சில பல வருடங்கள் முன்பு நான் விகடன் ஆன்லைன் வாசகன்.(இப்போது அந்த குப்பையை ஓசியில் படிப்பதுடன் சரி). அப்போது பிரபலமான ஒரு தொடர் வரலாற்று நாயகர்கள். அதில் அம்பேத்கரை பற்றி எழுதிவந்தார்கள். முதல் பத்தியிலேயே, ஆரியர் வருகை, ஆரியர்கள் வந்து இங்குள்ளவர்களை ஏமாற்றினார்கள் என்று அளந்து விடப்பட்டிருந்தது. பின்னூட்ட பெட்டியில், அந்த புளுகை எதிர்த்து எழுதியிருந்தேன்.
உடனே அடுத்தடுத்து பல வாசகர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். விவாதம் என்று முழுவதும் கூற முடியாது. அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அவ்வளவாக இல்லை. எனவே, இச்சண்டையை முழு நேர தொழிலாக கொண்டேன். அந்த சண்டைக்கு பாயிண்ட் தேடவே இதை வாங்கினேன். -இதிலிருந்து மகாபாரதம், இந்துமகா சமுத்திரம் என்று அவரது மற்ற புத்தகங்களும் அலமாரிக்கு வந்தன. எதற்கு சோ? என்றால், சண்டை போட வக்கீலின் துணை வேண்டுமல்லவா.
அனைவருக்கும் ஒரு முன் முடிவு இருந்தது. அதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அடுத்தவர் கூறுவதை கேட்பதை விட, அதில் குற்றம் காண்பது மட்டுமே வேலையாக இருந்தது. விளக்கம் சொன்ன கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது. ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது. இதனால் ஒரு பயனுமில்லை என்ற ஞானமும் வந்தது. இதற்கு பதில் நாய் வாலை நிமிர்த்தலாம் என்ற உண்மையும் தெரிந்தது.
உண்மையான பயன் எனக்குதான். இதன் மூலம் நான் என் மதத்தை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு போன்றவர்கள் எழுத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கம் வந்தது.
டாம்டாம் ஓவர். இனி புத்தகம்.

நான் ஒரு சோ விசிறி.சிறுவயது முதல் துக்ளக் எனக்கு அறிமுகம். சிறுவர் மலருடன் துக்ளக்கும் சேர்த்து படித்து வளர்ந்தவன். (அப்போது புரிந்தது கார்டூன்கள் மட்டும்தான்.).
சோவின் அரசியல் முகத்தை தாண்டிய ஒரு முகம் அவரது இந்து மத அறிவு. காலட்சேப பாணியில் இல்லாது எளிமையாக அனைவருக்கு புரியும் வகையில் பல தத்துவங்களை விளக்குவதின் மூலம் அவர் செய்யும் பணி அற்புதமானது.
இது இலக்கிய புத்தகமல்ல. இது பக்தி புத்தகமும் அல்ல. சரியாக சொன்னால் ஒரு வகையான பிரச்சாரம் அல்லது விவாதம். வழக்கமான சோவின நக்கல், நையாண்டி எல்லாம் சற்று ஓரத்தில் வைக்கப்பட்டு, வக்கீல் சோ அதிகம் தென்படும் புத்தகம்.
யார் பிராமணன். அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. யுதிர்ஷ்டருக்கே இக்கேள்வி வரும் போது, சாதரண மனிதர்கள் நமக்கு வராதா. தாசில்தார் கையில் பிராமணன் என்று தீட்சை பெற்றவன் எல்லாம் பிராமணன். இவன் கலிகால பிராமணன்.
உண்மையான பிராமணன் யார் என்னும் கேள்விக்கு பதிலை தேடுகின்றார் இதில். பதில் யாருமில்லை.

இக்கதையில் கிடைத்த இடத்தில் எல்லாம் விளக்கங்களை தந்துள்ளார். இந்து மதத்தின் பெயர், பூணூல் அணிவிப்பதன் நோக்கம், அதன் மந்திரங்களின் பொருள், திருமண மந்திரங்களின் அர்த்தம், இன்னும் பல.
பல பெரியவர்களை பற்றிய குறிப்புகள், பல தத்துவங்களின் அறிமுகம், பாரதம், ராமயணம் பற்றிய குறிப்புகள். அனைத்தும் ஒரு அறிமுகம்தான்.
அங்கங்கு நமது சமூகத்தை பற்றி சோவின் விமர்சனங்கள், நக்கல்கள். பல இடங்களில் அது துருத்திக் கொண்டுள்ளது.
முடிவான அவர் கருத்து, உண்மையான பிராமணன் என்பவன் யாரும் இங்கு கிடையாது.
என்னைக் கேட்டால் அவர் கூறும் பிராமணனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் பாதி இருந்தாலே அவன் பைத்தியகார ஆஸ்பத்திரியில் தான் இருக்கவேண்டும்
முன்முடிவுகளுடன் இருப்பவர்கள் குறிப்பாக பகுத்தறிவுவாதிகள், தோழர்கள் இதைப் படிக்காமலிருப்பதே நல்லது. அவர்களுக்கு கடவுளே நேரில் வந்து சொன்னால் கூட போதாது. அவர்களின் தலைவர்கள் சொன்னதே உண்மை. அவர்கள் வந்து சொன்னால்தான் நம்புவார்கள்.
தலைப்பில் பிராமணன் இருப்பதால், அரசாங்க பிராமண ஞானஸ்தானம் கிடைக்காதவர்கள் படிக்காமல் விட தேவையில்லை.இது அந்த பிராமணர்களை பற்றி கூட இல்லை. இல்லாத ஒரு வஸ்துவை பற்றியது.
இப்புத்தகம் மூலம் நமது முன்னோர்களை பற்றியும், அவர்களின் அறிவை பற்றி அறிந்து கொள்ளவும், பழமை என்றால் முட்டாள்த்தனம் என்று நம்மை நம்பவைத்துக் கொண்டிருக்கும் பல மாயைகளை கொஞ்சம் அகற்றவும் பயன்படும்.
மற்ற மதத்தவர் யாரும் தமது மத நம்பிக்கையை வெளியே காட்டிக்கொள்வதில் அவமானப்படுவதில்லை. ஆனால் பல இந்துக்களுக்கு அது உண்டு. எனக்கு தெரிந்த பலர், அலுவலகம் போகும் முன் நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டு பூஜை செய்யும் பலர், வீட்டைதாண்டும் முன் அதை அழித்துவிட்டு போவதுண்டு. ஒரு வேளை விபூதி, பூஜை வேளைக்கு மட்டும் போதுமோ என்னவோ.
இது தமிழ்நாட்டில்தான் அதிகம். காரணம் எல்லாருக்கும் தெரியும். ஒரு தாழ்வு மனப்பான்மையை திட்டமிட்டு வளர்த்துவிட்டுள்ளனர்.
அந்த பித்தம் தெளிய இது ஒரு சிறிய மருந்து. இதைச் சாப்பிட்டால் அப்பித்தம் முழுதும் தெளிய என்ன மருந்து தேவை நாமே கண்டு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக