24 டிசம்பர் 2013

வெள்ளையானை - ஜெயமோகன்

யானை ஒரு வலிமையான மிருகம். அதைவிட வலிமையானது அதன் மனம். யானை எதையும் மறப்பதில்லை அதன் வலிமையை கூட, அதை தேவையில்லாமல் பயன்படுத்துவதில்லை. அது தன்னை அடக்கியாள்வதை அனுமதிக்கின்றது. ஒரு சிறிய தளைக்கு கட்டுபட்டு நிற்கின்றது. ஒரு எல்லை வரை. அதை தாண்டினால் எல்லாம் தூசு. நமது இந்தியாவையும் அப்படி ஒரு யானையுடன் ஒப்பிடலாம். நமது நாட்டின் வலிமை அளப்பறியது. அந்த வலிமையை பலர் அடக்கியாண்டார்கள். இன்று வரை வேறு வேறு வடிவங்களில் அது அடக்கி ஆளப்பட்டு வருகின்றது. கடைசியில் காந்திவழியே தன் வலிமையை அறிந்து திருப்பி அடித்தது. ஆனால் இன்று மீண்டும் அடங்கியுள்ளது. எப்போது மறுபடியும் தன் வலிமையறியுமோ? அந்த யானையை கட்டியிருந்தது வெள்ளையர்களின் தளை. பயம் என்னும் இழையாலும், அதிகாரம் என்னும் இழையாலும் செய்யப்பட்ட தளை. அதன் ஊடே அதை உறுதியாக்க உதவியது நமது ஜாதியடுக்கு என்னும் மற்றொரு இழை.
வெள்ளையானை - கதையின் ஆரம்பத்தில் வரும் ஐஸ் ஹவுஸின் பெரிய பனிப்பாளத்திற்கு உவமையாக வருகின்றது. இறுதியில் கூறப்படுவது போல வெள்ளையானை என்பது ஒரு நோயுற்ற யானை. நம் நாட்டிற்கும் உவமையாகலாம்.

நம்மை முழுவதும் சுரண்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அந்த சுரண்டலின் விளைவு கொடிய பஞ்சங்கள். அத்தகைய கொடிய பஞ்சம், தாது வருட பஞ்சம் என்றழைக்கப்பட்ட பஞ்சம். 1876 - 78ல் கொடிய பஞ்சம் தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் ஒரு கோடிக்கு மேல் எனப்படுகின்றது. கணக்கில் வந்ததே ஒரு கோடி என்றால் கண்டிப்பாக அதற்கு மேலாகவே இருக்கும். 


அப்பஞ்சத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள். பஞ்சத்தின் முதல் பலி பணமும், அதிகாரமும் இல்லாதவர்களாகத்தானே இருப்பார்கள். அன்றைய மக்கள் மனிதர்களாக கூட மதிக்கப்படவில்லை. இந்த நாவல் அந்த பஞ்சத்தினை நமக்கு காட்சி படுத்திதருகின்றது. அதற்கு காரணமானவர்களை கூண்டில் ஏற்றுகின்றது. நாமும் சேர்ந்து ஏறி நிற்க வேண்டியதுதான். 

வழக்கமான ஜெயமோகனின் நடை இதிலில்லை. அதற்கு காரணம் மொழி. வழக்கமாக அவரது கதையின் மொழிநடை அந்த வட்டார வழக்கை ஒட்டியிருக்கும். விஷ்ணுபுரம் அது ஒரு புராண நடையில் அமைந்துவிட்டது. இது எளிமையான மொழிநடையில், பெரிய பெரிய வாக்கியங்களில் இல்லாமல் அமைந்துள்ளது.

ஏய்டன் என்னும் அயர்லாந்து கேப்டன், சென்னை ராஜதானியில் காணும் பஞ்சக்காட்சிகள் அவனின் மனசாட்சியை உலுக்குவதுதான் மைய இழை. படிப்பவர்களின் மனசாட்சியையும் சேர்த்தே உலுக்குகின்றது. ஏய்டன் ஐஸ்ஹவுஸ் கங்காணி ஒருவன் இரண்டு தலித்துகளை சாட்டையால் அடிப்பதை பார்க்கின்றான். அதை விசாரிக்க ஐஸ் ஹவுஸ் செல்லும் அவன் காண்பது வெள்ளையானை போன்ற ஐஸ் பாளம். வெள்ளையர்கள் பானத்திற்கு அமெரிக்காவிலிருந்து ஆறுமாதம் பயணம் செய்து வரும் அந்த யானை பலரின் உயிரை உறிஞ்சி, மனிதர்கள் உறிஞ்ச கோப்பையில் விழுகின்றது. அத்தொழிலாளர்களின் சார்பாக அறிமுகமாவது காத்தவராயன். அவன் மூலமாக பஞ்சத்தின் கொடுமையை கேள்விபட்டு அதை காண செல்கின்றான். அவனின் அறிக்கையையே பயன்படுத்தி தம் சுரண்டலுக்கு வித்திடுகின்றார் பக்கிங்ஹாம்.

பஞ்சத்தை பயன்படுத்தி மனித உழைப்பை சுரண்டுபவர்களை எதிர்த்த முதல் குரல் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்களுடையது. அதற்கு காரணமாக இருந்தவர் காத்தவராயன். அயோத்திதாச பண்டிதரின் வடிவம் என்று கூறப்படுகின்றது. அவரை பற்றி அதிகம் கேள்விபட்டதில்லை. கடைசியில் அப்போராட்டம் ஒடுக்கப்பட்டு, அப்படி ஒரு சம்பவமே மறைக்கப்படுகின்றது. அது காத்தவராயனின் புத்த மத மாற்றத்திற்கு காரணமாகின்றது. ஏய்டன் தென்காசிக்கு மாற்றப்பட்டு பிரிட்டீஷ் ஜோதியில் கலக்கின்றான்.

ஏய்டன் பாத்திரத்தின் பின்புலம், அயர்லாந்து. தூய பிரிட்டன் ரத்தமல்ல. அவனும் ஒருவகையில் பிரிட்டனால் அடக்கப்பட்டவன். ஆங்கிலேய ஊழிய பார்வையைதாண்டி அவனால் பார்க்க முடிகின்றது. ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களுக்காக மனம் இரங்கும் அவனது வெள்ளைமனம் தன்னை ஒரு கறுப்பர்களைவிட மேலானதாகத்தான் கருதுகின்றது. கருப்பனின் முதுகில் கால் வைத்து இறங்குவதை தவறாக கருதவில்லை. அவனையறியாமலே ஐஸ்ஹவுஸ் போராட்டம் அவன் மூலம் ஒடுக்கப்படுகின்றது. 

"'இவர்கள் உயிர்கள், நான் மனிதன். நாங்கள் மனிதர்கள்' இந்த வேறுபாடு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது"

சென்னை நகரத்தின் அக்கால பிரிவு, கறுப்பு நகரத்தின் தோற்றம். பஞ்சத்தின் காட்சிகள். படிக்கும் எவரையும் ஒரு கலக்கு கலக்கும். இதன் பின் ஒவ்வொரு கவளமும் நமக்கு கடவுளாகத்தான் தோன்றும். உணவை வீணாக்குவது என்பது எப்படிப்பட்ட பாவம் என்பதும் புரியும். 

"பெரிய ஆலமரத்தின் அடியில் பிணங்கள் அள்ளி கொட்டியவை போல கிடந்தன. பாதிக்கு மேல் குழந்தைகள். நாலைந்து நாய்கள் பிணங்களை கிழித்து குடலைக்கவ்வி இழுத்து  வெளியே எடுத்து தின்று கொண்டிருந்தன.

புதர்களுல் ஏராளமான சடலங்கள். மண்ணை குப்புற அணைத்தது போல, ஆழ்ந்த சுகமான உறக்கம் போல. வெள்ளெலும்புகள் காலில் மிதிபட்டன. சதை இன்னும் மிஞ்சியிருக்கும் இடுப்பெலும்புகள்"

நாவல் காட்டும் சரித்திரம் நமக்கு கூறுவது, நமது முன்னோர்கள் தாழ்த்தப்பட்டவர்களை கை விட்டனர், அவரகளின் அறவுணர்ச்சி என்பது சுத்தமாக அவர்களை விட்டு போனது. அவர்களை பொறுத்தவரை, இறந்தவர்கள் மனித உயிர்களே அல்லர். அவர்களின் இறப்பு கவனிக்கப்பட வேண்டியதில்லை என்பது. பஞ்சத்திற்கு காரணமானவர்கள் வெள்ளையர்கள். மக்கள் லட்சக்கணக்கில் சாகும் போது இங்கிருந்த உணவுபொருட்கள் அனைத்தும் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. பஞ்ச நிவாரணம் என்ற பெயரில் பாதிரிகள் ஆன்ம அறுவடை செய்து கொண்டிருந்தனர். பஞ்சம் என்பதே அவர்கள் கிறிஸ்துவத்திற்கு ஆள் சேர்க்க கடவுள் அனுப்பிய கொடை என்று நினைத்தனர். அதே சமயம் வெள்ளையர்களிடம் கொஞ்சம் ஈரம் இருதது. அவர்கள் இம்மக்களை மனித உயிர்களாக கண்டனர், அவர்களுக்காக வருந்தினர். அவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தனர். 

