27 பிப்ரவரி 2014

ஆழி சூழ் உலகு - ஜோடி குரூஸ்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், எப்போதோ பள்ளியில் படித்தது.

மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையிலான உறவை அழுத்தமாக சொல்லும் கதை எதையும் படித்ததில்லை. முதலில் கடற்கரை பற்றிய கதைகளே படித்ததில்லை. பா. ராகவனின் அலை உறங்கும் கடல், ராமேஸ்வரத்தை மையமாக கொண்ட கதை என்றாலும், அதில் மீனவர்களை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளே.

கடல் என்றால் அலுக்காத ஒரு காட்சி பொருள் என்றுதான் பல நாட்களாக என் எண்ணம், அதை மாற்றியது சுனாமி. அந்த அலைகளுக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி அமைதியாக உள்ளது என்பது தெரியவந்த பின் அதைக் காணும் போதெல்லாம் ஒரு சிறிய பயம் தோன்றும். சுனாமியின் போது துணிந்து இறங்கி பலரை காப்பாற்றியது மீனவர்கள், அதில் அதிகம் பாதிப்படைந்ததும் அவர்கள்தான். ஆனால் வெகுவிரைவில் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டனர்.

இடிந்தகரையில் பல ஆண்டுகளாக போராடிவரும் மீனவர்களை கண்டால் எனக்கு வியப்புதான். அவர்களின் தலைவர்களின் நோக்கம், அவர்களின் செயலில் எனக்கு சந்தேகம் இருந்தாலும், இப்பரதவர்களின் கட்டுப்பாடு ஆச்சர்யமளிக்கின்றது. அதுமாதிரியான கட்டுப்பாடு எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை தருகின்றது இப்புத்தகம். வங்கக்கடலில் பரந்துள்ள மீனவர்களை சேர்த்துக் கட்டுவது கத்தோலிக்கம். சவேரியாரியால் மதம் மாற்றப்பட்டவர்கள். நன்றிக்காக மதம் மாறியவர்கள். உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட போரில் தங்களுக்கு உதவி செய்த போர்ச்சுகீசியர்களுக்காக மதம் மாறினார்கள். . தங்களுக்கு போரில் உதவி செய்தவர்களுக்கு நன்றியாக  மதம் மாறினாலும் அவர்களின் தாய் மதத்தின் தொடர்ச்சியை விடாதவர்கள். பின்னாளில் சவேரியாரால் முழுவதும் மாறியவர்கள். அவர்களின் வாழ்க்கையை பற்றிய ஒரு புத்தகம். பதிவும் கொஞ்சம் பெரியது, பெரிய நாவலில்லையா!!!!


வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்து பதிப்பில் இல்லாத புத்தகம், கொற்கைக்கு விருது கிடைத்ததும் கண்டிப்பாக புதிய பதிப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். அதே போல் சுடசுட நேராக அச்சகத்திலிருந்து கண்காட்சிக்கு வந்துள்ளது.

ஆழி சூழ் உலகு, பரதவர்களின் வாழ்க்கையை ஒரு காட்டும் புத்தகம். கன்யாகுமரியிலிருந்து தூத்துக்குடி வரை இருக்கும் மீனவர்கள் மட்டுமா, அதற்கு மேல் உள்ளவர்களும் இதில் சேர்த்தியா என்று தெரியவில்லை. 

கதை இரண்டு காலங்களில் ஆரம்பிக்கின்றது. 1985ல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் கோத்ரா, சூசை, சிலுவை. கரைக்கு திரும்பும் போது ஆழியில் அடித்து செல்லப்பட்டு, கடலின் நீரோட்டத்துடன் செல்கின்றனர். அவர்களின் கதைக்கு நடுவில், மூன்று தலைமுறை கதை சொல்லப்படுகின்றது. சரியாக சொன்னால் நான்கு தலைமுறை கதை. தொம்மந்திரை, கோத்ரா, சூசை, சிலுவை என்னும் நான்கு தலைமுறை.

1933ல் சுறாப்பாறு செல்லும் மூவரை பற்றி கதை பின்னோக்கி போகின்றது. தொம்மந்திரை, கோத்ரா, போஸ்கோ மூவரும் வரிப்புலியன் பிடிக்க கட்டு மரத்தில் செல்கின்றனர். அதிலிருந்து கதை நீண்டு காணமல் போன மூவரை தேடுவதுடன் இணைகின்றது. கதைக்கு நடுவில் கடலில் மாட்டி கொண்டவர்களின் நிலை வந்து செல்கின்றது.

கதைக்கு மைய கதாபாத்திரம் என்று ஒன்றும் தனியாக கிடையாது. கதை நடக்கும் ஊர் ஆமந்துறை (நிஜமான ஊர் உவரி). அதுதான் கதாநாயகன். அதில் வாழும் அனைவரும் கதாபாத்திரங்கள்.

தொம்மந்திரை, கோத்ரா, சூசை, இவர்களின் குடும்ப கதைகள் முக்கிய கிளை. இதைத்தவிர ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். தொம்மந்திரை ஊரின் முக்கிய குடும்பமான செட்டியாரம் குடும்பத்தவர், கோத்ரா மடியாளாக சென்று சொந்த மரம் கட்டி ஓடிய பெரிய கடலோடி, சூசை கோத்ராவின் உதவியுடன் காதல் வாழ்வை ஆரம்பித்தவர், சிலுவை, ஊருக்கே உதவி செய்த மைக்கேல் பர்னாந்தின் பேரன், சூசையால் வளர்க்கப்படுவன். 

பரதவர்களின் தொழில் சார்ந்த விஷயங்கள், சவால்கள், காலமாற்றத்தால் உண்டாகும் பாதிப்புகள், தொழில் போட்டிகள் என்று பல விஷயங்கள் இதில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்குள்ளே இருக்கும் உட்பிரிவுகள் (மெனக்கடென்காரர்கள், மேசைக்காரர்கள், பர்னான்ந்துமார்கள்).

கதையின் ஆரம்பமே கடற்கரை வரை வந்தவர்களை கடல் உள்ளே இழுத்து செல்வதுதான். அடுத்த கதை வரிப்புலியனை பிடிக்க செல்லும் மூவரின் பயணம். கடலின் நீரோட்டங்கள் (வாநீவாடு, நீவாடு) , காற்று (கச்சான், வாடை, சோழ கச்சான்), கடலின் விதவிதமான பகுதிகள் (ஆழி, மாசா, சுறப்பாறு), எப்பகுதியில் எவ்வித மீன்கள் வாழும், மீன்பிடித்தலின் நுட்பம் , கட்டுமரம் கட்டுவதன் முறைகள், வேறு துறை மீனவர்களுக்கிடையிலான உறவு என்று பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன்.

காகு சாமியார், ஒரு நிஜமான பாத்திரம். மீனவர்களுக்கு அதிகம் பயனளிக்காமலிருந்த (இ)றால் மீனகளை ஏற்றுமதி செய்ய அவர் எடுத்த முயற்சி, இன்று அதன் பலனை அறுவடை செய்துவருகின்றது. ஆனால் கடலில் உயிரை பணயம் வைக்கும் மீனவர்கள் அதன் பலனை முழுவது அடைகின்றார்களா என்பது சந்தேகம்தான். 

மீனவர்களுக்கும், அப்பகுதியில் அடுத்த பெரும்பான்மை இனத்தவரான (நாடார்) இன மக்களுக்குமான உறவு நுட்பமாக அங்கங்கு வெளிப்படுகின்றது. பனைமரத் தொழிலிருந்து நகர்ந்த நாடார்களின் பிரவேசம், அதானால் ஏற்படும் மாறுதல்கள் எல்லாம் நேரடியாக கூறாமல் கூறப்பட்டுள்ளது.

கட்டுமரத்தில் பாய்விரித்து செல்லும் மீனவர்களின் மீன்பிடி முறை, அடுத்த கட்டமாக மோட்டார் உபயோகத்தில் நிற்கின்றது. கடலின் முதல் ஆறு கிலோ மீட்டர்கள் கட்டுமரத்துக்காரர்களுக்கு என்பது அரசாங்க விதி, ஆனால் இயந்திர படகுகளை அங்கு முழுவதும் தடை செய்ய முடியவில்லை, இயந்திர படகுகளின் எல்லைக்குள் வரும் பெரிய மீன்பிடி கப்பல்களையும் தடை செய்ய முடியவில்லை.

பரதவர்கள் கடலை தம் வீடாக, சொத்தாக நினைத்து வாழ்கின்றனர், மற்றவர்களுக்கு அது பணம் தரும் தொழில். பரதவர்களின் பழைய மீன்பிடி முறை, கடல் வளத்தை முற்றிலும் அழிக்கும் வேலையை செய்வதில்லை, ஆனால் பணத்தை மட்டும் குறியாக கொண்டவர்கள் பொன்முட்டை போடும் வாத்தை அறுக்கின்றனர். மீனவர்களுக்கு கடலின் மீது உள்ளது பெரிய மரியாதை, மற்றவர்களுக்கு வெறும் பணம்.

"இந்த மீனுவள்ளாம் குசும்பு பண்ண ஆரம்பிச்ச நாமெல்லாம் தொழில் செய்யமுடியுமா" 

மீனவர்களை கத்தோலிக்கம் கட்டினாலும், இன்றும் அவர்களுக்கு கடல், கடல் மாதாதான். அவர்களை கடலில் காப்பவள் குமரி அன்னை என்பதையும் மறப்பதில்லை என்று நாவல் கூறுகின்றது. நமது பாரம்பர்யத்தின் மீதான அவர்களின் பற்றை அழகாக பல இடங்களில் வெளிக்காட்டுகின்றர். இதன் பின்னர் என்னால் மீனவர்களை கிறிஸ்துவர்களாக பார்க்க இயலாது. இதனால்தான் குரூஸ் ஒரு இந்துத்துவர் ஆனாரோ!!!

நாவல் முழுக்க பல இடங்களில் சர்ச்சின் மீதும், பாதிரியார்கள் மீதும், கிறிஸ்துவ மதத்தின் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பரதவ மக்களின் குமரி அன்னை மீதான அன்பை, மேரியின் பெயரால் மடைமாற்றி அவர்களை விசுவாசத்திற்குள் கட்டிய திறமை பிரமாதம்.

"வேதம் இப்ப வந்ததுதாம், அதுக்கு முன்னாடி நம்ம பாட்டன் பூட்டன் எல்லாம் இந்து தெய்வங்களத்தான் கும்பிட்டுருக்கான்வ. குமரி அம்மன் யாருன்னு நெனெக்க, எல அவ நம்ம பரத்தி, காவல் தெய்வம்"

"அந்தோணியாரையும், மாதாவையும் தெரிஞ்ச அளவுக்கு, யேசுநாதர நமக்கு தெரியுமா..!"

பெரும்பான்மையான இடங்களில் இம்மக்களை ஆள்வது சர்ச்சுகள்தான், அதைத்தாண்டி இவர்களால் ஏதும் செய்ய முடியாது. பதிலுக்கு இச்சர்ச்சுகள் அவர்களுக்கு எவ்வளவு திருப்பிதருகின்றன என்றுதான் தெரியவில்லை. தினம் தினம் மீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள், கொல்லப்படுகின்றார்கள். அவர்கள் சார்ந்த கத்தோலிக்கம் அவர்களை கை விட்டுவிட்டது என்கின்றார் ஜோடி குரூஸ்.

இந்த விஷயத்தை எல்லாம் எந்த மீனவரும் எழுதலாம். இது மட்டும்தான் நாவல் என்றால் அது வெற்று தகவல் களஞ்சியமாக அல்லது கட்டுரையாக மாறியிருக்கும். இதை ஒரு முக்கிய இலக்கியமாக மாற்றுவது, இதில் வரும் உயிருள்ள பாத்திரங்கள்தான்.

காகுசாமியார், கதையில் வரும் ஒரு நல்ல பாதிரியார். அவரின் சிறப்பை சின்ன சின்ன சம்பவங்களின் மூலம் காட்டி சென்று அவரது மரண ஊர்வலக்காட்சியின் மூலம் முழுமையாக்குகின்றார்.

கதையின் ஆரம்பத்தில் வரும் தொம்மந்திரை, ஆமந்துறையின் பெரிய கடலோடி. அவரின் சிஷ்யனாக வரும் கோத்ரா. கோத்ரா - தோக்களத்தாள், நல்லியல்புகளின் உருவானவர்கள். அனைவரையும் அரவணைத்து போகும், அனைவரையும் தம்மக்களாக கருதும் அவர்களிடம்தாம் அன்னையின் கருணை முழுவதும் வெளிவருகின்றது.

பாத்திரங்கள் எதுவும் தட்டையாக இல்லை. சூசை, ஜஸ்டின் போன்றவர்களின் இளமைக்கால தவறுகள் அவர்களை பின்னால் முழு மனிதனாக மாற்றுகின்றது. எப்போது உயிர் போகுமோ என்ற நிலையில் இருப்பவர்கள் அன்றைய வாழ்க்கையை வாழநினைக்கின்றனர், அதே காரணத்தால் இரக்கம் துளிர்த்து மற்றவர்களுக்காகவும் வாழுகின்றனர். மூன்றே மாதத்தில் கணவனை இழந்த அண்ணன் மனைவியை திருமணம் செய்துகொள்வது இயல்பாக இருந்தாலும், சித்தி முறை கொண்டவரின் மகளை மணந்துகொள்வது கொஞ்சம் வித்தியாசமாக தெரிகின்றது. மனித வாழ்க்கை பல விதமானது, அனைத்தையும் அறிய முடியாது, நமது அளவுகோல்களால் அளக்கவும் முடியாது. அந்த வகையில்தான் இதில் வரும் பல கள்ள உறவுகளை சேர்க்க வேண்டும்.

குரூஸின் எழுத்து, அவரின் முதல் நாவல். கவிதை எழுத முயன்றவர், கதை எழுத ஆரம்பித்துள்ளார். அந்த கவிஞன் பல இடங்களில் எட்டி பார்க்கின்றான். வரிப்புலியன் பிடிக்க போகும் காட்சி ஒரு திரைப்படம் போல நம்முள் விரிகின்றது. வழியில் அவர்கள் காணும் பெரிய திமிங்கலம், ஓங்கல்கள், பிடிபட்ட வரிப்புலியனுடன் கடைசி வரை வரும் அதன் துணை என்று அருமையாக விவரித்துள்ளார்.

கடலில் மாட்டிகொள்ளும் கோத்ரா, சிலுவை, சூசையின் போராட்டமும் அதே போன்ற விறுவிறுப்பு. கடலில் காணும் ஆயிரக்கணக்கான கடல் குதிரைகள், பல வண்ணங்களில் வரும் மீன்கள், இவையெல்லாம் கண்டு உயிர் பயத்தையும் விட்டு, சிறிது நேரம் மயங்கும் சிலுவை, சூசை, ஒவ்வொருவராக விடைபெற்று செல்ல மிஞ்சியவனின் பயம் எல்லாம் கண்முன் செல்கின்றது.

உரையாடல்கள் அனைத்தும் வெகு இயல்பாக இருக்கின்றது. எங்கும் நாவலாசிரியர் எட்டி பார்க்கவில்லை. அனைத்துமே பாத்திரங்கள் மூலமே கடத்தப்படுகின்றன. ஒன்றிரண்டு இடங்களில் அவரையறியாமல் அவரது ஆதங்கம் அவரின் குரலாக வெளிப்பட்டுவிட்டுள்ளது.

