20 ஆகஸ்ட் 2013

மோகமுள் - தி.ஜானகிராமன்

சிறுவயது முதல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தாலும், அது தீவிரமானது வேலை கிடைத்த பின்னர்தான். (புத்தகங்களை காசு குடுத்தும் வாங்கி படிக்கு வழி ஒன்று இருக்கின்றதல்லவா?) முதலில் ஆரம்பம் சுஜாதா. அதற்கு பின்னர் தி. ஜானகிராமன். தி. ஜானகிராமனின் முள்முடி சிறுகதை பள்ளியில் ஒரு துணைப்பாடம். அதைத் தவிர அவரைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் மோகமுள்ளின் ஆசிரியர். 

மோகமுள் திரைப்படம் ஏற்கனவே பார்த்திருந்தேன். அது பிடித்தும் இருந்தது. மோகமுள்ளை படித்ததும், படம் நாவலின் அருகில் கூட வர முடியாது என்பது மிகத்தெளிவானது. வாங்கிய பின் அதை பல முறை படித்திருப்பேன். இன்றும் 
என்னால் அதை புதிது போல் ரசித்து படிக்க வைக்கின்றது. 

கதை, தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணின் மீது கொண்ட காதல். அந்த மோகம் முப்பது நாளில் போகாமல் முள்ளாக இருக்கின்றது. பாபுவை விட பத்து வயதில் பெரியவள் யமுனாவின் உடல் வனப்பும், அவளின் குணமும் பாபுவிடம் இரண்டு வித தோற்றம் கொண்டு நிற்கின்றது. அவளை தெய்வம் போல தொழும் பாபுவிற்கு அவள் அழகு அவனின் மோகத்தையும் தூண்டுகின்றது. மோகம், அனைவரையும் அர்ச்சகராக்காத வருத்தம் போல பாபுவின் நெஞ்சில் தைக்கின்றது.


பாபு யமுனா மீது கொண்டது காதலா இல்லை அவள் அழகின் மீது கொண்ட மோகமா என்பதை வாசகனின் முடிவிற்கே விட்டிருக்கின்றார். பாபு கொண்டது மோகம், மோகத்தால் விளைந்த காதல். அம்மோகத்தை அவன் கண்டு கொள்வது பக்கத்து வீட்டு தங்கம்மாளின் உடலில். இறுதியில் அவனின் தேடல் நிறைந்ததும் யமுனா கேட்கும் கேள்வி, இதற்குதானே? இதற்குதான் என்று பதிலும் கூறிவிடுகின்றாள்.

ஒரு பெண்ணை பார்க்கும் போது ஒரு மரியாதை, தெய்வீக உணர்ச்சி ஏற்படும். அந்த பெண்ணின் கணவனுக்கும் அப்படியே தோன்றலாம், அதே பெண் அவள் கணவனுக்கு வேறு சமயங்களில் வேறு விதமாகவும் தோன்றுவாள். சில சமயம் காமத்துடன் அணுகக்கூட பயமாக இருக்கலாம், குற்ற உணர்ச்சி தோன்றலாம். அதை எல்லாம் உள்ளே சென்று அலசிப் பார்க்கின்றார்.

இதுதான் கதை என்றால் இதில் இசை என்னும் மற்றொரு இழை ஊடே ஓடுகின்றது. சொல்லப்போனால் இசைதான் கதையை உச்சத்திற்கு நகர்த்தி செல்கின்றது. பாபுவின் மற்றுமொரு பக்கம் இசை. ரங்கண்ணா என்னும் இசை மேதையிடம் கற்று தேறும் பாபு, அந்த இசையை மேலும் அறிந்துகொள்ள போவதில் கதை முடிகின்றது.

தி. ஜாவின் இசை ஞானம் தெரிந்ததுதான். அது இந்நாவல் முழுவதும் விரவி கிடக்கின்றது. ரங்கண்ணா. ரங்கண்ணாவின் மூலம் பல விஷ்யங்களை தி. ஜா பேசுகின்றார். அந்த வடநாட்டு பாடகர்களை பற்றி படிக்கும் போது எனக்கு என் அருகில் ஒரு கம்பீரமான குரல் பாடுவது போன்றே தோன்றியது.  கிளம்பினா சிம்மம் மாதிரி கிளம்பனும், அதுவரைக்கும் ஆடு மாதிரி இருக்கனும். இது ரங்கண்ணா பாபுவிற்கு கூறுவது. பாபு சிம்மமாக மாற முயற்சி செய்வதில் கதை முடிகின்றது.

கதையை படிக்கும் போது ஒரு மெதுவான நதியின் முன் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்ச்சி. ஒரு அழகான இசையின் அனுபவம். இது எப்படி என்பது தெரியவில்லை. கதையில் இசை ஒரு அங்கமாக இருப்பதாலா என்று தெரியவில்லை. எதோ ஒரு இனிமையான இசையை கேட்பதை போன்ற இன்பம். இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை நம்முள் அழகாக கடத்துகின்றார். வளவள சித்தரிப்புகள் இல்லாமல் பெரும்பாலும் உரையாடல்கள் மூலமே பாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கின்றார். அங்கங்கு வந்து போகும் சிறுசிறு கதாபாத்திரங்களுக்கு ஒரு முழுமையை அளித்திருக்கின்றார். பாபுவை உசுப்பிவிடும் சாஸ்திரகள், சங்கு, வீட்டுக்காரர், ராமு, சாம்பன்.....

மதுரை தேனி பக்கத்துக்காரனுக்கு தஞ்சாவூர் தமிழை பற்றி என்ன தெரியும்? தி.ஜாவின் சிறுகதைகள், நாவல்களை படித்த பின் அத்தமிழும் நெருக்கமாகிவிட்டது. 

அவர் கண்ட கேட்ட மனிதர்கள் இதில் கலந்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். பலரை பல சிறுகதைகளில் பார்த்த நினைவு. அன்னதாதா துரையப்பா, ராஜூ.

இது போல நடக்குமா, நடைமுறைக்கு ஒத்துவருமா என்று அக்காலத்தில் கேட்டிருக்கலாம், இன்று அது பெரிதில்லை என்றாலும், அது முழுக்க நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றுதான். ஆனால் நாவலின் வெற்றி அதன் அமைப்பும், தரமும்தான். அதில் நடப்பவையை நிகழ்காலத்துடன் குழப்பிக் கொண்டால் கஷ்டம்தான்.

மோகமுள் படித்தவர்கள் மனதிலும் தைத்துவிடும், என்றும் மறையாமல் நினைவில் நிற்கும்.4 கருத்துகள்:

 1. இக்கதை சுருக்கம் எனக்கு 6 இல் இருந்து 60 வரை திரைப்படமும் சிவப்பு ரோஜா திரைப்படமும் நினைவில் கொண்டுவருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது வரை நான் இப்புத்தகத்தை பல முறை படித்திருக்கின்றேன் இது புதிய கோணமாக இருக்கின்றதே. அதை கொஞ்சம் விளக்கினால் மற்றவர்களுக்கும் பயனளிக்கும். எனக்கும் சேர்த்துதான்.

   நீக்கு
 2. இக்கதை சுருக்கம் எனக்கு 6 இல் இருந்து 60 வரை திரைப்படமும் சிவப்பு ரோஜா திரைப்படமும் நினைவில் கொண்டுவருகிறது

  பதிலளிநீக்கு
 3. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து நூலகத்தில் புத்தகம் எடுத்து படித்து வருகிறேன்,ஒரு கட்டத்தில் நான் படிக்காத புத்தகம் எதுவும் வல்லம் நூலகத்தில் இல்லை என்ற நிலை கூட வரும் அளவிற்கு வெறிகொண்டவனாய் படித்த காலமும் உண்டு....இன்றைக்கும் எனது தூக்கத்தை பெருமளவு தின் கிற விசயமாய் புத்தகங்கள் தான் இருக்கிறது...பத்து மணிக்கு முகநூலில் இரவு வணக்கம் சொன்னாலும், எனது இரவு நள்ளிரவு ஒரு மணிக்கு தான் ஆரம்பமாகிறது...காரணம் புத்தகங்கள் தான்...இவ்வளவு பெரிய சுயபுராணம் கூட இதுதான் முதல்முறை....காரணம்...

  தம்பி மணி அனுப்பிய குரூஸின் `கொற்கை` யை கொஞ்சம் ஒத்திவைத்து தற்செயலாக தி.ஜானகிராமனின் மோகமுள்ளை கையில் எடுத்தது தான்...

  திஜாவின் எழுத்து நான்பலமுறை சொன்னது போல கல்கண்டு சாதம் தான் ...திகட்ட திகட்ட தித்திக்கிறது....எப்படி தவற விட்டேன் இதை என மனசு திடுக்கிடுகிறது...

  இத்தனைக்கும் திஜாவின் மோகமுள்,பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள், தினமணிக்கதிரில் 1994 ல் வெளிவந்து அந்த மாதத்தின் தமிழ் இதழ்களில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையாக தேர்வு செய்யப்பட்ட என்னுடைய`முக்கோணத்தில் மூன்றும் நேர்க்கோடுகளே` மூன்றும் ஒரே கதையின் மூன்று பரிமாணங்கள் தான் என பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள், (நான் சத்தியமாக அந்த சிறுகதையை எழுதும் போது மற்ற இருவரது கதைகளையும் வாசித்ததில்லை)

  ஆனால் திஜாவின் மோகமுள்ளிற்கு முன் நானெல்லாம் வெறும் தூசு...

  நடையா அது..அடேயப்பா ...ஓயாத வேலைப்பளுவிலும் நள்ளிரவு தாண்டியும் இப்போதெல்லாம் தொலைந்து போகிறது என் தூக்கம்....சொன்னால் நம்ப மாட்டீர்கள் ..அந்த காவிரிக்கரை தந்த சிலிர்ப்பை அனுபவிக்க ஒருநாள் விடிகாலை பைத்தியம்போல் வல்லத்திலிருந்து கிளம்பி திருவையாறு சென்று காவிரியின் அகலநீர்ப்பரப்பை பார்த்து கண்ணில் நீர் வடிய கால் நனைத்து குளிர்ந்தேன்...

  முடிந்தால் ஒருமுறை எனக்காக மறு வாசிப்பாகவாவது மோகமுள் படியுங்கள்...(ஒருநாளைக்கு பத்து பக்கம் படித்து அதனுள் திளைய திளைய மணிக்கணக்காய் அந்த ஆனந்தத்தில் போதையேறி கிடப்பதால் இன்னும் முடிக்க வில்லை அந்த மதுக்குடத்தை...)

  ஜானகிராமனில்லை அவர் சரியான சாராய வியாபாரி..அப்பாடா ..தாங்க முடியலை சாமி ...!!!

  பதிலளிநீக்கு