24 மார்ச் 2013

தாயார் சன்னதி - சுகா

டீவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த போது அதில் யாரோ திருநெல்வேலித் தமிழை பேசிக் கொண்டிருந்தனர். நானும் விளையாட்டாக அதே போல் என் பெண்ணுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த தமிழ் கொஞ்ச நேரத்தில் என் மனைவிக்கு தலைவலியை உண்டாக்குகின்றது என்று தெரிந்தவுடன் இன்னும் பலமாக ஆரம்பித்து பேசிக் கொண்டிருந்தேன். ஒரிஜினல் திருநெல்வேலிக்காரர்கள் கேட்டிருந்தால் உதை கிடைப்பது நிச்சியம். அப்படியே இப்புத்தகம் நினைவிற்கு வந்தது, எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

தாயார் சன்னதி என்ற தலைப்பை பார்த்த உடன் ஸ்ரீரங்கத்தை பற்றிய கதை என்றுதான் நினைத்தேன். அட்டைப்படமும் அதே போல் இருந்தது. ஒரு கோபுரம் ஒரு யானை, எனக்கு ஸ்ரீரங்கம் நினைவே வந்தது. வாங்கியபின் ஒரு சிறிய ஏமாற்றம். 

ஆனால் அது முழு  ஏமாற்றமல்ல. ஸ்ரீரங்கக்கதையல்ல தின்னவேலி கதை. திருநெல்வேலி என்றால் நினைவிற்கு வருவது அல்வா, அதே போல் அந்த தமிழ். இப்புத்தகத்தை படிக்கும் போது அந்த அல்வாவையும் அந்த தமிழையும் ருசித்து மகிழ்ந்த ஒரு திருப்தி கிடைக்கின்றது.

பாலுமகேந்திராவின் சிஷ்யர் சுகா. அவரின் தளத்தில் (அ) சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. புதிதான சரக்கை தன் கடையில் உடனே சூடாக போடும் விகடன் மூங்கில் மூச்சு என்ற பெயரில் தொடர்ந்தது. இப்போது வேறு பெயரில் வேறு யாரோ ஒருவரால் வருகின்றது. ஒரிஜினல் போல் அது இல்லை. கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.

தாயார் சன்னதி என்பது சுகா எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. அவரது தாயாரை மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது அவர் கண்ட மற்ற தாயார்களை பற்றிய ஒரு கட்டுரை. மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை.


இந்த தொகுதியில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் படம் பிடிப்பது விதவிதமான மனிதர்கள். திருநவேலிக்காரர்கள். நாம் சினிமாவில் பார்க்கு வாலே போலே திருநவேலி பாஷையல்ல. இது அசல் திருநெல்வேலி தமிழ். என் அம்மாவின் ஊரி சங்கரன்கோவில், அம்மா வழி உறவினர்கள் இருந்தது / இருப்பது எல்லாம் அதைச் சுற்றிதான் ராசாளையம், கோவில்பட்டி, தூத்துக்குடி, இலஞ்சி. அந்த தமிழின் லயம் கொஞ்சம் எனக்கும் தெரிந்ததுதான். அதனால் இதை நன்றாக ரசிக்க முடிந்தது. 

இதில் கொஞ்சம் கற்பனையும் கலந்துதான் இருக்க வேண்டும், சில சில விஷயங்களை அப்படியே எழுதவும் முடியாது. இதில் வரும் அவரது நண்பர் "குஞ்சு" (என்ன பேருப்பா). உண்மையான ஆளா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. 

சுகாவின் நடை தாமிரபரணி போன்று தாவி குதித்து போகின்றது. நல்ல பண்பட்ட நகைச்சுவையான நடை. எங்கும் துருத்திக் கொண்டிராத, வலிந்து புகப்படாத நகைச்சுவை. அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் நகைச்சுவை. அனைத்து கட்டுரைகளின் முடிவு அழகாக அமைந்துள்ளது.
கட்டுரைகளில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம், இசை. சுகா ஒரு நல்ல இசைக் கலைஞர் என்பதைக் காட்டுகின்றது. அதைவிட இசை என்பது அவரது குடும்பத்தில் அவரது சமூகத்தில் (சைவ வேளாளர்கள்) ஊறிப் போயுள்ளது. இதைப் படிக்கும் போது எங்கோ படித்த ஒரு கட்டுரை நினைவில் வருகின்றது. கர்நாடக இசையை பிராமணர்கள் திருடிக்கொண்டு தமக்குரியதாக ஆக்கிக்கொண்டனர் என்று. அவர்கள் இதை படிக்க வேண்டும்.

சினிமா துறையில் இருப்பதால் சினிமா பற்றிய தகவல்கள் சுவையான நிகழ்ச்சிகளும் உண்டு.

திருநெல்வேலி கோவில்கள், உச்சிமாளி, நெல்லையப்பர் கோவில் அனுபவங்கள், விதவிதமான எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள், திசைதெரியாத நண்பர்கள், காசிக்கு சென்று முழித்த அனுபவம், பல ஆச்சிகள், இளையராஜாவின் இசை மேதத்துவம் என்று ஏகப்பட்ட விஷ்யங்கள்.

அவருக்கு அனைவரும் சொந்தம் போல, நாஞ்சில்நாடன் சித்தப்பா, பாரதி மணி பாட்டையா என்று அனைவருக்கும் ஒரு உறவு முறை.

சுயஅனுபவங்களை படிப்பது என்பது எப்போதும் சுவையான அனுபவம். ஒரு வம்பு என்று கூட வைத்துக் கொள்ளலாம். அவ்வனுபவங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளரிடம் இருந்து வரும் போது அது இன்னும் சிறப்பு. அதுவும் நகைச்சுவையும், யதார்த்ததும் கலந்து வரும் போது அதை தவறவிடுவது கூடாது. இப்புத்தகத்தையும் தவற விடக் கூடாது.

இதில் வரும் பெரும்பாலான கட்டுரைகள் அவரின் தளத்திலேயே கிடைக்கின்றது.

2 கருத்துகள்:

  1. தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்... விகடனில் வெளிவந்த மூங்கில் மூச்சு மூலமாக இவரது எழுத்துக்கள் பிடித்துப் போய் வாங்கிய புத்தகம்.. பின்புதான் தெரிந்தது இவர் என் மனம் கவர் நெல்லை கண்ணன் அவர்களின் புதல்வன் என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைப்பட இயக்குனரும் கூட. இதுதான் அவரின் முதல் புத்தகம். இதே போன்று எழுத ஆரம்பித்து, பின் ஒரே டெம்ப்ளேட்டில் எழுதி கடுப்படித்தவரின் படம் வெளிவருகின்றது. இவரின் படம் இன்னும் காத்திருக்கின்றது

      நீக்கு