முழுக்க முழுக்க பரதவர்களின் பேச்சு வழக்கே கையாளப்பட்டுள்ளது. மூன்று முறை எடுத்து படிக்க ஆரம்பித்து முடியாமல் வைத்துவிட்டேன். நான்காம் முறை அமைதியான இரவில் ஆரம்பித்து விரைவில் படித்து முடிக்க வைத்துவிட்டது, பின்னால் இருக்கும் அகராதியின் துணையோடுதான்.

முதல் அந்தியாயத்தில் வரும் ஒரு பகுதி

"பூதாவும் கருப்பு கருப்பாத்தாம் தெரியுது" என்றான் சிலுவை

"பெரியாளு தெரம் ரெம்ப தப்பி போகுது"

"ஆமு, சூச வல போட்டு கிடக்கும் போது வாநீவாடு நல்ல பொறுத்து நின்னுச்சி பாத்தியா....அதாம்ல மரம் நல்ல வழிஞ்சிருக்கு"

"மாமா, கொஞ்சம் வாட வெலங்க ஓடி பிந்தி தட்டி வச்சி வருவமா?"

"சூசை சிலுவ சொல்லறது சரிதாம்யா. நான் தாமானையும், மறுகையும் எளக்குறம். பாய தட்டிருங்க. சிலுவ, பருமல தோள்ல போட்டு, பாய மாற போடு. கோடாவையும் ரட்டையில் போடு"

"பெரியாளு, தாமான நல்ல இழுத்து கெட்டும். மறுக்க கொஞ்சம் இளக்கி வையும். சிலுவ அணியத்து பலவய கொஞ்சம் உருவி வை. பெரியாளு பின்ன ரெண்டு பலவையையும் நல்ல தள்ளி வைங்க. சிலுவ துளவய எடுத்து பாய்க்கி கொஞ்சம் தண்ணி காட்டு" என்றார் சூசையார்.

கடலில அலை அதிகம் இருக்கும் பகுதிக்கு பெயர் ஆழி. அதை கடப்பது கடினம், அதன் பின் கடல் நம்மை எடுத்துக் கொள்ளும். அது போல இந்த முதலிரண்டு பக்கத்தை கடப்பது கடினம், அதை கடந்தால் இப்புத்தகம் நம்மை எடுத்து கொள்ளும்.

சொல்வனம் நூறாவது இதழில் அசோகமித்திரன் தன் பேட்டியில் கூறுவது

"பார்க்கப்போனா இந்த வருஷம் சாஹித்ய அகாதமி பரிசு வாங்கினாரே, ஜோ.டி.க்ரூஸ், அதை யாரைக் கேட்டாலும் அவர் மீனவ சமுதாயத்தைப் பத்தி எழுதி இருக்கார்னு சொல்றாங்க. மீனவ சமுதாயத்தைப் பத்தி என்ன சொல்லி இருக்காருன்னு கேட்டாக்க அதைச் சொல்லறது கஷ்டம். ஏன்னா தொள்ளாயிரம் பக்கம் எழுதி இருக்கார். 900 பக்கத்தைப் படிக்கறது இருக்கே… அது ரொம்ப கஷ்டம். அதனாலே மீனவ சமுதாயத்தைப் பத்தி எழுதி இருக்காருன்னா, ஓஹோ அப்படியான்னு நமக்கு எல்லாம் புரிஞ்ச மாதிரி நாம சொல்றோம். மீனவ சமுதாயத்தில எத்தனை நுட்பமெல்லாம் இருக்கோ…. "

"ஜோ.டி.க்ரூஸோட முதல் நாவல் ‘ஆழி சூழ் உலகு’, அதுவும் மீனவ சமுதாயம் பத்திதான் அது போறல்லைன்னுதான் இதை எழுதி இருக்காரு. அது 700 பக்கம்தான். நான் அதை முடிச்சுட்டேன். ஆனா இது வந்து 900 பக்கம். அவர் என்கிட்ட வந்தார் ஏதோ சின்ன விஷயம்தான். அவர் ஒரு போர்ட் ஆஃபீசர். பெரிய ஆளு. எவ்ளோ உசரமா இருக்கார். இந்தக் கதவெல்லாம் போறாது அவருக்கு. அப்படி இருக்கிறவரு, ரொம்பச் சின்ன விஷயத்துக்காக என்கிட்டே வந்தார். எனக்கும் வெக்கமா இருந்தது. அப்போ இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். நான் சொன்னேன், இந்தப் புத்தகம், இது ஏகப்பட்ட விலை… இதை இப்படி குடுத்துடறீங்களேன்னேன். இருக்கட்டும் பரவாயில்லை, இதைப் படிங்கோன்னார். அதைப் படிக்கறதுதான் முடியலை. ஒரு 100, 150 பக்கத்துக்கு மேல போறது கஷ்டமாப் போச்சு. அதுக்குன்னு உழைக்கணும். அதைப் படிக்கறதுக்குன்னு"

மீனவ சமுதாயத்தை பற்றி ஒன்றும் தெரியாத நமக்கு இதுவே பெரிய விஷயம்தான். அவரது இரண்டாம் நாவல் கொற்கை இன்னும் விரிவாக பேசுகின்றது. அதை படித்து முடிப்பது அடுத்த சவால்.

தமிழினி பதிப்பகம். விலை 450. கிழக்கில் .

தொடர்புடைய சில பதிவுகள்

தமிழ் ஹிந்துவில்

தமிழ் ஹிந்துவில் குமரி அன்னையை பற்றி

4 கருத்துகள்:

 1. அசோகமித்திரன் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அவர் வயதி அதற்கு பெரிய உழைப்பு தேவைதான். இந்த புத்தகத்தின் பக்கங்கள் மலைப்பூட்டினாலும் உள்ளே இழுத்து விடும். ஆனால் இது மீனவர்களை பற்றி முழுவதும் பேசுகின்றதா, இல்லையா என்பதை நாம் சொல்ல முடியாது. இப்புத்தகம் கடலில் மீன்பிடிக்கும் ஒரு வகை கடலோடிகளை பற்றி பேசுகின்றது, அடுத்த புத்தகம் கடலில் தோணியோட்டி செல்லும் மற்றொரு வகை கடலோடிகளை பற்றி பேசுகின்றது என்று நினைக்கின்றே. ஐம்பது பக்கம் சும்மா புரட்டிவிட்டு வைத்துள்ளேன்.

   நீக்கு

 2. 2013 சென்னை புத்தக சந்தையிலே வாங்கி படிக்க வேண்டும் தேடிய நூல்.. நூல் அளவும் விலையும் கொஞ்சம் மலைப்பாய் இருந்ததால் அப்படியே வைத்துவிட்டேன்.. இன்னும் கொஞ்சம் வருடங்கள் கழிந்ததும் படிக்க வேண்டும்.. ( அசாத்திய பொறுமையும் காலமும் வேண்டும்) அசோகமித்ரனின் அந்த பேட்டி படித்திருந்தேன்..

  அருமையான விமர்சனம் மற்றும் மொழிநடை சார் உங்களுடையது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகவிலை வருடாவருடம் தாறுமாறாக ஏறிக்கொண்டே போகின்றது. இன்னும் சில வருடங்களில் இது இன்னும் விலையேறிவிடும். நல்லபுத்தகங்கள் விரைவில் விற்று தீருகின்றன என்றால், அந்த டிமாண்டிற்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. பழைய பிரிண்டே, புதிய விலையில் சில சமயம் வருகின்றதோ என்ற சந்தேகமும் உண்டு. அசோகமித்திரன் பேட்டி, எழுத்தாளர் என்ற கர்வம் சற்றுமில்லாத ஒருவரின் உரையாடல்.

   நீக்கு