08 ஏப்ரல் 2013

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

பெங்களூர் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது கண்ணில் பட்டது. ஏற்கனவே கேள்வி பட்டிருந்ததால் வாங்கினேன். ஸ்டாலில் இருந்தவர், "சார் இவரின் காகித மலர்கள், படிச்சிருக்கீங்களா. நல்லா இருக்கும் சார்" என்றார்." ஏற்கனவே சில புத்தகங்களில் வாங்கிய சூடு இன்னும் ஆறாததால் "முதல்ல இத படிப்போம் சார், நல்லா இருந்தா அப்புறம் வாங்கலாம்" என்று கூறிவிட்டு வந்தேன். வாங்கியிருக்கலாம்.

புத்தகத்தின் அட்டைப்படமே கதையை முழுவதும் காட்டுகின்றது. முகமூடி அணிந்த ஒரு கோமாளி. ராம்சேஷ் என்னும் ஒரு காசனோவாவிற்கு உள்ளே ஒளிந்திருக்கும் ராமசேஷனின் கதை.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள ஒரு முகமூடி இருக்கும். மனைவியிடம் ஏன் உற்ற நண்பர்களிடம் கூட மாட்டிக் கொள்ள ஒரு முகமூடி இருக்கும். தனிமையில் இருக்கும் போது நம்மையே இது தான் நாம் என்று நம்ப வைக்க ஒரு முகமூடி இருக்கும். அதை ஒரு கை திறக்க விரும்பினாலும், மறு கை அதை விடாமல் இழுத்து மாட்டிக் கொண்டே இருக்கும்.அந்த முகமூடிகளை கிழித்து தோரணம் கட்டியுள்ள புத்தகம். ஒவ்வொருவருக்கும் அடுத்தவரிடம் நிரூபிக்க ஏதோ ஒன்று இருக்கின்றது. அந்த அபத்தத்தை வெட்ட வெளிச்சமாக காட்டுகின்றது இப்புத்தகம்.

ராமசேஷன். ஒரு கர்நாடக பெயர். கேட்டாலே ஒரு படு ஆச்சரமான மாமாதான் நினைவில் வருகின்றார். ஏதோ அது போல ஒருவர்தான் கதை நாயகன் என்று நினைத்தேன். ராமசேஷன் ஒரு நடுத்தர வர்க்கத்து பிராமண பையன். அவன் கல்லூரிக்கு செல்வதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. ராம்சேஷன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள், ஒவ்வொருவரிடமும் அவன் ஆடும் விளையாட்டு.


குடும்பத்தில் நடக்கும் சதுரங்க விளையாட்டுகள், பெண்களுக்கு நடுவில் நடக்கும் அதிகார அரசியல், அதில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ராமசேஷனின் அப்பா, அவரைப் போல் ஆகிவிடுவோமோ என்று ஒரு பயத்திலிருக்கும் ஒரு சாதரண வாலிபன். அப்பாவின் எதிர்மறையாக இருக்கும் பெரியப்பாவை ஆதர்சமாக கொள்ள விரும்புகின்றான்.

கல்லூரிக்கு வந்து விடுதியில் தங்கும் ராமசேஷனுக்கு கிடைக்கும் நண்பன் ராவ். ஒரு பணக்கார வீட்டு பையன், ராவின் சேவகன் மூர்த்தி. ஒரு நடுத்தரவர்கத்து பையன். ராவின் தங்கை மாலதி. இவர்கள் ஒவ்வொருவருடன் ஒவ்வொரு வேஷம்.

ஒரு சாதரணன் என்ற முகமூடியை தவிர்ப்பதற்காக, ராம்சேஷன் தன்னை அதற்கு அப்பாற்பட்டவனாக, ஒரு காசனோவாவாக காட்டிக் கொள்கின்றான்.

அந்த காசனோவா கதாபாத்திரத்தில் விழுந்ததாக நினைத்து பழகிய ராவின் தங்கை மாலதி, அவனை அவளின் ஒரு செல்ல அல்சேஷனாக நினைக்கின்றாள் என்ற எண்ணம் வந்து விலக, அவளுக்கு வேறு ஒரு அல்சேஷன் கிடைக்கின்றது. ப்ரேமா தன் அழகுகுறைவை மறைக்க ஆடும் ஆட்டம் முற்போக்கு ஆட்டம். அவளுடன் பழகும் ராமசேஷனும் அதே ஆட்டத்தை ஆடுகின்றான் அவளுக்காக. ஆனாலும் அவளால் அவனை ஈர்க்க முடியவில்லை (மெஷின் வேலை செய்யவில்லை).

அவன் வேஷம் போடாமல் இருக்க விரும்பும் மாமி, கடைசியில் வேஷம் போடாமல் இருக்க நினைப்பது கூட ஒரு வேஷமாக போகின்றது. மாமியிடம் மட்டும்தான் உண்மையாக இருப்பதாக் நினைக்கும் அவனுக்கு அதுவும் பொய்யென்று தெரிகின்றது. அப்பாவின் முடிவால், காசனோவா கதை முடிந்து, ராம்சேஷன் கதை ஆரம்பிக்கின்றது

நாவல் முழுக்க முழுக்க ஒரு எகத்தாளம் தெரிகின்றது. ராமசேஷன் தன்னை கிழித்துபார்ப்பது, அடுத்தவரை கிழித்து பார்ப்பதுமாக போகின்றது. ராமசேஷன் தன் கதையை சொல்வதாக இருப்பதால் நிறைய பேசிக் கொண்டே இருப்பது போல தோன்றுகின்றது. நகைச்சுவை என்பது இதில் வேறு விதமாக அவரவர் செயல்களின் பின்னால் இருக்கும் அபத்தத்தின் மூலமாக வெளிப்படுகின்றது.

ராமசேஷனின் பெரியப்பாவும் அவரது மனைவியும் பேசிக் கொள்வதை பார்க்கும் போது நமக்கும் தோன்றுவது ஒரு அன்னியோன்யமாக இருப்பதைப் போன்று தோன்றினாலும் அதன் பின்னால் இருப்பது அடுத்தவர் முன்னால் அப்படி இருப்பதை காட்டிக் கொள்வதுதான். இதே போல் அனைவரின் உள்ளே உள்ளதை எடுத்து தூக்கி வெளியே போடுகின்றார். 

மற்றுமொரு விஷயம் காமம். 80களின் பெண்கள் சர்வசாதரணமாக சென்று காண்டம் வாங்கிவருகின்றார்கள். 

கதையை ஆங்கிலத்தில் எழுத நினைத்து தமிழில் எழுதிவிட்டது போல ஏகப்பட்ட ஆங்கில வார்த்தகைள். எழுத்து நடை வெகு இயல்பாக இருக்கின்றது. கொஞ்சமும் சலிப்பு தட்டாத நடை. அங்கங்கு மெலிதான நகைச்சுவை.

ராமசேஷனின் நடுத்தர வர்க்க குடும்பம், ராவின் 
பணக்கார குடும்பம், ராம் சேஷனின் கல்லூரி ஆகியவற்றி சித்தரிப்புகள் இயல்பாக உள்ளது. குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் மோதல், போலியான் அங்கலாய்ப்புகள், மற்றவரை திருப்தி செய்ய நாம் வலுவில் செய்யும் வேலைகள் என்று நம்மை கீறி நமக்குள் இருக்கும் இன்னொரு மனிதனை நமக்கு காட்டுகின்றார் ஆதவன். 

நான் படிக்கும் ஆதவனின் முதல் கதை இது. மனிதருக்கு ஆனாலும் ரொம்ப குசும்பு. இப்படி எல்லாரும் மனதில் நினைப்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் எப்படி வாழ முடியும்.


2 கருத்துகள்:

  1. காகித மலர்கள் நான் கல்லூரியில் படித்தபோது படித்திருக்கிறேன். அப்போது என் மனம் கவர்ந்த நாவல் அது. என் பெயர் ராமசேஷன் அப்போதிருந்தே தேடித்தேடி இப்போதுதான் வாங்கி வைத்திருக்கிறேன். சரிதான். எல்லாவற்றக்குமான உள் அர்த்தத்தை பார்த்துக்கொண்டிருந்தால் வாழ்வதுதான் எப்படி? அப்படியான சிந்தனையே ஒருவிதமான மனப்பிறழ்வின் நிலைதானோ?

    பதிலளிநீக்கு
  2. அப்படி பார்த்துக் கொண்டே இருந்தால் பைத்தியம் பிடிப்பது உறுதி.

    பதிலளிநீக்கு