22 ஏப்ரல் 2015

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்

ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று மட்டும் பலரால் அறியப்படும் தேவன் பல வித்தியாசமான முயற்சிகளையும் செய்துள்ளார். ராஜத்தின் மனோரதம் என்னும் கதை முழுக்க முழுக்க ஒரு வீடு கட்டுவதை அடிப்படையாக கொண்டது. சி.ஐ.டி சந்துரு ஒரு இரண்டு நாளில் பல இடங்களில் நடக்கும் கதையை சொல்வது, துப்பறியும் சாம்பு அனைவருக்கும் தெரியும்.

ஜஸ்டிஸ் ஜகந்நாதன், முழுக்க முழுக்க ஒரு நீதிமன்ற விசாரணையை காட்டும் ஒரு நாவல். ஒரு கொலை வழக்கை பற்றிய கதை. ஒருவன் தன் மாமனாரை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்கின்றான். அவன் கொலை செய்தான் என்று கூறும் சாட்சிகள், இல்ப்லை செய்திருக்க மாட்டான் என்று நிரூபிக்க வரும் சாட்சிகள், ஜுரிகள், நீதிபதி, வக்கீல்கள் இவர்களே பாத்திரங்கள். 

மொத்த கதையும் விசாரணைகள் மட்டும்தான். ஒவ்வொரு சாட்சியையும் அரசாங்கத்தரப்பு, எதிர்தரப்பு வக்கீல்களின் விசாரணை செய்வதை வைத்தே மொத்த கதையையும் நகர்த்திச் சென்றிருக்கின்றார். விருமாண்டிக்கு முன்னோடி. ஒரே சம்பவத்தின் பலவித வெர்ஷன்கள். கேள்வி - பதில் வாயிலாக மொத்த சம்பவங்களையும் காட்டி விடுகின்றார். குற்றவாளியா இல்லையா என்பதை கூட சொல்வதில்லை. 
இது ஜூரிகள் இருந்த காலத்தில் நடக்கும் கதை. ஒரு நீதிமன்ற விசாரணையின் முறைகள் என்ன, சாட்சிகளை விசாரிக்கும் முறை, அரசாங்கத்தரப்பு வக்கீலின் கடமைகள என்ன, எவையெல்லாம் சாட்சியங்களாக கொள்ள முடியும் என பல நுணுக்கமான விஷயங்களை நாவலின் போக்கில் கூறிச் செல்கின்றார்.

நகைச்சுவை அம்சம் என்று எதுவும் தனியாக இல்லை. சில உரையாடல்களின் தேவனின் குறும்பு எட்டிப்பார்க்கின்றது. முருகபக்தியும் கூடவே. 

தலைப்புதான் எதற்கு இப்படி வைத்தார் என்றுதான் தெரியவில்லை. ஜஸ்டிஸ் மொத்தமே ஒரு பத்து பதினைந்து பக்கம்தான் பேசுகின்றார். டிபென்ஸ் லாயர் ஈஸ்வரன் என்று வைத்திருக்கலாம்.

மறுபடியும் ஒரு கேள்வி தோன்றலாம், இன்று இக்காலத்தில் இது போன்ற புத்தகத்தின் இடம் என்ன? அனைவராலும் ரசிக்க முடியுமா? எனக்கு ஒரு இடத்தில் கூட போரடிக்கவில்லை, எல்லா புத்தகத்திலும் எதாவது தரிசனத்தை(!!) தேடுபவர்கள் வேண்டுமானால் ஒன்றுமில்லை, தேராது என்று ஒதுக்கலாம், தவறில்லை. அவரவர் விருப்பம்.

இதுமாதிரியான புத்தகங்கள் படிக்கும் போது ஒருவித திருப்தி, மூளைக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. படித்து முடித்த பின் மனது எதையும் ஆராய்வதில்லை. உண்மையில் ஒருவித அமைதி கிடைக்கின்றது. சாம்பு, சுதர்சனம் இவற்றையெல்லாம் என்னால் பல முறை திரும்ப திரும்ப படிக்க முடிகின்றது. பொ. செ போல, என்றும் சுவாரஸ்யமானது. வாசிப்பின் ஆரம்பநிலையில் உள்ளவர்கள், பள்ளி சிறுவர்களுக்கு படிக்கும் வழக்கம் வர இது போன்ற புத்தகங்களே தேவை.

அல்லயன்ஸ் பதிப்பும் கிடைக்கின்றது. கிழக்கு பதிப்பும் கிடைக்கின்றது.

2 கருத்துகள்:

  1. கடைசி பாராவில் நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

    பதிலளிநீக்கு
  2. ஹையோ, தேவன் பெயரைப்பார்த்துட்டு ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை நீங்கள். என் குழந்தைகளுக்குச் சாப்பாட்டு நேரக் கதையாக தேவனின் மிஸ் ஜானகி, மைதிலி, கல்யாணி, சாம்பு, சந்துரு, ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சுதர்சனம் ஆகியவை தான் சொல்லி இருக்கேன். இப்போவும் அவர்கள் அவற்றை விரும்பிப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். ஒவ்வொரு புத்தகமும் தேடித் தேடி வாங்கினேன். மனம் சோர்வடையும்போதெல்லாம் உற்சாகமூட்டும் டானிக்காக எனக்கு தேவனின் நாவல்களே இருக்கின்றன. அதற்கப்புறமாத் தான் மற்றதெல்லாம்.

    பதிலளிநீக்கு