இன்று சென்னையில் பார்க்கும் பல பெரிய கட்டுமானங்கள் அனைத்தும் அப்பஞ்ச காலத்தில், அவ்வறிய மக்களின் உழைப்பை சொற்ப பணத்தில் சுரண்டி உண்டாக்கப்பட்டவை. இப்பஞ்சத்தால் பயனடைந்தவர்கள் பல ஆங்கிலேய பிரபுக்கள், அவர்கள் அதிகாரிகள், இந்திய வியாபாரிகள், முதலாளிகள்

அக்காலத்தில் நிலவிய ஜாதி வேறுபாடு, பிரிட்டிஷாரின் பார்வையில் ஜாதிகள், அவர்களின் சட்டம் மூலம் வலுவடைந்த ஜாதி, அக்காலத்தில் சக்தி வாய்ந்த ஜாதிகள்,ஜாதி பேதமில்லா கிறித்துவத்தின் ஜாதியுணர்ச்சி போன்ற காட்சிகளை சின்ன சின்ன சம்பவங்களில் காட்சிபடுத்தியுள்ளார். 

"சர், இங்கே எல்லாருமே யாருக்காவது உயர்சாதிதான். எல்லாருமே யாருக்காவது தீண்டப்படாத சாதியும் கூட

இந்திய அதிகாரம் இங்குள்ள உயர் ஜாதிகளாலானது. நமக்கு தோன்றும் இங்குள்ள ஒட்டு மொத்த அதிகாரத்தின் உச்சியில் பிராமணர்கள் இருக்கின்றார்கள் என்று. ஆள ஆரம்பிக்கும் போது தெரியும் அவர்கள் அங்கே அமர அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான அதிகாரம் எங்குமிருப்பது போல எவரிடம் வாளும், நிலமும், பணமுமமிருக்கின்றதோ அவர்களிடம்தான்"

காத்தவராயன் வார்த்தகைளில் வெள்ளையர்களில் மட்டுமே கொஞ்சம் நீதியை எதிர்நோக்க முடியும் என்ற கருத்து வெளிப்படுகின்றது. முழுவதும் ஏற்க முடியவில்லை. புத்த மதத்திற்கு மாறியதன் காரணமாக கூறுவதும் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கின்றது. ஆனால் அவர்களின் நிலையில் இருந்து பார்த்தால் அவர்களுக்கு கடவுள் என்பது இருந்திருக்க முடியாதுதான்.

"சர், கடவுள் இருக்கின்றார் என்றுதான் நானும் நினைக்கின்றேன். இல்லாவிட்டால் மாடுதின்பவர்கள் உங்களுக்கு எஜமானர்களாக வந்திருக்க மாட்டார்கள்.

ஆயுதங்கள் எங்களை அடித்து கிழித்திருந்தன. அதன் நடுவே அந்த பள்ளிகொண்ட முகம், அதிலிருந்த நாமம். எது உக்கிரமான பரவசத்துடன் சிதறி தெறிக்கும் எங்கள் ரத்தத்தை பார்த்து கொண்டிருந்தது. அதன் நாவில் எச்சில் ஊறிக்கொண்டிருந்தது"

மொத்தத்தில் இது ஒரு அருமையான நாவல், நாமறியாத பல தகவல்களை தரும் புத்தகம். அக்கால சென்னை நகர அமைப்பு, வெள்ளையர்களின் மனபோக்கு, வெள்ளையர்களிடம் வேலை செய்யும் இந்தியர்களின் மனநிலை என்று துல்லியமான விவரங்களை தருகின்றது. இங்கு வந்து ஆண்ட வெள்ளையர்களின் உண்மையான பின்புலம், அவர்களும் அங்கு சாதரண நிலையில் இருப்பவர்கள். கரித்தொழிலாளியின் பெண் இங்கு வந்ததும், அதிகாரம் கிடைத்ததும் அவள் துரைசாணியாகின்றாள்.

