புகாரின். லெனின் குழுவிலிருந்த முக்கிய நபர். கம்யூனிச அரசை கட்டமைத்த ஒரு முக்கிய தலைவர். அதே கம்யூனிச அரசால் துரோகி என தண்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் அறிவிக்கப்பட்டது. அக்கதையை ஒரு இழையாக வைத்து சுற்றி பல வித இழைகளல் பின்னப்பட்டது இக்கதை.
அரசியல் நாவல் என்றவுடன் தயங்கி தயங்கியே வாங்கினேன். அதுவும் ரஷ்ய நாட்டு தலைவரை பற்றிய கதை என்றவுடன் ஒரு மாதிரி செயற்கையாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு இருந்தது. (ஏதாவது மொழி பெயர்ப்பு புத்தகம் போல இருந்து வைத்தால் என்ன செய்வது என்ற எண்ணம்). ஜெயமோகன் என்னும் பெயரை நம்பி களத்தில் இறங்கினேன். நம்பினார் கெடுவதில்லை. கொஞ்சம் கூட தொய்வடையாமல், நடு இரவு தாண்டிய பின்னும் படிக்க வைத்த புத்தகம், இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை. எந்த புத்தகத்தையும் அடுத்தடுத்து படித்ததில்லை, இது என்னை மூன்று முறை தொடர்ச்சியாக படிக்க வைத்துவிட்டது.
வெகுநாட்களுக்கு நாவல் என்றால் தொடர்கதை என்பதுதான் எண்ணம். கல்கி, சுஜாதா இவர்களின் புத்தகங்கள் அனைத்தும் தொடர்கதைகள் என்பதால் அந்த எண்ணம் அப்படியே இருந்தது. படித்த ஒன்றிரண்டு ஜெயகாந்தனின் நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவையே. அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தவர் அசோகமித்திரன். அவரின் பதினெட்டாம் அட்சக்கோடு, இப்படியும் நாவல் எழுத முடியுமா என்று வியப்பை தந்தது, அடுத்தடுத்து அவரது கரைந்த நிழல்கள், ஒற்றன், தண்ணீர் எல்லாம் ஒவ்வொன்று ஒவ்வொரு வகை. நாவலின் பல சாத்தியங்களை உணர வைத்தது. இது மற்று மொரு சாத்தியம். நாவல்களில் விவாதங்கள் வருவதுண்டு, ஜெயகாந்தன் கதைகளில், இந்திரா பார்த்தசாரதி கதைகளில். ஆனால் அவை அனைத்தும் என் பார்வையில் வறண்டு போனவை. அதில் எவ்வித உயிர்ப்பும் இல்லை, ஒரு பிரச்சாரம். இந்த நாவல், அனைத்து சாத்தியங்களையும் கையாண்டுள்ளது, சிறுகதை, நாடகம், அபத்த நாடகம், கடிதம், கவிதை, கட்டுரை. அதற்கான யுக்தி அபாரம். உதவிக்கு பல உண்மை பாத்திரங்கள் ஜெயமோகன், ராமசாமி (சுந்தர ராமசாமி?). பல பாத்திரங்கள் பல உண்மை மனிதர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம், யாருக்கு தெரியும்.
எச்சரிக்கை : சற்றே பெரிய கட்டுரை. பெரிய புத்தகமல்லவா?
கம்யூனிசம் சார்ந்த கதைகள் என்று என் நினைவில் வருவது வெகு சில கதைகளே. ஜெயகாந்தனின் ஒரு கதை. ஒரு தவறான ஊழியனுக்காக போராடும் சங்கம், அதை எதிர்க்கும் சங்க ஊழியன். கடைசியில் அவனும் அவர்களுடன் சேர்ந்து கொள்வான். புலிநகக் கொன்றை. ஜெயகாந்தனின் கதையில் சில மெல்லிய விவாதங்கள் உண்டு. புலிநகக் கொன்றை லேசாக தொட்டு செல்லும். இந்த நாவல் அதை விவரித்து, விளக்கமாக பேசுகின்றது.
ஜெயமோகனின் பல கதைகளில் வருவது அடிப்படையான மானுட அறம் பற்றிய கேள்விகள். இதிலும் அவை இருக்கின்றன, நாவல் அதை பற்றி விரிவாக பேசுகின்றது. ஒரு அரசன் என்பவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி பல கதைகள், அறிவுரைகள் பாரதத்தில் இருக்கின்றன. அதில் பலவற்றை படித்தால் மிகவும் கொடூரமானதாக தோன்றும் ஆனால் அது அனைத்தும் கூறுவது தன் மக்களை அவன் நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் எந்த நீதியும் தன் நாட்டு மக்களை கொன்றழிக்க சொல்லவில்லை. ஆனால் தன் மக்களை கொன்றழித்த தலைவர்கள்தான் அதிகம். ஸ்டாலின், மாவோ, போல்பால்ட்.
கம்யூனிசம். கால் வைத்த இடங்களிலெல்லாம் அழிவை தந்த ஒரு சிந்தாந்தம். ஒன்றுக்கொன்று முரண்படும் சக்திகளால் முன்னேறி செல்லும் வரலாறு, ஒரு கட்டத்தில் தானாக புரட்சியில் சென்று முடியுமென்பது கம்யூனிச மதத்தின் வேத வாசகம். கம்யூனிசம் உண்டாக்கிய அழிவுகளை பற்றி ஏற்கனவே அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு நூலில் படித்திருக்கின்றேன். அதில் பல புள்ளிவிவரங்களுடன் கம்யூனிசம் உட்கொண்ட பலிகளை பற்றி எழுதியுருந்தார். இந்த நாவல் அப்படி பலி கொள்ளப்பட்ட பல கோடி உயிர்களின் ஒருவரை பின்புலமாக வைத்து எழுதப்பட்டது.
இந்த நாவல் கம்யூனிசத்தை அடிப்படையாக வைத்து அரசியல் பற்றி பேசும் நாவல். இதே களத்தில் வேறு பல இசங்களையும் வைக்கலாம். கண் முன் பல அழிவுகளை கண்டு வருகின்றோம். இலங்கையில், பாகிஸ்தானில், பங்களாதேஷில், ஆப்கானிஸ்தானில். ஆயுதம் பலம் பெறும் போது, மக்கள் அடிபடுகின்றார்கள்.
இந்த நாவல் கம்யூனிசத்தை அடிப்படையாக வைத்து அரசியல் பற்றி பேசும் நாவல். இதே களத்தில் வேறு பல இசங்களையும் வைக்கலாம். கண் முன் பல அழிவுகளை கண்டு வருகின்றோம். இலங்கையில், பாகிஸ்தானில், பங்களாதேஷில், ஆப்கானிஸ்தானில். ஆயுதம் பலம் பெறும் போது, மக்கள் அடிபடுகின்றார்கள்.
ரஷ்யாவில் நடந்தது கம்யூனிச புரட்சி; அது ராணுவ புரட்சி கம்யூனிச புரட்சியாக மாறியது; ராணுவ புரட்சி கம்யூனிச புரட்சியாக காட்டப்பட்டது; ராணுவ புரட்சியல்ல மக்கள் புரட்சி, அது கம்யூனிச புரட்சி; கம்யூனிச புரட்சி ஆனால அது மார்க்ஸ் சொன்ன புரட்சியல்ல.இது போல பல பாஷ்யங்கள் உண்டு. உண்மையான கம்யூனிசம் என்பது வரவேயில்லை, கம்யூனிச நாடுகள் அனைத்தும் அதை பரிசோதனை செய்து பார்த்துள்ளன அவரவர் வழியில். லெனினிசம், மார்க்ஸிசம், ஸ்டாலினிசம், மாவோயிசம், காஸ்ட்ரோயிசம் என்று பல வழிகள். சேர்ந்த இடம் ஒன்றே. உயிர்பலி.
அருணாச்சலம் ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் உப தலைவர். கே.கே. எம் தலைவர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கணக்கின் படி கே.கே.எம் இடத்திற்கு அருணாச்சலம் வருகின்றான். அதே சமயம் அவனுக்கு வீரபத்திரபிள்ளை என்பவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், நாடககங்கள் கிடைக்கின்றன. கட்சியிலிருந்து விரட்டப்பட்டதுமன்றி, கட்சி வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்ட அவரின் எழுத்துகள் அருணாச்சலத்தை அலைகழித்து அவனையும் கட்சியிலிருந்து விரட்டுகின்றது.
அருணாச்சலம், வீரபத்ர பிள்ளையை கட்சி புறக்கணித்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றான். ஒன்று இயல்பாக ஒருவனுக்கு தோன்றும் உணர்வு, அநீதி இழைக்கப்பட்ட மனிதனிடம் வரும் உணர்வு. இரண்டாவது அவனை கட்சியுடன் பிணைத்து கொண்டு, கட்சியின் பிரதிநிதியாக தன்னை நினைத்து கொள்வதால் வரும் குற்ற உணர்வு, அதோடு கே.கே.எம்ஐ கட்சியிலிருந்து விலக்கியதன் காரணமாக வரும் குற்ற உணர்வு. இவை அனைத்தும் அவனை மனப்பிறழ்வில் தள்ளுகின்றது. ஒரு கட்டத்தில் தன்னை வீரபத்ரபிள்ளையாகவே நினைக்க ஆரம்பிக்கின்றான்.
வீரபத்திரபிள்ளையை விரட்டியது அதே போல் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்ட புகாரின். புகாரின் நிழல் வீரபத்திர பிள்ளையையும், வீரபத்திர பிள்ளையின் நிழல் அருணாச்சலத்தையும் பின் தொடர்ந்து அவர்களை மனம் பிறழ செய்கின்றது.
அவதூறு. பலருக்கு வலிமையான ஆயுதம். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு முதன்மையான ஆயுதம். யாரையும், எதையும் விமர்சிப்பது மூலம் மட்டுமே அனைத்தையும் சாதித்து விட முடியும் என்ற நம்பிக்கை. படிக்கும் போதே உடனே ஒரு எதிர்மறை அலைகள் நம்மை வந்து சூழ்ந்து கொள்ளும். நாம் வாழும் உலகம் ஒரு நரகம், அனைவரும் அயோக்கியர்கள் என்ற எண்ணம் வலுப்படும். தரம் தாழ்ந்த விமர்சனங்கள், எதையும் எள்ளாலாக பேசி எதிராளியை அடிப்பது, முடிந்தால் அவர்களது தனிப்பட்ட வாழ்வு, சாதி, மதம், வீட்டில் வளர்க்கும் நாய் முதல் இழுத்து போட்டு அடிப்பது. அதுவே புகாரினையும், வீரபத்ர பிள்ளையையும், அருணாச்சலத்தையும் சாய்க்கின்றது.
பெரும்பாலான கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கு கம்யூனிச தத்துவம் முழுவதும் தெரியுமா? இருக்காது. அவர்களுக்கு இருப்பது மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற ஆசை. அதை கம்யூனிசத்தின் மூலம் செய்யலாம் என்ற நம்பிக்கை. கே.கே.எம் அந்த வகையில் ஒருவர். மலை மலையாக ஏறி, தொழிலாளர்களை இணைத்து அவர்களின் நலனுக்காக அமைத்த சங்கம், இன்று அவர்களுக்கு ஒரு அடியாள் போலவும், அரசியல் பேரம் பேச உதவும் ஒரு இயக்கமாகவும் இருக்கின்றது. இதை மாற்ற முயலும் போதே அவருக்கு காலம் மாறியது தெரிந்து கடைசியில் பக்தியில் விழுகின்றார். அருணாச்சலமும் அங்கே சேர்கின்றான், வீரபத்ர பிள்ளையின் கதையில் வரும் புகாரினும் அங்கேயே சேர்கின்றார்.
பெண்கள் நடத்தும் புரட்சி பற்றி கனவு காண்கின்றான் அருணாச்சலம், பெண்கள் கையில் அதிகாரம் இருந்தால் கனிவு இருக்கும் என்று நினைக்கின்றான். இக்கதையில் பெண்கள் மிக குறைவு. அருணாச்சலத்தின் மனைவி. மிகவும் எளிமையான பெண். உண்மையில் அருணாச்சலத்தின் வெற்றிகள், சிந்தாந்தங்கள் எல்லாம் அந்த எளிமை முன் தோற்று விடுகின்றன. அவளே அவனின் தோல்வியிலிருந்து அவனை மீட்டு வருகின்றாள். அன்னா, புகாரினின் மனைவி. உண்மை கதாபாத்திரம். எளிமையுடன், வலிமை. பல ஆண்டுகாலம் சைபீரிய வதை முகாம்களில் வதைபட்டும், தன் மனநிலையை தவற விடாது, புகாரினின் வாக்குமூலத்தை உலகிற்கு தந்த பெண். அவள் புகாரினை வரலாற்றிற்கு மீட்டு தருகின்றாள். உண்மையில் இவர்கள்தான் வலிமையானவர்கள்.
மக்களுக்காக உண்மையில் உழைக்க நினைத்து கட்சியில் சேர்பவர்கள் ஒரு வகையில் செயல்பட்டுகொண்டுதான் இருப்பார்கள். ஒரு கட்டத்திற்கு பின், அவர்கள் கட்சி சட்டத்திற்குள் மாட்டி கொண்டு, அதையும் சேர்த்து காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். கட்சி அரசியல். இன்றும் பல பழைய ஆட்கள், கட்சி மாறி ஓட்டளிக்க மாட்டார்கள், காரணம் அவர்களது மனமே அதை ஒரு வீழ்ச்சியாக பார்க்கும், அவர்களின் தோல்வியாக பார்க்கும். அவர்களால் அதை விட்டு விட முடியாது, அப்படி செய்தால் அவர்களின் இது நாள் வரையிலான உழைப்பை அவர்களே வீணடித்தது போலத்தான்.அதை ஒத்துகொள்ள தைரியமில்லாதவர்கள் அதன் தலைவர்கள். அதற்கு ஒரு தைரியமும், அற உணர்வும் வேண்டும். அது காந்திக்கு மட்டுமே இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
காந்தியை பற்றி பலர் திட்டுவதுண்டு, கம்யூனிஸ்டுகளூக்கும் அதிக மரியாதை கிடையாது என்றுதான் நினைக்கின்றேன். எனக்கும் கூட அவர் மிகவும் சாத்வீக வழியில் சென்றார், இன்றைய உலகிற்கு அது சரிப்பட்டு வராது என்று நினைப்பு ஒரு ஓரத்தில் உண்டு. மிகவும் மெதுவாக நடக்கும், ஆனால் எந்த பின்விளைவையும் தராத ஒன்று அவர் வழிமுறை. ஒவ்வொரு தனிமனிதனுடனும் உரையாடுவது அவர் பாணி, தனி மனிதனின் ஒழுக்கமே ஒரு சமூகத்தின் ஒழுக்கமாக மாறும். அதையே அவர் முயற்சித்தார். ஒரு வகையில் அதுதான் இந்திய மக்களை இன்னும் கொஞ்சம் மனிதத்தன்மையுடன் வைத்திருக்கின்றது. அவர் விட்டதை செய்யாத குற்றம் அவருடையதல்ல. ஆனால் கம்யூனிசம் தனி மனிதன் என்பதை கணக்கில் கொண்டதாகவே தோன்றவில்லை. அதன் விளைவு அதன் தோல்வி.
ரஷ்ய புரட்சியின் முதல் அறப்பிறழ்வு, ஆரம்பத்திலேயே துவங்கிவிட்டது. ஜார் குடும்பத்தை கொன்றதிலேயே அவர்களின் மனித உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. நாயை கூட கொல்லும் அந்த உணர்வு, அவர்களை எதையும் செய்ய வைத்துவிட்டது. ஹிட்லரை போல. குற்ற உணர்வு என்பதே இல்லாமல். ஜார் மன்னர் எதிரி என்றால், அவரது நாய் மேல் வர்க்க நாய் போல. இந்த ஆரம்பமே, கொத்து கொத்தாக மனிதர்கள் நாற்றங்காலில் இருந்து பிடுங்கி நடுவது போல, எங்கிருந்து எங்கேயோ மாற்றி விளையாடினார்கள். குழந்தைகளையும் கட்டாய உழைப்பு முகாமில் வைத்து வதைத்தனர்.
புகாரினும் இந்த ஆட்டத்தை ஆடியவரே. தோற்றவர். ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட் ட்ராட்டஸ்கியை கொன்ற அதே பனிக்கோடாரி, இவருக்கு தூக்கு கயிறாக மாறியது. ஆனால், புகாரின் இறப்பதற்கு முன் தாங்கள் உண்டாக்கிய அழிவு எத்தகையது என்பதை உணர்ந்து கொண்டார். தனிமனிதர்களுக்கு உணர்ச்சிகள் உண்டு, அவர்களை ஒரு இயந்திரம் போல இயக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் முன் பல கோடி பலிகள். அதை மாற்ற முயற்சித்த போது, காலம் கடந்து அவருக்கு செக் மேட்.
புகாரினின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை சில சிறுகதைகள் மூலம் காட்டுகின்றார். புகாரின் பனியில் எழுந்து மீட்பரை தேடி போகும் காட்சி மனதை மிகவும் சங்கட படுத்திவிட்டது. அக்காட்சியில் வரும் குழந்தைகள். குழந்தைகள் மட்டுமே வன்மம் இல்லாதவர்கள். கடைசியில் தியாகத்தை பற்றி பேசும் கிறிஸ்த்து. காந்தியத்துடன் இணையும் ஒரு புள்ளி.
