தமிழகத்தின் முக்கிய உணவு சினிமா. அது இல்லாமல் பலர் வாழ்வது
கடினம். பலருக்கு சினிமா மீதான காதல் அபரிமிதமானது. ஆட்சியையே தூக்கி கொடுக்கும் மனதுடையவர்கள்
நாம். அத்தகைய சினிமா நாயகர்களில் சிலரை பற்றிய குறிப்புகள்தான் இப்புத்தகம். உயிர்மையில்
வெளிவந்து புத்தகமாகவும் வந்துள்ளது.
ரஜினி - கமல் என்றுதான் என் சிறுவயது சண்டைகள், இன்று விஜய்
- சூர்யா என்று நடந்து கொண்டிருக்கின்றது. ஏனோ அஜித் சிறுவர்கள் மனம் கவரவில்லை. அவர்
அடுத்த படிக்கு போய்விட்டாரோ என்றுதான் எண்ண தோன்றுகின்றது, அது வேறு கவலை. இதற்கு
எல்லாம் முன்னோடி, எம்.ஜி.ஆர் - சிவாஜி? இல்லை. அதற்கும் முன்னும் தமிழ்சினிமா இருந்திருக்கின்றதல்லவா?
எம்.கே.டி - பி.யூ. சின்னப்பா. இப்புத்தகம் அவர்களில் ஆரம்பித்து பல முன்னோடிகளை பேச
விருப்பப்பட்டு, விரைவில் முடிந்து விட்டது.
இதில் வரும் சினிமா பிரபலங்கள்
எம்.கே.டி
பி.யூ.சின்னப்பா
எஸ்.ஜி.கிட்டப்பா
கே.பி.சுந்தராம்பாள்
எம்.ஆர்.ராதா
எம்.ஜி.ராமசந்திரன்
இதில் எம்.ஜி.ஆரை பற்றி புதிதாக என்ன என்று யோசிக்கலாம், எம்.ஜி.ஆரின்
ஆரம்பகால வாழ்க்கை பற்றிய குறிப்புகள். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வின் ஆரம்பம், அவரின்
முதல் சில படங்கள், அவரின் மண வாழ்க்கை. எல்லாம் கொஞ்சம் படிக்க புதிதான பழையவை.
எம்.ஆர்.ராதவை பற்றிய குறிப்புகள் பல ஏற்கனவே பல இதழ்களில் படித்தவை.
புதிதாக ஒன்றுமில்லை. காரில் வைக்கோலை ஏற்றி சென்றது, எம்.ஜி.ஆரை சுட்டது.
முக்கியமானது இப்புத்தகத்தின் தலைப்பிற்கான காரணகர்த்தா. கே.பி.சுந்தாராம்பாள்.
அவரின் பேரை கேட்டவுடன் நினைவில் வருவது, ஒரு மூதாட்டி வடிவம். அவ்வையார் சிறுவயதில்
கிழவியாய் போனார் என்று படித்திருப்போம், அது போல இவரும் சிறுவயது முதலே கிழவியானாரோ
என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். அதற்கு பின்னால் இருப்பது ஒரு அற்புதமான காதல்
கதை. அவருக்கும் எஸ்.ஜி.கிட்டப்பாவிற்குமான காதல். மூன்று வருடம் சேர்ந்து (அதுவும்
இரண்டாம் மனைவியாக, சந்தேகத்துடன் வாழ்ந்த ஒரு வாழ்க்கை) வாழ்ந்ததற்கு பல ஆண்டுகள்
விதவை கோலம். இது என்ன சாதரணமா என்று கேட்கலாம், எத்தனையோ பேர் அப்படி வாழ்ந்திருக்கின்றார்கள்,
பார்த்திருப்போம். ஆனால் இவர் இருந்தது சினிமா உலகில். ஆகா அது எப்படி சினிமாகாரர்களை
கேவலமாக பேசலாம் என்பவர்கள், ஒரு வருடம் அமர்ந்து எழுபது வருட சினிமா இதழ்களை படித்துவிட்டு
வாருங்கள்.
எஸ்.ஜி கிட்டப்பாவை பற்றி மற்றொரு பிரபலம் சொன்னது "இது போன ஜென்மத்தில் பழுத்த பழம், தன் கர்மாவை தொலைக்க பூலோகத்தில் விழுந்துள்ளது. தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு போய்விடும் அதிக நாள் தங்காது" கூறியது போலவே அதிகநாள் தங்காமல் போய் சேர்ந்தார். காரணம் குடி. அவர் இறந்ததை கேட்டதும் ஓடி வரும் கே.பி.எஸ் கையில் பணம், அவரின் கடனை தீர்க்க.
இப்புத்தகத்திற்கு உயிர் கொடுப்பது அவரின் கடிதங்கள். அவரின் ஒவ்வொரு கடிதமும்,
அவரின் காதலை ஒரு உயரிய இடத்தில் வைக்க செய்கின்றது.
இதை படித்ததும் நினைவில் வரும் மற்றுமொரு பிம்பம் எம்.எஸ்.சுப்புலஷ்மி.
ஜெயமோகன் தளத்தில், படித்து பாருங்கள். ஒற்றுமை வேற்றுமை தெரியும்.
எம்.கே.டியின் வரலாறு.அவரின் ராஜபோக வாழ்க்கை, கடைசியில் அதன் வீழ்ச்சி. அவரின் நுட்பமான அறிவு, தயாள மனம்.
இப்புத்தகத்தை
எழுத்தாளர் மாமல்லன் அவர் தளத்தில் கிழித்து தொங்கவிட்டுவிட்டார். சில பல தவறான தகவல்களுக்காக.
விந்தன் எழுதிய
தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்திலிருந்து பல பகுதிகளை சுருக்கி தந்துள்ளார். அந்த மின்புத்தகம் இங்கே
இதற்கு சற்று தொடர்புடைய ஒரு இணைப்பு
பி.யூ.சின்னப்பா இவர்களை பற்றியும் பல குறிப்புகள். சுவாரஸ்யமான பல தகவல்கள். எம்.கே.டி யுடன் இவருக்கான போட்டி, இருவரின் ஆளுமைகளின் வித்தியாசம்.
அந்த நாளின் பல சினிமா புத்தகங்களின் குறிப்புகளை தந்துள்ளார். பலரின் கேள்விகள் வேறு. இன்னாரின் ஜாதி என்ன, விலாசம் என்ன, அவரை நான் மணக்க முடியுமா. இன்றும் தினதந்தியின் குருவியாரும், ராணியின் கிளியாரும், இன்ன பிற பறவைகளும் இதே மாதிரியான கேள்விகளுக்கே பதில் சொல்லி வருகின்றார்கள். என்ன ஜாதிக் கேள்விகள் இல்லை, அதற்கு பதிலாக மொழி, மாநிலம் பற்றிய கேள்விகள். தமிழ் சினிமா ரசிகன் முன்னேறவில்லை என்று யார் சொன்னது.
ஆனால் ஒரே கேள்வி,
இந்த வேலைக்கு ஒரு பெரிய எழுத்தாளர் எதற்கு? பல இதழ்களில், புத்தகங்களில் வந்த நிகழ்வுகளை
தொகுத்து அளிக்க ஒரு பத்திரிக்கையாளர் போதும். எழுதிய விதத்திலும் எழுத்தாளரின் முத்திரை
என்று எதுவுமில்லை. வழக்கம் போல நாலு இடங்களில் தமிழர்களை திட்டும் போது மட்டும் வெளிப்படுகின்றது. தொகுத்த விதத்தி சுவாரஸ்யம்தான். சுருக்கமாக தந்துள்ளார். ஆனால் அது மட்டும் போதாது. பின்னட்டையில் பதிப்பாளர் அடித்துவிடும் மானிட சோகம் எல்லாம் வருவதில்லை.
இன்னும் அவர் ஆசைப்பட்ட பல நாயகர்களை பற்றி எல்லாம் ஒன்றும் எழுதமுடியவில்லை. சரிதான் இதற்கே அவர் பல புத்தகங்களை படித்து இருக்கவேண்டும். உழைப்பிற்கு ஊதியமேது. ரஞ்சன், பாலையா என்று பலர் உள்ளனர்.
உருப்படியான விஷயம், இதற்கு பின்னால் இப்புத்தக நாயகர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற ஆசை வருகின்றது. படிக்கலாம் தப்பில்லை. சரவணபவன் தோசை விலைதான்.
பதிப்பகமும், விலையும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். எம் கே டி பாகவதர் கடைசிக் காலத்தில் கஷ்டப்பட்டது போல ஊடகங்களில் வருவது பிழை என்று சமீபத்தில் அவர் சகோதரி அல்லது சகோதரியின் பிள்ளை ஒரு தினசரியில் பேட்டி தந்திருந்தார். நீங்கள் சொல்வது போல இந்த விஷயங்களை எழுதுவதற்கு சாரு நிவேதிதாவா? ஆச்சர்யம்தான்!
பதிலளிநீக்குஇப்பதிவு சிறிது நாள் முன்பே எழுதி வைத்தது. விந்தனின் புத்தகத்தை தேடி கொண்டிருந்ததால் அப்படியே வைத்திருந்தேன். அது கிடைத்ததும் அப்படியே வெளியிட்டு விட்டேன். அதனால் புத்தக விபரம் தவறிவிட்டது. விலை உள்ளது பாருங்கள். //சரவணபவன் தோசை விலைதான்// 80 ரூபாய். மற்ற விபரங்களை சேர்த்துள்ளேன்.
நீக்கு