சரித்திர நாவல்களின் சரித்திரம் என்பது எவ்வளவு இருக்க வேண்டும்? பொ.செல்வனில் சரித்திரம் என்பது ஒரு பத்து சதம் மட்டுமே. சாண்டில்யனின் புத்தகங்களில் கண்டுபிடிப்பதே கடினம். உண்மையான் சரித்திர நிகழ்வுகளுக்கூடே தம் கதாபாத்திரஙக்ளை ஊடாட விடும் கதைகள் குறைவு. மானுடம் வெல்லும், ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், அவ்வரிசையில் இப்புத்தகம். இருந்தும் இப்புத்தகம் ஒரு பார்வையில் நமது முன்னோர்களை விட வெள்ளையர்களின் மனதில் கொஞ்சம் நீதியுணர்ச்சி உண்டு என்ற சித்திரத்தை தருவதை மறுக்க முடியாது. 

படித்து முடித்தவுடன் தோன்றியது ஒட்டு மொத்தமாக நமது நீதியுணர்ச்சி செத்துவிட்டாதா? அப்படியா இருந்தோம்? இருந்திருக்க நியாயமில்லை என்றுதான் தோன்றுகின்றது. இக்கதைக்கு தேவையில்லை என்று விட்டு விட்டாரோ? ஆங்கிலேயர்களில் எப்படி சில விதிவிலக்குகள் இருந்தார்களோ அதோ போல் நம்மிலும் சில விதிவிலக்குகள் இருந்திருக்க வேண்டும். கைவிட்டதாக கூறும் நமது நீதியுணர்ச்சியில் "நமது" என்பது இச்சமூகம். தலித்துகளை இச்சமூகம் ஒதுக்கிவைத்திருந்தால் சமூகத்தின் நீதியுணர்ச்சி போனது எனலாம், ஆனால் தலித்துகளை தவிர மற்றவர்களும் இறந்திருப்பார்களே? பஞ்சம் என்பது உண்மையான உணவு பஞ்சம் என்பதை விட பணப்பஞ்சமே அல்லவா? பணமில்லாதவர்கள் அனைவரும் பலியாயிருப்பர்களே? அவர்களை கைவிட்டது எது? 

இக்கதையில் ஏய்டனுக்கு பஞ்சகாலத்திலும் ஒரு நுங்கை தரும் கிழவி சொல்லும் வார்த்தை "இது எனது தர்மம்". இது நமது கலாச்சாரத்தின் வழி வந்ததல்லவா? மகாபாரதத்தில் கிடைத்த ஒரு பிடி மாவையும் அதிதிக்கு தரும் ஒரு குடும்பம். அக்குடும்பத்தை போல பலர் இருந்திருப்பார்கள்.  இது போன்ற விஷயங்களை ஏன் எழுதவில்லை என்று  கேட்க முடியாது, அது ஆசிரியரின் உரிமை. நாமே நம்மை கேட்டு கொண்டு தேட வேண்டியதுதான். அது போன்ற ஒருவரை பற்றிய கட்டுரை சொல்வனத்தில்.

இந்த நாவலின் பின்னால் இருக்கும் சில சரித்திர உண்மைகள் அடங்கிய கட்டுரைகள் தமிழ் ஹிந்துவில் கட்டுரை 1, கட்டுரை 2. இதைப் படித்த பின் நாவலை மீண்டும் படிக்கும் போது தோன்றியது, அப்படி ஒன்றும் முழுவதும் இந்தியர்களிடம் நீதியுணர்ச்சி செத்துவிடவில்லை என்று.

எழுத்து பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தரமான புத்தகம். புத்தகத்தின் பக்கங்களை பார்த்தவுடன் பெரிய புத்தகம் என்று நினைக்க தோன்றும். இல்லை. வெகு வேகமாக படிப்பவர்களால் இரண்டு, மூன்று மணி நேரத்தில் படித்து முடித்துவிட முடியும். நல்ல பெரிய எழுத்துக்களில், பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் கதை மாதிரி, பெரிய எழுத்து வெள்ளையானை. 

கிழக்கில்  வாங்கலாம். விலை 400.


3 கருத்துகள்:

  1. ஊடகங்களில் இந்நூலைப் பற்றி பேச்சு போய்க் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் ஹிந்து அரவிந்த் நீலகண்டன் பதிவு வெகு நீளமாக இருக்கிறது. பக்கம் என்பது ஒன்றுமில்லை, பெரிய எழுத்து என்பதெல்லாம் சரி, விலைதான் மிரட்டுகிறது! பார்ப்போம். படித்து விடுவேன் விரைவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலைக்கு காரணமே அந்தெ பெரிய எழுத்து. நார்மல் ஃபாண்டில் இருந்தால்,புத்தகம் இத்தனை பெரிதாக இருக்காது. இதில் பாதிதான் இருக்கும்.

      நீக்கு