30 ஜூன் 2025

வேள்பாரி - சு. வெங்கடேசன்

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய தொடர்கதை. வீரயுக நாயகன் வேள்பாரி. விகடனில் தொடராக வெளிவந்து, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேலாக விற்பனையாகி உள்ளது என்று புத்தக அட்டை சொல்கின்றது. 

இன்றைய நிலையில் ஒரு லட்சம் பிரதி என்பது உண்மையில் ஒரு சாதனைதான். காவல்கோட்டம் இந்த அளவிற்கு போகவில்லை என்று அனுமானிக்கலாம். அதே ஆசிரியர், வரலாற்று தளம் இருந்தும் ஏன் இந்த வித்தியாசம். கண்டிப்பாக விகடன்  காரணம் இல்ல. விகடனில் வரும் அனைத்து தொடர்களும் இப்படி விற்பதில்லை. பின் எப்படி என்று பார்த்தால் இரண்டு விஷயங்கள். நமது சினிமா ஆர்வம், புதிதாக கிளம்பி இருக்கும் தமிழர் உணர்வு (தமிழ் உணர்வு இல்லை, தமிழர் உணர்வு) 

இது ஒரு பாகுபலி டைப் கதை. ஏன் பாகுபலி ஓடியது, பிரம்மாண்டமான திரையில் நம்ப முடியாத காட்சிகளை ஒரு காமிக்ஸ் வடிவத்தில் காட்டியது. இது அது போன்ற ஒரு நாவல். தமிழர் என்ற வார்த்தை ஒரு நல்ல வியாபார வார்த்தை. எதோடு சேர்த்தாலும் விற்கும், தமிழனின் பானம், தமிழனின் கலை, தமிழனின் கட்டிடம், தமிழனின் உணவு, தமிழனின் அறிவு  இது அந்த வகையில்  இது தமிழனின் சரித்திரம். புல்லரிப்புகளுடன் படிக்க ஏற்ற கதை.

இது வெளிவந்த புதிதில் இதை படக்கதை (கிராபிக் நாவல்) என்று பலர் கூறியிருந்தனர், அதன் காரணமாகவே பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில்தான் தெரியவந்தது இது வழக்கமான நாவல், மணியம் செல்வத்தின் ஓவியங்களுடன் வந்துள்ளது என்று. எனது நண்பர்கள் ஒன்றிரண்டு பேரும் இதை இன்னமும் படிக்கவில்லையா என்று ஆச்சர்யத்துடன் கேட்டனர், விலை அதிகம் என்றாலும், புதிய புத்தகங்கள் வாங்கி வெகு நாட்களாகியிருந்த காரணத்தால் துணிந்து வாங்கினேன். 

இந்த நாவலை இரண்டு வகையில் பார்க்கலாம். ஒரு சரித்திர நாவல், ஒரு பொழுதுபோக்கு நாவல். 

ஒரு பொழுது போக்கு நாவலாக, ஒரு மசாலா நாவலாக இது படிக்க கூடிய நாவல். இலக்கியதகுதி எல்லாம் இல்லாத, மிகு கற்பனை நாவல் நிறைந்த சாகச நாவல் என்று வகைப்படுத்தலாம். 

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், அவதார் போன்ற படங்களை எப்படி மூளையை கழட்டி வைத்துவிட்டு பார்போமோ அப்படி படிக்க வேண்டும் இதை. இந்த திரைப்படங்களின் வெற்றியே அதன் காமிக்ஸ் தன்மை, ஒரு காட்சியை உறைய வைத்து மூளைக்குள் தள்ளுவது, அதன் பிரம்மாண்டத்தில் நாம் மூழ்கும் போது அடுத்த காட்சிக்கு தள்ளுவது. கதை, லாஜிக் எல்லாம் பெரிதும் கிடையாது.

பாகுபலியை பார்த்துவிட்டு அந்த ராஜ்ஜியத்தை தேட முடியுமா, அல்லூரி சீதா ராம ராஜூவும்,கொமரம் பீமாவும் தாவி குதித்து சண்டை போட்டார்கள் என்று எடுத்து கொள்வோமா, அது போல இந்த நாவலுக்கும் பாரிக்கும், மூவேந்தர்களுக்கும் அதோடு தமிழக பாரத சரித்திரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று முடிவு செய்து விட்டு படித்தால், இது ஒரு நல்ல தொடர்கதை. 

பாகுபலியில் பெரிய கதவை எட்டி உதைத்து விட்டு ஒரு தேரை ஒற்றை ஆள் இழுத்துவருவது, சிங்கம் புலியுடன் சேர்ந்து ஒருவன் பாய்வது, ஒரு பெரிய சிலையை ஒருவன் ஒற்றை கையில் நிறுத்துவது எல்லாம் அந்த வகை, அந்த பிரம்மாண்டத்தை காட்டி மயக்குவது. இந்த நாவலும் அப்படிப்பட்ட காட்சிகளால் உண்டாக்கபட்டதுதான். அந்த காட்சிகளை நம் மனக்கண்ணில் காட்டுவதில் வெற்றிபெற்று இருக்கின்றார். திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே எழுதப்பட்ட கதை. ஒரு திரைக்கதை வடிவத்திலேயே இருக்கின்றது. புலவர் தூங்கி எழுந்து பார்க்கும் போது யாரும் இல்லாத குகை, வாசலில் அரை இருட்டில் ஒரு உருவம், இவர் எழுந்ததை பார்த்த உடன், நான்தான் பாரி என்று கூறி முடிக்கும் போது பின்னால் சூரியன் உதயமாகி வெளிச்சத்திற்கு அவன் தெரிகின்றான் - ஒரு சினிமா கதாநாயகனின் அறிமுகம். அரையிருட்டில் சண்டை நடக்கின்றது, இருட்டில் இருந்து ஒரு தலை வெளியே வந்து விழ பின்னால் ஒருவன் குதிரையில் வெளிச்சத்திற்குள் நுழைகின்றான், எல்லாம் தொடர்கதையில் தொடரும் போட ஏற்ற இடங்கள். 

நான் மேலே சொன்ன காரணம்தான் இதை ஒரு நல்ல பொழுதுபோக்கு நாவலாக எனக்கு பிடிக்கவைத்தது, அதோடு இதில் வரும் மகாபாரதத்தன்மை. குறிப்பாக போர்க்கள காட்சிகள். அகுதை - பாண்டிய போர், செம்பா - சோழன், நாகர் - சேரன், தேவாங்கு திருட்டு, கப்பல் எரிப்பு, சோழனின் யானைப்படை போர், சோமபானப் போர், சேரனின் நாய்ப்படை போர், நெருப்பிற்கு இறங்கி செய்யும் போர் என பல குட்டி போர்களால் முதல் மூன்று பாகமும் நிரப்பப்பட்டுள்ளன. தர்க்கத்தை தவிர்த்து ரஜினி படம் பார்ப்பது போல படிக்கலாம். சுவாரஸ்யமாக உள்ளது. இடையே வரும் காதல் காட்சிகள், சங்கப்பாடல்களின் உரைநடை வடிவம். அங்கங்கு கொஞ்சம் சென்டிமென்ட் காட்சிகள். கடைசி பாகம் முழுக்க முழுக்க போர், போர், போர். முதலில் சுவாரஸ்யமாக இருப்பது போக போக அலுப்பாகின்றது, மிக அலுப்பாக மாறும் முன்னால் பரபரப்பான இறுதிப்பகுதி வந்து முடிகின்றது. 

மணியம் செல்வனின் படங்கள், எனக்கு பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நாவலுக்கு படங்கள் உடலை கொடுத்திருக்க வேண்டும், ஆனால் பெரும்பாலான படங்கள் எனக்கு பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. ஒரு காமிக்ஸ் கதைகளுக்கு உண்டான படங்கள் இருந்திருருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரும்பாலான படங்கள் முகங்களையே காட்டுகின்றது. காடும் காடு சார்ந்த இடத்திற்கான பச்சை இல்லாமல், ஒரு வெக்கை நிலத்தை காட்டும் வகையில் அமைந்துவிட்டது. 

சரித்திரநாவல் என்ற வகையில் இதை சேர்க்க என்னால் முடியவில்லை.வரலாற்றைவிட மிகு கற்பனையே அதிகமாக உள்ளது. 

பாரியின் காலம் மிகப்பழையது. அக்காலத்தை பற்றி தமிழ்பாடல்கள் தவிர பெரிய குறிப்புகள் ஏதும் கிடையாது. பல பாடல்களை எழுதியவர் பெயர் கூட தெரியாது. காக்கை பாடினியார், இடைக்காடனார் என்று இர் விகுதி சேர்ந்தவர்களே, பல பெயர்கள் அவர்களின் பாடல் அடிப்படையில் பிற்காலத்தில் யாரோ வைத்த பெயர்கள்தான். பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் கூற்றாக வரும், "கவிஞர்கள் சிலர் அவர்களை புகழ்ந்து பாடியிருய்ப்பதால் அவர்கள் பேரையாவது தெரிந்து கொண்டுள்ளோம், கவிபாடிய பாணர்கள் உண்மையை பாடினார்களோ அல்லது மதுபானம் செய்துவிட்டு மனம் போன போக்கில் பாடினார்களோ, நமக்கு தெரியாது". இதுதான் உண்மை. கவிஞர்களின் கற்பனைக்கு நடுவில் உண்மையை தேடுவது கடினம். பெரும்பாலான பாடல்கள் பாட்டு தலைவனை புகழ்பவைதான். மிகு கற்பனையில்தான் இருக்கும். இந்த நாவலில் ஒரு பானையை தள்ள சிரமப்படும் ஒரு சிறுகுடி மன்னனை பார்த்து பாணர்களுக்கு நாளெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்து உன் கை சோர்ந்ததோ என்று ஐஸ் வைக்கின்றார் கபிலர். அதற்காக அவற்றை குறை சொல்வதாக அர்த்தமில்லை, ரசிக்க கூடியவைதான். 

இப்படிப்பட்ட சங்க கால பாடல்களின் அடிப்படையில் அமைந்த இந்த நாவல் பெரும்பாலானவைக் கற்பனைதான் என்று தோன்றுகின்றது. மிகுந்த ஆய்வுக்கு பின்னர் இந்த நாவலை எழுதியிருப்பதாக பலர் கூறுகின்றார்கள், அந்த அறிகுறி எல்லாம் எனக்கு தெரியவில்லை. சரித்தர ஆராய்ச்சி இல்லை,பழைய பாடல்களில் வேண்டுமென்றால் ஆராய்ச்சி செய்துள்ளார் எனலாம். சரித்திர ஆராய்ச்சியும் இலக்கிய ஆராய்ச்சியும் ஒன்றல்ல. இரண்டில் கிடைக்கும் உண்மைகள் வேறுவேறானவை. 

பாரி ஏழு வள்ளல்களில் ஒருவன்.முல்லைக்கு தேர் கொடுத்தான்.  அவனை மூவேந்தர்களும் சேர்ந்து படையெடுத்து கொன்றனர். அவனின் மகள்களான அங்கவை, சங்கவையை கபிலர் திருமுடிக்காரிக்கு மணம் செய்து வைத்தார். இவ்வளவு தகவல்கள்தான் நாம் பள்ளியில் படித்த சரித்திரம். அதை இரண்டு பாகங்களாக விரித்துள்ளார். படிக்கும் போதே பல கேள்விகள் வந்தவண்ணம் இருந்தது. 

பாரியின் பரம்புமலை என்பது இன்றைய பிரான்மலை என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. அது இருக்கும் இடம் சிவகங்கை மாவட்டம். ஆனால் புத்தகத்தின் முதல் பக்கத்தில் பறம்பு மலை என்று ஒரு வரைபடம் தரப்பட்டுள்ளது. அதில் பரம்பு மலைப் பகுதி காவிரியின் உற்பத்தி ஸ்தானத்தில் இருப்பது போல தெரிகின்றது. 
அந்த வரைபடத்தை தற்போதைய பாரத வரைபடத்துடன் ஒப்பிட்டால், தென்னிந்தியா கொஞ்சம் இளைத்து, நெடுக்காக வளர்ந்தது போல உள்ளது. யாரோ இழுத்து பிடித்தது போல. இந்த வரைப்படம் படி பார்த்தால், இந்த நாவலில் வரும் பறம்பு இருப்பது தற்போதைய கர்நாடாகாவின் மைசூர் பகுதியோ, இல்லை தலக்காவேரி இருக்கும் குடகு மலையோ. அங்கு ஆரம்பிக்கும் குழப்பம் கதை முழுக்க விரவி கிடக்கின்றது. 

இயல்பாக நூலின் ஆசிரியரிடம் ஹிந்து வெறுப்பு உண்டு, (முன்னுரையில் தாமோதரம் பிள்ளையை குறிப்பிடுபவர், பல சங்க இலக்கியங்களை தேடி பதிப்பித்த உவேசாவை குறிப்பிட மறந்ததை பிராமணவெறுப்பில்தான் சேர்க்க முடியும்.) அதோடு மூவேந்தர் வெறுப்பும் உண்டு என்றும் தெளிவாக தெரிகின்றது. காவல்கோட்டம் நாவலிலும் பாண்டிய மன்னர்களை விவரிப்பதில் ஒரு அலட்சிய போக்கு தெரியும். அது இதில் தொடர்கின்றது. போரில் மலைமக்கள் எல்லாம் உத்தம சீலர்கள், நேரம் முடிந்த உடன் வில்லை தாழ்த்துகின்றனர், வேந்தர்கள் எல்லாம் முறை பிறழ்ந்து கொல்லுகின்றனர்.  

களவு,காதல்,வீரம் இவற்றை அடிப்படையாக கொண்டவைதான் அகநானூறு, புறநானுறு. இந்த நாவலும் அப்படிப்பட்டதுதான். பல பகுதிகளைப் படிக்கும் போது அவை அனைத்தும் சங்கப்பாடல்களை கதைவடிவில், உரையாடல் வடிவில் மாற்றியது போலத்தான் எனக்கு தோன்றியது.கவிதையை உரைநடைக்கு மாற்றியதை பாராட்ட வேண்டியதுதான்.  

பாரியை பற்றி பாணர்கள் மூலம் அறிந்த கபிலர் பாரியை காண பறம்பிற்கு செல்கின்றார்.பறம்பை கண்டவுடன் அவருக்கு தெரிகின்றது, மலையின் கீழே இருப்பவன் எல்லாம் மட்டிகள். ஒன்றும் தெரியாத முட்டாள்கள். பாரி மக்கள் மட்டுமே இயற்கையை அறிந்தவர்கள், சமவெளி மக்கள் எல்லாம் சுத்த தந்திகள் என்று. அவர்கள் பேசும் ஒவ்வொன்றுக்கும் ஆச்சர்யப்பட்டு வாய் பிளப்பதிலேயே கபிலரின் பொழுது போய்விடுகின்றது. சரியாக நான்காண்டுகளுக்கு ஒரு முறை இங்கு சூரிய வெளிச்சம் இந்த இடத்திற்கு வரும் என்றால் புல்லரிக்கின்றார், வானில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த கார்த்திகை நட்சத்திரத்தை முருகன் தான் கண்டுபிடித்தான் என்றால் மயங்குகின்றார். நாவல் பழத்தை சாப்பிடும் முறை கேட்டு அதிர்கின்றார், வெற்றிலை போட கற்று கொள்கின்றார்,  சோமபானமும் பன்றிக் கறியும் தின்றுவிட்டு அவர்களின் கதைகளுக்கு கண்ணீர் விட்டு கொண்டிருக்கின்றார்.  அவர் ஒவ்வொன்றிரிக்கும் புல்லரித்து கொண்டிருக்கும் போது மூவேந்தர்களும் படையெடுத்து வந்து உதை வாங்கி செல்கின்றனர். சில நூறு வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொல்கின்றனர். பாண்டிய, சோழ நாட்டு வீரர்கள் எல்லாம் புல்தடுக்கி பயில்வான்கள் போல. தமிழ் திரைப்பட அடியாட்கள் போல வந்து வந்து அடிவாங்கி சாகின்றனர். 

பறம்பு மலையை, மூவேந்தர்களால் கொல்லப்பட்ட வேளிர் குழுக்கள் தஞ்சமடையும் நிலமாக காட்டியுள்ளார். அதற்காகவே, அங்கு இருக்கும் மூன்று குடியினரைப் பற்றிய கதைகள் வருகின்றன. மூவேந்தர்களும் தலா ஒவ்வொரு குடியை கொன்றகதை, மிச்சமிருக்கும் குடிகளின் கதைகள் தேவையில்லை. மூவேந்தர்கள் குடித்தலைவர்களை கொன்று வளர்ந்தனர் என்பதை வாசகர்களிடம் திணிக்க இது போதுமல்லவா? 

பாண்டியர்கள், சோழர்கள் காலம் இவர்காட்டும் குடிகள் காலத்திற்கும் முந்தையது. சங்ககாலம் என்பது இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, ஆனால் பாண்டிய, சோழ மன்னர்கள் பற்றி மகாபாரதத்திலேயே பேசப்படுகின்றது, மஹாபாரத காலம் 5000 ஆண்டுகள். பாண்டவர்கள் தரப்பில் மலையத்துவஜ பாண்டியன் என்பவன் போர் புரிந்தான் என்றும், சகாதேவனின் திக்விஜயத்தின் போது அவன் சந்தித்த சோழ நாட்டு மக்கள் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன. ஆனாலும் ஆசிரியர் மூவேந்தர்களை மட்டமாக காட்ட பெரும் சிரந்தை எடுத்துள்ளார். 

அடுத்த கதை, முருகன் கதை. முருகன் தமிழ்கடவுள் என்று கூறுவது என்பது முருகனை இந்து மதத்திலிருந்து மதமாற்றம் செய்யும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி. முருகன் சுப்ரமணியன், ஸ்கந்தன்  என்ற பெயரில் பாரதம் முழுவதும் வணங்கப்படுபவன். மகாபாரத்தில் குறிப்புகள் உண்டு, தேவசேனாதிபதி சுப்ரமணியன் போன்றவன் என்று அர்ஜ்ஜுனன் முருகனுடன் ஒப்பிடப்படுகின்றான். ஸ்கந்த புராணம் இருப்பதிலேயே பெரிய புராணம். இருந்தும் அவனை பாரதிய கலாச்சாரத்தில் இருந்து பிரிக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் இதுவும் ஒன்று. இவ்வளவு முயற்சி செய்த ஆசிரியர் இடது சாரி என்றாலும், ஹிந்து மத புராணக்கதைகள் பலவற்றை உள்ளே தள்ளி இருக்கின்றார். அதிலொன்று சோம பானம். சோமபானம் என்பது வேத காலங்களில் வேள்விகளில் பயன்படுத்தப்பட்ட ஒன்று, அதோடு இங்கு பலர் ஹிந்து மதத்தை கிண்டலடிக்கவும் பயன்படுத்திய ஒன்று. அதை இங்கு சொருகிவிட்டார். இதுபோன்ற சொருகல்கள் பல கண்ணில்பட்டது.  ஆழிபெரிது என்னும் நூலில் அரவிந்த நீலகண்டன் இந்த சோமரசம் பற்றி மிகவிரிவாக எழுதியுள்ளார். 

கதை முழுக்க தர்க்க பிழைகள், ஓட்டைகள், முரண்கள். இரண்டாம் பகுதியின் மிக முக்கிய பகுதியாக வருவது கடல் கடந்து செல்பவர்களின் முக்கிய பிரச்சினையான திசைகாணும் பிரச்சினை. ஒரு வணிகர் பேசும் போதும், விண்மீன்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை என்கின்றார். வானசாஸ்திர அறிவில் பாரதம் மற்றவர்கலை விட எங்கோ இருந்திருக்கின்றது. காந்த பயன்பாட்டை மற்றவர்களுக்குய் முன் அறிந்தவர்கள். சோமநாதர் கோவிலின் மிதக்கும் சிவலிங்கத்தின் அடிப்படையே காந்த அறிவு. சரி காந்தத்தை பற்றி அப்போது அவர்கள் அறியவில்லை என்றாலும், துருவ நட்சத்திரம் என்ற ஒன்று உண்டே. அதைப் பற்றி பேச்சே இல்லை. அது பகலில் தெரியாது, மழைக்காலங்களில் தெரியாது என்று ஒரு குறிப்பு இருந்தால் கூட லாஜிக்கலாக ஒத்து கொள்ளலாம், தெளிவாக விண்மீன்கள் இடம்மாறும் என்றே வருகின்றது. இடம்மாறும் விண்மீன்களை வைத்து நாட்களை, மாதங்களை கணித்தவர்கள் நாம்.  வடக்கை அறிதல் என்றும் இருந்தது இதை எல்லாம் மறைத்து அன்றைய தமிழருக்கு அது கூட தெரியாது என்று கூறுகின்றார். இதை அப்படியே சரித்திரம் என்று நம்பு ஒரு கூட்டம் வேறு கிளம்பியுள்ளது. 

பாரி பறம்பை சுற்றி என்ன நடந்தாலும் அறிவான் என்கின்றனர் ஒரு பகுதியில், மலையின் மற்றொரு பகுதியில் ஒட்டு மொத்த இனமே பாண்டியனால் அள்ளி கொண்டு போனதைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரிவதில்லை. நாவலின் முதல் வரைபடம் காட்டுவதைப் பார்த்தால் பறம்பு நிலமே காவேரி ஆறு ஓட வேண்டிய இடம், காவேரி ஆறு பற்றி ஒரு வரியை கானோம்.

இரண்டாம் பாக இறுதி போரில் காய்ந்து போன நாரில் இருந்து வரும் சாறில் பற்கள் ஜேம்ஸ்பாண்ட் வில்லன் பற்கள் மாதிரி மாறுகின்றது பலகையை கடிக்கின்றனர், கப்பலை கடித்து துப்புகின்றனர், தாயத்திலிருந்து வரும் பொரிதுகள்கள் நூற்றுக் கணக்கான கப்பல்களை எரிகின்றது,அதுவும் மூன்று தாயத்துகள். ஏதோ ஒரு பச்சிலை சாற்றை ஊற்றி இரும்புகளை உருக்கி ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன் அதுவும் இருக்கின்றது. கைதி ஒருவன் அதை கையில் வைத்து கொண்டு பாரி வந்து மீட்டு போக காத்திருக்கின்றான். மின்னல் ஒளி தெரிவதற்கு முன்னால் இடி ஓசை கேட்கின்றது வேள்பாரியால் ஒலியின் வேகத்தை கடந்து கேட்க முடிகின்றது. ஏதோ மூலிகையை தின்று இரண்டு பேர் பத்துநாட்கள் நடக்கின்றனர் சோறு தண்ணீரின்றி. அதே மூலிகையை எல்லா படைவீரர்களுக்கும் தந்திருக்கலாம். ஒரு கொடியை அரைத்து செய்யும் கவசம், இரும்பு வாளையே தடுக்கின்றது, ஒரே ஒரு சோம கிழங்கு குடம் குடமாக சோமரசத்தை தருகின்றது, பேசாமல் ஒரு குளத்தில் அந்த கிழங்கை போட்டிருக்கலாம், குளமே சோமரசமாகியிருக்கும். 

அனைத்தையும் விட பெரிய ஓட்டை, மூவேந்தர்களும் மட்டிகள் மாதிரி யாரோ ஒரு யவன கப்பல் மாலுமியிடம் அவர்கள் போர் ரகசியங்களை எல்லாம் படம் போட்டு விளக்கி சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள், இதில் வரும் சோழன் பறம்பில் இருக்கும் புதையல் ரகசியத்தை ஒரு மாலுமியை அமரவைத்து விளக்குகின்றார். சேரன் அவனது படைபலத்தை முழுவது சுற்றி காட்டி விளக்குகின்றான். இதைவிட ஒரு அரசனை அவமானப் படுத்த முடியாது. யானையை பலியிடுவது என்பது எல்லம் பெரிய பூ. அந்த பறம்புகாடுகளுக்கு உள்ளேயே இரும்பு தாது கிடைக்கின்றது,செம்பு தாது கிடைக்கின்றது. நல்லவேளை ஒரு உப்பு சுரங்கத்தை உண்டாக்காமல் விட்டார்கள்.

இடதுசாரியாக இருந்தாலும் ஆசிரியருக்கு மகாபாரதத்தில் ஈடுபாடு உண்டு போல, அதில் வரும் பல காட்சிகளை மாற்றி இதில் சேர்த்துவிட்டார். 

கருடன் கதை. கருடன் தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்க தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை கொண்டு வருவான். அதை தர்ப்பையில் வைக்க, தர்ப்பையில் சிந்திய அமிர்தத்தை நக்கிய பாம்புகளின் நாவு இரண்டாக பிளந்தது என்று, அது சிறிய மாற்றத்துடன் இங்கு உள்ளது. 

அடுத்த கதை, காண்டவவனம் எரிப்பு, நாகர்களின் அழிப்பு அதுவும் இங்கு உள்ளது. 

அபிமன்யுவின் மரணம், இங்கும் ஒரு வீரனை உள்ளே அனுப்புகின்றனர், துணைக்கு போக முடியாமல் மற்றவர்கள் மாட்டிக் கொள்ள வஞ்சனையால் அந்த இளவயது வீரன் மரணமடைகின்றான். சக்ரவியூகத்தை போன்ற அமைப்புதான் இங்கும் விவரிக்கபடுகின்றது. 

இறுதிப் பகுதியில் வரும் பாரியின் கதை சுழற்றல்,தேர்கள் உடைதல் எல்லாம் பீமனின் சாயல். 

பீம - ஜராசந்த யுத்தம் போன்ற இரண்டு வீரர்களின் மல்யுத்தம். 

மகாபாரதத்தில் போர் ஆரம்பிக்கும் முன்பு இரண்டு தரப்பும் விதிகளை வகுப்பார்கள், தேர் போராளி தேருடன் தான் மோத வேண்டும், தேரோட்டிகளை கொல்வது கூடாது, தலைப்பாகை அவிழ்ந்தவன், போர்க்களத்தை விட்டு சென்றவனை கொல்வது கூடாது என்பது போன்ற விதிகள், அதுவும் இங்கு உண்டு,

போர்க்கள காட்சிகளை விவரிப்பதில் மகாபாரதத்திற்கு இணை எதுவும் கிடையாது. இரண்டு படைகளும் எந்த வியூகத்தில் இருந்தன, யார் எந்த முனையில் இருந்தார்கள், எவர் எவருடன் எப்படி சண்டையிட்டார்கள் எல்லாம் வெகு விரிவாக எழுதப்பட்டிருக்கும், இதில் வரும் போர்க்கள காட்சிகள் அந்தளவிற்கு இல்லை என்றாலும் அதன் சாயல் எனக்கு வெகுவாகவே தெரிகின்றது.

பாரதத்தில் ஓவ்வொரு நாள் போர் முடிந்து நடக்கும் பேச்சுக்கள், அடுத்த நாளுக்கான வியூகங்கள் எல்லாம் அதே முறையில் இங்கும் நடக்கின்றது. 

வெண்முரசு நடையின் பாதிப்பும் எனக்கு தெரிகின்றது. கூத்துகாட்சிகள், போர்க்கள காட்சிகள்,நாக சிறுவனின் உடலே விஷமாக இருப்பது, சில உரையாடல்கள் எல்லாம் வெண்முரசு பாதிப்பில் இருந்தது போல எனக்கு தோன்றியது. 

விஷ்ணுபுரத்தில் ஒரு யானை கதை வரும், ஒரு யானை செய்த தவறுதலால், பலர் தண்டிக்க படுவார்கள், அதே போன்ற ஒரு கதை இங்கும் உள்ளது.

பல விஷயங்களை நாவல முழுக்க கொட்டியுள்ளார் கொஞ்சம் உண்மையும் நிறைய கற்பனையும் உண்டு. ஆனால் கற்பனை எல்லாம் தமிழனின் சரித்தர பெருமை பாரீர் என்று உலா வருவதை பார்க்கும் போது என்ன சொல்வது என்று தோன்றவில்லை. விட்டால் இதுதான் பாரியின் உண்மை வரலாறு என்று கொஞ்ச நாளில் முடிவு செய்து விடுவார்கள்.ஏற்கனவே சில பல க்ரூப்களில் காண முடிகின்றது. 

மிருகங்களை மயக்கும் மூங்கில், அம்புதுளைக்காத சட்டையை உண்டாக்கும் பிசின், சிறு பொறி பட்டால் பற்றி எரியும் செடி (மூலிகைப் பெட்ரோல் ராமர் கண்டது இந்த செடிதான் போல), அடர்ந்த மலைக்காட்டிற்குள் காட்டிற்குள் இருக்கும் பனைமரக்காடுகள், ரத்த சிலந்திகள், வெண்சாரை, ஜாவாத்தீவிலிருந்து வந்த சுந்தாபூனை, காக்கா விரிச்சி, பறளி,தன்மயக்கி,நாரத்தம் புல், பூனைமயக்கி,தும்மி இலை, திகைப்பூச்சி,கடிக்கும் ஈ, நாகரவண்டு, எதுவும் துளைக்காத மூலிகை கவசம், காற்றில் கிலோ மீட்டர் கணக்கில் பறந்து செல்லும் அம்புகள், அதுவும் கொத்து கொத்தாக. அருவியே கொட்டினாலும் அனையாத சுளுந்து குச்சி என்று பழைய அகராதிகளிலிருந்தும், கற்பனையிலிருந்தும் எடுத்து அள்ளி தெளித்துள்ளார்.

கதை முழுக்க ஸ்பெஷலிஸ்டுகள் வருகின்றார்கள். 

ஒரு குடியினர் யானை ஸ்பெஷலிஸ்டுகள்

ஒரு குடியினர் கூவல் ஸ்பெஷலிஸ்டுகள் (கோம்பையிலிருந்து கூவினால் குமுளி மலைக்கு கேட்கும்)

ஒரு குடியினர் மண்ணின் கீழ் இருக்கும் எதையும் கண்டுபிடிப்பார்கள். ஒரே நாளில் பத்து கிணறு வெட்டுவார்கள், ஆனால் பாவம் தண்ணீரில் இருக்கும் அட்டைபூச்சிதான் தெரியாது, 

ஒரு குடியினர் குள்ளமானவர்கள் பூச்சி ஸ்பெஷலிஸ்டுகள்

ஒரு குடியினர் கரும்பு ஸ்பெஷலிஸ்டுகள் அதோடு நாய் துணைப்பாடம், அந்தமான் தீவிலிருந்து கொண்டுவரப்பட்ட நாய்களை, கரும்பு காடுகளில் அடிமைகளாக வேலை செய்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள், ஆனால் அந்த நாய்களை உலகமெங்கும் சுற்றும் யவனர்கள் அறியார்கள், அவ்வளவு ஏன் வங்காள கடல் பகுதியிலிருக்கும் சோழர்களுக்கு தெரியாது ஆனால் அரபிக்கடல் பக்கமிருக்கும் சேரர்களுக்கு தெரியும்

ஒரு குடியினர் காட்டெருமை ஸ்பெஷலிஸ்டுகள்

ஒரு குடியினர் காற்று ஸ்பெஷலிஸ்டுகள். எல்லாம் ஃபேன்டஸி. 

மொத்தத்தில் ஒரு மோசமான சரித்திர நாவல். இந்த அழகில் இதன் தீவிர வாசகர்கள், பொன்னியின் செல்வன், சாண்டில்யனை எல்லாம் மட்டம் தட்டுகின்றனர். ஒரு சரித்திர நாவலாக அவர்கள் அருகில் கூட செல்ல முடியாது. ஆசிரியரின் காவல்கோட்டம்  அருகில் கூட இது போகாது

இது பாரியின் வரலாறும் அல்ல,தமிழர் வரலாறும் அல்ல. ஒரு மிகுகற்பனைகள் நிறைந்த  நல்ல பொழுது போக்கு மசலா நாவல். ஒரு வார இறுதியை போக்க நல்ல நாவல். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக