02 அக்டோபர் 2012

ஒற்றன் - அசோகமித்திரன்

18வது அட்சக்கோடு படித்ததும் அசோகமித்ரனின் நூல்களை வாங்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவர்கள் ஒற்றனைப் பற்றி சிலாகித்து கூறியிருந்தனர். ஒற்றன் என்ற தலைப்பு எதோ உளவாளியைப் பற்றிய் கதை என்று தோன்றவைக்கின்றது. படித்தபின் தான் தெரிந்தது இது வேறு வகை, அமெரிக்கா சென்று "டகரஜான்" ஆன அசோகமித்திரனின் பயணக்கதை என்று. அவர் இதை புனைகதை என்கின்றார். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் போல இதுவும் நிஜமும் கற்பனையும் கலந்த கலவையாகத்தான் இருக்கும்.

அசோகமித்திரன் ஒரு எழுத்தாளர் சந்திப்பிற்கு அயோவா சிட்டிக்கு சென்று 7 மாதங்கள் தங்கியிருந்த அனுபவங்களை கதையாக்கி தந்துள்ளார். இது நாவல் எனப்படுகின்றது, இந்த வடிவத்தில் நான் படித்த முதல் நாவல் என்பதால் இது எப்படி நாவலகும் என்ற குழப்பம் இன்னும் உள்ளது. ஒவ்வொரு அந்தியாயமும் அதனளவில் முழுமையானது. தனியாக எடுத்தால் ஒரு சிறுகதையாகும், முதலிரண்டு அந்தியாயங்களைத் தவிர மற்ற பகுதிகளை வரிசை மாற்றினாலும் வடிவம் கெடாது.வழக்கமான பயணக்கட்டுரை போல இல்லை. பெரும்பாலும் பயணக்கட்டுரையில் ஒரு பிரமிப்பு அல்லது ஒரு இகழ்ச்சி இருந்து கொண்டே இருப்பது போல தோன்றும். இல்லையென்றால் நமது ஊருடன் ஒரு ஒப்பீடு இருக்கும். இதில அவையெல்லாம் இல்லை. அங்கும் உள்ளவர்கள் மனிதர்கள்தான், நம்மைப் போன்ற உணர்ச்சிகள் கொண்டவர்கள்தான், கஷ்டம் வரும் போது புலம்புவதும், செய்வதறியாது நிற்பதும், ஏழ்மையும், கயமையும், பெருந்தன்மையும், அனைவருக்கும் பொதுவானதுதான் என்பதை அழுத்தமாக கூறுகின்றது.

மனிதர்களைப் பற்றி பேசும் இக்கதையில் அதே சமயம் வெளிநாட்டின்  சூழலையும் விவரிக்கத் தவறவில்லை. அனைத்துக் கதைகளிலும் உள்ள நகைச்சுவையும் அபாரமானவை. ஒரிரு கதைகள் அவர் அங்கு கண்ட வித்தியாச அனுபவங்களை பேசுகின்றது


அயோவா சிட்டிக்கு அழைப்பு வந்ததில் ஆரம்பிக்கின்றது கதை ("வீட்டில் அந்த பெயரை எப்படி ஞாபகம் வைத்திருந்தார்கள் என்பதே ஆச்சரியமளிக்கின்றது." "அந்த கோட்டை அயோவாவில் வெயில் காலத்தில் போட்டுக்கொள்ளலாம்"
).  மிசிசிபியில் படகுப்பயணம், அங்கு சந்திக்கும் ஏழை எழுத்தாளன் வெண்டூரா, அவனின் ஆங்கிலத் தடுமாற்றம் எல்லாம் இரண்டாம் அந்தியாயம். அதன் பின் கதை முன்னும் பின்னும் போகின்றது, மற்ற அனைத்திலும் மனிதர்கள் தான் பிரதானம். 


அவர் காட்டும் மனிதர்கள் எங்கும் காணக்கூடியவர்கள், என்ன மொழி, நிறம் வேறாக இருக்கலாம்.  திருமணமானவனால் ஏமாற்றப்பட்டு டகராஜனிடம் நெருங்கி ஆறுதல் பெறும் இலாரியா, ஒரே ஒரு விலையுயர்ந்த கோட்டை பல நாட்களாக மாட்டிக்கொண்டு, நினைத்தை முடிக்கும் குபேக்னா (ஒற்றன் என்ற தலைப்பிற்கு காரணகர்த்தா), சார்ட் போட்டு கதையெழுதும் பிராவோ, ஏழை எழுத்தாளன் வெண்டூரா, அனைவரையும் முத்தமிட்டு அன்பை பொழியும் கஜுகோ, அவளை பத்து நிமிடம் சந்திக்க ஓடோடி வரும் அவளின் நண்பன், திடிரென் சந்தித்து நண்பணாகும் ஜிம் பர்க்கர், இவர்களின் மேய்ப்பர் ஜிம் என பலர்.

அமெரிக்காவின் வாழ்க்கை முறையையும் ஊடே தனியாக தெரியாமல் எழுதியுள்ளார். சைவ உணவுக்காரர்கள் படும் பாடு, பனிப் பொழிவின் அவஸ்தைகள், கே மார்ட் என்ற அமெரிக்காவின் மூர் மார்க்கெட், நூலக நடைமுறை, அங்கும் இருக்கும் ஏழை மனிதர்கள் அவர்களின் வாழ்க்கை முறை எல்லாம் கதையோடு கதையாக எழுதியுள்ளார். அவர் பஸ் ஸ்டேஷனில் சென்று பஸ்ஸைத் தேடும் அவஸ்தையும், புதிதாக வாங்கிய கடிகாரத்தை தொலைத்து தேடும் அனுபவமும், துப்பாக்கிக்கு பயந்து கண்ணாடி மாளிகையில் பதுங்குவதும் சுவாரஸ்யமானவை. பயணக்கட்டுரை என்பதற்காக , இது அமெரிக்கா, இங்கு அது கிடையாது, இது கிடையாது என்ற பொழிப்புரையெல்லாம் இல்லை.

பூண்டு, அம்மாவின் பொய்கள் இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தது. அவரின் கே மார்ட் அனுபவமும்,  கிரிலீக்கிற்கு செல்ல பஸ்பிடித்த அனுபவமும் சீரியசான எழுத்தில் நகைச்சுவையை எப்படி சொல்வதை கற்றுத் தருகின்றன.

புதிய பதிப்பில் இரண்டு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன். இவரின் நூல்களை படிக்கும் போதுதான் ஒரு சந்தேகம் தோன்றுகின்றது, இப்படி பட்ட எழுத்தாளர் ஏன் விகடன், கல்கி போன்ற இதழ்கள் கண்டு கொள்ளவில்லை? 

2 கருத்துகள்:

 1. ரெங்க சுப்பிரமணி, என் முந்தைய பின்னூட்டத்தைக் காணவில்லை. ப்ளாக்ஸ்பாட் தின்றுவிட்டது என்று நினைக்கிறேன்.

  என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். புத்தகங்களைப் பற்றி பேசுவதும் ஒரு சுகம். அப்படிப் பேச இன்னொருவர் கிடைத்திருப்பது நல்ல விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி. முந்தைய பின்னூட்டத்தை தேடித்தேடி பார்த்தேன். எங்குமில்லை. இன்னும் இந்த பிளாக்ஸ்பாட் முழுவதும் பழகவில்லை. நேரமில்லாததால் ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. உங்கள் தளத்தினால் தான் பல புதிய புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அதற்கு உங்களுக்கு நன்றி.

   நீக்கு