14 பிப்ரவரி 2015

வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன்

வெண்முரசு நாவல் வரிசையில் இரண்டாவது நாவல்.

மகாபாரதத்தை ஒருவர் தன் கற்பனையில் விவரித்து எழுத முடிவு செய்தால் அவருக்கு ஒரு ஆயுள் போதாது, ஏனென்றால் அவ்வளவு பாத்திரங்கள், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மை வாய்ந்தது. பல தலைமுறைகளை தொட்டு செல்லும் கதை. அதை அனாயசமாக செய்து வருகின்றார் ஜெயமோகன். இரண்டாவது புத்தகத்தை படித்துவிட்டு அதைப்பற்றி சிறிய குறிப்பை எழுத இவ்வளவு நாளாகிவிட்டது. அவர் ஆறாவது நூலுக்கு சென்றுவிட்டார். ஐந்தாவது நூல் அச்சிற்கு தயாராகிவிட்டதது. அது கைக்கு வந்து படித்து முடிக்கும் முன் ஏழாவது நூல் வந்துவிடும். படிப்பவர்களின் ஈகோவை கிளறிவிடுகின்றார்.

முதற்கனல், மகாபாரதத்தின் விதை,முதல் தலைமுறை பாத்திரங்களை பற்றி பேசுகின்றது. இரண்டாம் நாவல் அடுத்த தலைமுறை பாத்திரங்களை விவரிக்கின்றது. பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன், சகுனி, காந்தாரி, குந்தி இவர்களே முக்கிய பாத்திரங்கள். அதிக கவனம் பெறாத, பாரதக்கதை தெரிந்தவர்கள் கூட அதிகம் கவலைப்படாத பாத்திரங்களுக்கும் இதில் இடமுள்ளதே இதன் சிறப்பு. 

இரண்டு சின்ன சம்பவங்களாக படித்த பல இதில் பெரிதாக விவரிக்கப்பட்டுள்ளன. தலைப்பிற்கேற்ப மழை புத்தகம் முழுவதும் பெய்து கொண்டே இருக்கின்றது. பக்ககங்கள் ஈரமாகாததுதான் பாக்கி.

முதற்கனல் உணர்ச்சிகரமான, நாடகீய காட்சிகள் நிறைந்த ஒரு நூல். அதில் மனித உணர்ச்சிகள், அவற்றின் கொந்தளிப்புகள் அதிகம். மாறாக மழைப்பாடலில் அரசியல்,தர்க்கம் அதிகம் இடம்பெறுகின்றது.


மழைப்பாடல் பாரத யுத்தத்தின் விதைக்கு நீரூற்றி வளர்க்கின்றது. திருதராஷ்டிரனின் திருமணம், பாண்டுவின் திருமணம். பாண்டவர்கள், கெளரவர்களின் பிறப்பு இவற்றை பற்றி வெகு விரிவாக கூறுகின்றது.

திருதராஷ்டிரனின் பாத்திரம் வெகு நேர்த்தியாக உருக்கொள்கின்றது. பெருந்தன்மையின் பெரு உருவம். அவனின் திருமணம் ஒரு பரபரப்பான நிகழ்வாக போகின்றது. ஏன் அவனுக்கு எங்கோ சென்று பெண் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு மிக தெளிவான விடை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் திருமண நிகழ்வை பற்றி படிக்கும் போது பாரதம் என்ற நாடே கிடையாது, ஆங்கிலேயர்கள் கட்டி வைத்தது என்று கூறும் முட்டாள்களை கண்டு இன்னும் சிரிக்க தோன்றியது.

குந்தியின் பாத்திர அறிமுகமே அவளின் குணத்தை காட்டிவிடுகின்றது. குந்தியின் கதை மூலம் யாதவ குலத்தை பற்றி விவரிக்கின்றார். யாதவர்களின் தோற்றம், அவர்களின் குலமுறைகள், உட் பிரிவுகள், அவர்களின் வாழ்க்கை முறை. பாரத அரசியலில் அவர்கள் மெதுவாக அடைந்து வரும் முக்கியத்துவம் என்று அரசியல் சார்ந்த பல தகவல்கள். குந்தி அடுத்த சத்தியவதியாக மாறும் அனைத்து சாத்தியங்களுடன் கதை நிறைவடைகின்றது. நாவலின் முக்கிய அம்சம், பாத்திரங்களின் அமைப்பு, அவர்களின் குணங்கள், அவற்றின் மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதன் விவரிப்பு.

திருதராஷ்டிரன் பெருந்தன்மை கொண்டவன், வேழம் போன்ற மனதுடையவன். ஆனால் பின்னால் அவனது மகன்கள் செய்யும் அத்தனை தவறுகளையும் சகித்து கொள்வதன் காரணம் ஒரு சிறு பொறியாக துரியோதனின் பிறப்பின்போதே உண்டாகின்றது. பீஷ்மரிடமும் ஒரு சிறிய மாற்றம் வயதானதின் தளர்ச்சி. முக்கியமானது சகுனியின் பாத்திரம். சகுனி என்றாலே தீமையின் உறைவிடம் என்றே அனைவர் நினைவில் வரும். ஆனால் இதில் வரும் சகுனியிடம் அக்குணங்கள் இல்லை. அடுத்து வரும் நூல்களின் அவன் மாற்றம் மெதுவாக நிகழ்கின்றது.

இதில் முக்கிய பாத்திரம் விதுரன். விதுரன் தன் மூளையை கொண்டு ஆடி பார்க்கும் ஆட்டங்கள், திருதராஷ்டிரனின் பெருந்தன்மையால் நிறைவடைகின்றது.

கதையில் வரும் பல இடங்களின் வர்ணனை நம்மை அவ்விடத்தில் வாழச்செய்கின்றது. பாரதத்தின் பல்வேறு இடங்கள் வருகின்றன. காந்தாரம், ஹரப்பா (மொகஞ்ஞதாரோ??), இமயத்தின் பல பகுதிகள்.

நூல் முழுவதும் பல உபகதைகள். பாண்டவர்களின் பிறப்பு என்பது முழுக்க முழுக்க ஒரு மாயத்தன்மை நிறைந்த ஒரு பகுதி. தேவர்களின் நேரடி வாரிசுகள் எனபதே நான் படித்த கதை. அதை வெகு அழகாக கையாண்டுள்ளார். குந்தி கர்ணனை பிரிவதற்கு ஒரு தர்க்க ரீதியான காரணத்தையும் உட்புகுத்தி விட்டார். சல்லியனின் மகனல்லவா என்கின்றான் பாண்டு. அது உண்மையென்றால், அவனும் கர்ணனின் இறப்பிற்கு காரணம் என்பதை யோசித்தால் கர்ணன் மீது இன்னும் பரிதாபமே வருகின்றது. அதே போல் மற்ற பாண்டவர்களின் பிறப்பிற்கும் காரணமாக இருக்க கூடியவர்களை பற்றி சிறிய குறிப்புகளை தந்து போகின்றார். அர்ஜுனனின் பிறப்பின் போது உண்டாகும் புயல் மழை காட்சிகள் அபாரம். துரியோதனின் பிறப்பும் ஒரு பரபரப்பான சிறுகதைக்கான களம்.

பாண்டவர்களை பற்றியும் ஆரம்பசித்திரத்தை உண்டாக்கி விடுகின்றது. பாண்டு இறந்த செய்தி கேட்ட தர்மனின் நடத்தை, இயல்பாகவே அவன் ஒரு அரசன் என்பதை காட்டுகின்றது. எனக்கு பிடித்த பீமனின் சிறுவயது கதை சிறுவர்களுக்கு இரவில் சொல்ல உகந்தது. என் மகளுக்கு கதைகள் சொல்ல வெண்முரசே இப்பொது எனக்கு உதவுகின்றது.

மழைப்பாடல் என்னும் தலைப்பு எந்தளவிற்கு பொருத்தம் என்பது எனக்கு தெரியவில்லை. போர் என்னும் பெரு மழைக்கான முன்னற்விப்பு என்று ஒரு விளக்கத்தை படித்தேன். இருக்கலாம். 

மழைப்பாடல் பரபரப்பாக செல்லும் ஒரு கதை. காட்சிகளை துல்லியமாக காட்டும் ஒரு சொற்சித்திரம். மனித மனங்களின் விகாரங்களை, அவற்றின் மாற்றங்களை அற்புதமாக காட்டும் ஒரு இலக்கியம்.

(படித்து பார்த்தால் ஒன்று தெரிகின்றது, இது  முழுமையாக இல்லை. அப்புத்தகத்தை பற்றி விரிவாக எழுத வேண்டுமானால், அதற்கு பல நாள் ஆகும். நினைப்பதை எல்லாம் எழுத்தில் வடிக்க எனக்கு பயிற்சி போதாது. வேண்டுமென்றால் இது நானும் அப்புத்தகத்தை படித்து விட்டேன் என்று டவண்டை அடிக்க கிடைத்த ஒரு வாய்ப்பு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக