26 அக்டோபர் 2014

வாஸவேச்வரம் - கிருத்திக்கா

கிருத்திகாவை அறிமுகம் செய்தது ஆர்வியின் தளம். ஜெயமோகனின் தளத்திலும் அந்த பெயர் பரிச்சியம். இந்த நாவலை பற்றி சிலாகித்து பேசியிருப்பதை கண்டே வாங்கினேன். முன்னுரையை முதலில் படித்து தொலைத்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது, இருந்தும் தொடர்ந்து படித்த பின்னரே தெரிந்தது இது ஒரு முக்கிய நாவல் என்று.

வாஸவேச்வரம், ஒரு மலையோர கிராமம். செழிப்பான பூமி. சுகவாசிகள். உற்சவம், உற்சாகம் என்று வாழ்பவர்கள். அவர்களை பற்றிய ஒரு சிறிய பார்வை. பிராமணர்கள் மட்டுமே பாத்திரங்கள். வாஸ்வேச்வரம், கிருத்திகா கண்ட பல கிராமங்களின் கலவை என்று கூறுகின்றார். ஒரு கற்பனை கிராமம். எந்த இடம் என்று கூட கூறவில்லை, தஞ்சாவூர் பக்கம் இருப்பதாக நினைத்து கொள்ளலாம். முன்னுரையில் 1930 கதை நடக்கும் காலம் என்கின்றார். அது எல்லாம் செல்லாது, கதையின் படி கிராமத்தில் வீட்டிற்கு வீடு குழாயில் தண்ணீர் வருகின்றது. அக்காலத்தில் எத்தனை கிராமங்களுக்கு அந்த வசதி கிடைத்திருந்தது. சிப்பாய், கச்சேரி, கம்யூனிசம் என்று பேசுவதை கண்டால் சுதந்திரமடைந்து பத்திருபது வருடங்களை சேர்த்து கொள்ளலாம்.

கதையை ஒரே அடியாக காமம் சார்ந்த கதையாக பார்ப்பதில் உடன்பாடில்லை. அதுவும் ஒரு பகுதியாகத்தான் வருகின்றது. அதோடு முக்கிய உணர்வு, அங்கீகாரம், மதிப்பு

அனைத்து இடங்களிலும் நாம் தேடுவது ஒரு அங்கீகாரம். பள்ளி, குடும்பம், அலுவலகம், நிகழ்ச்சி எங்கு சென்றாலும் நாம் தேடுவது ஒரு அங்கீகாரத்தை. நமக்கென ஒரு மதிப்பு, நமது தனித்தன்மையை மதிப்பது. நான் என்ற ஆளுமையை ஏற்றுகொள்வது. இதை பெறுவதற்குதான் பல முயற்சிகள். நமக்கு கிடைக்கும் மதிப்பே நமக்கு வெற்றி. இது கிடைக்காவிடில், ஏமாற்றம். சிலரால் அதை ஏற்று கொண்டு வாழ முடியும். சிலருக்கு அது வெறியை உண்டாக்கும், வேறு விளைவுகளை தரும். அங்கீகாரம் கிடைக்கும் இடத்தை நோக்கி நகர்த்து, அது நமக்கு தகாது எனினும் அதை விரும்பச்செய்யும்.

சமூக அங்கீகாரம் என்பது பணம், படிப்பு, பதவியில் வருவது. சமூக அங்கீகாரம் இல்லாத ஒருவனுக்கு வீட்டில் கண்டிப்பாக எவ்வித மதிப்பும் இருக்காது. கிட்டத்திட்ட அவன் முழுக்க முழுக்க தோல்வி அடைந்தவன். சமூகத்தில் பெரிய மதிப்பிலிருந்தாலும் சிலருக்கு வீட்டில் செருப்படியே கிடைக்கும். அவனுக்கு சமூக அங்கிகாரம் மூச்சுவிட ஒரு வாய்ப்பு. பெண்களுக்கு? இரண்டு இடத்திலும் மதிப்பு இருக்க வேண்டும். ஓரிடத்தில் பெயர் கெட்டாலும் போதும், மறுஇடத்தில் தானாக கெடும்.

வீட்டில் கணவனும், மனைவியும் அடுத்தவரின் இருப்பை மதிக்க வேண்டும், அவர்களிடமும் ஏதோ இருக்கின்றது என்பதை நம்பவேண்டும், உதாசீனப்படுத்தினால், விளைவு குடும்ப கலகம். இக்கதை அப்படிபட்ட கலகத்தை பேசுகின்றது.

கதை ஒரு கதாகாலட்சேபத்தில் ஆரம்பிக்கின்றது. கதையின் விஷேஷம் சுற்றி சுற்றி எல்லாரும் ஒரே இடத்தில்தான் சேர்கின்றனர். காலட்சேபம் செய்யும் சாஸ்திரி, முடிந்தவுடன் சுண்டலை எடுத்து கொண்டு குறுக்கு சந்தில் ஓடி மறைகின்றார். உற்சாக வர்ணனை கேட்ட அனைவரும் அவரவர் மனைவியிடம் பாய்கின்றனர். முடிவும் அதே போல் ஒரு காலட்சேபத்தில்.

கிராமத்து ஆண் பெண்களுக்கிடையிலான உறவுகளை பிரதானமாக தோன்றினாலும், உதாசீனப்படுத்தப்படும் இருவரின் கதைதான் இது. சுப்பையா, நிலம், வருமானம் இருந்தும் மனைவியால் எப்போதும் உதாசீனப்படுத்தப்படும் ஒருவர். அவரின் தாயாதி சந்திரசேகரனை போல் இல்லை என்பது சுப்பையாவின் மனைவி விச்சுவின் ஆதங்கம். அதை சொல்லிக்காட்டியே அவனை சாய்க்கின்றாள். சந்திரசேகரய்யருக்கு அழகான மனைவி ரோகிணி, இருந்து அந்த அழகை ஆராதிப்பதென்பது அவளின் கட்டுப்பாட்டில் தன்னை தள்ளி விடும் என்று அவளை  உதாசீனம் செய்கின்றார். ரோகினியின் மனது அவளை மதித்து, அவளை அழகை ஆராதிக்கும் பிச்சாண்டியிடம் பரிவு கொள்கின்றது.

இந்த உதாசீனம், ஒரு கொலையில் முடிவடைகின்றது. கொலைக்கு பின்னால் கதை கொஞ்சம் வளவள, சவசவ, சினிமாத்தனம். பிரமாதமாக போகும் நாவல் கடைசி கட்டத்தில் கொஞ்சம் சறுக்கி விட்டது.

பேச்சு வழக்கை கையாண்ட முறை. வேறு எதிலும் இந்த அளவிற்கு நுட்பமாக பிராமண பேச்சு வழக்கை கையாண்டதில்லை. கல்கி, தேவன், சுஜாதா,தி.ஜா என்று பிராமண வழக்கை எழுதியிருந்தாலும், இது முழுக்க முழுக்க வித்தியாசமாக, பேசுவதை அப்படியே கொண்டுவந்திருக்கின்றார். "ஆமாம் இன்கின்றேன்", "பொகு பிரமாதமாயிருக்கு", "விட்டூட்டூ வந்துடறேன்". கிட்டத்திட்ட புது மாதிரியான வழக்காகவே தோன்றுகின்றது

மற்றுமொரு முக்கிய அம்சம், எதையும் முழுக்க விளக்கி கூறாமல் வாசகனின் யூகத்திற்கு விட்டு விட்டு செல்கின்றார். பல விஷயங்களை வாசகனாக யூகித்து கொள்ள வேண்டியது. குதித்து வரிகளை விட்டு படித்தால் கதையும் குதித்து கொண்டு போய் விடும்.

பெண்கள் எழுதிய நாவல் என்றாலே அது பெண்ணிய நாவல் என்று இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அது அதுவாகவே பெண்ணிய நாவல் என்று மாற்றப்பட்டு விடும். அதற்காகத்தானே விமர்சகர்கள், பெண்ணியவாதிகள் அவதரித்துள்ளன்ர். அவர்களின் அவதார நோக்கம் நிறைவேற அவர்களுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு நாவல் வாஸ்வேச்வரம். கஷ்டப்பட்டு இதையும் பெண்ணிய நாவல் வரிசையில் நிறுவியுள்ளார் முன்னுரையில் ஒரு பெண்மணி. கவிஞர் போல,கற்பனை கரைபுரண்டு ஓடியுள்ளது.


இப்புத்தகத்தை படித்த பின் தெரிந்து கொண்ட முக்கிய விஷயம், புத்தகத்தின் முன்னுரை என்பது புத்தகத்தை பற்றி விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை. அவரவர்க்கு தோன்றியதை எழுதலாம். முன்னுரைப்படி இந்த நாவல் ஒரு பெண்ணிய நாவல், பால் விழைவை பற்றி பேசுவது. (இது என்ன பால்விழைவு, மோர் விளைவு) ஒரு நாவலை எதற்கக இப்படி பெண்ணீயம், ஆணீயம் என்று பிரித்து பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. இம்முன்னுரைப் படி ஆராய்ந்தால், பொன்னியின் செல்வனை கூட ஒரு பெண்ணிய நாவலாக்கிவிடலாம்.

முன்னுரைப்படி பெரிய புரட்சிக்காரனாக தோன்றும் பிச்சாண்டி, என் பார்வையில் ஒரு பொறுக்கியாகத்தான் தெரிகின்றான். என்ன செய்ய? 

புத்தகத்தில் வெளியாகியுள்ள முன்னுரை என்ற வஸ்துவை விட்டுவிட்டு நாவலை படிக்கும் படி வேண்டி விரும்பி கேட்டு கொள்கின்றேன்

ஓவியங்கள் எல்லாம் விகடன் பாணி கோபுலு அல்லது வாணியாக இருக்க வேண்டும். பெயர் என் கண்ணில் படவில்லை. 

எல்லா "ணிய" பார்வைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் ஒரு நல்ல நாவல்.

காலச்சுவடு வெளியீடு - 140/- கிழக்கில்

2 கருத்துகள்:

  1. //"ஆமாம் இன்கின்றேன்", "பொகு பிரமாதமாயிருக்கு", "விட்டூட்டூ வந்துடறேன்". கிட்டத்திட்ட புது மாதிரியான வழக்காகவே தோன்றுகின்றது.//

    கொஞ்சம் நாகர்கோயில், கொஞ்சம் திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்கள் வரும். அதிகம் நாகர்கோயில், கன்யாகுமரி ஜில்லா ஆக்கிரமிப்பு இருக்கும். முதல்முறை வாசகர் வட்டம் வெளியீடாக வந்தப்போ அதிகம் விபரம் தெரியாத வயசிலே படிச்சது. உங்கள் விமரிசனம் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. ரெங்கா, என் கண்ணில் கிருத்திகாவை எழுத்தாளர் என்று சொன்னால் போதும்; 'பெண்' எழுத்தாளர் என்று எந்த அடைமொழியும் தேவையில்லை...

    பதிலளிநீக்கு