25 செப்டம்பர் 2012

நான், கிருஷ்ண தேவராயன்

தமிழில் வந்த சரித்திர நாவல்களை பட்டியலிட்டால் எப்படியும் ஒரு 100 நாவலாவது தேறும். நான் முதலில் படித்த சரித்திரக்கதை என்னவென்று யோசித்தால்; பெரும்பாலானோர் கூறும் பதில்தான் "பொன்னியின் செல்வன்". ஏழாவது படிக்கும் போது நூலகத்தில் படித்தது. மீண்டும் அதை +2 படிக்கும் போது படித்தேன். கல்லூரி படிக்கும் போது சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு. வேலையில் சேர்ந்த பின் நிறைய சாண்டில்யன் கதைகள். என் நண்பனிடம் நிறைய சாண்டில்யன்கள் இருந்தன்.

கல்கியின் மூன்று கதைகளும் வேறுபட்டவை. முதல் கதையான பார்த்திபன் கனவு ஒரு பயிற்சி கதைபோலத்தான், சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வனும் இரு வேறுபட்ட வடிவங்கள்.சிவகாமியின் சபதம் ராமாயணச்சாயலும், பொன்னியின்செல்வன் மகாபாரதச்சாயலும் கொண்டது என்று என் அபிப்ராயம். சாண்டில்யனுக்கு ஒரு தனி பாணியே இருந்தது. கதாநாயகன் ஒரு சூப்பர் ஹீரோ. எல்லாம் தெரியும் அவனுக்கு, எல்லாம் ஜெயம், யாரவது உதவுவார்கள். ஜேம்ஸ்பாண்ட் மாதிரி பெண் (அ) பெண்கள் உதவி உண்டு. கண்டிப்பாக கதையில் கொஞ்சம் சரித்திரமும் உண்டு. முதல் இரண்டு கதைகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் பின்பு அந்த டெம்ளேட் பழகி விட்டது. கதையை சுலபமாக யூகிக்கமுடிந்தது. அங்கங்கு போரடித்தாலும் படிக்கலாம் என்றே தோன்றும்.


ரா.கி.ரங்கராஜனை குமுதத்தின் ஆஸ்த்தான எழுத்தாளர் என்றுதான் தெரியும். அவரின் பட்டாம்பூச்சி புத்தகத்தை யாரிடமோ வாங்கி புரட்டி பார்த்திருக்கின்றேன் அவ்வளவுதான். படித்தவரை சுவாரஸ்யமாக இருந்தது, ஓசி வாங்கி முழுதும் படிக்க முடியவில்லை. இக்கதையைப் பற்றி சிலிக்கான் ஷெல்பில் ஒரு வரியும், பிச்சைக்காரன் தளத்திலும் படித்தேன். ரா.கி.ரங்கராஜனின் மறைவும் அதைப் பற்றிய செய்திகளையும் படிக்கும் போது நினைவில் வந்தது. சரித்திரக்கதைகள் படித்து பல நாட்கள் ஆகிவிட்டதால் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். ஒரே நாளில் முடித்து விட்டேன். மறுபடியும் அடுத்த நாள் படித்து முடித்தேன்.

அனைத்து சரித்திர கதைகளுக்கு அரசியல் சதி, போர்கள், வீரம், சண்டை, ஒற்றர்கள், சுரங்கம் போன்றவை அவசியம். பெரும்பாலான கதைகள் குறிப்பிட்ட மன்னர் காலத்தில் நடப்பதாக இருந்தாலும் கதை அவரைச் சுற்றி நடப்பதில்லை. வேறு ஒரு இளைஞனே கதாநாயகனாக இருப்பான், விதிவிலக்காக ஒன்றிரண்டு இருக்கலாம். மன்னரே கதாநாயகனென்றாலும் துணைக்காவது ஒருவன் தேவை.


நான் கிருஷ்ண தேவராயன் இதை எல்லாம் உடைக்க முயற்சி செய்கின்றது. தன்மை ஒருமையில் எழுதப்பட்ட சிறுகதைகள் ஏராளம். குறுநாவலகளும் உள்ளன. ஒரு முழு நாவல் என்பது பெரிய முயற்சி. அவ்வகையில் எழுதும் போது மிக்க கவனமாக எழுத வேண்டும், சுலபமல்ல. கதைசொல்லி சம்பந்தப்படாத அனைத்து சம்பவங்களையும் வேறு யாரவது சொல்லிக்கொண்டே இருந்தால் எரிச்சல் வரும். மேடை நாடகம் மாதிரி மாறிவிடும்.


இதன் சிறப்புகள் என்று பட்டியலிட்டால்

கதை சொல்லும் முறை
             ஒரு புகழ் பெற்ற மன்னன் தன் கதையை தானே சொல்வது. இது போன்று வேறு சரித்திரகதைகள் ஏதும் வந்ததாக எனக்கு தெரியவில்லை.

கதையின் தன்மை
              யதார்த்தமான கதை. தேவையற்ற திடும் திருப்பங்கள், குழப்பங்கள் ஏதுமற்ற தெளிவான கதை

பாத்திரப் படைப்பு
               கதாநாயகன் ஒரு சாதரண மனிதன் அரச பொறுப்பிலிருப்பவன் அவ்வளவுதான். அனைத்து கதாபாத்திரங்களும் அப்படித்தான். அமானுஷ்ய வீரம், சாணக்கியனை கரைத்து குடித்த மந்திரி என்று யாருமில்லை. மிகப்பெரிய மன்னன் என்பதால் தேவையற்றப் புனிதத்துவம் தரப்படவில்லை, கொடுங்கோலனாகவும் காட்டப்படவில்லை.

சம்பவங்களின் நம்பகத்தன்மை
               கதாபாத்திரங்கள் சாதாரணமானவர்கள் என்பதால் சம்பவங்களும் நம்புவதற்கு தோதானவை. இப்படியும் நடந்திருக்க்லாம் என்றுதான் நினைக்க வைக்கின்றது.

கதாநாயகனே கதை சொல்லும் போது, கதை முழுவது அவன் பார்வையில் செல்ல வேண்டும். மற்ற கதாபாத்திரங்களும் கதாநாயகனின் பார்வையிலே சித்தரிக்கப்படும். பயங்கர திருப்பங்கள் வைக்க முடியாது, ஆதாரங்களை அடிக்குறிப்பாக தந்தாலோ, இல்லை கதையில் தர முயன்றாலோ சற்று அபத்தமாக போய்விடும். முக்கியமாக சில சமயம் சலிப்பை தந்துவிடும். ஒருவன் தன் மனதில் நினைப்பதையெல்லாம் எழுதிக்கொண்டே வந்தால், அது ஒரு குழப்பமான சித்திரத்தை தரும்.

ரா.கி.ரங்கராஜனின் அனுபவம் இவையனைத்தையும் வென்றுள்ளது. கதையில் நீள நீள வரிகள் இல்லை. கதை சொல்லி ஒரு வேற்று மொழிக்காரன் என்பதால் அலங்கார வாக்கியங்களை பயன்படுத்தாமல் சாதரண நடையில் கதையை சொல்லி செல்கின்றார்.

கதை கிருஷ்ணதேவராயர் இளவரசனாக இருந்த போது பாகவதகதாவில் நாட்டியமாடும் சின்னாதேவியை கண்டு காதல் கொள்கின்றார்.  கிருஷ்ணதேவராயர்  தன் அண்ணன் மரணத்திற்கு பின் அப்பாஜி துணையுடன் அரச பதவியேற்கின்றார். அரசகுலத்தின் மீது தீராப் பகையுள்ள சின்னாதேவியின் அண்ணன் அவளுடன் எங்கோ சென்றுவிடுகின்றான். கிருஷ்ணதேவராயர் தனது அரச பதவியின் சுமைகளுடன் சின்னாதேவியை தேடி களைத்து போயிருக்கும் போது மீண்டும் அவளை காண்கின்றார். கதை அவளை மீண்டும் காணும் போது ஆரம்பிக்கின்றது. உபகதைகளை அவர் நமக்கு கூறுகின்றார்.

காயத்ரி என்னும் பணிப்பெண் அவருக்கு முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகி, அவள் மூலமாக பல உதவிகள் பெற்று சின்னாதேவியை எப்படி மணக்கின்றார் என்பதை  கிருஷ்ணதேவராயர்  நமக்கு கூறுகின்றார். இதற்கு நடுவில் அவரது அரசியல் வாழ்வில் நடைபெற்ற போர்கள், அரசியல் காரணத்திற்காக திருமலா தேவியை திருமணம் செய்தது என்று பல நிகழ்வுகள்.

அனைத்து பாத்திரங்களையும் முடிந்த வரை நடைமுறைக்கு சாத்தியப்படகூடிய வகையில் சித்தரித்துள்ளார். கதையில் தேவராயருக்கு இணையாக வரும் காயத்ரி, ஒரு கற்பனை பாத்திரம். இது இல்லாமலே கதையை அமைத்திருக்கலாம். ஆனால் இது தொடர்கதையாக வந்ததால், தொடரும் போடுவதற்கு முன்பு ஒரு சஸ்பென்ஸ் வைக்க வேண்டுமே என்று இக்கதாபாத்திரத்தை சிருஷ்டித்துள்ளார் போல.

மன்னன் என்றாலும் அவருக்கும் சாதரண மனிதர்களின் உணர்வு இருக்கும் அதையும் நினைவில் வைத்து எழுதுங்கள் என்று சுஜாதா கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு சராசரி உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றார். மன்னரின் தாயார் பக்தி பாடலை கூறி விளக்கியதும் மனமுருகி ஆஹா என்று புல்லரிக்காமல் மனதுக்குள் அலுத்துக் கொள்ளும்; காதலியை நினைத்து நினைத்து புலம்பும்; துக்கத்தை அடக்க முடியாமல் தெருவில் இறங்கி ஓடும்; தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க முடியாமல் அகங்காரம் தடுக்கும்; ஒரு சராசரி மனிதனைத்தான் காட்டுகின்றார்.

இப்புத்தகம் கிருஷ்ணதேவராயரின் அரசியல் வாழ்க்கையை பற்றி அதிகம் பேசாமல், அவரது காதல் வாழ்க்கையைப் பேசுகின்றது. சின்னாதேவியை காதலிக்கும் தேவராயர் எப்படி அவளை அடைந்தார் என்பதை அவரது அரசியல் வாழ்க்கையோடு சேர்த்து கூறுகின்றார். கதை முழுவது கிருஷ்ணதேவராயரின் மனதில் சின்னாதேவி ஒரு அடிநாதமாக இருந்து கொண்டே இருக்கின்றாள்.

சின்னாதேவி -  கிருஷ்ணதேவராயர்  காதல் என்பது ஆசிரியரின் கற்பனை, ஆனால் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் ஆதாரப்பூர்வமானவை என்று கூறுகின்றார் ஆசிரியர். ஐ கிளாடியஸ் என்ற புத்தகத்தை படித்து அதை மொழிபெயர்க்க முதலில் முடிவு செய்திருக்கின்றார். ஆனால் அதை மொழி பெயர்க்க முதலில் அந்த சரித்திரத்தை முழுவதும் படித்து உள்வாங்க வேண்டும் எனவே, நம் மன்னர்களில் ஒருவரைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்து கிருஷ்ணதேவராயரை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்கு அவர் படித்த புத்தககங்கள் என சுமார் 50ஐ பட்டியலிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவைக்கூட பார்த்திருக்கின்றார். முன்று வருட உழைப்பு கதையில் தெரிகின்றது.

கிருஷ்ணதேவராயரின் கதையை ஏற்கனவே வேங்கடநாத விஜயம் என்ற நூலில் படித்திருக்கின்றேன். அது திருப்பதியின் வரலாறு எனப்படுகின்றது. அதன் சம்பவங்களும் இதுவும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன். காலவரிசை கொஞ்சம் மாறுபடுகின்றது. கதை காதல் கதை என்றாலும், அதையே முழுவதும் சுற்றாமல் அக்கால சமூகத்தையும், பழக்க வழக்கங்களையும் பேசுகின்றது. உடன்கட்டை ஏறுதல், கணவனுடன் வடக்கிருத்தல், இடக்கையால் வெற்றிலையை எடுத்த பாபம் தீர கோவிலுக்கு செல்தல், தண்டனை முறைகள், தேவதாசி முறை, கட்டாரி கல்யாணம் என்று பலவற்றை பற்றியும் அரசனின் பார்வையில் எழுதுகின்றார்.

அரண்மனை வழக்கங்கள்; பெண்கள் தோளில் ஏறி சவாரி செல்வது, சாட்டையடி தண்டனை. கிருஷ்ணதேவராயர் மிகச்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர். அப்போதைய காலகட்டத்தில் வடக்கே முகலாயர்கள் சாம்ராஜ்ஜியம் ஆரம்பித்து காலூன்றிய காலம், தெற்கே அவர்களின் வளர்ச்சியை தடுத்ததில் அவரது பங்கு பெரியது. ஆனால் அவரது படையிலும் முகலாயர்கள் தனிப் பங்கு வகித்தனர் என்பது புதிய செய்தி. போர்ச்சுக்கல் படையினரும் அவரது துப்பாக்கிகளும் அவருக்கு உதவியிருக்கின்றன. பொதுவாக இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் பற்றி சில கருத்திருக்கும், இந்து மதத்தை அழிக்க நினைத்தவர்கள், நாட்டை சுரண்டியவர்கள் என்று. ஆனால் அவர்கள் தென்னிந்தியாவில் அவ்விதம் செய்தமாதிரி தெரியவில்லை. இந்துக்களுடன் கலந்தே இருந்திருக்கின்றனர், இந்து மத பெரியோர்களை கவுரவித்துள்ளனர்.

குறைகள் இல்லாமல் படைப்பு இருக்காது, குற்றம் கண்டுபிடிக்கும் அளவிற்கு எனக்கு வாசிப்பனுபவமும் கிடையாது. சில இடங்கள் சிறப்பாக இல்லை என்று நினைப்பதைக் கூறலாம். சிலவற்றை ரா.கி.ராவே கூறுகின்றார், சிலவற்றை  கிருஷ்ணதேவராயர் கூறுகின்றார். காதலின் வேகத்தில் அவர் புலம்புவது, முக்கியமான போர்களின் நடுவிலும் அவர் காதலியை பற்றி யோசிப்பது எரிச்சலை உண்டாக்குகின்றது, "என்னடா இந்தாளுக்கு எப்பவும் இதே கவலைதானா" என்று. இதை கிருஷ்ணதேவராயரின் கூற்றாகவே ஒரு டிஸ்க்ளெய்மர் போட்டு விடுகின்றார்.

காயத்ரி சாண்டில்யன் ஹீரோக்களின் டவுன்கிரேடேட் வெர்ஷன். இப்பாத்திரம் இல்லையென்றால் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இப்பாத்திரம் எல்லா வேலையும் செய்கின்றது. பணிப்பெண் மன்னருக்கு உதவுவது, போரில் யோசனை சொல்வது, அவரும் அவளை நம்புவது, அவளின் சொல்படி கேட்பது எல்லம் கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டதாகவே உள்ளது. அதுவும் முடிவு உச்சகட்ட நாடகத்தனம். ஒரு வேளை விகடனில் வந்ததால் விகடன் குழுவின் வேலையாகவும் இருக்கலாம்.

ஒட்டுமொத்த அனுபவமாக பார்த்தால், சிறந்த ஒரு சரித்திர கதை. சரித்திர கதை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கதை.

சில இணைப்புகள் / பதிவுகள்



புத்தகத்தை வாங்க





2 கருத்துகள்:

  1. “நான் கிருஷ்ணதேவராயன் நல்ல கிளாஸிக் சார்”

    “ஆமா. நான் கமலைப் பார்க்கப் போயிருந்தபோது ஒரு புக் கொடுத்தார். “Me, Claudius” அப்படிங்குற புக். அது King Claudiusங்குறவரோட autobiography Book. அதைப்படிச்சதும் தான் எனக்கும் இப்படி ஒரு முயற்சி பண்ணிப்பார்க்கலாம்னு தோணித்து. நிறைய ரிசர்ச் பண்ணி எழுதுன நாவல் அது.”

    --பாலஹனுமான்

    --http://ramanans.wordpress.com/2012/09/05/

    பதிலளிநீக்கு