வெளவால் சோ. தர்மனின் சமீபத்திய நாவல். தூர்வை, சூல் போன்ற நேரடியான கதை சொல்லலும், கூகை நாவலின் நடையும் கலந்த நாவல். சோ. தர்மன் இன்னமும் கரிசல்காட்டை எழுதி முடிக்கவில்லை, கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாவலில் வரும் ஒரு பாத்திரத்தின் கூற்று "இந்த தாமிரபரணி கரையெல்லாம் கதைதான்". உண்மைதான். இன்னமும் ஒரு பத்திருபது நாவலாவது எழுதுவார் போல.
அவரது அனைத்து முந்தைய நாவல்களின் கரு ஒன்றுதான். நன்றாக வளர்ந்த ஒரு சமூகம் அதன் வீழ்ச்சியை நோக்கி செல்வது. ஒவ்வொரு நாவலிலும் வேறுபட்ட காரணிகள், சில பொதுவான காரணிகளும் உண்டு அல்லது ஒரே காரணத்தின் பல கோணங்கள். இந்த நாவலில் அது போன்ற ஒரு சாத்தியக்கூறை காட்டியுள்ளார்.
சோ. தர்மனின் நாவல்களை படிக்கும் போது அது சொல்லப்படுவதாகவே தோன்றும். சொல்லப்படும் கதைகளுக்கும், எழுதப்பட்ட கதைகளுக்கும் வித்தியாசம் இருக்கும். வைரமுத்து விகடனில் எழுதிய தொடர்கள் அனைத்தும் அவரால் சொல்லப்பட்டு யோரோ ஒருவரால் எழுதப்பட்டது என்பதை படிக்கும் போதே விளங்கும், சில விஷயங்கள் நெருடும், ஆசிரியரின் இருப்பு இருக்கும். பாலகுமாரனின் பிற்கால நாவல்களுக்கும் அதுதான் நடந்தது. ஆனால் இந்த சொல்லுதல் என்பது வேறுபட்டது. ஆசிரியரின் இருப்பு என்பதே கிடையாது. உருளைக் குடி கிராமத்தை நாம் காண முடியும்.
அதே கரிசல்காட்டு மண்தான். கட்டபொம்மன் காலத்தில் ஆரம்பித்து காங்கிரஸ் காலத்தில் முடிகின்றது. அவரது நாவல்களில் கட்டபொம்மன், ஊமைத்துரை எழுதிய அதே அளவிற்கு எட்ட்டையபுரம் சமஸ்தானத்து அரசரைப் பற்றியும் எழுதியுள்ளார். காட்டிக் கொடுத்த எட்டப்பன் என்பதிலிருந்து மாறுபட்ட பார்வை.
ஆங்கிலேயர்களில் பலர் இங்கு உள்ளவற்றை சுரண்டினாலும், ஒரு சில நல்லவர்களும் இருந்திருக்க வேண்டும். கர்னல் வேல்ஸை அப்படிப்பட்ட ஒருவராக இந்த நூலில் சித்தரித்துள்ளார். கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதர்களை அழித்தொழித்ததில் முக்கிய பங்கு வகித்த கர்னல்வேல்ஸின் குறிப்புகளை அடிப்படையக கொண்டு ஒரு நாவலை எழுதியுள்ளார். அதோடு கரிசல் மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வையும், தாமிரபரணி கரையெங்கும் இருக்கும் பல சாமிகளின் கதைகளையும் சேர்த்து கொடுத்துள்ளார்.
கர்னல் வேல்ஸ் கூற்றாக நாவலில் வருபவை பெரும்பாலும் அவரின் சொந்த கூற்றாக இருக்க வாய்ப்புள்ளது. கர்னலுக்கும் மருது பாண்டியர்களுக்கும் இடையிலான நட்பு, மருதுபாண்டியர்களின் வாரிசுக்கும் கர்னலுக்கும் இடையிலான சந்திப்பு எல்லாம் ஆவணப்படுத்த பட்டவை.
கர்னலின் மனமாற்றம் ஆசிரியரின் கற்பனையா என்ன என்று தெரியவில்லை, இருந்திருக்கலாம் என்றே கொள்ளலாம். கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது பாண்டியர்கள் படையை ஆங்கிலேயர்கள் மிக எளிதாக அழித்து ஒழிக்கவில்லை. பெரும் போரட்டத்திற்கு பின்னே தொட முடிந்தது. அவற்றை எல்லாம் விரிவாக இந்த இந்த இணைப்பில் காணலாம் .
பல உபகதைகளை, வழிவழியாக வந்த கதைகளை அங்கங்கு பொருத்தமாக இணைத்துள்ளார்.
இறுதிப்பகுதிகள் நேரடியாக கருப்பு கட்சியை தாக்குபவை. வெண்தாடி வேந்தரை இழுத்து ரெண்டு சாத்து சாத்தியிருக்கின்றார். ஆங்கிலேய இந்திய / ஹிந்து பாரம்பர்யத்தை அழிக்க போட்ட திட்டங்கள் அடங்கிய குறிப்புகளை எல்லாம் காங்கிரஸ் தலைவர் ராமசாமி தலையில் வைத்து எடுத்து கொண்டு ரயில் நிலைத்திற்கு போவதுடன் கதை முடிகின்றது. அதை வைத்து என்ன செய்தார் என்பது நாம் யூகித்து கொள்ள வேண்டியதுதான்.
சோ.தர்மனின் நாவல்களை படிக்கும் போது எனக்கு தோன்றுவது அவர் இளம்பருவத்தினருக்கு என்று சில புத்தகங்கள் எழுத வேண்டும். சூல், தூர்வை போன்றவை பத்து பதினைந்து வயது குழந்தைகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்களை கொண்டவை, ஆனால் உள்ளே இருக்கும் பாலியில் சமாச்சாரங்கள், கெட்டவார்த்தைகள் எல்லாம் அவர்களுக்கு ஏற்றவை அல்ல. அதற்கான வயது வேண்டும். இவையெல்லாம் இயல்பானவை என்றாலும் அது பெரியவர்களுக்கு, சிறியவர்களுக்கு அல்ல. சில விஷயங்கள் பெரியவர்களான பின் உள்ளே ஏறாது, இளமையில் விதைக்க வேண்டும். அதற்கு இளம் பருவத்தினருக்கு என்று ஆசிரியர் ஒன்றிரண்டு நாவல்களையாவது எழுத வேண்டும். பார்ப்போம்.
படிக்க வேண்டிய நாவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக