19 ஏப்ரல் 2015

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

கல்கி எழுத்திற்கு பின்பு எனக்கு அறிமுகமானவர் ஜெயகாந்தன். கல்லூரியில் படிக்கும் போது நண்பன் கையில் எப்போதும் சில புத்தகங்கள் இருக்கும். கண்டிப்பாக பாட புத்தகங்கள் அல்ல. பாலகுமாரன், ஜெயகாந்தன், ஓஷோ. நல்ல காம்பினேஷன் இல்லையா?

இவர்களில் பாலகுமாரன் மீது அந்தளவிற்கு ஒரு ஈர்ப்பு இல்லை. காரணம் அவரின் பேட்டி ஒன்றை எங்கோ படித்ததுதான். ஜெயகாந்தன் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. நண்பனிடமிருந்து ஜெயகாந்தனின் இரண்டு புத்தகங்களை வாங்கி சென்றேன். ஒரு சிறுகதை தொகுப்பு. எதுவும் இன்று நினைவில் இல்லை. மற்றுமொரு புத்தகம், ரிஷிமூலம். ஜெயகாந்தனை அதிகம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். கல்கியை படித்தவனுக்கு இந்த புத்தகம் கொஞ்சம் அதிகம்தான். அந்த புத்தகத்தை மொட்டைமாடியில் புகைபோக்கியில் படுத்து கொண்டு படித்தேன். அங்கேயே பதுக்கி வைத்துவிட்டு வந்தே. யார் கண்ணிலாவது பட்டால் என்னாவது?

சிறுகதை தொகுப்பை கண்ட என் மாமா ஜெயகாந்தனை திட்டி விட்டு போனார். அவரே எனக்கு படிக்கும் பழக்கத்தை அறிமுகம் செய்தவர், அதோடு எனது புத்தக புரவலரும் அவரே. பிராமணர்களை பற்றி தவறாக எழுதுபவர் என்று அர்ச்சனை செய்தார். ரிஷிமூலமும் அதற்கு சார்பாகவே இருந்தது. எனக்கு அதிலொன்றும் பிரச்சினையில்லை அன்று. ஆனால் அவரின் ரசிக கண்மனிகள் எனக்குள் ஒரு அலர்ஜியை உண்டு பண்ணிவிட்டனர்.

ரிஷிமூலம் கதையை படித்து அதில் வருவது போன்ற உறவுகள் எல்லாம் தவறில்லை என்றே ஜெயகாந்தன் சொல்கின்றார் என்று புரிந்து கொண்ட கூட்டத்தை என்ன சொல்வது. பாரிசுக்கு போ படித்து கள்ளக்காதல் செய்வது ஒன்றும் குற்றமில்லை என்று வாதிட்டனர். இருந்தும் சென்னைக்கு நான் வந்ததும் நான் சொந்த காசில் வாங்கியது ஜெயகாந்தனின் புத்தகங்கள்தான். பாரிசுக்கு போ, ஜெய ஜெய சங்கரா.

பாரிசுக்கு போ, எப்படி தட்டையாக புரிந்து கொள்ளப்பட்டது எனபதை நினைத்து நொந்து கொண்டேன். இசையை அடித்தளமாக கொண்டு, இரண்டு வித கலாச்சாரங்களை பற்றி பேசும் அந்நாவலில் வரும் சாரங்கன் - லலிதா உறவு என்பது ஒரு சிறு விஷயம். ஜெய ஜெய சங்கரா, ஜெயகாந்தனின் பிராமண எதிர்ப்பு - அபிமானம் பற்றிய விஷயத்தையும் மாற்றியது. முரட்டு எதிர்ப்பாளர்கள் எப்போதும் பத்து வரியை படித்து கருத்து சொல்பவர்கள் என்ற  எண்ணத்தை வலுவாக்கியது.

இருந்து அவரது எழுத்துக்கள் அந்தளவிற்கு கவரவில்லை காரணம், வரும் பிராச்சார தொனி. அனைவரும் மேடையேறி பேசும் பாணி. ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்த தன்மை. இருந்தும் அவர் பற்றி ஒரு மதிப்பும், மரியாதையும் வளர காரணம் அவரது  முன்னுரைகளே. அதில் தெரியும் அவரது தோரணை, கர்வம். அதுவே அவர் ஒரு மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாளராக என்னுள் உருக்கொண்டார்.

சினிமாவிற்கு போன சித்தாளு அவரது தைரியத்திற்கு மற்றுமொரு சான்று. தொப்பி என்று எழுதியதற்கே ஜெயமோகன் பலமாதம் தலைமறைவாக இருந்தார். இதில் பெயரை மட்டும் எழுதவில்லை அவ்வளவே, அனைவருக்கும் எளிதாக தெரியும் யாரை குறிப்பிடுகின்றார் என்று.

சிறுகதைகளில் நந்தவனத்தில் ஓராண்டி, குருபீடம் போன்றவை ஒரு வகை என்றால் முன்பனியும் பின்னிலவும் வேறுவகை. ஒரு சில கதைகள் அந்தளவிற்கு கவரவில்லை. சில கதைகள் இன்றையகாலத்திற்கு அந்நியமாக தோன்றலாம். இன்னும் சில கதைகளின் பெயர் நினைவில் வரவில்லை. ஒரு போலிஸ்க்காரன் ஒரு இறந்த குழந்தையின் வீட்டை தேடும் ஒரு கதை, ஒரு திருடன் தான் திருடிய இடத்திற்கே குடி வரும் ஒரு கதை.

அவரின் மாறுபட்ட எழுத்தை காண உதவியது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். இது தானே என்னிடம் வந்த புத்தகம். அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்த பெண்ணின் தந்தை ஒரு பழைய புத்தக்கடை வைத்திருந்தார். அப்பெண் அங்கிருந்து கொண்டு வந்தது இது. விக்கிரமாதித்தியன் கதை, சங்கர்லால் துப்பறிகின்றார், அதோடு இது. இதில் சுவாரஸ்யம், இப்புத்தகத்தை தேர்ந்தெடுத்து கொடுத்தது அப்பெண்ணின் தாயார். இதை கண்ட எங்கள் பக்கத்து வீட்டுக்கார பெண்மணி நான் படிக்கும் முன்பே பறித்து கொண்டு  சென்றுவிட்டார். அந்தளவிற்கு இப்புத்தகம் பலரை ஈர்த்திருந்தது.

அப்போது படித்தது கோபுலு ஓவியங்களுடன் விகடனில் வந்த பைண்டிங் புத்தகம். ஒரு மாதம் முன்பு அதே கோபுலுவின் ஓவியங்களுடன் காலச்சுவடு புத்தகத்தை வாங்கினேன். எப்போது படித்த புத்தகத்தை பற்றி உடனே எழுதும் வழக்கம் உண்டு, ஆனால் இப்போது நான் தட்டச்சும் போது இன்னும் இரண்டு பேர் என்னுடன் தட்டச்ச விரும்புவதாலும், அவர்கள் கையால் தட்டுவதுடன் காலையும் பயன்படுத்த முற்படுவதால், அதிகம் இப்பக்கம் வருவதில்லை. ஆர்.வியின் இந்த பதிவை படித்த பின், கண்டிப்பாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

இப்புத்தகத்தோடு அவரின் இன்னும் சில புத்தகங்களும் வாங்கியிருந்தேன். அவர் மறைந்த செய்தி கேட்டபின் அனைவருக்கும் தோன்றிய அதே எண்ணம். சிங்கம். அனைவரும் கூறுவதை படித்து இந்த படிமம் உண்டானதோ என்னவோ அவரது முன்னுரைகளையும், பேச்சுக்களையும் படிக்கும் போது சிங்கம் கர்ஜிப்பது கேட்டதே தவிர அது மியாவ் என்று கேட்கவில்லை, அது போதும் அந்த வார்த்தை சரிதான் என்பதற்கு.

அவரின் வழக்கமான கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் நல்லவர்கள். அனைவரும் நல்லவர்கள். ஹென்றி ஒரு கனவு பாத்திரம். துறவு நிலை என்று பலர் கூறுவது போல் எனக்கு தோன்றவில்லை. அவன் எதையும் துறக்கவில்லை, வாழ்க்கையை அதன் போக்கில், எளிமையாக வாழ்கின்றான். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத அந்த பாத்திரம் என்றும் அழியாது.

குழந்தைகளின் உலகம் தனியானது. அவர்களால் மட்டுமே அனைத்தையும் ரசிக்க முடியும். ஹென்றியின் குழந்தை மனது முதற்காட்சியில் வெளியாகின்றது. அதன் பின் அப்பாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்கின்றது.

அவனது வளர்ப்பு தந்தையின் தம்பி துரைக்கண்ணு அடுத்த அற்புதமான பாத்திரம். ஒரு முரட்டு குழந்தை. பாகப்பிரிவினை காட்சியில் ஒவ்வொரு பாத்திரமும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றார்கள். அடுத்தவனுக்கு நேர்மையாக இருப்பது முக்கியமல்ல, அவனவனுக்கு முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். அப்படி ஒருவரும் தங்கள் மேன்மையை காட்டி கொள்கின்றார்கள்.

ஹென்றியின் தந்தை, ஹென்றியை அவன் விரும்பிய வண்ணம் வளர அனுமதி தருகின்றார். அனுமதி என்று கூறுவது கூட தவறு. வாழ்க்கை வாழ்வதை மட்டும் கற்று தருகின்றார். பப்பாவும் மம்மாவும் கணவன் மனைவியில்லை, ஹென்றி அவர்களின் மகனில்லை. இருந்து அவர்களது குடும்பம் ஒரு கனவு குடும்பம்.

ஹென்றி போல இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கலாம், ஆனால் இருக்க முடியாது.

கடைசியாக வரும் பேபி, இன்னொரு ஹென்றி. ஆடையின்றி திரியும் அப்பெண்ணுடன் பேச ஹென்றியால் மட்டுமே முடிகின்றது. ஏன் அவள் வருகின்றாள், எதற்கு போகின்றால் என்றுதான் புரியவில்லை.

சின்ன பாத்திரங்களும் மனதில் பதிந்து விடுகின்றார்கள். சோப்பெங்கப்பா, ஒரு நடனமாகவே பதிந்து விட்டது. காரணம் கோபுலுவின் ஓவியங்கள், அவருக்கு சாம்பு மூக்கின் மீது ஒரு தனிப்பிரியம் போல. ஹென்றிக்கு சாம்பு மூக்கை வைத்துவிட்டார்.

முன்னுரையில் அவர் கூறுகின்றார், வாழ்வின் இருண்ட பக்கங்களை எழுதியவர் என்ற பெயர் உண்டு என்று. அந்தளவிற்கு சரியானதல்ல என்றுதான் தோன்றுகின்றது. அவர் காட்டுவது நம்முடன் வாழும் மனிதர்களைதான். என்ன சில இடங்களில் கூடவே அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அதிகார தோரணையில் கூறுகின்றார்.

நான் படித்த அவரது புத்தகங்களில் இதுவே தலைசிறந்தது என்று கூறமுடியும்.

(அவர்து படம், ஹிண்டுவில் சுட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக