01 நவம்பர் 2014

காவல் கோட்டம் - வெங்கடேசன்

மதுரை நகரை பற்றி எப்போதும் ஒரு ஆச்சர்யம் உண்டு. பல நூறு ஆண்டு வரலாறு கொண்ட நகரம். இன்றும் உயிர்ப்போடு இருக்கும் நகரம். பாண்டியர்களின் தலைநகரம். பல முறை பலரால் வெற்றி கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் எழுந்த நகரம். கோவிலை மையமாக கொண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். மதுரையை பற்றிய நாவல் என்ற காரணத்தால் மட்டுமே வாங்கினேன். கோம்பை பற்றிய சில விபரங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. (கோம்பை எனது சொந்த ஊர்)

ஆனால் உண்மையில் இது மதுரையின் வரலாறு அல்ல. தாதனூரின் கதை. கள்ளர்களின் கதை. காவலர்களின் கதை. மதுரை நாகமலை புதுக்கோட்டை பக்கம், கீழக்குயில்குடி என்று ஒரு ஊர் இருக்கின்றது. அந்த ஊரின் கதை என்று கூறப்படுகின்றது. குற்றப்பரம்பரை என்று ஆங்கிலேயர்களால் முத்திரை குத்தப்பட்ட பரம்பரையினரின் கதை. அவர்களின் வாழ்வு மதுரையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, அவர்களின் வரலாறு மூலம் மதுரையின் வரலாறு சொல்லப்படுகின்றது.

வரலாறு என்பது பெரும்பாலும் மன்னர்களின் வரலாறு என்பதாகவே இருந்து வருகின்றது. எந்த மன்னர் எங்கு சென்றார், எத்தனை போர் செய்தார். மக்களின் வரலாறு சொற்பமே. வரலாற்று நாவல்கள் என்றால் கல்கியிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. அவரின் கதை வரலாறு எண்ணும் வண்ணத்தை கொஞ்சம் தொட்டு கொண்டு அவரது கற்பனையை முழுக்க முழுக்க கலந்து தந்த ஓவியங்கள். சாண்டில்யன் கதைகளில் வரலாறு என்பது அதில் வரும் மன்னர் பெயர்கள் மட்டுமே என்பது என் எண்ணம்.


அவர்களை சொல்லியும் குற்றமில்லை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததை அப்படியே எழுத அவர்கள் என்ன முனிவர்களா? ஓரளவிற்கு மன்னர் வரலாற்றை விடுத்து மக்களின் வரலாற்றை சொன்ன நாவல்கள் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும். ஆனந்தரங்கரின் டைரியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம். ஜெயமோகனின் வெள்ளையானை நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

அந்த வகையில் இந்த நாவலும் சேர்கின்றது. இது மன்னர்களின் வரலாற்றையும் பேசுகின்றது, சாதரண மக்களின் வரலாற்றையும் கூறுகின்றது.

நாவல் மாலிக்காபூரின் படையெடுப்புடன் ஆரம்பமாகின்றது. மாலிக்காபூரின் நாசத்திற்கு பின் நாயக்கர்களின் படையெடுப்பு, குமார கம்பனின் மதுரா விஜயம். அதன் பின் நாகம நாயக்கரின் துரோகம், அதை அடக்க வந்த அவரின் மகன் விஸ்வநாத நாயக்கனின் அரச பக்தி. அதன் பரிசு மதுரை. விஸ்வநாத நாயக்கரின் காலத்தில் மதுரை மீண்டும் தன் பெருமையை அடைந்தது. மதுரை கோட்டை மீண்டும் கட்டப்பட்டது. விஸ்வநாத நாயக்கருக்கு பின் அவரின் வம்ச கதை, போர்கள் என்று போகின்றது. பின்னர் ஆங்கிலேயர்களின் வருகை, கோட்டை உடைப்பு, ஆங்கிலேயர்களின் நிர்வாக சட்டத்திற்குள் அனைவரையும் கொண்டுவருதல், குற்ற பரம்பரை சட்ட அறிமுகத்தில் முடிகின்றது.

காவல் கோட்டம்மதுரையின் ஆட்சியாளர்களின் வரலாறு பிரிட்டீஷார் வருகை வரை விரிவாக சொல்லப்பட்டுள்ளது. மாலிக்காபூரின் படையெடுப்பு ஒரு சில பக்கங்களில் ஓடிவிடுகின்றது. தாதனூரின் ஆரம்பம் அங்குதான் இருக்கின்றது. மதுரை காவற்காரனின் மனைவி சடச்சி போரில் தப்பி சென்று சேர்ந்த இடம் தாதனூர். அவள் வழி உண்டான ஊர் தாதனுர். அவர்களின் தெய்வம் சடச்சியும் கருப்பனும். களவும் காவலுமே அவர்களின் தொழில்.

மதுரையின் காவலர்கள், காவல் அவர்களிடமிருந்தது போகும் போது களவிற்கு மாறுகின்றார்கள். சடச்சியின் காலத்தில் காவலர்களாக இருந்தவர்கள் அதன் பின் கள்வர்களாக மாறுகின்றனர். திருமலை நாயக்கர் காலத்தில் காவல் மீண்டும் அவர்கள் கையில் வருகின்றது. அதிலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை காவல் அவர்களிடம். கால மாற்றமும், ஆங்கிலேய நிர்வாக முறையும் காவலை பறித்து கள்வர்களாவும், குற்ற பரம்பரையாகவும் மாற்றுகின்றது.

மதுரையின் வரலாறு, தாதனூரின் வரலாறு இரண்டும் கலந்து ஓடுகின்றது. மதுரையின் வரலாறு வேகமாக போகும் போது தாதனூரின் வரலாறு மெதுவாக போகின்றது. தாதனூரின் வரலாறு வேகமாக போகும் போது மதுரையின் வரலாறு மெதுவாக போகின்றது.

முதற்பகுதி முழுவதும் மதுரையின் வரலாறு மட்டுமே. குமார கம்பணன் படையெடுப்பை விரிவாக பேசும் நாவல், அவர்களின் ஜாதி முறைகளை பற்றி தெளிவாக விவரிக்கின்றது. அதில் கூறப்பட்ட பல இனத்தவர்கள் சமூகத்தில் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. படையிலிருந்த ஜாதி அமைப்பு, அவர்களின் உரிமை, அவர்களின் முறைகள் , சடங்குகள், ஒரே படை வீரர்களாக இருந்தாலும் அவர்களுக்கிடையிலான ஏற்றதாழ்வு என்று பல பக்கங்களுக்கு நீளுகின்றது.

அடுத்ததாக வருவது கிருஷ்ணதேவராயரின் சகாப்தம். விஸ்வநாத நாயக்கரிடம் மதுரை ஒப்படைக்கப்படுவது, புதிய கோட்டை எழுப்பபடுவது என்று போகின்றது. விஸ்வநாத நாயக்கர் காலத்தில்தான் பாளையங்கள் பிரிக்கப்படுகின்றது. கம்பம், கோம்பை, தேவாரம் போன்ற பாளையங்கள் எல்லை வகுக்கப்படுகின்றது.

கோம்பையில் தமிழ் பேசுபவர்களை விட தெலுங்கும், கன்னடமும் பேசுபவர்களே அதிகம். குறைந்தது 400 ஆண்டுகளாக அங்கிருப்பவர்கள் அனைவரும். தமிழகத்தின் ஒரு ஓர மலையடிவார கிராமத்தில் எப்படி வேறு மொழி பேசுவர்கள் வந்தார்கள். அதுவும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்ற யோசனை எப்போதும் உண்டு. பின்னால் வரலாறை பரிட்சைக்கு படிக்கும் போது, நாயக்கர்கள் வந்த போது வந்திருக்கலாம் என்று தெரிந்தது. இந்நாவல்  அதன் விபரங்களை மேலும் தருகின்றது.

கிருஷ்ணதேவராயரை பற்றிய சரித்திர உண்மைகள் பலமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது போல, மூன்றாம் முறை அதை படிக்கின்றேன். நான் கிருஷ்ண தேவராயன், வேங்கடநாத விஜயம் பேசும் அதே வரலாறு மீண்டும். மதுரை கதைக்கு எதற்கு ராயர் ஆட்சியை பற்றி அவ்வளவு விபரம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை. பெரும்பாலான பகுதிகள் நாவல் வகையிலும் இல்லை. சரித்திரத்தை சொல்லி கொண்டு போகின்றார். இருக்கும் கொஞ்ச நஞ்ச உரையாடல்களும் சில இடங்களில் சடாரென் சுப்ரமணியபுர தமிழுக்கு தாவி சங்கடப்படுத்திகின்றது (நீ சோத்த போடுமா!!) ஹரிகரர் புக்கர், கிருஷ்ணதேவராயர் வரலாறு வேங்கடநாத விஜயத்தில் படிக்க சிறப்பாக இருந்தது

தென்னகத்து மறவர்களின் வீரம் பல பக்கங்களில் விரிகின்றது. அடுத்தடுத்து போர்க்கள காட்சிகள். போர்க்கள காட்சிகளை விவரிப்பதில் ஆசிரியரின் மொழி அருமையாக வெளிப்பட்டுள்ளது. போரை கண்முன் நிறுத்துகின்றார். தஞ்சாவூர் படையெடுப்பு, அதன் பிண்ணனியில் இருக்கும் மங்கம்மா என்று விறுவிறுப்பாக போகின்றது.

ராணிமங்கம்மாவின் ஆட்சி, மீனாட்சியின் ஆட்சி, சந்தாசாகிப்பின் துரோகம் இறுதியில் வெள்ளையர்களின் அதிகாரம் வருவதுடன் மதுரை வரலாற்றின் வேகம் வடிகின்றது. இப்பகுதிகளின் நிறை வரலாற்று தகவல்கள், பெரும்பான்மையானவை உண்மையான வரலாற்றை ஒட்டியவை, இடைவெளிகளை நிரப்பியுள்ளார். அதிக இடைவெளிகள் இல்லை. நிரப்பியதும் மோசமில்லை என்றாலும், வறண்டு போய் தெரிகின்றது. போர்க்கள காட்சிகள், மதுரை கோட்டை கட்டும் காட்சிகள் என்று காட்சிகளை விவரிப்பதில் நுட்பம் காட்டும் மொழி, கதையை சொல்லும் போது கோட்டை விடுகின்றது. உரையாடல்களில் வழக்கு தமிழும், இலக்கண தமிழும் மாறி மாறி வருகின்றது. நாயக்கர்கள் என்பதை நினைவு படுத்த அடிகடி தெலுங்கில் இக்கட ராரா என்றும் மாட்லாடி கொள்கின்றார்கள்.

இதற்கு இணையாக தாதனூரின் வரலாறும் இங்குமங்கும் வருகின்றது. மன்னரின் மாளிகையிலேயே திருடும் திறமைசாலிக்கு காவல் பொறுப்பு வருகின்றது. கள்வர்கள் காவலராகின்றனர். சடச்சிக்கு முன்னால் இருந்த காவல் பொறுப்பு மீண்டும் கிடைக்கின்றது. அதே சமயம் அவர்கள் களவையும் மறக்கவில்லை. களவு என்பதை ஒரு குற்றமாகவோ, தவறான செயலாகவோ அவர்கள் கருதவில்லை என்று ஆசிரியர் மிக தெளிவாக கூறுகின்றார். களவு என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறியது. தாதனூர்க்காரனின் திறமை களவில் இருக்கின்றது. களவாடிய பொருளின் மதிப்பைவிட, களவின் மதிப்பே மெச்சப்படுகின்றது. ஒரு சாகச செயலாக இருக்கின்றது.

களவு என்பது திருடுதல் என்பதை விட ஒரு நுட்பத்துடன் செய்யப்படும் கலையாகவே அவர்களால் செய்யப்படுகின்றது. எறும்பு போட்ட துளை அளவே போடப்படும் கன்னம், கன்னம் போட தேர்ந்தெடுக்கப்படும் கல், களவிற்கு துப்பு கொடுக்கும் ஆள் கொடுக்கும் தடயங்கள், களவிற்கு கிளம்ப வேண்டிய காலம், வாசல் வழி போகும் எறும்பை கண்டு சுவர்கள் கனமானவை என்று அறியும் திறன், என களவு ஒரு நுட்பமான கலையாகவே இருக்கின்றது.

காவலும் அதற்கு இணையான நுட்பத்துடன் நடைபெறுகின்றது. தாதனூர்காரகளுக்கு பலமே இருள். இருளில் அவர்கள் இருபங்கு விழிப்பாக இருக்கின்றார்கள். அவர்களின் திறமையை ஒரு சிறிய காட்சியில் முழுவது காட்டுகின்றார். காவலாளுக்கு தண்ணீர் கொடுக்கும் செட்டியாருக்கு அவர்கள் போன் பின் தெரிகின்றது, அவர்கள் தண்ணீர் செம்பை எடுக்கும் போதும், வைக்கும் போதும், குடிக்கும் போதும் ஒரு சிறிய சத்தம் கூட வருவதில்லை. அதுவே அவர்களின் திறமை. இருளில் கேட்கும் மாட்டின் கழுத்து மணி சத்தத்தை கொண்டே எத்தனை வண்டி என்று கணக்கிடுகின்றார்கள், பறவைகளின் சத்தம் மூலமே அவர்களின் காவல் நடைபெறுகின்றது. களவு சென்றாலும் அதை திரும்ப பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கின்றார்கள்.

இப்படிபட்ட திருடர்களிடமே ஒருவன் திருடி போய் அவர்களின் பல தலைமுறைகளுக்கு அவமானத்தை உண்டாக்குகின்றான்.

வழிவழியாக அனைவருக்கும் சில சடங்குகள் இருக்கும். பெரும்பாலும் நமக்கு அதன் மூலம் தெரியாது, சிலர் அதை பைத்தியக்காரத்தனம் என்று கூட பகுத்தறிந்து கூறலாம். ஆனால் ஓவ்வொரு தொன்மத்திற்கு பின்னாலும் ஒரு அழுத்தமான கதையிருக்கும். தாதனூரின் ஒவ்வொரு தொன்மத்தின் வரலாறும் கூறப்படுகின்றது.

இதில் வரும் முக்கிய கிளைக்கதை சின்னானின் கதை. இதுவே அரவான் என்னும் படமாக வந்து சொதப்பியது.

இதன் பின் வரும் மதுரையின் வரலாறு முழுக்க முழுக்க தாதனூரின் வழியே வெளிப்படுகின்றது. நாவலின் மொழியும் மாறுகின்றது. இனிவருவது இருளின் கதை.

தாதனூர் மதுரையை காத்தாலும் களவாடினாலும் அது மதுரையை விட்டு விலகியே இருக்கின்றது. தனியாக வாழ்கின்றார்கள். மதுரையின் மாற்றங்கள் அவர்களை வந்து அடைவதில்லை. ஆங்கிலேயர்களின் வருகை மட்டுமே அவர்களை அசைக்கின்றது. உள்ளூர் காவலை புரிந்து கொள்ளாதவர்கள், குடிக்காவலை ஒழிக்க முயல்கின்றார்கள். "நாயக்கர் தந்ததை இவன் என்னடா இல்லன்னு சொல்றவன்" என்று எதிர்க்கின்றார்கள். காலம் மாறியதை புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடு. கடைசியில் ஆங்கிலேயர்கள் தங்கள் வழக்கமான முறையில் வெற்றி பெறுகின்றனர். நம் கையாலேயே கண்ணை குத்த வைப்பது. அவர்களின் ஒருவன் மூலமாகவே அவர்களை பற்றிய விபரங்களை பெற்று அவர்களை குற்றப்பரம்பரையாக்குகின்றனர்.

ஆங்கிலேயர்களுக்கும் கள்ளர்களுக்குமான போர் பக்கம் பக்கமாக விரிகின்றது. உக்கிரமான காட்சிகளை கண்முண் காட்டுவதில் வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். செம்பூர்க்காரர்களின் சாகசம், தாதனூர் பெண்களின் வீரம், அடிக்க அடிக்க எழும் கள்ளர்களின் வீரம் எல்லாம் படிக்க . சுவாரஸ்யமானவை என்பதுடன், எப்படி பட்ட மக்கள் வாழ்ந்த பூமி என்று தோன்றுகின்றது.

பிற்பகுதி நாவல் ஒரு பெரிய தகவல் திரட்டு, களவின் நுட்பங்கள், கள்வர்களுக்கும் காவலர்களுக்குமிடையிலான உறவு, தாது பஞ்சத்தின் தாக்கம், பெரியாறு அணைக்கட்டு அதையொட்டி நடந்த மாறுபாடுகள், நல்ல நாள் கொண்டாட்டங்கள், அவர்களின் திருமணம், அதன் சடங்குகள், வித விதமான திருட்டு, ஆடு திருட்டு, மாடு திருட்டு, கதிர் திருட்டு. காவலுக்கு செல்பவர்களின் சடங்குகள், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு, விதவிதமான வரிகள், காது வளர்க்கும் முறை என்று ஏகப்பட்ட தகவல்கள்.

தாதனூர் பெண்களும் நாவலில் முக்கிய இடம் பெற்றிருக்கின்றார்கள். தாதனூர் என்பது ஒரு சாதரண கிராமம் போல காட்டப்படவில்லை. ஒட்டு மொத்த கிராமமே ஒரு குடும்பம் போல, மலை மக்கள் போல காட்டப்பட்டுள்ளார்கள். கள்வில் கிடைப்பதை அனைவரும் பகிர்ந்துண்கின்றார்கள், திருமணத்திற்கு பொதுவில் செலவழிப்பது என்று வாழ்கின்றார்கள். அவர்களின் தெய்வம் சடச்சியும், கருப்பனும். களவிற்கு, காவலுக்கு செல்லும் அனைத்து ஆண்களும் கருப்பனே.

இரண்டாம் பகுதியின் மொழி முற்றிலும் வேறாக மாறிவிட்டது. வேகமான காட்சிகளை விவரிக்கும் போது துள்ளி குதித்து நமக்குள் பல சித்திரங்களை எழுப்பும் மொழி, உரையாடல்களின் மொழி, வர்ணனைகளில் கோட்டை விடுகின்றது. முற்பகுதியில் வரும் ஒரு ஜல்லிக்கட்டு வர்ணனை வாடிவாசலை நினைவுபடுத்துகின்றது. கோட்டை இடிக்கப்படும் காட்சி, உக்கிரமான காட்சிப்படுத்தல். ஒவ்வொரு தெய்வமாக இறங்கி போகும் காட்சியை அருமையாக எழுதியுள்ளார். அதே போன்ற உக்கிரம் தாதனூர் - வெள்ளையர்களின் போர்க்காட்சிகள்.

நாவலின் குறை, தாதனூர்க்காரர்களின் களவு என்பதை முழுக்க முழுக்க ஒரு சாகசமாக கூறுவதை போல எழுதியிருப்பது. தாதனூர்க்க்காரகளுக்கு களவும் காவலும் தொழில், ஆனால் களவு கொடுத்தவர்களுக்கு? அவர்கள் கொடுரமாக ஒடுக்கப்படும் போது அவர்களின் மீது பரிதாபம் வருவதில்லை, திருடர்களுக்கான தண்டனை என்றே தோன்றுகின்றது. காவலர்கள், அவர்களின் காவல் உரிமை மறுக்கும் போது கள்வர்களாகின்றனர். அதை அழுத்தமாக சொல்லவில்லை.
இரண்டாவது பிற்பகுதியில் மாறிவிட்ட நடை. மொத்த நாவலில் எத்தனை இடங்களில் இருள், களவு, காவல் வருகின்றது என்று ஒரு போட்டி வைக்கலாம். எப்படியும் பலருக்கு தோல்விதான் கிட்டும். "இருள் களவுக்கு காவலிருந்தது" "காவல் இருளை களவு கொண்டது" "களவு காவலை இருளில் தள்ளியது" "இருள் இறங்கி ஊரெங்கும் அலையென பரவி வெளியே சென்றது" "இருளின் கரங்களில் களவு மறைந்தது" என்று விதவிதமாக வரிகள். எரிச்சலூட்டுகின்றது.

மூன்றாவது முற்பகுதியின் நீளம். தாதனூரின் வரலாற்றை சொல்ல வந்தவர் எதற்காக மிக விரிவாக விஜயநகர் வரலாற்றை பேச வேண்டும். நாயக்கர் படையின் ஜாதி முறை, அவர்களின் பரவல், பாளையங்கள் உருவாக்கம் எல்லாம் தகவல் செறிவு மிக்கவை என்றாலும் அவை அனைத்தும் பின்னால் எங்கு பயன்படுகின்றன, அவையில்லாமலிருந்தாலே பிற்பகுதி செறிவாக இருந்திருக்கும்.

முல்லையாற்று அணைகட்டை பற்றிவருகின்றது. ஆனால் அது அதிக பக்கங்களை கவரவில்லை. அதைவிட அதை தன் சொத்தை விற்று கட்டி கர்னல் பென்னிகுக் பெயரே என் கண்ணில் படவில்லை. பென்னிகுக் இல்லாமல் முல்லையாற்று அணையின் வரலாறா? ஒருவேளை மூலக்கதைக்கு தேவையில்லை என்று விட்டு விட்டாரா? வேகமாக படித்ததில் நான் தான் தவற விட்டுவிட்டேனா? பின்னால் அதே அணைக்கட்டு பாசனம் எப்படி ஆங்கிலேயர்களுக்கு பல கிராமங்களை வழிக்கு கொண்டுவர பயன்பட்டது என்பதையும், பல கிராமங்களின் வாழ்வு எப்படி தலைகீழாக மாறியது என்பதையும் எழுதியவர், அதற்கு காரணமான பென்னிகுக்கை பற்றி கொஞ்சம் எழுதியிருக்கலாம். கர்னல் பென்னிகுக் இன்றும் எம்பகுதி மக்களால் கொண்டாடப்படுபவர். அவரது பெயரையும், படத்தையும் இன்றும் பல இடங்களில் காணலாம்.

ஒட்டுமொத்த நாவல் பரப்பை எடுத்து கொண்டால் இவையெல்லாம் சிறிய விஷயங்கள். மிகப்பெரிய நாவல், படிக்க பல நாள் ஆனது. கையில் வைத்து படித்தால் கை வலி எடுக்கின்றது.ஆசிரியரின் பல வருட உழைப்பை எடுத்து கொண்ட நாவல். ஆசிரியர், வாசகர் இருவரின் உழைப்பிற்கும் நியாயம் சேர்த்த நாவல்.

எந்த நாவலையும் இரண்டு முறை படித்த பின்பு, இரண்டு நாள் கழித்து என் நினைவிலிருப்பதை மட்டுமே எழுதுவது வழக்கம். ஆனால் இந்த நாவலை ஒரு முறை மட்டுமே படித்தேன், படித்து பதினைந்து நாட்கள் ஆன பின்னும் என்னால் இவ்வளவு எழுத முடிந்துள்ளது என்பதே நாவல் எந்தளவிற்கு ஆழமாக பதிந்துவிட்டது எனபதை காட்டுகின்றது.

தமிழினி வெளியீடு இங்கே கிடைக்கின்றது. இப்பதிப்பின் விலை 350/-. விகடன் பதிப்பின் விலை 520. விலை அதிகமிருப்பதால் பக்கங்களும் அதிகமாக இருக்குமோ என்னவோ, எனவே தமிழினி பதிப்பை வாங்குவதே நல்லது. புத்தகத்தின் தடிமனுக்கும் விலை குறைவுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக