சோ.
ஒரு எழுத்து என்றாலும் அதன் பின்னால் இருக்கும் ஆளுமை பெரியது. வழக்கறிஞர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குனர், திரைப்பட நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று பல முகங்கள். அவரது சமீபத்திய சில செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றாலும், எனக்கு மிகப்பிடித்த ஒருவர். இவரின் பலமும், பலவீனமும் இவரது நகைச்சுவை உணர்வே.
மகாபாரதத்தை நன்கு கற்றவர். அவரது மகாபாரதம் பேசுகின்றது நூலே, எனக்கு மகாபாரதத்தை பற்றிய மற்றொரு பார்வையை அளித்தது. அதுவரை எனக்கு அது ஒரு சுவாரஸ்யமான கதை நூலே. ராமாயணமும், அதே போல் கம்பராமாயண பகுதிகளுடனும், துளசிதாசரின் ராமாயண பகுதிகளையும் சேர்த்து தந்திருந்தார்.
அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கியமானவர்களுடனான அவரது அனுபவங்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அக்மார்க் சோ குசும்பு. இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதுதான் அவரது உண்மையான குணம் என்றால், அனைத்தும் அதிர்ஷ்டம்தான். கடவுள் அவருக்கான வாய்ப்பை அருமையாக அமைத்து தந்திருக்கின்றார், அதை அவர் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த அனுபவங்கள். அனைத்தும் தற்செயலாக நடந்தவை, ஆனால் அதை ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்திருக்கின்றது.