19 மார்ச் 2014

நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் வெகுநாட்கள் முன்னர் வெளிவந்தவை. சமீபகால எழுத்தாளர்களில் ஜெயமோகனை தவிர யாரையும் படித்ததில்லை. காரணம் ஒரு தயக்கம், எப்படி இருக்குமோ என்று. ஆர்வி சிபாரிசினால் பெருமாள் முருகனின் இப்புத்தகத்தை வாங்கினேன்.

சினிமா தியேட்டர். தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். டூரிங் டாக்கிஸில் ஆரம்பித்து மல்டி ப்ளெக்ஸில் நிற்கின்றது. எங்கள் ஊரில் எங்களது நிலத்தில் ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. நான் மிகச்சிறுவனாக இருந்த போது போன நினைவு வெகு மங்கலாக வருகின்றது. அப்பாவுடன் பல படங்களுக்கு போயிருக்கின்றேன். சிறிய ஒரு அறையில் பெஞ்சு / சேர் (நினைவில்லை), மண் சுவர் தடுப்பிற்கு அந்தப்பக்கம் தரை டிக்கெட். எங்கள் நிலம் என்பதால் சினிமா ஓசி. 

அதே தியேட்டர் நகர்ந்து ஊருக்குள் வந்தது. சேர், பெஞ்ச் என்று. இப்போது டிக்கெட் வாங்க வேண்டியிருந்தாலும், சலுகையால் மெயின் கேட் வழி உள்ளே போய்விடுவோம். ஒரு முறை அதிக ஆர்வத்தில் சென்று, முதல் ஷோவின் க்ளைமேக்ஸ் காட்சியை ப்ரொஜெக்டர் ரூமின் ஓட்டை வழியாக பார்த்து கொண்டிருந்தேன். ராஜ சின்ன ரோஜா. சினிமாவிற்கு போவதே பாப்கார்னும், ஐஸ்கீரீமும் சாப்பிடத்தான். ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டுமானால் பக்கத்து ஊர் தியேட்டருக்கு போக வேண்டும், கொஞ்சம் புதிய படம் வரும். தியேட்டரின் திரை தூக்குவதை பார்க்கவும் அப்போது ஒலிக்கும் இசையை கேட்கவுமே எப்போதும் சீக்கிரம் போக வேண்டும் என்று விரும்புவேன். சைட் ஸ்பீக்கரில் திடீர் என்று கேட்கும் ஒலி எப்போதும் குஷிதான்.


படம் ஆரம்பிக்கும் முன் போடப்படும் பாடலும், எதிரே உள்ள பள்ளி வாசல் பாங்கும்தான் கடிகாரம். மணி அடித்ததும் திறக்கப்படும் க்யூ கூண்டு, சைக்கிள் ஸ்டாண்ட். இன்று அந்த தியேட்டர்கள் எல்லாம் காலி. தினமும் பத்து படம் டீவியில் போடும் போது அங்கு யார் போகின்றார்கள். டீவியில் போடாத, போட்டாலும் பார்க்க முடியாத, பார்க்கவிடாத படங்களுக்காகவே பல தியேட்டர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

 அந்த தியேட்டர்களில்வேலை செய்பவர்களை அப்போது பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இவர்கள் தினமும் படம் பார்ப்பார்கள், தினமும் ஐஸ்க்கீரீம் பாப்கார்ன் சாப்பிடலாம் என்று தோன்றும். அப்படி வேலை செய்பவர்களின் வாழ்க்கையை பற்றிய ஸ்லைட் ஷோதான் இந்த நாவல். நாவல் என்றால் ஒரு ஆரம்பம், பாத்திர அறிமுகம், ஒரு முடிச்சு, ஒரு பிரச்சினை, தீர்வு, முடிவு சுபம். இந்த வகையான நாவல் அல்ல. தியேட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும் சில இளைஞர்களின் வாழ்வின் சில தினங்கள்தான் இக்கதை. அந்ததினங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும்.

நான் மேலே கூறியிருக்கும் சினிமா தியேட்டர் நினைவுகளை எல்லாம் எடுத்தது இந்நாவல்தான். உண்மையில் ஒன்றும் நினைவில் இல்லை, இதை படிக்க படிக்க கொஞ்ச கொஞ்சமாக அனைத்தும் நினைவில் வந்து போகின்றது. திருச்செங்கோட்டில் இருக்கும் ஒரு தியேட்டர், கொஞ்ச கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கும் ஒரு தியேட்டரை நம்பி சில சிறுவர்கள் / இளைஞர்களை பற்றி கொஞ்சம் பேசுகின்றது. தியேட்டரின் உள்ளே சோடா, கலர்,திண்பண்டங்கள் விற்கும் இவர்கள், அங்கேயே தங்கி பல வேலைகள் செய்கின்றனர். விற்பதற்கு தகுந்த கமிஷன், மற்ற வேலைகளுக்கு அவ்வப்போது சம்பளம்.

அவர்களின் வாழுமிடம் பற்றிய வர்ணனை. கைவிடப்பட்ட சோபா க்யூ, மாடி படியடியில். குப்பை, பூச்சிகள், நாற்றத்தின் நடுவிலும், கொதிக்கும் வெய்யிலின் வெக்கைக்காற்றில் புழுதி படிய தூங்கும் காட்சிகளை ஓட்டிப்பார்க்கவே முடியவில்லை.

தியேட்டர் தண்ணீரை திருட்டுத்தனமாக எடுத்து சோடா தயார் செய்யும் சோடாக்கடைக்காரர், சினிமா என்றாலா என்ன என்று தெரியாமல் தியேட்டர் ஆரம்பித்த முதலாளி, மேனேஜர், படப்பெட்டியுடன் ஊர் ஊராக திரியும் படத்துக்காரன், வாட்ச்மேன் என்று இவர்களுடன் அந்த தியேட்டரில் தொடர்புடையவர்களை பற்றியும் கொஞ்சம் கொஞ்சம்.

ஏழாம் உலகத்தில் வரும் உருப்படிகளை விட கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கும் இவர்கள், தங்கள் வாழ்க்கையை அது தரும் அளவான் உற்சாகத்துடன் வாழ்கின்றனர். ஏழாம் உலகம் சொல்லும் அதே செய்திதான். மனிதன் எந்த நிலையிலிருதாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அந்த வாழ்க்கையிலும் சிறு ஒளி, சந்தோஷம், கொண்டாட்டம் இருக்கும். அடுத்தவர்களுக்கு அது தவறாக படலாம். சிகெரெட் அட்டையில் சீட்டாடும் இவர்களுக்கு அமைதியை தரும் கஞ்சா, அவர்களுக்குள் உருவாகும் உறவு, படத்துக்காரன் சக்திவேலிடம் தன் மனைவியை கண்டு கொள்ளும் உறவு, இவையெல்லாம் கொஞ்சம் விபரீதமாக தோன்றும், ஆனால் அதுவே அவர்களின் வாழ்வின் சந்தோஷ தருணங்கள், வாழ்வதன் அர்த்தத்தை கொஞ்சம் காட்டும் இடங்கள்.பெருவியாதியால் பாதிக்கப்பட்டாலும்  மகனுக்கு பிரியாணி கொண்டுவரும் சக்திவேலின் தந்தைக்கு அவன்தான் அவர் வாழ்வின் அர்த்தம், மகிழ்ச்சி.

தியேட்டரில் நடக்கும்; அவர்களுக்கே உரிய வாழ்க்கையின் சில பகுதிகள். தியேட்டரில் திருடுவது, கள்ளத்தனமாக டிக்கெட் விற்பது, குடித்துவிட்டு சலம்புவது, தியேட்டரில் வந்து நிம்மதியாக தூங்குவது, இருளடைந்த க்யூவையே இருப்பிடமாக மாற்றுவது பல குட்டி குட்டி விஷயங்கள் அங்கங்கு வந்து போகின்றது. 

ஒவ்வொருவரின் எழுத்தும் படிக்கும் போது ஒவ்வொருவிதமான கால நிலையை எனக்குள் உருவாக்கும். கல்கி, தி.ஜா படிக்கும் போது ஆற்றங்கரை மணல், வயல், ஜெ.மோ காடு மலை சார்ந்த குளிர், அசோகமித்திரன்,ஆதவன், படிக்கும் போது நகர்ப்புற புழுக்கம், வெக்கை, நெரிசல். இவரின் எழுத்து உண்டாக்குவது வெயிலின் வெக்கையும், புழுக்கமும் சேர்ந்த ஒரு புழுதி பறக்கும் இடம். 

மொழி நடை கதைக்கேற்ப உள்ளது. கெட்ட வார்த்தைகள் ஏராளம். கதை எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் போல. நடிகர்களும் கிண்டலடிக்கப்பட்டுள்ளார்கள், தொப்பையன், சாம்பார், சிவாஜி வாய பிளந்துகிட்டு பாடறாண்டா, தலைவர் படம் வந்தால் தான் வசூல் என்று அக்கால சினிமா உலகம் கொஞ்சம் வருகின்றது. கதையில் வரும் உவமைகள் கூட சினிமா தியேட்டரை சார்ந்தே இருக்கின்றது, புரொஜெக்டரில் வரும் ஒளி போல, திரையில் மெதுவாக வரும் படம் போல என்று சினிமா சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றது.

இது சினிமா பற்றி கதையோ அல்லது சினிமா தியேட்டரை பற்றிய கதையோ அல்ல. அதன் வாசலில் அதை வைத்து பிழைக்கும் சிலரை பற்றி சித்திரம். சினிமா தியேட்டரின் வாசலில் இருக்கும் பிச்சைக்காரனும், கட்டில் கடை கிழவியும் கூட அதன் அங்கம்தான்.

காலச்சுவடு பதிப்பகம் 100 (சினிமா டிக்கெட் விலையை விட குறைவு) ஆன்லைனில்

1 கருத்து:

  1. உங்க விமர்சனம் படிச்சாலே எனக்கு எங்கூரு சினிமா கொட்டாய் நியாபகம் வருது... வாய்ப்புகிடைச்சா படிக்கணும் சார் :-)

    பதிலளிநீக்கு