அன்னா, புகாரினின் மனைவி.இரண்டு நாடகங்கள் மூலம் அவளது கதை. தல்ஸ்தோய் பற்றி ஒரு நாடகம்.
பல சித்தாந்த விவாதங்கள் எல்லாம் சுவாரஸ்யமானவை. குறிப்பாக எனக்கு யாரோ மேடை மீது ஏறி நின்று பேசுவது போல தோன்றவில்லை. ஒரு உரையாடலாகவே தோன்றியது. மானிட அறம், அரசியல் அறம் பற்றி பல விவாதங்கள். ரஷ்யாவில் கம்யூனிசத்தின் பெயரால் பல கொலைகள் நடந்து கொண்டிருக்கும் போதுன் இங்கு ரஷ்யாவில் பொன்னுலகின் கட்டுமானம் நடக்கின்றது என்று தெரிந்தே மக்களை ஏமாற்றியவர்கள், உண்மை ரஷ்யாவிலிருந்து வந்த பின்னும் அவர்கள் முன்னர் அவர்கள் அளந்துவிட்ட பொய்களை நம்பி ஏமாந்தவர்களுக்கு அளிக்கும் பதிலென்ன? கம்யூனிஸம் கண்ட புரட்சி என்பதெல்லாம் இனி நடக்காத கதை, மிஞ்சி மிஞ்சி போனால் பிரபுவுடன் சேர்ந்து புரட்சி போராட்டம் செய்யலாம். இருந்தும் இன்றும் அக்கதை சொல்லி ஏமாற்றுபவர்களை என்ன செய்ய.
எதையும் சித்தாந்தத்தின் படி நியாயாமாக்கிவிட முடியும். தர்க்கம். தர்க்கரீதியாக எப்படியாவது ஒன்றை உண்மை என்று நிறுவிவிடலாம். ஸ்டாலின் செய்த கொலைகளுக்கும், அவர் தரப்பில் ஒரு நியாயம், தர்க்கம் அமைந்திருக்கின்றது.
அருணாச்சலத்தின் மனபிறழ்வு காட்சிகள், அந்த அபத்த நாடகம். கதையில் மிக வேகமான பகுதி. அனைத்தையும் வேடிக்கையாக்கி, அதனூடாக பல தகவல்களை சொல்கின்றது. கம்யூனிஸ்டுகளுக்கும் பிடிக்கலாம், பிராமணர்களை பல இடங்களில் கிண்டல் செய்கின்றது. அது ஒன்று போதுமல்லவா?
பல இடங்களில் அவரின் குசும்பு எட்டி பார்க்கின்றது. "பிள்ளைமாருங்க உளுந்த கஞ்சி குடிச்சாலே போதும்", "திகசி எப்படி பழக்கம், கார்டு போடுவாருங்க, 86 கார்டு போட்டிருக்காரு. அத்தன கவித எழுதியிருக்கீங்களா? அவ்வளவுதாங்க பிரசுரமாகியிருக்கு"
பல இடங்களில் அவரின் குசும்பு எட்டி பார்க்கின்றது. "பிள்ளைமாருங்க உளுந்த கஞ்சி குடிச்சாலே போதும்", "திகசி எப்படி பழக்கம், கார்டு போடுவாருங்க, 86 கார்டு போட்டிருக்காரு. அத்தன கவித எழுதியிருக்கீங்களா? அவ்வளவுதாங்க பிரசுரமாகியிருக்கு"
தொழிலாளர்களுக்கு உரிமையை பெற்று தர உண்டான சங்கத்தின் நோக்கம் இன்றும் அப்படியே இருக்கின்றதா? ஒரு தொழிலாளிக்கு வக்கீல் வேலை செய்வது மட்டும்தான் சங்கமா? தொழிலாளிகள் வேறு சங்கங்களுக்கு போவதை தடுக்க நினைக்கும் தலைவர்கள், சங்கத்திற்குள்ளும் மறைமுகமாக உள்ளோடும் சாதி அரசியல், எதிர்கால கணக்கைவிட, தொழிலாளர்களை தக்க வைத்து கொள்வதே முக்கியம் என்று நினைத்து எடுக்கும் முடிவுகள், தெரிந்தே தொழிலாளர்களின் தவறுகளை ஆதரிப்பது என்று நடக்கும் சங்களின் அடிப்படை என்ன?
புரட்சி, போராட்டம் எது என்றாலும் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவிகள். அவர்களுக்கு என்ன மதிப்பு? அப்பாவிகளுடன் சேர்த்து நினைக்கப்பட வேண்டிய ஜீவன்கள், போர்வீரர்கள். ஒரு மாபெரும் இயந்திரத்தின் ஒரு பகுதியாக எதற்காக செய்கின்றோம் என்பது கூட தெரியாமல், இயக்கப்படும் ஒரு சிறிய இயந்திர துண்டு. செம்படை வீரனுக்கு பொன்னுலக கனவு என்பது ஒரு கானல் நீரென்று அறியும் போதும், புரட்சியின் தோல்வி கண்முன் நிகழும் போது அவனின் உழைப்பிற்கு என்ன மரியாதை, விட்ட உயிர்களுக்கு என்ன மதிப்பு. வரலாற்றிற்கும் தனி மனிதனுக்கும் என்ன தொடர்பு, வரலாற்றின் வழி மனிதன் செல்கின்றானா? வரலற்றை அவன் உருவாக்குகின்றானா?
அரசியலில் உள்ளவனின் அறம் என்பது என்ன? தனிமனிதனாக அவன் செய்யக்கூடியது என்ன, தனிமனித தர்மம் என்பது அரசியலில் வந்த உடன் மாறக்கூடுமா? தனிமனித அறமும் அரசியல் தர்மமும் முரண்படும் போது ஒருவன் என்ன செய்யக்கூடும்?
பல கேள்விகள்.
பல நாட்களாக ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பிலிருந்து மாறி, இப்போது இங்கே கிடைக்கின்றது. விலை ஐநாக்ஸில் முதல் நாள் ரஜினி பட டிக்கெட் விலையை விட கொஞ்சம் குறைவுதான்.
அரசியலில் உள்ளவனின் அறம் என்பது என்ன? தனிமனிதனாக அவன் செய்யக்கூடியது என்ன, தனிமனித தர்மம் என்பது அரசியலில் வந்த உடன் மாறக்கூடுமா? தனிமனித அறமும் அரசியல் தர்மமும் முரண்படும் போது ஒருவன் என்ன செய்யக்கூடும்?
பல கேள்விகள்.
பல நாட்களாக ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பிலிருந்து மாறி, இப்போது இங்கே கிடைக்கின்றது. விலை ஐநாக்ஸில் முதல் நாள் ரஜினி பட டிக்கெட் விலையை விட கொஞ்சம் குறைவுதான்.
மூன்று நாட்களுக்கு முன் கோட்டூர்புறம் நூலகம் போயிருந்த போது தான் இந்த்தப் புத்தகத்தை முதன் முதலில் கண்ணில் பார்த்தேன்... ப்ப்ப்பாஆஆஆ எவ்வளவு பெரிய புத்தகம் அருகிலேயே விஷ்ணுபுரமும் இருந்தது. சாறு ஜெமோவைப் பற்றிக் குறிப்பிடுவார் 'இன்னும் மூன்று ஜென்மம் எடுத்தாலும் படித்து முடிக்க முடியாத அளவுக்கு எழுதிக் குவித்துவிட்டார், அவர் ஒரு எழுத்து ராட்சசன்' என்று. அதை பார்த்த போது அப்படித்தான் தோன்றியது.... படிக்க வேண்டும்.. இப்போதெல்லாம் வாசிக்க பதிவு எழுத மற்றும் வாசித்த புத்தகத்திற்கு விமர்சனம் எழுத கூட நேரம் ஒதுக்க முடியவில்லை.. அதில் இவ்வளவு பெரிய புத்தகத்தை நான் என்று படிக்கப் போகிறேனோ !!!
பதிலளிநீக்குஆமா ஏதோ பெரிய பதிவு எழுதி இருக்கிறதா சொன்னீங்களே எங்க அத :-)
:) மைக்ரோசாஃப்ட் வேர்டில் ஒன்றரை பக்கத்திற்கு பெரிதாக போனால் அது எனக்கு கொஞ்சம் பெரிய கட்டுரை. இதில் நிறைய பத்திகளை வெட்டிவிட்டேன். வளவள வென்று இருப்பது போன்றும், திரும்பதிரும்ப ஒரே விஷயத்தை வேறு வேறு வார்த்தைகளில் எழுதியிருப்பது போலும் இருந்தது. நாம் என்ன தேர்வுக்கட்டுரையா எழுதுகின்றோம் என்று சுருக்கி விட்டேன்.
நீக்கு