31 ஜூலை 2017

இரவல் காதலி - செல்லமுத்து குப்புசாமி

நாவலைப் பற்றிய பல குறிப்புகள் இதை ஒரு ஐடி துறை சம்பந்தப்பட்ட நாவல் என்று கூறுகின்றன. ஐடி துறையின் வளர்ச்சி காரணமாக சமூகத்தில் உண்டான மாற்றங்களை பேசுகின்றது என்றும் எழுதியிருந்தார்கள். பாத்திரங்கள் ஐடி துறையில் வேலை செய்வதால் மட்டுமே அப்பாத்திரங்களின் அனைத்து செயல்களுக்கும் அத்துறையே காரணம் என்ற மொன்னையான அபிப்ராயம் மட்டுமே இது. கள்ளக்காதல் எல்லா துறைகளிலும் நடக்கக்கூடியது. 

கதை ஆரம்பம் என்னவோ ஐடி உலகை காட்டுவது போலத்தான் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் சில தனித்துவமான சில விஷயங்கள் உண்டு. கதையோடு ஒட்டி அத்துறை ஞானத்தை கொஞ்சம் நம்முள் கடத்தலாம். அப்படி செய்தால் மட்டுமே அந்த நாவலை துறை சார்ந்த நாவல் என்று கூறலாம். உதாரணம் ஆழி சூல் உலகு, கரைந்த நிழல்கள்.  இதில் அது போன்ற விஷயங்கள் ஏதுமில்லை. சொல்லப்படும் சின்ன சின்ன விஷயங்களும் படிப்பவர்களிடம் ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்படி ஒரு வித கிண்டலாகவே சொல்லப்படுகின்றது

ஐடி துறையை பற்றி ஆரம்பிக்கும் நாவல் கடைசியில் ஒரு கள்ளக்காதலில் சென்று சேர்கின்றது. 

18 ஜூலை 2017

விலங்குப் பண்ணை - ஜார்ஸ் ஆர்வெல்

கம்யூனிசத்தை, கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்து பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் இந்த நூல் வித்தியாசமானது. நேரடியாக விமர்சிக்காமல், விலங்குகளை வைத்து கடுமையான விமர்சனத்தை வைக்கும் புத்தகம். George Orwell எழுதிய Animal Farm என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு, மொழி பெயர்ப்பு  என்பதா தோன்றாத நடை. நேரடியான தமிழ் நூல் போன்றே உள்ளது.

ஜோன்ஸ் என்னும் ஒருவரின் பண்ணையில் வாழ்ந்து வந்த விலங்குக்கூட்டத்தில் ஓல்ட் மேஜர் என்ற பன்றி ஒரு நாள் தன் பொன்னுலக் கனவை மற்ற விலங்குகளிடையில் சொல்லிவிட்டு மரணமடைகின்றது. அதன் பின் ஸ்நோபால் என்னும் மற்றொரு பன்றி, நெப்போலியன் என்னும் பன்றியுடன் சேர்ந்து பண்ணையை ஜோன்ஸிடமிருந்து கைப்பற்றுகின்றது. முதலில் விலங்குகளுக்கு சம உரிமை என்று கனவுடன் ஆரம்பிக்கும் விலங்குப் பண்ணையில் நெப்போலியன் கை ஓங்குகின்றது. ஸ்நோபாலை துரோகி என்று குற்றம் சாட்டி வெளியே விரட்டுகின்றது நெப்போலியன். அதற்கு தன்னுடன் ஒரு நாய்ப்படையை வைத்து அனைவரையும் மிரட்டி பணிய வைக்கின்றது. அதே சமயம் மற்றொரு பன்றியின் மூலம் விலங்குகளை அனைத்தும் அவர்களின் நன்மைக்கே என்று நம்பவும் வைக்கின்றது. மெதுவாக சர்வாதிகாரத்திற்கு செல்கின்றது நெப்போலியன். விரட்டிவிட்ட மோசஸ் என்னும் காகம் வருகின்றது. மெதுமெதுவாக பண்ணை பழைய நிலைக்கு போகின்றது. மனிதர்களின் தலைமைக்கு பதிலாக விலங்கு. 

