20 டிசம்பர் 2015

கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படிக்க வைக்கும். புத்தகம் சிறியதாக இருக்கலாம், இல்லை புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கலாம். சில புத்தகங்கள் பெரிதாக இருந்தாலும் நம்மை கீழே வைக்க விடாது. சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்களும் இரண்டு வகை. ஒன்று வெண்முகில் நகரம். வைக்க மனமின்றி, கிடைத்த நேரத்திலெல்லாம், இரவெல்லாம் படித்து மூன்றே நாட்களில் படிக்க வைத்தது. இரண்டாவது கோபல்ல கிராமம்.  சிறிய புத்தகம், ஒரே நாள் விடுமுறையில் படித்து விடலாம். சில மணி நேரங்களே போதும்.

புத்தகம் சிறியது என்பதால் மட்டுமல்ல, சுவரஸ்யத்தாலும்.

கி.ராஜநாரயணன் என்ற பெயர், விகடன் மூலமே பரிச்சியம். ஒன்றிரண்டு சிறு கதைகள் படித்த நினைவு. ஒரு கிராமத்து பெரியவரின் புகைப்படம். ஏற்கனவே படித்த எழுத்தாளர்களில் இருந்து புதிய எழுத்தாளர்களை படிக்கும் முயற்சியில் கி.ரா.

கரிசல் மண் எழுத்தாளர், கிராமத்து கதைகளை எழுதுபவர். அவரது புகழ் பெற்ற புத்தகம் கோபல்ல கிராமம். இக்கதையையே அவர் ஒரு ஆயிரம் பக்கத்திற்கு, ஆழி சூழ் உலகு, கொற்கை, காவல் கோட்டம் வகையில் எழுதியிருக்கலாம். ஆனால் சுருக்கமாக ஒரு நூறாண்டுகால வரலாற்றை காட்டியிருக்கின்றார்.


தமிழகத்தில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு இணையாக வேற்று மொழி பேசுபவர்களும் ஏகப்பட்ட பேர் உள்ளனர். நானே தெலுங்கை தாய் மொழியாக கொண்டவனே. ஆனால் அது வீட்டில் பேச மட்டுமே, சிந்திக்கும் மொழி தமிழ். எங்கள் ஊரில் மட்டும் தெலுங்கு பேசுபவர்கள், கன்னடம் பேசுபவர்கள் ஏராளம். தெலுங்கு மட்டும் நாலு வகையாக இருக்கும். இரண்டு வகை கன்னடம்.

எங்கோ தமிழகத்தின் மூலையில் எப்படி? நாயக்க மன்னர்களின் காலத்தில் வந்தவர்கள். இது தவிர ஆந்திராவிலிருந்து பல காரணங்களுக்காக குடி பெயர்ந்தவர்களும் இருக்கலாம். போர், பஞ்சம் வியாதி. அப்படி குடி பெயர்ந்த ஒரு குழுவினரால் உண்டாக்கப்பட்ட கிராமம். கோபல்ல கிராமம்.

கோபல்ல கிராமத்தின் பெரிய குடும்பமான கோட்டையாரின் குடும்பக் கதை வழியாக அக்கிராமத்தின் கதையை காட்டியுள்ளார். நூற்று முப்பத்தேழு வயதான மங்கத்தாயாரு அம்மாளின் குடும்பம் கோட்டையார் குடும்பம். மங்கத்தாயாரு அம்மாள் வழியாக அக்கிராமத்தின் கதை கூறப்படுகின்றது. 

துலுக்க ராஜாக்களால் துரத்தப்பட்டவர்களின் வழிவந்தவர்களால் உண்டாக்கப்பட்ட கிராமம். நிஜக்கதையும், புராணக்கதையும் சேர்ந்தது போன்ற கதை. ஆற்றைக்கடக்க வழைந்து தரும் அரச மரம், திடீரென காட்சி தரும் பெண், பூமி பிளந்து உள்ளே செல்லும் பெண். வழிவழியாக வரும் கதைகள். எந்தளவிற்கு நம்புவது என்பது அவரவர் விருப்பம்.

