20 ஏப்ரல் 2013

மகாபாரதம்

நான் அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் டவண்டை அடிக்கும் விஷயம், நான் ஒரு மகாபாரத பைத்தியம். சிறுவயதில் இதை ஆரம்பித்த பெருமை தூர்தர்ஷனுக்குத்தான்.ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது டிவியில் தொடராக வந்தது. அதோடு தினமலர். தினமலரில் முதல் நாள் அடுத்த நாள் காட்சிகளின் வசனம் வரும். சிறுவயதில் புத்தகம் படிக்கும் வழக்கம் இருந்ததால் அதை சுவாரஸ்யமாக படிக்கவும் முடிந்தது. வசனம் புரிந்து பார்க்கும் போது இன்னும் பிடித்து போனது.

முதலில் பிடித்ததற்கு காரணம் அதில் வரும் சாகசங்கள். போர் முறைகள், சண்டை, வில் அம்பு, கதை என்று சிறுவர்களை கவரும் அனைத்தும் போதுமான அளவிற்கு இருந்தது. இன்னும் என்னால் அதன் கதாபாத்திரங்களை கண் முன் கொண்டுவர முடிகின்றது. நல்ல காஸ்டிங், சகுனி, துரியோதனன், பீமன், கிருஷ்ணன் (நிகில் பரத்வாஜ்?), பீஷ்மர் எல்லாம் கனகச்சிதம். இதை எழுதும் போது கர்மம் புதிய மகாபாரதம் நினைவில் வந்து தொலைக்கின்றது. சை.

ஏழாவது படிக்கும் போது என் தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டிற்கு போகும் போது அங்கு பாரதம் அனாதையாக கிடந்தது. திரும்பி வரும்போது பதுக்கிக் கொண்டு வந்துவிட்டேன். வந்த வேகத்தில் படித்தேன். பல நாட்களுக்கு அது உள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது. நான்கு புத்தகங்கள். ஆதி பர்வம், சபாபர்வம், வன பர்வன் இரண்டு புத்தகங்கள், யுந்த பர்வங்கள் ஒரு புத்தகம், சாந்தி பர்வம் முதல் ஒரு புத்தகம். யார் எழுதியது ஒரு விவரமும் நினைவில் இல்லை. 


அது நான் கொண்டு வரும்போதே பழைய புத்தகம், பழுப்பு நிறத்தில் இருந்தது. விரைவில் பீஸ் பீஸாக போனது. கடைசியில் தொலைந்தும் போனது. பின்னால் வர்த்தமானன் முன்விலை திட்டத்தில் என் மாமா வாங்கி தந்தார். ஏகப்பட்ட பிழைகளுடன் வந்த மோசமான பதிப்பு.

கடைசியில் வந்து சேர்ந்தது சோவின் மகாபாரதம் பேசுகின்றது. தனியாக புத்தகம் வாங்கும் அளவிற்கு தைரியமும் பணமும் வந்த பின் வாங்கிய முதல் பெரிய புத்தகம் அதுதான். 

சோ பாரதத்தின் மற்று மொரு பரம ரசிகர். டீவி தொடரிலும் அவரின் பங்கு பெருமளவு உண்டு. அருமையான புத்தகம். பாரதம் படிக்கும் போது நமக்கு பல கேள்விகள் எழலாம், முடிந்த வரை அதை விளக்கி எழுதியிருந்தார். 

முதலில் சாகசக் கதையாக தினமலரில் படிக்கப்பட்ட பாரதம், இரண்டாம் முறை ஒரு சுவாரஸ்யமன கதையாகப் பட்டது. மீண்டும் அதை வர்த்தமானலில் படிக்கும் போது அது ஒரு பக்தி கலந்த கதையாக தெரிந்தது. சோ எழுதியதை படிக்கும் போதுதான் அதன் பலவித அம்சங்கள், விவாதங்கள் என பாரதத்தை படிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. 

பாரதத்தை அடிப்படையாக கொண்ட பல கதைகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. சிலிக்கான் ஷெல்ப் ஆர்.வியும் ஒரு பாரதப் பிரியர். அவர் ஏகப்பட்ட பாரதக் கதைகளை தொகுத்துள்ளார். பாரதமும் இடத்திற்கு இடம் வேறுபடும் போல. இ.பாவின் கிருஷ்ணா கிருஷ்ணா எனக்கு அந்தளவிற்கு பிடித்துப் போக காரணம் அது மகாபாரதத்தின் ஒரு கிளை என்பதுதான்.

பாரதம் என்னும் கடலுக்கு ஒரு நல்ல அறிமுகம் சோவின் மகாபாரதம் பேசுகின்றது. பலவித கூறுகளை உள்ளடிக்கிய பாரதத்தை படிப்பது என்பது சுலபமல்ல. படிப்பவர்களின் நோக்கத்தை பொறுத்து பாரதத்தின் தன்மையும் மாறும். இரண்டு வேறுபட்ட கருத்துள்ளவர்களும் அவர்களின் கருத்துக்களுக்கு பாரதத்தையே காரணம் காட்டலாம். 


நம்மில் பலருக்கு நமது இதிகாசங்களை படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை. ஒரு வேளை அது கவுரவ குறைச்சலோ என்னவோ. இல்லை அறிவுஜீவி பட்டம் கிடைக்க நமது இதிகாசங்களை படிக்க கூடாது என்ற எண்ணம். விகடனில் மதன் கிரேக்க புராண கதைகளை அடித்துவிடுவார். நம் புராணம் என்றால் அதில் வந்து விழும் தப்புகள். நன்றாக நினைவில் உள்ளது, நரகாசுரனை பூமாதேவிக்கும், இரண்யாக்‌ஷனுக்கும் பிறந்தவன் என்றார். மெத்தப் படித்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்களே இப்படி என்றால், மற்றவர்களை என்ன சொல்ல. பாரதமும், ராமாயணமும் நம்மில் கலந்து இருந்தாலும் அதை சரியாக கற்று வைப்பதில் பலருக்கு ஆர்வமில்லை. வருத்தம்தான் என்ன செய்ய முடியும்.

இந்த திடீர் பாரத புராணத்திற்கு காரணம், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்த கட்டுரை. வழக்கமாக அவரை அவ்வளவாக படிப்பதில்லை. ஒரு இலை மரத்தில் இருந்து தரையில் விழுவதை மிகவும் ரசித்து ஐந்து பக்கம் எழுதியிருப்பார். வாழ்க்கையை ரசிப்பதை இந்த அளவிற்கு செய்ய என்னால் முடியாது. மகாபாரதம் என்றது தவிர்க்க முடியவில்லை.

வெகுநாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த கேள்விக்கு ஒரு பதில். பாரதத்தை படிப்பது எப்படி என்பதல்ல அது. படிக்க படிக்க அது தன்னை விரித்துக் கொண்டு நமக்கு தேவையானதை தரும் என்ற நம்பிக்கையுண்டு. இப்படித்தான் படிக்க வேண்டும், இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற படித்தால் பிறகு பரிட்சைக்கு படிப்பது போல ஆகிவிடும். வலுக்கட்டாயமா எதையாவது மனப்பாடம் செய்யும் நிலை வந்துவிடும். ஆனாலும் இது ஒரு நல்ல அறிமுகம்.


முழு பாரதத்தொகுப்பு தமிழில் எங்கு கிடைக்கும் என்பது வெகுநாட்களாக இருந்த கேள்வி. கிடைக்கின்றது என்கின்றார். அதே இட்லிவடையிலும் வந்துள்ளது. எப்படியோ கண்ணில் படவில்லை. கூடவே சில பர்வங்கள் இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கின்றது என்கின்றார்கள். மொத்தமாக வாங்க விலை கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது. மாதாமாதம் வாங்கலாம் என்றால், புத்தகம் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்றும் தோன்றுகின்றது. யோசிப்போம். வாங்கினால் அடிக்கடி மகாபாரதப் பதிவுகள் வரும் ஜாக்கிரதை.

3 கருத்துகள்:

 1. என்னிடம் மகாபாரதப் புத்தகங்கள் பல உள்ளன. தற்போது எஸ்.ரா.சொன்ன கும்பகோணப் பதிப்பு மனதை ஈர்த்தவண்ணம் உள்ளது. அதன் பிரதி ஏதேனும் கிடைத்தால் படித்துப்பார்த்து வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம்.தாங்கள் வாங்கிப் பார்த்து சொல்லுங்கள்.பிறகு நான் வாங்குவது பற்றி யோசிக்கிறேன்.பீட்டர்ஸ் புரூக்கின் மகாபாரம் பார்த்தால் நம்மவர்களின் அசட்டுத்தனமான காட்சிகளின் அமைப்பு அப்பட்டமாகத்தெரியும்.

  பதிலளிநீக்கு
 2. கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில The Mahabharatha நூலை தமிழில் மொழி பெயர்க்கும் முயற்சி முழு மஹாபாரதம் என்ற வலைப்பூவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ளோர் அங்கும் சென்று படிக்கலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி. நீங்கள் ஆரம்பித்துள்ளது பெரிய முயற்சி. வாழ்த்துக்கள்.

   நீக்கு