ஸ்டாலின் மற்ற தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு ரஷ்யாவை வதைத்த கதைதான். கம்யூனசத்தை பற்றிய பல விமர்சன நூல்களை படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் கம்யூனிசத்தை பற்றி ஒன்று தெரியாமல் இருந்தாலும் கூட புத்தகம் சுவாரஸ்யம் தரும்.

மக்களை மக்களில் ஒருவனாக இருந்து ஆளப்போவதாக சொல்லி பதவியை பிடித்து, மெதுவாக மற்ற மக்களைவிட தலைவர்களாகிய நாங்கள் கொஞ்சம் மேம்பட்டவர்கள் என்று திரும்பி, உங்களுக்கு என்ன தேவை என்பது தலைவனான எனக்குதான் தெரியும் என்று ஆரம்பித்து, நான் சொல்வதுதான் உங்களுக்கு நல்லது என்று மக்களை விலங்குகளாக்கிய தலைவர்களை பற்றிய விமர்சன நூல். சுவாரஸ்யமான நூல்.

12 ஜூலை 2017

ரத்தத்தில் முளைத்த என் தேசம்

அமர்நாத் யாத்திரை சென்ற ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிலர் உயிரை இழந்துள்ளனர். ஹிந்துக்களின் ரத்தம் அவர்கள் ஹிந்துக்களாக இருப்பதன் காரணத்தால் மட்டுமே சிந்தப்படுவது இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வரும் துயரம். அதுவும் ஹிந்துக்களின் பூர்வீக பூமியான நமது பாரதத்தில். முதல் காரணம், ஹிந்து மதம்தான். வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஹிந்துக்களுக்கே உரித்தான பெருந்தன்மை, தர்மத்தின்பாலிருக்கும் பற்று, நேர்மை அதுவே இன்று இந்த நிலைமையை உண்டாக்கிவிட்டது. ஆனால் தர்மம் என்றும் தன்னை நம்பியவர்களை கைவிடாது என்பதே நமக்கு போதிக்கப்பட்டது. அதை சரித்திரம் பல முறை நிரூபித்து வருகின்றது. இல்லை என்றால் இன்று ஹிந்து மதம் என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். ஹிந்து மதம் என்பதே கிடையாது என்று உளரும் முட்டாள்கள் யாராவது துரதிருஷ்டவசமாக இதை படிக்க நேர்ந்தால், மூடி வைத்துவிட்டு கிளம்பலாம்.

நாட்டில் மதக்கலவரம் வரும் போது நமது டம்ப்ளர்களும், புர்ச்சியாளர்களும், பஹூத்தறிவாளர்களும் கூறுவது, பெரியார் மண். இங்கு இஸ்லாமியனும் நானும் சகோதரன். ஒரு மண்ணும் கிடையாது. முக்கியக்காரணத்தை தமிழர்களுக்கு பிடித்த சினிமா வசனத்தாலேயே காட்டலாம், ஹே ராமில் வரும் ஒரு வசனம், "நீ ஒரு செளத் இண்டியன், என் வேதனை உனக்கு புரியாது ராம்". அதுதான். வட இந்தியா அந்நிய படையெடுப்பின் வலியை முழுவதும் தாங்கியுள்ளது. அதன் வலி அவர்களுக்கு தலைமுறை கடந்தும் இருக்கின்றது. 

அந்த வலியை ஆரம்பம் முதல் கூறுகின்றது. எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரதம் விழுந்தது. எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன. கோரி, கஜினி, கில்ஜி, துக்ளக், பக்தியார், குத்புதீன் என்று ஒவ்வொரு அரசனும் செய்த அக்கிரமங்கள். இடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்கள். காசி, மதுரா, ஹம்பி. சோம்நாத் கோவிலின் ரத்த பக்கங்கள இங்கு எத்தனை பேருக்கு தெரியும். சோம்நாத் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை கொன்று இடிக்கப்பட்ட கோவில். பெயர் அறியாத எத்தனை கோவில்கள், ஹிந்துக்கள்.