ஜெயகாந்தனின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கூறப்படும் நாவல். பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்துள்ளது. ஜெயகாந்தன கதைகளின் பிரச்சினை, அது பேசக்கூடிய பொருளின் காலம். சிலவற்றின் தேவை இன்று இல்லை. இந்நாவல் அது போன்ற தோற்றத்தை தரும் நாவல். கதை சுருக்கம், கல்யாணி நாடக நடிகை, ரங்கன் பத்திரிக்கை ஆசாமி. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் விவாகரத்து செய்ய விண்ணப்பிக்கின்றனர். ஆனால் கல்யாணியின் உடல்நலக்குறைவு அம்முடிவை சோதிக்கின்றது.
சிறிய நாவல். கிண்டில் அன்லிமிட்டடில் படித்தது. கல்யாணியை ஒரு குற்றங்குறையில்லாத பெண்ணாக படைத்துவிட்டார். ரங்கனின் மீது அவளுக்கு இருப்பது எதிர்ப்பார்ப்புகளற்ற காதல். அது ஒரு பருப்பொருளாக் இருந்திருந்தால் ஏதாவது மியூசியத்தில் வைத்து காத்திருக்கலாம். கடைசியில் பைனரியாக வைத்து காக்கவேண்டியதுதான். சரி. ரங்கனின் மீது இருக்கும் இருப்பு அவளை அவன் பக்கம் இழுத்தாலும், திருமண என்பதை எதிர்பார்க்காததால், அவன் விலகிச்செல்லும் போதும் அதே மகிழ்ச்சியுடன் அவளாள் சிரிக்க முடிகின்றது என்று நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
ரங்கன் என்றைக்குமான ஆண். அவனுக்கு அவனது பாசங்கற்ற உள்ளம் திருமணம் செய்யதூண்டுகின்றது. அதுவே அவனை விவாகரத்திற்கும் செலுத்துகின்றது. சில உறவுகள் எட்ட இருந்தால் மட்டுமே இனிக்கிம். அருகில் சென்றால் அது தொடர்வது கஷ்டம். உண்ணும் உணவிலிருந்து அரசியல் வரை எங்காவது உரசி தொலையும். திருமணம் என்பது கொஞ்சம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் கிட்டத்திட்ட ஒரு கட்டு. ஒரு ஒப்பந்தம், அதில் ஆரம்பிப்பது மெதுவாக மலர்ந்து ஒரு கடினமான பந்தமாக நிலை பெறுகின்றது. முதலில் அந்த ஒப்பந்தத்தை மதிப்பது அவசியம். ஒருவருடன் வாழும் போது, விட்டு கொடுத்தலும், அன்பும் தேவை. அந்த அன்பே அடிநாதம் என்பதையே நாவலும் காட்டுவதாக தோன்றுகின்றது. ஏதேதோ காரணங்களால் பிரிந்து சென்றாலும், இறுதியில் கல்யாணியின் உடல்நிலை காரணமாக அவளுடன் வாழுவதற்கு காரணம் அன்பேயன்றி ஜெயகாந்தனே கூறுவது போல மனிதாபிமானமாகது என்று தோன்றுகின்றது.
பாத்திரங்கள் வழக்கமான ஜெயகாந்தன் பாத்திரங்கள். பேசிக்கொண்டே அல்லது சிந்தித்துகொண்டே இருக்கின்றன. எதையும் ஆழக்கீறி ஆராய்ந்து பார்க்கின்றனர். வளவளவென்று பேசுவதும், அவர்கள் சிந்திப்பதை படிப்பது இந்நாவலில் மிகவும் சோர்வூட்டுகின்றது. அதுதான் எனக்கு பட்ட குறை.
மற்றபடி ஒரு நல்ல நாவல். ஆனால் எழுதப்பட்டமுறையும் நடையும் இன்றைக்கு எனக்கு அந்நியமாக தோன்றுவதால் ஒரு சிறந்த நாவலென்று கூற முடியாது.