27 நவம்பர் 2013

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

ஓரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களை பற்றிய கதை. படிக்கும் போது முதலில் நினைவில் வந்தது அசோகமித்திரனின் யுந்தங்களுக்கிடையில் நாவலும், பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதமும். பாலகுமாரனின் நாவல் ஒரு குடும்பத்தின் / சமூகத்தின் வெற்றியை பற்றியது, அசோகமித்திரனின் நாவல் முழுக்க முழுக்க குடும்பத்தின் மாறுதல்கள், அதன் விளைவுகள். இக்கதை குடும்பத்தில் அரசியல், சமூகத்தின் தாக்கத்தை பற்றி பேசும் நாவல். ஒரு குடும்பக்கதையாக ஆரம்பித்து ஒரு அரசியல் கதையாக முடிகின்றது. 

பொன்னா என்னும் ஒரு பாட்டியின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் கதை, முன்னும் பின்னும் போகின்றது. பொன்னாதான் மையம். பொன்னாவின் தாத்தாவின் கதையில் ஆரம்பித்து, பொன்னாவின் எள்ளு பேத்தி பிறக்கும் வரை போகின்றது. மிகப்பெரிய நாவலாக போயிருக்க கூடிய அபாயம் இருந்தும், சுருக்கமாக தாவி தாவி செல்கின்றது.

கதை நேர்கோடாக செல்வதில்லை. முன்னும் பின்னும் நடக்கின்றது. பொன்னாவின் தாத்தா ஒரு ஜோசியர், அப்பா ஒரு சமையல்க்காரர், கணவன் ஒரு சாப்பாட்டு ராமன். குடும்பத்தின் ஒரு சாபக்கேடு, அகால, துரித மரணம். பொன்னாவின் பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சிராஜன், ஆண்டாள். நம்மாழ்வாரின் மனைவி ஒரு குழந்தையை பெற்று இறக்க, ஆழ்வார் எங்கோ போகின்றார். ஆண்டாளின் கணவன் கலியாணம் ஆன வேகத்தில் இறக்கின்றான். ஆண்டாளுக்கு துணை மதுரகவி; நம்மாழ்வாரின் மகன். அவனும் அகாலத்தில் இறக்க, அவனின் மகன் நம்பி, பட்சியின் மகன் திருமலையால் வளர்க்கப்படுகின்றான். நம்பி, திருமலையின் பிள்ளைகள் கண்ணன், ராதா, நம்பியின் மனைவி ரோசா, மகள் இந்து, கண்ணனின் காதலி உமா இவர்கள் கதையில் வரும் இறுதி தலைமுறையினர். நம்பி இறப்பதுடன் கதை முடிகின்றது.

நல்லவேளை குடும்ப வரைபடத்தை தந்துள்ளனர். கொஞ்சம் கவனமின்றி படித்தாலும் குழப்பி விடும். கதையும் நான் லீனியர். நிகழ்காலத்து பொன்னா பாட்டியிலிருந்து, இளமை ததும்பும் பொன்னாவிற்கு தாவுகின்றது. பொன்னாவிடமிருந்து அவர் தாத்தாவிடம் தாவுகின்றது. அடிக்கடி வரைபடத்தை பார்த்து இன்னார் என்று தெரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. திடீரென கதை தன்மை ஒருமைக்கு தாவுகின்றது. ஆனால் எங்கும் அது உறுத்தவில்லை. கதையின் காலம் மாறும் இடத்தில் இணைப்பாக ஒரு புள்ளி இருக்கின்றது அதனால் குழப்பமில்லை. கதாபாத்திரங்களின் பெயர்தான் என்னை குழப்பிவிட்டது.

கதையுடன் இழைந்து வருவது அக்கால அரசியல். அரசியல் மாற்றங்கள் அக்குடும்பத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது. நம்மாழ்வாரின் தீவிரவாத இயக்க தொடர்பு (குண்டு வைத்து சம்பந்தமில்லாதவர்களை கொல்லும் முட்டாள் கூட்டமல்ல), வாஞ்சிநாதன், வ.உ.சி, நீலகண்ட சாஸ்திரி, வ.வே.சு அய்யர் அனைவரும் கதையில் எட்டி பார்க்கின்றனர். அரசியல் தொடர்பு அதற்கும் முன்பே ஆரம்பிக்கின்றது. ஊமைத்துரை காலத்தில். 

கதையோடு இந்தியாவின் அரசியல் மாற்றமும் பின்புலத்தில் வருகின்றது. தீவிரவாத தலைவர்கள், அதிலிருந்து மெதுவாக மாறி காந்தியின் பின்னால் சேரும் மக்கள், கம்யூனிஸ்டுகள், நக்ஸல்கள்.  குடும்பத்தில் ஒரு கிளை அரசியலுடன் இணைந்து தன் வாழ்வை நாசமாக்கிக் கொள்கின்றது, மறு கிளை ஊரோடு ஒத்து வாழ்ந்து தன் வாழ்வை தொடர்கின்றது. நம்பியின் மரணமும் அதன் பின்னால் அவரின் தந்தையின் போராட்டமும் வேறு ஒன்றை நினைவுபடுத்துகின்றது. கேரளாவில் ஒரு மாணவன் இது போன்று கொல்லப்பட்டு அவர் தந்தை பல காலம் போராடினார் என்று எங்கோ படித்த நினைவு.

இறுதிப்பகுதி முழுவதும் பல அரசியல் விமர்சனங்கள், விவாதங்கள். கிருஷ்ணன் கம்யூனிசத்தையும், காந்தியையும் ஆதர்சமாக கொண்டவர். அது கதையில் நன்கு தெரிகின்றது. இதில் வரும் கம்யூனிச விமர்சனங்கள இப்போது கையில் இருக்கும் அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்க்க மேலும் பல விஷயங்கள் கிடைக்கின்றது.

நாவலெங்கும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள். பட்சி நடத்து உண்டகட்டி வழக்கு, ஊர் ஊராக சுற்றும் ஜோசியர், காதை கடிக்கும் கல்லூரி ஆசிரியர், கல்லூரி முதல்வர், ஆண்டாள் - பொன்னாவிற்கும் இடையில் இருக்கும் சுவர், அதன் காரணம், கம்யூனிச புத்தகங்களை இடுப்பிற்கு அண்ட குடுக்கும் பெண். கதையில் மனிதர்களுக்கும் உரையாடல்களுக்குமே முக்கியத்துவம். கதையின் சூழல் நம்மை வந்தடையவில்லை. மோகமுள்ளை படிக்கும் போது நமக்கும் அந்த ஆற்றங்கரையில் இருப்பது போன்ற உணர்வு தோன்றும். ஆனால் இதில் அது வரவில்லை. அவர் கூறும் நாங்குநேரிக்கு போயிருக்கின்றேன், கோவிலை வெளியே இருந்து பார்த்திருக்கின்றேன். ஆனால் படிக்கும் போது அது என் மனதில் வரவில்லை. பாத்திரங்கள் மட்டுமே வருகின்றனர். அந்த வீடு கூட மனதில் துண்டு துண்டாகவே உருவகமடைந்துள்ளது.

ஏகப்பட்ட ஆங்கில மேற்கோள்கள். எனக்கும் அதற்கும் வெகுதூரம். ஆங்காங்கு தமிழ் கவிதைகள். தலைப்பே கவிதையிலிருந்து வந்ததால், அப்பாடலை மட்டும் மறுபடி மறுபடி படித்தேன். காதலன் காதலிக்கு நடுவில் சும்மா நிற்கும் புலிநகக் கொன்றை மரம்தான் இக்குடும்பம் என்ற உருவகம் சிறப்பு. பாட்டில் வரும் பறவைகள் போல் அனைவரும் வீட்டை விட்டு போக, பொன்னா அந்த புலிநகக்கொன்றை மரம் போல காத்திருக்கின்றாள்.

சிறுவயதில் கேள்விப்பட்ட, பார்த்த பல நிகழ்ச்சிகளை சேர்த்து எழுதியிருக்கின்றார் என்பது என் எண்ணம். வெறும் சம்பவங்களின் குவியாலாக இல்லாமல், துண்டு துண்டான கதைகளாவும் இல்லாமல், அனைத்தும் சேர்ந்து சுவாரஸ்யமாகவும், ஆழமாகவும் இருப்பதுதான் வெற்றி.

இறுதியில் வரும் நம்பியின் கடிதமும், மதுரகவியின் குறிப்பும்தான் நாவலின் உச்சம். கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

4 கருத்துகள்:

  1. இந்த புத்தங்கங்களுக்குரிய PDFதளங்கள் இருந்தால் அதை தயவுசெய்து அரங்கேற்றவும்

    பதிலளிநீக்கு
  2. இப்புத்தகம் வெளிவந்து கொஞ்ச நாள்தான் ஆகின்றது. இதை ஸ்கேன் செய்து அப்லோட் செய்வது எல்லாம் சட்டப்படி குற்றம், அது நியாயமும் ஆகாது. புத்தகம் nhm.inல் கிடைக்கின்றது. போன் செய்தால் வீட்டிற்கே வரும். "அரங்கேற்றவும்" புதிய உபயோகம் :)

    பதிலளிநீக்கு
  3. பதிவின் கடைசியில் புத்தகத்தின் பெயர், பதிப்பகத்தின் பெயர், விலை ஆகியவற்றையும் குறிப்பிட்டால் வாங்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. நாவலைப் படித்ததும் முழுமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்த நிறைவு அல்லது இழந்துவிட்ட வாழ்க்கையின் சோகம் கிட்டுகிறது. சமீபத்தில் படித்த மனநிறைவு தந்த நாவல் என்றால் அது புலிநகக் கொன்றைதான்.

    பதிலளிநீக்கு