ஒரு காட்சியிலிருந்து முன்னே சில வருடங்கள் என்று கதையை நகர்த்தி சென்றுள்ளார். தற்காலத்தில் வழக்கு விசாரிக்கும் கோட்டையார் காலத்திலிருந்து, முற்காலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கிற்கு செல்கின்றது. அங்கிருந்து தீவட்டி கொள்ளையர்களிடம், கோபல்ல கிராமத்து மக்களின் பூர்வீக கதை, கிராமம் உண்டான கதை என்று சென்று, மீண்டும் கொலை வழக்கிற்கு வருகின்றது. அந்த கொலை வழக்கை விசாரிக்கும் ஊர் பெரியவர்களின் கதை ஒவ்வொன்றும் அக்கிராமத்தின் பல கிளை கதைகள். 

அக்கிராமத்து மனிதர்கள் ஒவ்வொருவரின் பட்ட பெயர் கதை, கிராமத்தின் முழு பரிமாணத்தை காட்டுகின்றது. காட்டை அழித்து விளை நிலமாக்குவது முதல் சவால். அச்சவாலை சாத்தியமாக்குவது அவர்களுக்கு இருந்த வைராக்கியம். சொந்த இடத்தை விட்டு வந்துவிட்டோம், பிழைத்தே ஆக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறி. உதவியாக கிடைத்த தானியங்களையும் விதைப்பதற்காக சேர்த்துவைப்பது, அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. நமக்கும் ஓரிடம் அமையும், மீண்டும் ஒரு சமுதாயமாக வாழ்வோம் என்ற நம்பிக்கையே அத்தானியங்களை பல நூறு மைல்களுக்கு பத்திரமாக பாதுகாக்க வைக்கின்றது.

கொலைகாரனை கழுவிலேற்றும் பகுதி, கொலைகாரனிடமும் கருணை காட்டும் சமூகம், அவனையும் அவனால் கொல்லப்பட்டவளையும் தெய்வமாக வழிபடுகின்ற அவர்களிடம் இருப்பது களங்கமில்லாத தர்மம். ஒரு உயிரை கொல்ல உரிமையில்லாதவர்கள், நீதிக்காக கொன்றவனிடம் கேட்கும் ஒரு வகை மன்னிப்பு போலத்தான் எனக்கு தோன்றுகின்றது.

கதையை படிக்கும் போது,  ஒரு தாத்தா, பாட்டி நமக்கு கதை சொல்வது போன்ற உணர்வை தருகின்றது. முதலில் அந்த கிராமக் அறிமுகமாகும் இடத்திலிருந்து, அனைத்தும் கச்சிதம். வர்ணனை, அலங்காரம் ஏதுமில்லை. கிராமத்து குசும்பு எனப்படுவது பல இடங்களில் தெரிகின்றது. அக்கையா என்னும் பாத்திரம் செய்யும் குசும்புகள் எல்லாம் வாய் விட்டு சிரிக்க வைக்கின்றது. 

கிராமத்து கடவுள்கள் பெரும்பாலும் அங்கு வாழ்ந்த மனிதர்களாகத்தான் இருப்பார்கள். இன்றும் பலரின் குல தெய்வங்கள் எல்லாம் ஒரு கிராமத்து ஓரத்தில் இருப்பதை கண்டுள்ளேன். அக்கிராம மக்களின் பூர்விக கதையும் அந்த வகையில் வளர்ந்ததாக இருக்கலாம். 

வட்டார வழக்கும் அதிகமில்லை. உரையாடல் மிகவும் குறைவு. கதை பெரும்பாலும் ஆசிரியர் மொழியிலேயே போகின்றது. எளிமையாக நடை, ஆனால் அதிக வலிமையாக இருக்கின்றது. வாசகனுக்கு தேவையானவற்றை தந்துவிடுகின்றது.

இலக்கியம், இலக்கியமல்லாதவை என்ற பிரச்சினை அடிக்கடி பல இடங்களில் பார்க்கலாம். அதற்கு உதாரணமாக இப்புத்தகத்தையும் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும் சொல்லலாம். இரண்டும் கிட்டத்திட்ட ஒரே தளம். இரண்டையும் படிக்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவத்தின் வித்தியாசம்தான் இலக்கிய சண்டைகளுக்கு பதில்.

இங்கு வாங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக