12 ஜூலை 2017

ரத்தத்தில் முளைத்த என் தேசம்

அமர்நாத் யாத்திரை சென்ற ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிலர் உயிரை இழந்துள்ளனர். ஹிந்துக்களின் ரத்தம் அவர்கள் ஹிந்துக்களாக இருப்பதன் காரணத்தால் மட்டுமே சிந்தப்படுவது இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வரும் துயரம். அதுவும் ஹிந்துக்களின் பூர்வீக பூமியான நமது பாரதத்தில். முதல் காரணம், ஹிந்து மதம்தான். வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஹிந்துக்களுக்கே உரித்தான பெருந்தன்மை, தர்மத்தின்பாலிருக்கும் பற்று, நேர்மை அதுவே இன்று இந்த நிலைமையை உண்டாக்கிவிட்டது. ஆனால் தர்மம் என்றும் தன்னை நம்பியவர்களை கைவிடாது என்பதே நமக்கு போதிக்கப்பட்டது. அதை சரித்திரம் பல முறை நிரூபித்து வருகின்றது. இல்லை என்றால் இன்று ஹிந்து மதம் என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். ஹிந்து மதம் என்பதே கிடையாது என்று உளரும் முட்டாள்கள் யாராவது துரதிருஷ்டவசமாக இதை படிக்க நேர்ந்தால், மூடி வைத்துவிட்டு கிளம்பலாம்.

நாட்டில் மதக்கலவரம் வரும் போது நமது டம்ப்ளர்களும், புர்ச்சியாளர்களும், பஹூத்தறிவாளர்களும் கூறுவது, பெரியார் மண். இங்கு இஸ்லாமியனும் நானும் சகோதரன். ஒரு மண்ணும் கிடையாது. முக்கியக்காரணத்தை தமிழர்களுக்கு பிடித்த சினிமா வசனத்தாலேயே காட்டலாம், ஹே ராமில் வரும் ஒரு வசனம், "நீ ஒரு செளத் இண்டியன், என் வேதனை உனக்கு புரியாது ராம்". அதுதான். வட இந்தியா அந்நிய படையெடுப்பின் வலியை முழுவதும் தாங்கியுள்ளது. அதன் வலி அவர்களுக்கு தலைமுறை கடந்தும் இருக்கின்றது. 

அந்த வலியை ஆரம்பம் முதல் கூறுகின்றது. எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரதம் விழுந்தது. எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன. கோரி, கஜினி, கில்ஜி, துக்ளக், பக்தியார், குத்புதீன் என்று ஒவ்வொரு அரசனும் செய்த அக்கிரமங்கள். இடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்கள். காசி, மதுரா, ஹம்பி. சோம்நாத் கோவிலின் ரத்த பக்கங்கள இங்கு எத்தனை பேருக்கு தெரியும். சோம்நாத் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை கொன்று இடிக்கப்பட்ட கோவில். பெயர் அறியாத எத்தனை கோவில்கள், ஹிந்துக்கள். 


சரித்திரத்தின் அந்த ரத்தப் பக்கங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றது. இந்நூல் பல புத்தகங்களிலிருந்து, வலையிலிருந்துமே திரட்டப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து ஆங்கிலத்திலிருக்கும் ஆய்வு நூல்கள். அதை தமிழில் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டி எழுதிய ஆசிரியருக்கு வணக்கங்கள். 

முகலாய மன்னர்களை பற்றிய மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் ஒரு கலகலப்பான தொனியில் அவர்களின் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில் கூறிச் செல்லும் ஒன்று. பாபர் கட்டிய அடிமைச்சின்ன இடிக்கப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதால் கவனமாக சர்ச்சைகளை தவிர்த்து எழுதப்பட்டிருக்கும். ஆனால் இப்புத்தகத்தின் ஆசிரியருக்கு அந்த தயக்கம் எல்லாம் ஏதுமில்லை. உண்மையை உரக்க சொல்லி செல்கின்றார். 

அந்நியர்கள் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைந்து விடாத அளவிற்கான இயற்கை அரணை கொண்ட நாம் எப்படி பல நூறு ஆண்டுகள் அடிமைப்பட முடிந்தது? . இன்று ஊடுருவியிருக்கும் பயங்கரத்தின் முதல் அடியை எடுத்து வைத்த முகம்மது கோரியை ப்ருத்விராஜ் முதலில் வெற்றி கொண்டபோதே  முழுவதும் அழித்து ஒழித்திருந்தால் அவனால் மீண்டும் வந்திருக்க முடியாது. போர் தர்மத்தை காக்க நினைத்து அவனையும், அவன் படையையும் முழுவது கொல்லாமல் விட்டதன் விளைவு அடுத்து வந்த போது தோல்வி. சரித்திரத்திலிருந்து நாம் என்றும் கற்றுக் கொள்வதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நாம் நிரூபித்துள்ளோம். காலைத்தடுக்கிய் புல்லை வேரோடு அழித்தார் சாணக்கியர் என்பார்கள். ப்ருத்திவிராஜனுக்கு அவன் மாமனாரிமிருந்து ஒரு உதவி கிட்டியிருந்தால் தோல்வி அடைந்திருக்காது. நாம் சரித்திரத்தை மட்டுமல்ல நமது புராணங்களிடமிருந்து கூட எதையும் கற்று கொள்ளவில்லை என்பதைத்தான் இதுவும் காட்டுகின்றது. நமக்குள் நாம் ஐந்து பேர், குரு குல பகைவர்களுக்கு நூற்று ஐந்து பேர் என்று தர்மன் கூறும் அடிப்படையை மறந்து ஒற்றுமையின்றி அழிவுக்கு சென்றனர். 

கிருஷ்ணன் தன் பகைவர்கள் எவரையும் இன்று போய் நாளை வா என்று அனுப்பவில்லை. எதிரியின் ஆயுதமே என் ஆயுதத்தை முடிவு செய்யும் என்றே அனைவரையும் வெற்றி கொண்டான். அப்படிப்பட்ட ஒருவனை பற்றிய நூல். அழிவிலிருந்த ஹிந்து தர்மத்தைக் காக்க புறப்பட்ட சிவாஜியின் வீரக்கதையை பேசும்புத்தகம் இது. பொதுவான இந்திய சரித்தரம் சம்பந்தமானது என்றாலும் பெரும்பாலும் பேசுவது சிவாஜியைப் பற்றிதான். அதனால் இப்புத்தகத்தின் நாயகன் சிவாஜிதான். 

ஆரம்பப்பகுதிகள் இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்புகள், அவர்களின் வெற்றிகள் தோல்விகள் என்று பேசுகின்றது. அழிக்கப்பட்ட கோவில்கள், மதம்மாற்றப்பட்ட மக்கள் என்று. பாபருக்கு முன்னால் வரை இருந்தவர்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இங்கு வந்து கொள்ளையடிக்கவே முயற்சி செய்து வந்திருக்கின்றனர். அதே சமயம் மதம்மாற்றமும் ஒரு முக்கிய விஷயமாக இருந்திருக்கின்றது. வாளால் பரப்பப்படவில்லை என்று பேசலாம். மத்திய ஆசியாவில் வேண்டுமென்றால் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் இந்தியாவில் அது வாளால்தான் பரப்பப்பட்டுள்ளது. அதை மறுக்கவே முடியாது. 

அக்பர் காலத்தில் இருந்த இணக்கமான சூழ்நிலையை பின்னால் வந்தவர்கள் தகர்த்தனர். தாஜ்மகால் ஹிந்து கோவிலா என்பதெல்லாம் சுவாரஸ்யமான யூகமே, நம்புவது மிகக்கடினம். அதைக்கட்ட ஆன செலவுகளின் புள்ளிவிபரத்தை அளித்துவிட்டு அது ஹிந்து கோவிலாக இருந்தது என்பது அதீத கற்பனையாகவே தெரிகின்றது.

ஜிசியா வரி, மதமாற்றம், கோவில்கள் இடிப்பு, பல்கலைகழகங்கள் அழிப்பு என்று ஒட்டு மொத்த வடஇந்தியாவும் நாசமான நிலையில் தென்னிந்தியாதான் ஹிந்து தர்மத்தை காத்து அளித்துள்ளது. ஹக்கர் - புக்கர் ஸ்தாபனம் செய்த விஜய நகர சாம்ராஜ்ஜியம், சிவாஜி உண்டாக்கிய மராத்திய சாம்ராஜ்ஜியம். இது இரண்டும் இல்லையென்றால் பாகிஸ்தான் என்னும் நாட்டின் அவசியமே நேர்ந்திருக்காது. 

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கதை பல நூல்களில் காணக்கிடைக்கின்றது. வேங்கடநாத விஜயம், நான் கிருஷ்ணதேவராயர், காவல் கோட்டம், திருவரங்கன் உலா போன்ற நூல்களில் அறியலாம். மதுரை சில காலம் சுல்தான்களால் ஆளப்பட்டது. அதைப்பற்றி சொக்கலிங்கம் எழுதிய மதுரை சுல்தான்கள் என்னும் புத்தகத்தில் அறியலாம். மாலிக்காபூரின் படையெடுப்பிற்கு பயந்து ஸ்ரீரங்கம் கோவிலே மூடப்பட்டது, உற்சவர் எங்கெங்கோ சென்று கடைசியில் திருமலையில் வாசம் செய்தார், திருமலை செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டு காப்பற்றப்பட்டது. மீனாக்ஷி அம்மன் கோவில் காடாக மாறியது. அனைத்தையும் செய்தது முகலாயர்களின் படையெடுப்பு. அனைத்தையும் மீட்டது நாயக்கர்களின் அரசு. அப்போ வீரமான தமிழர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள்!! 

சிவாஜி, ஹிந்து மதத்தை காப்பாற்றியவர் என்றே அங்கு போற்றப்படுகின்றார். நிலத்தில் அவர் பெற்ற வெற்றிகளுடன், கடலிலும் ஆதிக்கம் செலுத்தினார் எனபதெல்லாம் பிரம்மிப்பை தருவது. எத்தனை போர்கள், சொந்தமான பீரங்கிப்படை வைத்திருந்தார் அதுவும் சுதேசி. இங்கேயே தயாரிக்கப்பட்டது, வெள்ளைக்கார பொறியியலாளர்கள் உதவியோடு என்றாலும். ஒரு புறம் சிந்திகள், முகலாயர்கள், பீஜப்பூர் சுல்தான்கள், முகலாயர்களுடன் சேர்ந்த ராஜபுத்திரர்கள், உடன் பிறந்த துரோகங்கள் என்று அனைத்தையும் சமாளித்த வீரனைப் பற்றி நமக்கு தெரிந்து எவ்வளவு? ஒன்றுமில்லை. சிவாஜியின் வெற்றிக்கு காரணம், எதிரிகளுக்கு ஏற்ப தன் முறையை மாற்றி கொண்டதுதான். மாராட்டியர்களின் கடற்படை வலிமையை வைத்து சாண்டில்யன் சில புத்தகங்களை எழுதியிருக்கின்றார். ஜலதீபம், கடல் ராணி. ஜல்ஜீரா கோட்டையை களமாக வைத்து, கடற்கொள்ளைக்காரனாக இருந்து பின்னர் மராட்டிய கப்பற்படையை நிர்வகித்த கனோஜி ஆங்க்ரே இந்நூல்களின் முக்கிய பாத்திரம். 

ஒரு சாதரண வீரன், தன் முயற்சியால் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உண்டாக்கியது ஒரு பெருமைதான் என்றாலு, அவர் காலத்திற்கு பின்னாலும் அது தொய்வடையாமல் அதே கம்பீரத்துடன் இருப்பதுதான் அவருக்கு பெருமை. அது வெகுசிலருக்கே நடந்துள்ளது. பல மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்கு பின் அந்த மகோந்நதத்தை தக்க வைக்க முடியாமல் போயிருக்கின்றது. நரசிம்ம வர்மனுக்கு பின் பல்லவ ராஜ்ஜியம் வளரவில்லை. ஆனால் ராஜராஜனுக்கு பின் ராஜேந்திரன் அதை உச்சத்திற்கு கொண்டு சென்றான். அப்படிப்பட்ட அடித்தளத்தை ராஜராஜன் வைத்து விட்டு சென்றான். அக்பருக்கு பின் இரண்டு தலைமுறை ஆட்சி செய்ய முடிந்தது. ஒளரங்கசீப் ஆட்சியை விஸ்தரித்தாலும், அதை தக்கவைக்க முடியவில்லை. சிவாஜி என்னும் சிங்கம் அதை கலைத்தது. சிவாஜிக்கு பின்னும் வெகுகாலத்திற்கு மராட்டிய அரசு முகலாயர்களை விரட்டியத்துக் கொண்டுதான் இருந்திருக்கின்றது. அனைத்து ராஜ்ஜியங்களிலும் நடந்தது போன்ற வாரிசுரிமைப் போர் இருந்தாலும், சிவாஜி அமைத்த நிர்வாக அமைப்பாலும், பேஷவாக்களாலும் காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றது.  தெற்கிலும் தன் ஆட்சியை நடத்தியது. 

சுவாரஸ்யமான விஷயம், முதலில் சில பகுதிகளில் வட இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பில் தோற்ற மன்னர்களில் பலர் பிராமணர்கள். பிராமணர்கள் மன்னர்களாக இருந்தால் இதுதான் நடக்கும், அது அவர்களுக்கான வேலையில்லை என்று தோன்றியது. ஆனால் மராட்டாவில், சிவாஜிக்கு பிறகு முகலாயர்கள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய பேஷ்வாக்கள் பிராமணர்கள்!

சில இடங்களை இன்னும் விவரித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. ஹைதர் அலியை பற்றி சிறிய குறிப்போடு நிற்கின்றது. திப்பு சுல்த்தான் பற்றி ஏதுமில்லை. சில இடங்கள் கொஞ்சம் வளவளவென்று போகின்றது. கொஞ்சம் பாடப்புத்தகத்தனம் வருகின்றது. 

சம்பந்தமேயில்லாமல் திடீரென கெட்டி பொம்மு வருகின்றார். யாரா? கட்ட பொம்மன். சிவாஜி கூட வந்து பயங்கரமாக தமிழில் உறுமுவாரே அவர்தான். உண்மையில் அவர் தெலுங்கில்தான் உறுமியிருக்க வேண்டும். அவர் சரித்திரம் ஒரு இடைச்சொருகலாக துருத்திக் கொண்டு தெரிகின்றது. அதே காலகட்டத்தில் அங்கு போராடிய பூலித்தேவன், மருது பாண்டியர்கள் போன்றவர்களின் சரித்திரமின்றி இவர் மட்டும் எட்டிப்பார்ப்பது ஏனோ?

வடகிழக்கின் சரித்திரம் பெரும்பாலும் நமக்கு தெரியாது. சட்டென்று மாநிலங்கள் பெயரைக்கூட சொல்ல முடியாது. முதன்முதலாக அஸ்ஸாம் மாநில வரலாற்றை படிக்க முடிகின்றது.

சரி, இந்த நூலில் எழுதப்பட்டவை எல்லாம் எப்படி உண்மை என்று நம்புவது, ஒரே வழி நூலின் பின்னிணைப்பாக இருக்கும் நூல்களின் பட்டியலையும், சுட்டிகளையும் படித்து உய்வத்தான். யாராவது இதில் இருப்பது எல்லாம் உண்மையில்லை என்று ஆதரங்களுடனும் எழுதலாம். அதுவரை இதில் கூறப்படுவ சரித்திர உண்மை என்றுதான் நம்ப முடியும்.

இந்த புத்தகம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நம் ரத்த சரித்திரம். எத்தனை லட்சம் மனிதர்களின் ரத்தம் இங்கு சிந்தப்பட்டிருக்கின்றது. அவர்கள் எதற்காக அதைச் செய்தார்கள், எதை காக்க அதை செய்தார்கள் எனபதை மனதில் வைக்க வேண்டும். அரங்கன் ஊர் ஊராக சுற்றியதும், மீனாக்ஷியம்மன் கோவில் கொள்ளையடிக்கப்பட்டதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரிகின்றது. நமது தெய்வங்களை வணங்ககூட முடியாமல் தவித்த அந்த நிலையை மீண்டும் அடையாமல் இருக்க, சரித்திரத்தை கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். 

இதை எழுதியவர் பெயரை காணோம். சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று புத்தகத்திலிருக்கின்றது. தேடியதில் பிரகாஷ் என்பவர் என்பதாக தெரிந்தது. சரியா என்று தெரியவில்லை. 

இணையத்தில் கிடைக்கின்றது. இருந்தும் புத்தகமாக படிப்பதே பிடித்திருக்கின்றது.

தடாக மலர் பதிப்பித்திருக்கின்றது.


எழுத்தாளர் ஆமருவியின் குறிப்புகள் 


3 கருத்துகள்:


  1. படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆமருவியின் அங்கத விமர்சனமும் படித்தேன். படிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. 350 ரூபாயா? ஹூ....ம். எத்தனை பக்கங்கள்?

    பதிலளிநீக்கு
  2. ஆன்லைனில் கிடைக்கின்றது. மொத்தப் புத்தகமும் ஃபேஸ்புக் பதிவுகளாக எழுதப்பட்டவை என்று நினைக்கின்றேன். பல தளங்களில் கிடைக்கின்றது. 600 பக்கங்கள் வரலாம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல விரிவாக கருத்துகள். நன்றி. 600 பக்கங்கள் ? மலைக்க வைக்கிறது. :)

    பதிலளிநீக்கு