண்டுபிடித்து மணிரத்னத்தையே ஆச்சரியப்படுத்துகின்றார். மணிரத்னத்தின் ஒரு பெரும் ரசிகராக இருந்து எடுத்த பேட்டி என்பதால் வெறும் புகழ் மாலையாகிவிட்டது.

சினிமாவை பெரிதும் விரும்பும், சினிமாவில் பணிபுரியும் நபர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். ஆனால் சாமானியர்களுக்கு இது எதைத்  தருகின்றது என்பது கேள்விக்குறி.


17 மே 2018

கொம்மை - பூமணி

தலைப்பை பார்த்ததும் அவரது களமான கிராமத்து கதை என்று நினைத்தால், மன்னியுங்கள், தவறு. மகாபாரதம்.

மகாபாரதத்தை பூமணி அவரது வட்டார வழக்கில் எழுதியிருக்கின்றார். பீமன் குந்தியை பார்த்து, "நீ வந்து சோத்த போடாத்தா" என்று குஷியாக பேசுகின்றான்.

மகாபாரதத்தை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே தந்திருக்கின்றார். வழக்கமாக அனைவரும் செய்யும் வகையில், மகாபாரதத்தின் சில சிக்கலான இடங்களை லாவகமாக குதித்து செல்கின்றார். விதுரன் வந்து சென்ற பின் தர்மன் பிறப்பது, திருதராஷ்டிரன் வந்து சென்ற பின் பீமன் பிறப்பது என்று போகின்றது.

பெண்களின் துயர் சொல்லும் கதை என்று அப்படி இப்படி சொன்னாலும், அது ஏதுமில்லை. கிருஷ்ணனும் அர்ச்சுனனும், வாலே போலே என்று பேசிக் கொள்வதை தவிர வேறு ஏதுமில்லை.

இதிகாசங்களை தரைக்கு கொண்டுவரும் முயற்சி என்றாலும் இது அந்த வகையிலும் சேரவில்லை. ஒட்டாமல் இருக்கின்றது.

பர்வம், இரண்டாமிடம் போன்றவை பாரதக்கதையை வேறுவிதமாக சொன்ன கதைகள். இது இரண்டுங்கட்டான போய்விட்டது.

பூமணியின் ஆடுகளம் அவர் மண்ணின் மைந்தர்கள்தான். இறக்குமதி செய்தவர்கள் மண்ணில் ஒட்டமாட்டார்கள்.

16 மே 2018

பாலகுமாரன்

பாலகுமாரன் அறிமுகமான கதையை ஏற்கனவே சில பதிவுகளில் எழுதியிருந்தேன். 90களின் இறுதியிலும் கல்லூரி மாணவர்களிடம் ஹீரோவாகத்தான் இருந்திருக்கின்றார். வெகுஜன எழுத்து என்றாலும் அவர் எழுத்து பலரை மாற்றியிருக்கின்றது என்பதை பலர் பதிவுகளில் காணமுடிகின்றது. அவர் பல அரைவேக்காடுகளை உருவாக்கியிருக்கின்றார் என்பதிலும் எனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அது அவர் பிரச்சினையில்லை. 

பாலகுமாரன் மீதான எனது ஒவ்வாமைக்கு காரணம் நான் படிக்க ஆரம்பித்தது அவரது பிற்கால எழுத்துக்களை. ஆன்மீக வகையறா, தலைகோதி, கன்னம் தடவி, நெட்டி முறித்து, முதுகை அழுத்தி கொடுத்து, உபதேசிக்கும் நாவல்களை எக்காலத்திலும் என்னால் படிக்க முடியாது. அப்பம் வடை தயிர்சாதம் ஓரளவு பிடித்திருந்தது. ஊர்விட்டு ஊர் சென்று வெற்றி பெரும் ஒரு பிராமண குடும்பக்கதை. படித்து முடித்து விட்டு வேலைதேடி வந்த எனக்கு அந்த நேரத்தில் உபதேசம் தேவையாகத்தான் இருந்தது. அவரது காதல் கதைகள் எல்லாம் ஒன்றும் படித்தில்லை என்பதில் கொஞ்சம் சந்தோஷம்தான். படித்து தொலைத்திருந்தால் என்னாவாகியிருக்குமோ என்று பலரின் அனுபவத்தை படிக்கும் போது தோன்றுகின்றது. 

அவரது எழுத்து இலக்கியமா இல்லையா என்று வழக்கம்போல எங்காவது யாராவது பேசிக்கொண்டிருக்கட்டும். அவரது எழுத்து பலரை படிப்பிற்குள் இழுத்திருக்கின்றது, பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றது, பலரை தன்னம்பிக்கை கொண்டு முன்னேறவைத்திருக்கின்றது. அவரது ஆன்மீக நாவல்கள் கூட ஏதாவது ஒருவகையில் பலருக்கு நன்மை செய்திருக்கும். அது போதுமானது. 

மெர்க்குரி பூக்கள், இரும்புகுதிரைகள், அப்பம் வடை தயிர்சாதம் போன்றவை நன்றாகத்தான் இருந்தது. தி.ஜாவுடன் ஒப்பிடுவது அதீதம். உடையார் லிஸ்ட்டில் இருக்கின்றது, கிண்டிலில் வந்தால் வாங்க உத்தேசம். 

ஜெயமோகன் அவரது பல கட்டுரைகளில் இவரும் விரைவில் வணிக அலமாரியில் சென்று அமர்வார், காலம் மறந்துவிடும் என்கின்றார்.  நடக்கலாம், ஆனால் அது எளிதில் நடக்காது. சமீபத்திலும் நடக்காது என்று தோன்றுகின்றது.

14 மார்ச் 2018

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி

சுகாவின் புத்தகங்களை படித்திருப்பவர்களுக்கு பாட்டையா, சினிமா விரும்பிகளுக்கு நிரந்தர முதல்வர், பால் ஹனுமான் தள வாசகர்களுக்கு நவீன நளன், பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகங்களை படித்திருப்பவர்களுக்கு நல்ல எழுத்தாளர் என்று பலரால் பலவிதமாக அறியபடும் மணி, பாரதிமணி அவர்களின் புத்தகம். பல நேரங்களில்  பல மனிதர்கள் தொகுப்பில் வந்த கட்டுரைகளுடன் பல புதிய கட்டுரைகளையும் சேர்த்து இதுதான் எனது கடைசி புத்தகம் என்று வெளியிட்டுள்ளார். பலிக்காமல் போகக்கடவது......

ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு வேறுவிதமாக பரிச்சியமான பலரைப் பற்றிய தகவல்களை கூறுவதுடன் பாரதிமணி என்னும் ஒரு மகத்தான மனிதரைப்பற்றியும் நமக்கு கூறுகின்றது. முதலில் அவர் காட்டும் பிரபலமனிதர்களின் சித்திரங்கள் பல புதியவை, சிலரை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள உதவும். நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ஷேக் ஹசீனா, பிர்லா, எம்.ஜி.ஆர், அண்ணாதுரை என்று நீளுகின்றது. ஒவ்வொருவருடன் அவருடைய சந்திப்புகள் அனைத்தும் சுவாரஸ்யங்கள், அதைப்பற்றி எழுதி படிப்பவர்களின் அனுபவத்தை கெடுப்பதாயில்லை, படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தனிமனிதனாக அவரைப் பற்றி கொஞ்சம் கூறியிருந்தாலும் அவர் மீது ஒரு பெரு மதிப்பு வருகின்றது. ஒரே ஒரு கட்டுரை போதும், அவரது திருமணத்தைப் பற்றிய கட்டுரை. கநாசுவின் மகளை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார், திருமண செலவு அவருடையது. கடன் வாங்கி திருமணம். அதன் பின் அவருடைய பிரச்சினைகள், அவற்றை எதிர் கொண்டவிதம் அபாரம். அது போன்ற ஒரு துணிவு வரவேணும் என்றால் மனதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். அவரது தொழிலைப் பற்றி நிறையவே கூறியிருக்கின்றார். கொஞ்சம் அசந்தால் சுழலில் இழுக்கும் இடத்தில் ஜாலியாக கடந்து வந்திருக்கின்றார்.

29 ஜனவரி 2018

புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்

சென்னையிலிருக்கும் போது எனக்கும் என் நண்பனுக்கும் அடிக்கடி புத்தக விஷயமாக விவாதம் வரும். அவன் புத்தகங்கள் படிப்பதே குறைவு, அதுவும் அர்த்தமுள்ள இந்துமதம் மாதிரி புத்தகங்கள். நான் புனைவுகள். அவனின் வாதம் புனைவுகள் உனக்கு எதை கற்று தருகின்றன. இதற்கு பதிலை என்னால் விளக்கமாக சொல்ல முடிந்ததில்லை. அதிகம் விவாதத்திற்குள்ளும் போக விரும்பாதவன் என்பதால், புனைவுகளிடமிருந்து பெறுவது என்பது அவரவர் கற்பனையை பொறுத்தது என்று அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடுவது வழக்கம். 

இணையத்தில் வலம் வந்த பின்பு பல புத்தகப்பிரியர்களின் தளங்களில் புத்தக விமர்சனங்கள், மதிப்புரைகள் இன்னபிற உரைகளை காண முடிந்தது. பெரும்பாலனவை புத்தக விமர்சனம் என்ற பெயரில் கதைச் சுருக்கததை கூறுவதுடன் முடிந்தது. ஆர். வி, அறிமுகத்துடன் அவரை அப்புத்தகம் எப்படி பாதித்தது என்பதை மட்டும் எழுதும் பாணி பிடித்திருந்தது. நான் இந்த தளத்தில் எழுதும் போது அதே முறையை முடிந்த வரை கையாள ஆரம்பித்தேன். இது புதிய வாசகனுக்கு பயன்படாது, குறிப்பாக அசோகமித்திரனின் கதைகள் என்ன சொல்கின்றது என்பதை எப்படி விளக்க? அது ஒரு அனுபவத்தை தருகின்றது, அதை விளக்கமாக சொல்வது ஒரு ஆசிரியருக்குத்தான் கை வரும் இல்லை ஒரு நல்ல எழுத்தாளரால் முடியும்.