27 மார்ச் 2014

கணேஷ் - வசந்த் கதைகள் - 1

என்னடா மறுபடியும் சுஜாதாவா என்பவர்களுக்கு, சாரி, என்ன செய்வது மனநிலையை பொறுத்துதான் படிக்கும் புத்தகமும் இருக்கும். ஜாலியான, கலகலப்பான புத்தகங்களை படிக்கலாம் என்பதால் சுஜாதா மட்டுமே மேஜையில்.

சுஜாதாவின் பிரபல நாயகர்கள் கணேஷ் - வசந்த். சீரியசான ஒரு சீனியர், அவனுக்கு ஜாலியான ஒரு ஜூனியர். ஏதோ ஆங்கில நாவலாசிரியரின் கதபாத்திரங்களின் இன்ஸ்ப்ரேஷன் என்று ஒரு வதந்தி கூட உண்டு. அவர்கள் தோன்றும் அனைத்து கதைகளும் சிறப்பானவை என்று கூற முடியாது. பெரும்பாலான கதைகள் பல பத்திரிக்கைகளுக்கு தொடர்கதைகளாக எழுதப்பட்டவை. பத்திரிக்கைகளின் தரத்தை பொறுத்தும் கதையின் தரம் வேறுபடும்.

உயிர்மை அவரின் பெரும்பாலான எழுத்துக்களை தொகுத்துள்ளது. அதில் குறுநாவல் வரிசையில் இது மூன்றாவது தொகுதி, கணேஷ் - வசந்த் கதைகளில் முதல் பகுதி. அதில் உள்ள கதைகள் பற்றி இனி


பாதி ராஜ்ஜியம்

கணேஷ் தோன்றும் முதல் நாவல் என்பது போல இருக்கின்றது. கணேஷ் மட்டும். கணேஷின் அறிமுகம் இதுவா நைலான் கயிறா என்று தெரியவில்லை. மனிதரிடம் உள்ள உணர்ச்சிகளில் மோசமான ஒன்று பயம். அந்த பயத்தை வைத்து ஒரு பெரிய மனிதரிடம் பணம் கறக்க நினைக்கின்றான் ஒருவன். அழகான நீரஜாவின் அப்பா சந்திரசேகர். அவர் ஒரு கொலை செய்துவிட்டு, கொலையின் சாட்சியால் மிரட்டப்பட்டு பயத்தில் இருக்கின்றார். உதவிக்கு கணேஷை நாட, சுபம்.

கணேஷுக்கு ஜோடி சேர்க்க நினைத்திருப்பார் போல, இல்லை இந்த கதையுடன் கணேஷை கழட்டிவிட நினைத்தாரோ என்னவோ. வசந்த் இல்லை, வசந்தின் வசனங்கள் எல்லாம் கணேஷே பேசுகின்றான்.

ஒரு விபத்தின் அனாடமி

முந்தைய கதைக்கு அடுத்ததாக உடனே எழுதப்பட்ட கதை போல. அதே நீரஜா இங்கும். நடு இரவில் ஒரு விபத்து. ஒரு பெண்ணை அடித்து போட்டுவிட்டு ஓடியவனை கண்டு பிடிக்க வரும் கணேஷ். வழக்கம் போல கண்டு பிடித்துவிடுவான் என்றாலும் எப்படி என்பதுதான் கதை. சுவாரஸ்யம். சுஜாதா கதையில் ஒரு நீதி உண்டு. கணேஷ் வக்கீல் என்பதால் சட்டத்தை தாண்டி தண்டனை இல்லை. சட்டத்தால் தண்டிக்கப்படாதவர்கள் தப்பிக்கவும் முடியும் என்பது யதார்த்தம். கிடைக்கும் தண்டனை, யதார்த்தத்தில் சாத்தியமான முடிவாகவே இருக்கும், இதிலும்.

மாயா

கிருஷ்ணா மிஷன். ஒரு பெரிய கிருஷ்ண பக்தி இயக்கம். பன்னாட்டு நிறுவனம். பணம் கொட்டும் இடம் (வேறு ஏதாவது நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல, சுஜாதாவே பொறுப்பு) அதன் தலைவர் மீது பாலியல் புகார் (மோசமான வார்த்தை பிரயோகம், அடிக்கடி செய்தித்தாள் தலைப்புகளில் படிப்பதால் தானே வந்துவிட்டது) அளிக்கும் மாயா. இதில் கூறப்படும் பூஜை எல்லாம் கைச்சரக்கா, இல்லை உண்மையா? யாருக்கும் தெரியும். கிளுகிளுப்பான பூஜை. வசந்தும் உண்டு. வழக்கம் போல லைப்ரேரி குறிப்பு எடுப்பது, ஜோக் சொல்வது என்று கொடுத்த பணியை செவ்வனே செய்கின்றான். அந்தளவிற்கு விறு விறுப்பு எல்லாம் இல்லை. சுமாரான கதை. முடிவு திருப்பம் தரவேண்டும் என்பதற்காகவே திணிகப்பட்டது. ஒட்டாத முடிவு.

காயத்ரி

சினிமாவாக வந்தபடம். வெற்றியா தோல்வியா என்று தெரியாது. வில்லன் ரஜினி. கணேஷாக ஜெய்சங்கர், வசந்தாக வெண்ணிறாடை மூர்த்தி (கொடுமைதான் என்ன செய்வது, சகித்து கொள்ள வேண்டியதுதான்). காயத்ரியாக ஶ்ரீதேவி. 

