26 நவம்பர் 2012

யாருக்கு முதல் பத்திரிக்கை?

எச்சரிக்கை

இது ஒரு சொந்த அனுபவம். அங்கங்கு என் கற்பனை ஊற்றை (????)  கொண்டு மறந்து போன இடைவெளியை நிரப்பியுள்ளேன். ஏதாவது ஒரு கல்யாணப் பத்திரிக்கையை பார்த்தால் என் மனதில் வந்து போகும் இச்சம்பவத்தை எழுதிப்பார்த்தால் என்ன என்று முயற்சி செய்து பார்த்தேன். சனி ஞாயிறு வீட்டில் தனியாக வெட்டியாக அமர்ந்து பொழுதைப் போக்கினால் வேறு என்ன தோன்றும்?

முயற்சி கொஞ்சம் மோசமாகவோ இல்லை மிக மோசமாகவோ இருக்கலாம். படித்துவிட்டு மன உளைச்சல் அடைபவர்கள் (66A எல்லாம் உதவாது இதற்கு), அடுத்த முறை இது போன்ற எச்சரிக்கையை படித்து விட்டு தப்பிக்கவும். சொற்குற்றம் இருந்தால் மன்னிக்க.

சொந்தக் கதை எழுதும் போது கண்டிப்பாக இது போன்ற எச்சரிக்கை இருக்கும். டோண்ட் ஒர்ரி. பயப்பட வேண்டாம் அடிக்கடி இது போல் நிகழாது.


துணிந்தவனுக்கு எல்லாம் ஜெயம் :-)

வசந்திற்கு போன் செய்தேன்.

"டேய், என்ன பண்ற, எங்க இருக்க"

"ஆஃபிஸ்ல"

"இந்த வாரம் சனி ஞாயிறு ஃப்ரீயா"

"எஸ் எஸ் எஸ்"

"பெருமாள பாத்துட்டு வரலாம்ன்னு, வழக்கமான கூட்டணி இல்லாம எப்படி தனியா போறது?"

"இப்பத்தான போன மாசம் போய்ட்டு வந்தோம்"

"அது தங்கச்சி நிச்சியதார்த்தத்துக்கு முன்னாடி போனது, இப்ப அவ கல்யாணப் பத்திரிக்கை பிரிண்ட் ஆகி வந்திருக்கு, முதல் பத்திரிக்கைய எடுத்துட்டு போய்ட்டு வரணும்"

"அப்படியா! சரி சரி போலாம், நான் நேத்து தான் வந்தேன் ஊர்ல இருந்து"

"ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன கரெக்டா யூஸ் பண்றது நீதான்டா"

"ஒர்க் ஃப்ரம் ஹோம் இல்ல ஒர்க் ஃப்ரம் குத்தாலம்"

"படுபாவி, ஒரு நாள் உங்க ஆபிஸுக்கு போன் பண்ணி போட்டுக் குடுக்கனும்."

"உனக்கு ஏண்டா வயித்தெரிச்சல்"

"உங்க ஆபிஸ்ல ஒரு வேல இருந்தா சொல்லு"

"உனக்கு தான் சப்போர்ட் ஜாப் பிடிக்காதே"

"அது ஒன்னுதான் ட்ராபேக், இல்லன்னா, ஜாலியா ஊர்லயே இருப்பேன், சரி சொல்ல மறந்துட்டேன் பத்திரிக்கை நீதான் எடுத்துட்டு வரணும் அங்க இருந்து"

"நானா"

"ஆமா பத்திரிக்கை அடிச்சது பெரியப்பாதான், அவர் வீட்லதான் இருக்கு,
எனக்கு குரியர் அனுப்பி அத நான் வாங்கறதுக்கு கல்யாணமே முடிஞ்சிடும். நீ போய் வாங்கிட்டு வந்துரு"

"இது வேறயா."

"இன்னக்கி செவ்வாய், நாளைக்கே போய்ட்டு வந்துரு, அவர் வியாழன் ஊருக்கு போறார்"

"சரி, நான் வாங்கிட்டு வந்துட்டு போன் பண்றேன்"

வியாழன் இரவு அவனிடமிருந்து போன்

"உங்க பெரிப்பாகிட்ட இருந்து பத்திரிக்கைய வாங்கிட்டு வந்துட்டேன்"

"என்ன சொன்னார்"

"அவர் என்ன குமார்ன்னு நெனச்சு பேசிட்டுருந்தார், நல்ல வேளை உங்க பெரியம்மா காப்பாத்திட்டாங்க, டிக்கெட் போட்டுட்டியா?"

