23 ஜூலை 2025

படுகளம் - ஜெயமோகன்

 ஜெயமோகனின் தளத்தில் வெளிவரும் போது படிக்க முடியவில்லை. சிலிக்கான் ஷெல்பில் ஆர்.வி எழுதிய பின் தேடினால் கிடைத்தது. ஆனால் பழைய நூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்து படிக்கும் அனுபத்தை தந்தது. நூலகத்தில் பழைய புத்தகத்தை படிக்கும் போது சில பக்கங்கள் இருக்காது, யூகித்து படிக்க வேண்டியது இருக்கும். முடிவு பகுதி இருக்காது. அது போல அவர் தளத்தில் ஒன்று விட்டு ஒன்றாக பகுதிகளை மறைத்து வைத்திருந்தார். உடனே படிப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அவர்கள் கூட மறுபடியும் படிக்கலாம் என்றால் கிடைக்காது. ஆனாலும் விடவில்லை, சுஜாதா கூறியது போல இணையத்தில் இருந்தது, இருப்பது எங்கும் போகாது என்று தேடி cache பதிவுகளை கண்டுபிடித்து படித்துவிட்டேன். இப்போது அது முழுவது நீக்கப்பட்டுள்ளது,ஆனாலும் எங்காவது கிடக்கும். புத்தகமாக வரும் போது இங்கும் இருந்தால் கஷ்டம்தான். 

ஒரு வெப்சீரிஸூக்கு எழுதப்பட்ட கதை என்று தோன்றுகின்றது. வேகப்புனைவு அதாவது திரில்லர் வகை. 

சாது மிரண்டால் என்னவாகும் என்பதுதான் கதை. திருநெல்வேலியில் நடக்கும் கதை, ஒரு சாதாரண வியாபாரி எதிர் கொள்ளும் பிரச்சினைகளால் சிலிர்த்து எழுந்து ஒரு டான் லெவலுக்கு மாறுவது. சினிமா கதைதான். சினிமா கதைக்கான பரபரப்பு, பலவீனங்கள் கொண்ட கதை. ரவுடிகளால் துரத்தப்படும் ஒரு சாதாரண உதவி இயக்குனர் அவர்களை அடித்து போட்டு ஓடும் கதைதான். நாயகனுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்க செய்வது ஆசிரியரின் உரிமை. அதுகூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் ஏது. திரைப்படமாக வந்தால் ஒடாது, வெப்சீரிஸுக்கான கதை, ஒவ்வொரு பகுதி முடிவும் அடுத்த பகுதியை படிக்க வைக்கும். இதில் வரும் முக்கிய பகுதி வட்டி தொழில். இப்படி எல்லாம் இருக்காது என்று எல்லாம் கூற முடியாது. கண்டிப்பாக சாத்தியமே. கூட குறைய இருக்கலாம். நம் வரையில் தெரியாது எனபதால் மட்டும் ஒரு விஷயம் இல்லை என்று ஆகிவிடாது. அப்படி இருப்பதும் ஒரு வரம்தான். மூளை கொஞ்சம் ஃப்ரீயாக இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். 

ஜெயமோகனின் சமீபக்கதைகளில் நான் காண்பது ஆசிரியரின் இருப்பு, சில க்ளிஷேவான சித்தரிப்புகள். அவரது ஏழாம் உலகம், பின் தொடரும் நிழல், உலோகம் நாவல்களின் பாத்திரங்கள் பெரும்பாலும் இயல்பாக தெரியும். வெண்முரசின் இறுது நாவல்களில் ஆரம்பித்தது என்று நினைக்கின்றேன். பாத்திரங்கள் இயல்பை விட்டு யோசிப்பது, அதி புத்திசாலித்தனமான உரையாடல்கள். உதாரணமாக இதில் யானை வேட்டை என்று கூறுவதை, கடைசிவரை நாயகன் சொல்லிக் கொண்டே வருவது, அவர் இதை செய்திருக்க கூடாது ஆனால் செய்துவிட்டார் என்று வாசகனுக்கு விளக்குவது, இதை பலமுறை ஏற்கனவே அவர் நடித்து பார்த்துவிட்டார் என்பதும் அடிக்கடி வர ஆரம்பித்து விட்டது. அவரது பாத்திரங்கள் எல்லாம் மனோதத்துவ நிபுணர்களாக மாறி, அடுத்தவன் உள்ளே சென்று பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சினிமா கதை என்று கூறிவிட்டதால் தர்க்கம் எதுவும் தேவையில்லை. கொஞ்சம் சோகையான வில்லன், உதவி செய்யும் பாய், அதிரடியாக மாறும் கடைப்பையன், ஒரு அய்யர் வக்கீல், குண்டு கண் கொண்ட பெண், பிறகு பாத்திரமாகவே வரும் ஜெயமோகன், பாலுமகேந்திரா, சுகா (பெரிய எழுத்தாளர்டா!).

எங்கு ஜெயமோகன் மற்ற ஆசிரியர்களிடமிருந்து வெறுபடுகின்றார் என்றால், பாத்திரபடைப்புகளில்தான். வழக்கமான திரில்லர் வகைகளில் பாத்திரங்கள் அழுத்தமாக பதியாது, வெறுமனே சம்பவங்கள், உரையாடல்களாக போய் நமக்கு மறந்துவிடும். ஜெயமோகன் வெற்றியடைவது அங்கு. முதலில் அங்கு வரும் வட்டாரவழக்கு முதலில் நம்மை பாத்திரங்களுடன் நெருக்கமாக உணர செய்யும், சில பாத்திரங்களுக்கு தரும் தனித்தன்மை. நாயகன் ஒரு சாதரணன் என்றால் ஒரு மாதிரி, அதேசமயம் அவன் ஒரு உதவி இயக்குனர், பாலுமகேந்திராவிடம் இருந்தவன் என்றால் என்னமும் அழுத்தமாகும். சில ஒன்லைனர்கள், ஆகவே கொலைபுரிக என்று உபதேசிக்கும் அம்மா பாத்திரம் எல்லாம் சேர்ந்துதான் இதை மற்ற திரில்லர் வகைகளிலிருந்து வித்தியாசப்படுத்துகின்றது. 

ஆர்.வி தனுஷ், விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று எழுதியிருந்தார். அந்த பாவம் மட்டும் நடந்துவிடக்கூடாது என்று வேண்டி கொள்கின்றேன். 

கிண்டிலிலிலும், அவரது விஷ்ணுபுரம் பதிப்பகத்திலும் கிடைக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக