வெண்முகில் நகரம் - வெண்முரசு வரிசையின் ஆறாவது நாவல். அதற்கடுத்து இரண்டு புத்தகங்கள் வந்துவிட்டன. புத்தகம் வந்த கையோடு எனது மடிக்கணிணி வேலை செய்ய மறுத்து விட்டது. ஒரு சில ’கீ’க்கள் மட்டும் வைகுண்டம் போய் விட்டது. ஒரு வழியாக சரியாகி வந்த பின் வேறு புத்தகங்கள் வந்துவிட்டது.
நாவல் வந்து பல நாள் ஆகிவிட்டது. அனைவரும் படித்திருப்பார்கள். இருந்தும் எழுதுவதன் காரணம் என்ன. ஒரு விஷயத்தை எழுதும் போது, நமக்கே தெரியாத, தோன்றாத பல புதிய விஷயங்கள் தோன்றும். சில குழப்பங்கள் தெளிந்து ஒரு கோர்வையாக ஒரு பார்வை கிடைக்கும். பிரயாகையை பற்றி எழுத ஆரம்பித்த பின்னரே அதில் வரும் வித விதமான தந்தைகளை பற்றிய பார்வை கிடைத்தது.
முதல் பகுதி பகுதி பாஞ்சாலி ஐந்து கணவர்களுடன் வாழ வேண்டிய முறைகள் குறித்தவை. நான் படித்த கதைகளில் நாரதர் கூறுவதாக இருந்த நினைவு. (பாரதத்தில் அடிக்கடி எட்டிப் பார்க்கும் நாரதர் வெண்முரசில் காணோமே!!!). ஐவருடனும் அவள் வெவ்வேறு ரூபத்தில் இருக்கின்றாள். பீமனுடன் நீரில் சென்று விளையடுகின்றாள். பீமன் அப்படி செய்யாமல் இருந்தால் தான் வியப்பு.
வெண்முரசின் சிறப்பே அதில் வரும் பாத்திரங்கள். மகாபாரதத்தில் வரும் கவனிக்கப்படாத பாத்திரங்கள் பெரும் முக்கியத்துவம் நமக்கு பல புதிய கோணங்களை காட்டுகின்றது. பூரிசிரவஸ் - சாத்யகி. சாத்யகி, போர் முடிவில் பாண்டவர் தரப்பில் உயிரோடிருந்த எழுவரில் ஒருவன். பூரிசிரவஸ், பாரதத்தில் வரும் ஒரு துணை பாத்திரம். சினிமாவாக எடுத்தால், எக்ஸ்ட்ரா 15 என்று யாராவது ஒரு நடிகரிடம் செல்லும் பாத்திரம். ஆனால் இந்த பாத்திரம்தான் பின்னாளில் ஒட்டு மொத்த யாதவ குல அழிவிற்கும் காரணம். இவனை கொன்றவன் சாத்யகி, அதுவும் யோகத்திலிருக்கும் போது. அதை கிருதவர்மன் சொல்லிக்காட்டும் போதுதான் சண்டை ஆரம்பமாகின்றது.
இருவரையும் முக்கிய பாத்திரமாக்கி, இறுதியில் இருவரையும் சந்திக்கவைத்த ஆசிரியரின் கற்பனையின் சக்தி அபாரம். பூரிசிரவஸின் காதல் கதைகள். தேவிகை, விஜயை, துச்சளை என்று போய், அனைத்தையும் கைவிடும் அவன் மீது ஒரு அனுதாபமும் வரவில்லை. வேணுமுடா உனக்கு என்றுதான் தோன்றுகின்றது. பால்ஹிகரை தேடிச்செல்லும் காட்சிகள் நம்மையும் ஒரு பாலையில் தள்ளுகின்றது, பிரேமையுடன் இமயத்தில் இருக்கும் பகுதிகள் சுவாரஸ்யம். திருமணம் என்பதும், கலவி, குழந்தை பெற்று கொள்வது சாதரண ஒரு நிகழ்வாக இருக்கின்றது அவர்களுக்கு. இக்காலத்தை வைத்து அதை அளக்க முடியாதுதான் என்றாலும், கொஞ்சம் செரிக்க கஷ்டம்தான்.
துவாரகையின் காட்சிகள் ஒரு பிரம்மாண்ட திரைப்படம். சாத்யகியிடம் இருப்பது மிகத்தூய பக்தி. ஜெயமோகன் கிருஷ்ணணை ஒரு யாதவ மன்னன் என்றே அனைத்து இடங்களிலும் கூறி வந்தாலும், எழுதும் போது அவன் ஒரு சாதரண அரசனாக வருவதில்லை. சாதரண மானிடர்க்கு அப்பாற்பட்டவனாகவே வருகின்றான். பாண்டவர்களுக்காக ராஜ்ஜியத்தை பிரிக்கும் அவைக் காட்சிகளை ஒரு புன்னகையுடனே படிக்க முடியும். படு சுவாரஸ்யமான காட்சிகள்.
திருதராஷ்டிரர் தம் புத்திரர்களை தாக்கும் காட்சியும், கண்ணில் படமாக ஓடுகின்றது. அனைத்து நாவல்களிலும் பாரதத்தின் பல பகுதிகளின் நிலகாட்சிகளின் விவரிப்பு வருகின்றது. இதில் பால்ஹிக நாட்டின் காட்சிகள் மிக அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் எங்கு என்று தேடி தேடி அலுப்பாகி விட்டு விட்டேன். ஃபேஸ்புக்கில் அருள் பேரரசன் ஒரு படத்தை பதிந்திருந்தார். அது மிக்க உதவியாக இருந்தது. தேடிப்பார்த்தேன் கண்டுபிடிக்க முடியவில்லை.
கலங்கிய நதி பதிவில் எழுதியது, அரசாங்கம் என்பது எவ்வளவு பெரிய இயந்திரம் என்பதும் நாம் உண்மை என்று காண்பது எந்தளவிற்கு உண்மை? அரசியலின் கையில் அனைவரும் ஒரு கருவிகளாகின்றனர். பூரிசிரவஸ் அப்படி ஒரு கருவியாகவே வருகின்றான். இது மழைப்பாடல் போன்றே முழுக்க முழுக்க அரசியல் நாவல். வெகு வேகமாக படிக்க வைக்கும் புத்தகம்.
இப்போதெல்லாம் புகைப்படம் எடுத்தவர் பெயரை போடாவிட்டால் ஃபெஸ்புக்கில் திட்டுகின்றார்களாம், ஆனால் இப்புகைப்படம் எடுத்தவர் எவர் என்று தெரியவில்லை. தி ஹிண்டு வில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகவே நன்றி தி ஹிண்டு. புகைப்படம் எடுத்தவர்க்கும் நன்றி.
ட்வுட். பெஸ்புக்கில் கமெண்ட் பகுதியில் பலர் பல படங்களை புகைப்படம் எடுத்தவர் பெயரில்லாமலேயே அள்ளி எறிகின்றார்கள், புகைப்படக்காரர்களும் கூடத்தான், அது எல்லாம் அற வரிசையில் வராதோ? பாரதத்தில் வருவது போல தர்மம் என்பது இடத்திற்கு இடம், காலத்திற்கு தகுந்தது போல மாறும் வஸ்து, அதை வைத்துதான் இதை புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக