தேவனின் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் துப்பறியும் சாம்பு. விளாங்காய் தலையும், ஜாடிக் காதுகளும், வழுக்கை தலையும், வளைந்த மூக்கும் கொண்ட ஒரு முட்டாள் (அ) அசடு சாம்பு. ஒரு நாள் ஒரு ஜவ்வாது வாசனையால் சாம்புவின் வாழ்க்கை மாறுகின்றது. ஒன்றுமில்லை வேலை போகின்றது. வேலை போன சாம்பு, வேறு குழப்பத்தில் சிக்கி ஏதோ உளற, அது வேலை செய்கின்றது. சாம்பு துப்பறிபவனாகின்றான். கோபாலன் என்னும் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட சேர, சாம்புவின் திறமை (!) ஊரெங்கும் பரவுகின்றது. தமிழ் நாட்டிலும் பம்பாயிலும் பிரக்யாதி பெற்ற சாம்பு, லண்டனிலும் சென்று தன் திறமையை காட்டுவதில் முடிகின்றது.
ஐம்பது கதைகள் மொத்தம். தொடர்ச்சியாக எழுதினாரா, இல்லை விட்டு விட்டு அவ்வப்போது எழுதினார என்று தகவலில்லை. கதைகளை பார்த்தால் தொடர்ச்சியாக எழுதியதுபோலத்தான் உள்ளது.
அனைத்து கதைகளும் ஒரு சில டெம்ப்ளேட்டுகளில் அடைத்துவிடலாம். ஒரு குற்றம், சாம்பு ஏதாவது அச்சு பிச்சு என செய்ய போக, குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றவாளி மாட்டிகொள்வான். கோபாலன் கண்ணில் நீர் வழிய சாம்பு நீர் கெட்டிக்காரனய்யா என்று புகழ, சாம்பு மெளனமாக முழிப்பான இல்லை மூர்ச்சையாகி விடுவான். குற்றம் பெரும்பாலும் நகை திருட்டு / வைரக்கடத்தல் / பணதிருட்டு. கொலைகள் பக்கம் சாம்பு அதிகம் போவதில்லை. கொஞ்சம் பயந்தாங்கொள்ளி.
ஐம்பதும் ஒரே மாதிரி என்றாலும், அனைத்தையும் ரசிக்கும் படி எழுதியுள்ளார். குழந்தைகள் விரும்பும் கதைகள் என்றாலும், நாமும் ரசிக்கலாம். சிரிப்பின் அளவு அவரவர் மனநிலையை பொருத்தது. குழந்தைமனமுடையவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மிக சீரியசான, ஐம்பது வார்த்தைகளால் ஆன வாக்கியங்கள் கொண்ட குண்டு குண்டு புத்தகங்களை படிப்பவர்களும், எழுத்துக்களை கலைத்து போட்ட கவிதைகளை படிப்பவர்களும், எப்போதும் வர்க்க வேறுபாடுகளை பேசி பேசி, பேசி பேசி களைத்து போகும் நபர்களும் யோசித்து படிக்கவும்.