வாழ்க்கை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஜூன் 2021

எனது நாடக வாழ்க்கை - அவ்வை சண்முகம்

இந்த பெருந்தொற்று அனைவரையும் வீட்டில் அடைத்து வைத்து இருக்கும் நேரத்தில் நமக்கு உதவுவது தொழில்நுட்பம். பிழைப்பிற்கும், பொழுதுபோக்கிற்கும். பொழுதுபோக்கு இன்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கையில் வேண்டிய திரைப்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள். தூங்கும் நேரம் தவிர பார்த்தால் கூட பல வருடங்கள் பார்த்து கொண்டே இருக்கலாம். கொஞ்சம் பின்னால் சென்றால் டீவி தொடர்கள், திரைப்படங்கள், நாடகங்கள், தெருக்கூத்து. இவற்றில் தெருக்கூத்து அழிவின் விளிம்பில் இருக்கின்றது. நாடகங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாடகங்களும் விதவிதமாக மாறியிருக்கின்றன. இன்று நாடகம் என்றவுடன் பட்டென்று நினைவிற்கு வருவது க்ரேஸி மோகனும், எஸ்.வி.சேகரும். துணுக்கு தோரணங்களால் கட்டப்பட்ட நாடகங்கள். பார்க்க கூட வேண்டாம். கேட்டாலே போதும். இன்னும் சில சீரியஸ் நாடகங்களும் நடக்கின்றன. பொன்னியின் செல்வன் எல்லாம் நாடகமாக வருகின்றது. பரிக்‌ஷா மாதிரியான குழுக்கள் வேறுவிதமான நாடகங்களை நடத்துகின்றன. பெங்களூரில் பலர் வீதி நாடகங்களை நடத்துவதுண்டு. 

ஆரம்பத்தில் நாடகங்கள் எப்படி இருந்தன? நாடக நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படிப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன? எப்படி நாடகங்கள் வளர்ந்தன? சினிமா எந்தளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது? நாடக துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவ்வை சண்முகம் எழுதிய இந்த அனுபவ நூல், இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலை தருகின்றது.  

13 மே 2017

பழைய கணக்கு - சாவி

சாவி புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ஆனந்த விகடன், கல்கி, தினமணிக்கதிர் போன்ற இதழ்களில் பணிபுரிந்துள்ளார். சாவி என்னும் இதழையும் நடத்திவந்தார். குங்குமம் இதழை இவருக்காகவே கருணாநிதி தொடங்கினார் என்றும் எங்கோ படித்த நினைவு. சாவியுடன் நெருக்கமாக பணி புரிந்த ரவி பிரகாஷ் தளத்தில் அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 

சாவியின் இளவயது அனுபவங்களை முன் பின் தொடர்ச்சியில்லாது எழுதி கட்டி வைத்த ஒரு புத்தகம் பழைய கணக்கு. மிகப்பழைய கணக்கு, அனேகமாக எனக்கு ஒன்றிரண்டு வயதிருக்கும் போது வந்திருக்கும் போல. சாவியின் சிறுவயது அனுபவங்கள், பத்திரிக்கை துறையில் அடைந்த சுவாரஸ்யமான அனுபவங்களின் தொகுப்பு. சாவி சிறு வயதில் அதிக கஷ்டப்பட்ட ஒருவர், அதே சமயம் மிகுந்த சேட்டைக்கார ஆசாமி போல. அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவது, கோவில்களில் உண்டக்கட்டி வாங்கி தின்றுவிட்டு சுற்றுவது, காசில்லாமல் போகும் போது மீண்டும் வீடு திரும்புவது என்று ஜாலியாக இருந்திருக்கின்றார். ஏகப்பட்ட வேலைகளும் செய்திருக்கின்றார். கிங்காங் - தாராசிங் மல்யுத்தத்தை நடத்துவது, விளம்பர பலகைகள் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்றும் இருந்திருக்கின்றார்.

பல சம்பவங்கள் ஒரு நல்ல சிறுகதைக்கான கருக்களை கொண்டிருக்கின்றது. அவரது நவகாளி யாத்திரை கட்டுரையை பற்றி பலர் எழுதியிருக்கின்றார்கள், ஆனால் அவர் காந்தியுடன் இருந்தது இரண்டு நாட்கள் என்பதுதான் உண்மை. விகடனில் வேலை வாங்க விகடன் பெயரில் பத்திரிக்கை ஆரம்பிப்பதாக கூறி,அதை வைத்தே வேலை வாங்கி, நடத்ததாத பத்திரிக்கையை மூட விகடனிடமே பணத்தையும் பெற்றது எல்லாம் பெரிய நரிகுளிப்பாட்டித்தனம்தான்.

17 பிப்ரவரி 2013

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

தமிழகத்தை பொறுத்தவரை சீர்திருத்தவாதி என்றவுடன் அனைவரும் கூறுவது ஈ.வெ.ராவைத்தான். அதற்கு முன்னால் செயல்பட்ட அனைவரும் மிகச்சுலபமாக மறக்க (மறக்கடிக்கப்) பட்டுள்ளனர். ராமானுஜர் அப்படிப்பட்ட மறக்கடிக்கப்பட்ட சீர்திருத்தவாதி. ராமானுஜர் விசிஷ்டாத்தைவத்தை நிலைநிறுத்தியவர், வைஷ்ணவ சம்பிராதயத்தை வழிமுறைப் படுத்தியவர் என்ற அளவிலேயே நினைவில் நிறுத்தப்படுகின்றார். மறக்கப்பட்டது அவரின் சீர்திருத்தக் கருத்துக்கள். 


எனக்கும் சோவின் புத்தகத்தை படிக்கும்வரை ராமானுஜரைத் பற்றி அதிகம் தெரியாது. எங்கோ அவர் கோபுரத்தில் ஏறி கூறிய கதையை படித்த நினைவு. அவர் அவ்வாறு கூறியதின் பின்னால் உள்ள தைரியம், அதன் நோக்கம் எல்லாம் தெரியாது. அவர் செய்த சீர்திருத்தங்கள், அனைத்து மக்களையும் அரவணைத்த பண்பு, ஆழ்வார் பாசுரங்களை பரப்பியது எல்லாம் தெரிந்து கொண்டது வெகு பின்னால்.


ராமானுஜர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள ஒரு நாடகம். ஆனால் இது நாடகமல்ல. ஒரு கதை வடிவில் ராமனுஜரைப் பற்றி எழுதியுள்ளார். கதையுமல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு. அவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை கோர்த்து எழுதியுள்ளார்.