கணேஷ் - வசந்த் கதைகளில் அடிக்கடி சுஜாதாவும் உள்ளே வருவார். வழக்கமாக அவர்களில் யாரவது ஒருவர் அவரை திட்டுவார்கள். இதில் முழுதாக வருகின்றார். பழைய புத்தகக்கடையில் கிடைக்கும் ஒரு நோட்டில், காயத்ரியின் கதை. அவள் ஏதோ சிக்கலில் மாட்டிக் கொண்டதை அறிந்து கொண்டு, கணேஷ் வசந்த் உதவியுடன் காப்பாற்றுகின்றார். முடிவை கதையில் மாற்றிவிட்டனர், பாவம். சினிமா விதி, தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றுவதில் சினிமாக்காரர்கள் தான் முதலில். அவ்விதிப்படி காயத்ரி கொலையாகின்றாள். அசோகன், ராஜ சுலோச்சானா எக்ஸ்ட்ரா வில்லன் வில்லிகள். கொஞ்சம் ஏடாகூடமான வரிகள், ஆர்வி கூறுவதை பார்த்தால் படங்களுடன் படிக்க குஷியாக இருக்கும் போல. மறைத்து வைத்து படிப்பது ஒரு த்ரில்தான். திணமணிக்கதிராம். ஜெயகாந்தனின் ரிஷிமூலம் கதையை வெளியிட்டு மன்னிப்பு கேட்டதாம். இதை வெளியிட்டு ஒன்றும் ஆகவில்லையோ?

விதி

விதி. எளிதாக பழி போட பழிபோட, பயப்பட உதவும் ஒரு விஷயம். இரவு பத்து மணிக்கு, சாப்பிட்டு விட்டு ஜாலியாக குச்சிப்பிடி பார்த்து கொண்டிருப்பவனுக்கு போன் அழைப்பு. உடனே வருவதாக போனவன், பெங்களூரு பஸ்ஸில் விபத்துள்ளாகி இறக்கின்றான். அவனையழைத்த விதியை தேடி அவன் தங்கை வருகின்றாள். படிப்பவர்கள் எளிதில் யூகிக்க கூடிய முடிவு. சுமாரான கதை.

மேற்கே ஒரு குற்றம்

சுஜாதா ஜெர்மனி போய்விட்டு வந்தவுடன் எழுதியதோ என்னவோ. ஏதாவது வெளிநாடு போனால் அதை வைத்து ஒரு கதை எழுதுவது அவர் வழக்கம் போல. 

துப்பறியும் கதைகளின் விதிப்படி, சும்மா சாரியாருடன் கோர்ட்டில் பொய்களுக்கு பதில் பொய்களை தேடிக்கொண்டிருப்பவர்களை காண வரும் பெண் இறந்து போகின்றாள். சரி போனால் போகின்றது என்று விட்டு விட்டால் என்ன,  அவள் ஏன் இறந்து போனாள் என்று ஆராய புறப்படுகின்றார்கள். இங்கு ஆராயந்தது போதாமல் ஜெர்மனி வரை போய், அடி வாங்கி, கடைசியில் ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் உதவியால் கண்டு பிடித்து வீடு வந்து சேர்கின்றார்கள். இது துப்பறியும் கதையில்லை. ஒரு வகையான் ஆக்‌ஷன் கதை. நன்றாகத்தான் இருக்கின்றது.

இன்னும் சில கதைகள் இருக்கின்றன அடுத்தடுத்து வரும். 

5 கருத்துகள்:

  1. சுஜாதா கதைகளை விட்டு வெளில வாங்க பாஸ்! :))) என் கிட்ட அவரோட எல்லா கதையும் இருக்கு. :)))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா அவ்வளவு சீக்கிரம் வெளியே விட மாட்டேன் என்கின்றார். கணேஷ் சீரிஸிற்கு பின் சுஜாதா கிடையாது. புதிதாக வாங்கினால்தான் உண்டு.

      நீக்கு
  2. சினிமா நன்றாகத் தான் ஓடியது... ஏனென்றால் அன்று தமிழக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் ஆச்சே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் ஜேம்ஸ்பாண்ட். ரஜினியின் ஸ்கிரீன் ப்ரெஸென்ஸ் பிரமாதம். படத்தின் ரியல் ஹீரோ ரஜினிதான்.

      நீக்கு
  3. சுஜாதா கணேஷ் கேரக்டரை வடிவநைத்த முதல் மூன்று கதைகளில் அறிவாளியாகவும் குறும்பு கொப்பளிக்கும் இளைஞனாகவும் தான் உருவாக்கியிருந்தார். பின்னர் ப்ரியா நாவலில் இருந்துதான் கணேஷ் அறிவாளி என்றும் வசந்த் குறும்பாளி என்றும் தனிப்படுத்தினார். அதன்பின் வந்த ‘உன்னைக் கண்ட நேரமெல்லாம்’ நாவலில் வசந்த் ஃபுல் ஃபார்ம்க்கு வந்து கலக்க ஆரம்பித்தார். சினிமாவைப் பொறுத்தவரை... காயத்ரி என்ன... அவரின் எந்த நாவலுமே சிதைக்கப்படாமல் படமாகவில்லை என்பதுதான் வருத்தம்.

    பதிலளிநீக்கு