26 ஜனவரி 2019

பொண்டாட்டி நாவல் - அராத்து

ஃபேஸ்புக்கில் சிலர் பதிவுகளை பின்தொடர்வதில் பல அனுகூலங்கள், எந்த புத்தகம் ஓசியில் கிடைக்கும், எதற்கு டிஸ்கவுண்ட், புதிய புத்தங்களைப் பற்றிய குறிப்புகள் போன்றவற்றைதெரிந்து கொள்ளலா. ஆன்லைனில் மட்டுமே புத்தகம் வாங்கும் போது இது போன்ற பதிவுகளே நமக்கு துணை. ஜெயமோகன், ஆர்.வி, பா.ரா, ஹரன்பிரசன்னா என்று பலரின் பரிந்துரைகளை நம்பி  புது / தெரியாத தலைப்புகளில் வரும் புத்தகங்களை   வாங்குவது வழக்கம். சாருநிவேதிதாவின் பரிந்துரைகளை ஓரளவிற்கு நம்பலாம் என்ற எண்ணம் இருந்தது. புயலிலே ஒரு தோணி, கரமுண்டார் வூடு அவரின் அறிமுகம். அவரது நண்பர் அராத்து எழுதிய பொண்டாட்டி நாவலுக்கு நோபல், ஆஸ்காரிலிருந்து கலைமாமணி வரை அனைத்து விருதுகளும் கிடைக்கும் என்று புகழ்ந்து தள்ளியிருந்தார். அப்படிப்பட்ட புத்தகத்தை படிக்காமல் விட்டால் வாசகனாக இருந்து என்ன பயன் என்று கிண்டில் அன்லிமிட்டடில் படித்தேன். 

இனி எவன் பரிந்துரையும் நம்பக்கூடாது என்ற எண்ணத்தை தந்துவிட்டது. இதற்கு முன்னால் ஒளிர்நிழல் என்ற ஒரு சூடு, இப்போது இது. முதல் பத்து பக்கங்களுக்குளே தூக்கம் சுழட்டியடித்தது. எப்புத்தகத்தையும் பாதி படித்துவிட்டு விடும் வழக்கமில்லை. எப்படியும் முழுவதையும் படித்துவிடுவது வழக்கம். எப்படிப்பட்ட மொக்கையாக இருந்தாலும் சரி. பேருந்தில் செல்லும் போது வழக்கமாக தூக்கம் வராது. படிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, எழுத்துகள் குதிக்க ஆரம்பித்துவிட்டது. பின் நவீனத்துவ நாவல் இல்லையா, எழுத்துக்கள் எல்லாம் சிறிது சிறிதாக உதிர்ந்து, மொபைலும் விழுந்து, பல நாள் கழித்து பேருந்தில் நல்ல தூக்கம். 

முயற்சியில் சற்றும் மனந்தளராத நான் அடுத்த நாள் இழுத்து பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.