"டிக்கெட் புக் பண்ணிட்டேன் "

"எந்த ட்ரெயின்"

"புண்ணாக்கு, எந்த ட்ரெயின்ல டிக்கெட் இருக்கும் இப்போ, பஸ்தான் KSRTC"

"பிரைவேட்டா"

"இல்ல கர்நாடகா, கவர்ண்மென்ட் பஸ், பிரைவேட்ட விட நல்லாவே இருக்கும் "

"எத்தன மணிக்கு"

"அங்க காலைல மூணு மணிக்கு வந்திடும்"

"அப்ப நீ போய் ஸ்ரீனிவாசம்ல ரூம் வரிசைல நில்லு, நான் அஞ்சு மணிக்கு வந்திடுவேன்"

"சரி"

"ஸ்பெஷல் பூஜை பண்ணிடலாமா? பத்திரிக்கைய உள்ள பெருமாள் கால்ல வச்சு பூஜை பண்ணி தர ஏற்பாடு பண்ணலாம்"

"அது எப்படிடா முடியும், தரிசனம் பண்றது பெருமாளத்தானான்னு யோசிச்சு முடிக்கு முன்னாடி வெளிய தூக்கி போட்றாய்ங்க, அப்பற எங்க பூஜை பண்றது".

"போன வாட்டி ரூம் புக் பண்ணி தந்தானே அவன வச்சி பண்ணலாம்.ஆனா அவன் அநியாயத்துக்கு காச புடுங்குவான்"

"அவனா? 200 ரூபா ரூமை நானுறுக்கு நம்ம தலைல கட்டினவனாச்சே, இதுக்கு சொத்தையே இல்ல எழுதிக் கேப்பான்"

"ஒரு அஞ்சாயிரம் ஆகும், இப்பதான் என் அண்ணனோட ஃப்ரெண்ட் போய்ட்டு வந்தார்"

"ஒண்ணும் தேவையே இல்ல, போய் உண்டியல்ல பத்திரிக்கைய போட்டுட்டு கீழ போய் அலமேலு மங்காபுரத்துல ஒரு அர்ச்சன பண்ணிட்டு நான் ஊர் போய்ச் சேர்றேன். இருக்குற கல்யாணச்செலவுல இது வேறயா "

"அது என்னடா முதல் பத்திரிக்கை திருப்பதிக்கு"

"அவர்தான எங்க குல தெய்வம்"

"அப்போ ரெங்கநாதர்"

"அவருக்கு அப்பா பூஜை பண்றார்"

"அப்ப முதல் பத்திரிக்கைய அவருக்குத்தான வக்யனும், திருப்பதிக்கு போற"

"திருப்பதி பெருமாள் குல தெய்வம், அதனாலதான் போறேன், சனிக்கிழமை திருப்பதில, ஞாயிற்று கிழமை எங்க கோவில்ல. பெரியப்பா சனிக் கிழமை காலைல ஊருக்கு போய்டுவாரு, சோ சன் டே அங்க பூஜை"

"ஏண்டா டேய், உள்ளூர்ல இருக்ற ரெங்கநாதருக்கு முதல் பத்திரிக்கை வைக்காம திருப்பதி போற. ரெங்கநாதர் கோவிச்சிக்க போறார்"

"அவர் கோவிச்சிக்க மாட்டர், நீ மறக்காம பத்திரிகைய வாங்கிட்டு வா"

"என்னதான் இருந்தாலும், அது உங்கப்பா டெய்லி பூஜை பண்ற கோவில், நியாயப்படி அங்கதான வச்சி பூஜை பண்ணனும்"

"எல்லாம் ஒன்னுதான், இங்க பண்ணா என்ன அங்க பண்ணா என்ன, நீ எதுவும் குழப்பம் பண்ணாம வந்து சேரு, நா போனை வைக்கறேன்"

"சரி உன் இஷ்டம்"

சனி காலை மூன்று மணி

"என்ன வந்திட்டியா எங்க இருக்க"

"ரேணிகுண்டா ஸ்டேஷ்ன்ல. ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு"

"என்ன ட்ரெய்ன விட்டுடயா"

"இல்ல, பத்திரிக்கைய"

"அப்படியா சரி சரி வா சீக்கிரமா"

"டேய் தூக்கத்துல் இருந்து முழி, பத்திரிக்கைய வச்சிட்டு வந்துட்டேன்னு சொல்றேன்"

"என்ன விளையாட்றியா

"நிஜமாத்தான் சொல்றேன்; விளையாடல, சாமி படத்துக்கிட்ட வச்சிருந்தேன், என் ரூம்மேட் நைட் ஷிப்ட் கிளம்பிட்டு இருந்தாரு அவர் ட்ராப் பண்றேன்னு சொன்னதால அப்படியே அவசரத்துல வந்துட்டேன்"

"லூசு என்ன விளையாட்றியா, இப்ப சொல்ற"

"இப்பதான் ரூம் மேட் திரும்பி வீட்டுக்கு வந்து பாத்துட்டு போன் பண்ணாரு, இப்ப என்ன பண்ணலாம்"

"ஆ நுவ்வே நா துரோகின்னு ஒரு பாலகிருஷ்ணா படம் ஓடுது இங்க பாத்துட்டு ஊருக்கு போலாம், வைடா போன"

இரண்டு மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தான்.

"நாயே நாயே, அறிவுகெட்டத்தனமா வேல பண்ணியிருக்கயே, இப்ப என்ன பண்றது"

"என் ரூம்மேட்ட எடுத்துட்டு வரச் சொன்னேன், அவர் நைட் ஊருக்கு போறாப்லயாம்"

சிறிது நேர வெட்டிச் சண்டைக்கு பின்,

"ம்ம்ம்ம், இரு என் சித்தி பையன் ராஜாவுக்கு போன் பண்றேன், வீட்லதான் இருப்பான் அவன வரச் சொல்றேன்"

புக் செய்த ரூமிற்கு போனோம். பின் ராஜாவுக்கு போன் செய்தேன். அரைத்தூக்கத்தில் அவன் குரல்.

"அண்ணா சொல்லுங்க, எப்படி இருக்கீங்க? என்ன இந்த நேரத்துல"

"நல்லா இருக்கேன். நான் திருப்பதில இருக்கேன். எனக்கு ஒரு ஹெல்ப் வேணும், இன்னக்கி உனக்கு காலேஜ் இருக்கா?"

"இல்ல எக்ஸாம் எல்லாம் முடிஞ்சாச்சு, சும்மாதான் இருக்கேன்"

"அப்ப உடனே கிளம்பி திருப்பதி வா,  கல்யாண பத்திரிக்கை என் ஃப்ரெண்ட் வீட்ல இருக்கு, அட்ரஸ் அனுப்பறேன், அவர்கிட்ட பத்திரிக்கைய வாங்கிட்டு வா. நேரா மேல் திருப்பதிக்கு வந்திடு"

"பத்திரிக்கையா? என்ன பத்திரிக்கை, நான் ஏன் அத வாங்கிட்டு வரணும்"

"தங்கச்சி கல்யாண பத்திரிக்கைய அண்ணன் எடுத்துட்டு திருப்பதி வந்தா உடனே அவனுக்கு கல்யாணம் ஆகுமாம், அதான்"

"ஹிஹி"

"என் ஃப்ரெண்ட் பத்திரிக்கைய மறந்து வச்சிட்டு வந்திட்டான், அதுக்கு தான் இங்க வந்ததே. அவன் வீட்ல இருக்கு, அவன் ரூம் மேட் இருக்காரு அங்க, அவர்கிட்ட வாங்கிட்டு வா"

"ம்ம்ம், சரி வர்றேன், நானே திருப்பதி போகணும்னு பிளான் பண்ணிட்டு இருந்தேன், அவரே கூப்ட்றார். உங்க ஃப்ரெண்ட் வீட்டு அட்ரஸ் அனுப்பிடுங்க, போன் நம்பரோட"

"ஒகே பை"

மந்தகாசம் தவழ நின்று கொண்டிருந்தான் வசந்த். கோபம் சரியாக தலையில் ஏறியது. "செய்றதையும் செஞ்சிட்டு சிரிப்பு வேற வெளக்கெண்ண"

"என்ன வர்றானா?"

"னொன்ன! எல்லாம் வர்றான்"

"ரெங்கநாதர் நல்ல விளையாடறார் போலயே"

"நீ மறந்துட்டு வந்து அவர் மேல பழி போடறியாடா வெளக்கெண்ண" என்று திட்ட ஆரம்பித்தேன்.

"சரி சரி. டென்ஷனாகாத. வா குளிச்சிட்டு மேல போலாம். மதியம் மூணு மணிக்கு ஸ்பெஷல் தரிசன் டிக்கெட் இருக்கு, முதல்ல நாம போய் டிக்கெட் போட்றலாம், உன் தம்பி எப்படியும் 12 மணிக்குள்ள வந்துருவான். அப்பறம் போய் அவனுக்கு ஒரு டிக்கெட் போட்டுட்டு போய்டலாம்"

"மணி அஞ்சாகுது, ஏழு மணிக்கு கிளம்பினாலும் அதிகபட்சம் ஒரு மணிக்கு வந்திருவான், சரி போகலாம்"

காலை பத்து மணி

"என் தம்பி வரும் போது அவனுக்கு டிக்கெட் இல்லைன்னா என்ன பண்றது. அவனுக்கும் சேத்து வாங்கிடலாமா?"

"அவன் வரட்டும் டிக்கெட் நிறைய இருக்கு, இது புதுசு அவ்வளவா யாருக்கும் தெரியாது, நாம போய் மயூரால சாப்பிட்டு வருவோம்"

"அவ்வளவு தூரம் வெயில்ல போகணுமா"

"வேற எதுவும் நல்லா இருக்கது, வா ஜீப்ல போலாம், என்ன நுப்பது ரூபா கேப்பான்"

"நுப்பதில்ல முப்பது"

"எல்லாம் ஒன்னுதான்"

மதியம் ஒரு மணி. ராஜாவிடமிருந்து போன்

"டேய் வந்துட்டியா, நேரா சி.ஆர்.ஓ ஆபிஸ்க்கு வந்துரு"

"அது எங்க இருக்கு"

"பஸ் ஸ்டாண்டுல இருந்து முன்னாடி வா, லெஃப்ட் சைட் நிறைய கடையா இருக்கும், அங்க ரைட் சைட் பாரு. ஒரு பெரிய பில்டிங்".

"சரி, ஒரு பத்து நிமிஷத்துல வந்துர்ரேன்"

"டேய் வந்துட்டான், வா நாமளும் போலாம் .  நல்ல வேளை பேட்டரி சாகறதுக்கு முன்னாடி வந்துட்டான்"

ஒரு பையை மாட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டே வந்தான்.

"அவன் தானா, பேசாம நீயே இன்னொரு டிக்கெட் எடுத்திருக்கலாம், எவனுக்கும் தெரியாது. அவங்க எடுக்கற போட்டோ குவாலிட்டிக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் இருப்பீங்க"

"வா வா, முதல்ல போய் டிக்கெட் எடுத்துட்டு வரலாம்"

"நல்ல வேலை பாத்திருக்கீங்க போல, பத்திரிக்கைய மறந்துட்டு வந்து"

"ம்ம்ம், நேரம்"

"சரி சாப்டுட்டு உள்ள போலாம் சரியா இருக்கும்"

சரியாக இரண்டு மணி நேரம் தரிசனம் முடிந்து வந்தோம்.

"அண்ணா அடுத்து எங்க ஊருக்கா?"

"இல்ல அலமேலு மங்காபுரம்"

அலமேலு மங்காபுரத்தில் உள்ளே சென்றோம். குங்குமார்ச்சனை செய்ய டிக்கெட் வாங்கியிருந்தோம். அவசரத்தில் டிக்கெட்டை மட்டும் தர, வசந்திற்கு கோபம் வந்து திட்ட ஆரம்பித்தான்.

"லூசு, பத்திரிக்கையை சேர்த்து குடுக்க வேண்டியதுதான, வேடிக்கை பாத்துட்டு நிக்ற, விளக்கெண்ண. கொண்டா அதை" என்று கையிலிருந்து பறித்து அர்ச்சகரிடம் தந்தான்

தாயார் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து பத்திரிக்கை நிறைய குங்குமத்தை அள்ளி கையில் தந்தார் பெரியவர். அவரிடம் ஒரு நூறு ரூபாயை தரப் போக கோபத்தில் ஏதோ சொன்னார், தாய் மொழியாம் தெலுங்கில் திட்டினாலும் ஆ(த்)ந்திரத் தெலுங்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்திலிருந்த ஒரு குட்டி அர்ச்சகரிடம் பணத்தை தந்து விட்டு கிளம்பினோம்.

வெளியே வந்து ராஜாவை தேடிப் பிடிக்க கொஞ்சம் நேரமாயிற்று. அர்ச்சனை டிக்கெட்டில் இருவர்தான் போக முடியும் என்பதால் அவனை சர்வதரிசனத்தில் அனுப்பிவிட்டோம்.

அதற்குள் வசந்த் காலையிலிருந்து திட்டியதற்கு சேர்த்து வைத்து திட்ட ஆரம்பித்தான்.

"கிறுக்கன் மாதிரி டிக்கெட்ட மட்டும் குடுக்ற, பத்திரிக்கைய யார் குடுப்பா. கூட்டமா இருந்தா நாமதான் இடிச்சு பிடிச்சு போகணும், உனக்கு என்ன ஸ்பெஷலா கவனிப்பு கிடைக்குமா?"

"சரி சரி வா, போய் போன் எடுத்துட்டு வரலாம்"

"அண்ணா எங்க போறீங்க போனெல்லாம் எங்கிட்ட தான இருக்கு"

"அடப்பாவி இதோடயா உள்ள போன, எப்படி விட்டாங்க உன்ன!"

"யாரும் செக் பண்ணலயே, இங்கயும் போன் கொண்டு போக கூடாதா? எனக்கு யாரும் சொல்லலியே"

"அடுத்தவாட்டி ஸ்பெஷால சொல்ல சொல்றேன். போர்டு இருக்கே தெரியல. உன் நல்ல நேரம், இல்ல மறுபடியும் வெளிய வந்து லாக்கர்ல வச்சிட்டு போகனும்"

"அண்ணா நான் கிளம்பட்டுமா?"

"இருடா வந்துட்ட, நாளைக்கு கோவிந்தராஜப் பெருமாள், கல்யாண வெங்கடேஸ்வரர் எல்லாம் பாத்துட்டு போலாம்"

"கல்யாண வெங்கடேஸ்வரர தரிசனம் பண்ணினா சீக்கிரம் கல்யாணம் ஆகும் தம்பி. எல்லாம் பாத்துட்டு போலாம், நான் எதுலயும் டிக்கெட் போடல, சேந்தே சென்னை போலாம்"

"சரி"

"சீக்கிரம் கல்யாணும் ஆகும் சொன்ன உடனே சரின்னு சொல்றான் பாரு"

இரவு பத்து மணிக்கு ஸ்ரீனிவாசம் சென்று, சார்ஜ் செய்து வீட்டிற்கு போன் செய்தேன்.

"சொல்லு"

"நீ எதுக்குடி போன எடுத்த அம்மா எங்க"

"அம்மா லேண்ட் லைன்ல பேசிட்டு இருக்காங்க, காலைல இருந்து போனே காணோம்"

"பேட்டரி டவுன், எல்லாக் கோவிலுக்கும் போய்ட்டு வந்தாச்சு, கீழ அர்ச்சன பண்ணிட்டு வந்தேன், மேல் பத்திரிக்கைய உண்டியல்ல போட்டேன்"

"பத்திரிக்கைய பாத்தியா"

"பாத்தேனே, நல்ல இருக்கு"

"நல்ல பாத்தியா"

"ஏன்"

"எல்லாம் சரியா இருக்கா?"

"எல்லாம் சரியாத்தான இருக்கு, வசந்தும் பாத்தான், ராஜாவும் பாத்தான்"

"அவன் எங்க வந்தான் அங்க"

"அந்த பரதேசி பத்திரிக்கைய ஊர்ல வச்சிட்டு வந்துட்டான், ராஜாதான் கொண்டுவந்தான்"

"அடேங்கப்பா, என் கல்யாண பத்திரிக்கைக்கு எத்தன ஆளு. உங்க எல்லாருக்கும் கண்ணு போச்சா? இல்ல தமிழ் மறந்து போச்சா?"

"லூசு, விஷயத்த சொல்லு"

"ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக், என் பேர் தப்பு, அப்பா பேரு தப்பு. முக்கியமா கல்யாண நாள் தப்பு"

"என்ன" மெதுவாக கோபம் வந்தது. வேகமாக பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தேன். ஒவ்வொரு தப்பாக கண்ணில் பட்டது. புதன் கிழமை வியாழானாக் மாறி இருந்தது. வந்த கோபத்தில் யாரை திட்டுவது என்று புரியாமல், அவளை திட்ட ஆரம்பித்தேன்.

"டேய் நிறுத்து, என்ன ஏன் திட்ற. நான் தான் பார்த்து சொன்னேன் எல்லாத்தையும்"

"இப்ப என்ன பண்றது"

"நீ ஒன்னும் பண்ண வேண்டாம். பெரியப்பா நேத்து நைட்டே வந்துட்டரு. வந்த உடனே பாத்துட்டு இங்க ஊர்லயே வேற பத்திரிக்க அடிச்சு கோவிலுக்கும் போய்ட்டு வந்தாச்சு"

"எப்படி உடனே அடிச்சு குடுத்தான்"

"என்னமோ, எனக்கு என்ன தெரியும், வேலையில்லாம சும்மா இருக்கான் போல"

"புதுசா அடிச்சதுல தப்பு ஏதுமில்லையே?"

"அது எல்லாம் ஒன்னுமில்லை, பெரியப்பாதான் டென்ஷன் ஆகிட்டாரு"

"சரி போ, நான் நாளைக்கு கூப்டறேன். அம்மாகிட்ட சொல்லிடு, பேட்டரி இன்னும் ஃபுல்லா சார்ஜ் ஆகல. வச்சிடறேன்"

போனை வைத்துவிட்டு நடந்தை இருவரிடமும் சொன்னேன். வசந்த் சிரிக்க ஆரம்பித்தான்.எனக்கு கோபம் வர ஆரம்பித்தது

"என்னத்துக்கு சிரிக்கிற"

"இல்ல முதல் பத்திரிக்கை யாருக்குன்னு யோசிச்சேன்.

நீ முதல் பத்திரிக்கைய எடுத்துட்டு திருப்பதிதான் வரணும்னு துடியா துடிச்ச. ரெங்கநாதர் போடி போ, எனக்கு தராம அங்கயா போறன்னு, தனக்கு தனியா பத்திரிக்கைய தான் ஊர்லயே அடிச்சிக்கிட்டாரு. எல்லாருக்கும் குடுக்க போறது உங்க ஊர்ல அடிச்ச பத்திரிக்கையத்தான். ரெங்கநாதர் அக்செப்ட் செஞ்ச பத்திரிக்கைதான் எல்லார்க்கும். திருப்பதி பெருமாள் தனக்கு தனக்கேனு ஒரே ஒரு பத்திரிக்கைய, தப்பா இருந்தாலும் பரவாயில்லைன்னு அடிச்சு எடுத்துகிட்டாரு"

முதலில் அடித்த 500 பத்திரிக்கையில் ஒன்று உண்டியல் போடப்பட்டது, ஒன்று குங்குமத்துடன் பூஜை அறையில் உள்ளது. மிச்சம்  பத்திரமாக பரணில் உள்ளது .

இரண்டு வருடங்கள் கழித்து மறுபடியும் வசந்திற்கு போன் செய்தேன்

"டேய் சனிக்கிழமை திருப்பதி போலாமா"

"என்ன உன் கல்யாணப் பத்திரிக்கையா"

"ஆமா"

"ஹும் மறுபடியும் முதல் பத்திரிக்கையா"

"இல்லப்பா, மூணாவது பத்திரிக்கை"

"ஹே என்ன, மூணாவது பத்திரிக்கையா?"

"அல்ரெடி பொண்ணு வீட்ல அவங்க பூஜை பண்ற சத்ய நாரயண சுவாமிக்கு பூஜை பண்ணித்தான் எங்க வீட்டுக்கே வந்திருக்கு, எங்க வீட்ல ரெங்கநாதருக்கு வச்சு பூஜை பண்ணியாச்சு, இது மூணாவது பத்திரிக்கை. இந்த வாட்டி ஒவ்வொரு பெருமாளுக்கும் தனித்தனியா பத்திரிக்கை அடிக்கல"

"ஹா ஹா ஹா"

2 கருத்துகள்:

  1. மிகவும் ரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி, நன்றி.

    முதல் நன்றி திட்டாமல் விட்டதற்கு.
    இரண்டாவது நன்றி ரசித்தற்கு.

    பதிலளிநீக்கு