இதுவரை எழுதியது அனைத்தும் தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1ல் உள்ள கதைகள். இனி வருவது தொகுதி 2ல் உள்ள கதைகள். இந்த பதிவில் வரும் பத்துக் கதைகளுமே அற்புதமானவை, எனக்கு மிகவும் பிடித்தவை. முதல் தொகுதியில் உள்ள கதைகளை விட இது எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
71. கொட்டு மேளம்
ஒரு ஏமாந்த சோணகிரி டாக்டர். மற்றவர்கள் எல்லாம் ஒஹோ என்றிருக்க அவர் மட்டும் அதே ஊரில் ஏமாந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு பணம் தரவேண்டியவன் தேர்தலில் ஜெயித்து, கொட்டு மேளத்துடம் ஊர்வலம் போகின்றான். அவருக்கு வரும் பெண்ணும் அவரைப் போலவே இருக்கின்றாள். ஏமாறுவதில் கூட கொஞ்சம் சந்தோஷம்.
72. சண்பகப் பூ
சுடர் மாதிரி ஒரு பெண். வெகு அழகான பெண், இளம் வயதில் திருமணமாகி கணவனையும் இழக்கின்றாள். கணவனின் அண்ணன் அவளை படிக்க வைக்க அழைத்துச் செல்கின்றான். தாத்தா செண்பகப் பூவை முகர்ந்தால் ரத்தம் வராமல் போகுமா என்கின்றார், பாட்டி எல்லாருக்கும் வராது என்கின்றார். ரத்தம் வராதவர்கள் பூவை கொண்டாடலாம், அனுபவிக்கலாம். கணவனின் அண்ணனுக்கு ரத்தம் வந்தது போல் தெரியவில்லை. இதைவிட பூடகமாக அந்த உறவைக் கூற முடியாது. செண்பகப் பூ தான் தெரியும், அதை முகர்ந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வருமா என்ன?
73. ரசிகரும் ரசிகையும்
தஞ்சாவூர் ஜில்லாக் கதை. தி. ஜா விற்கு பாடகர்கள் மீது என்ன கோபமோ, அங்கங்கு அவர்களை வாரி விடுகின்றார். பாடகர்கள் என்றால் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல, தாசிகள் என்றால் பணம் பறிக்க மட்டும் தெரிந்தவர்கள் அல்ல, அவர்களிடமும் நல்ல ரசனை உண்டு என்று கூறுகின்றார். கலையை மட்டும் வைத்து பிழைக்க முடியாமல் வழிதவறிப் போனவர்கள்தான் அவர்களில் அதிகமாக இருக்கக்கூடும். தாசியின் அழகில் மயங்கிய பாடகர், முகஸ்துதி ஓவராக போய் அவளை தியாகராஜரை விட மேல் எனப் புகழ, அப்பெண்ணிற்கு ஆவேசம் வந்து வெளியே விரட்டுகின்றார். இருவரின் ரசனையும் எங்கோ இருக்கின்றது.
74. கழுகு
சுஜாதாவின் ஒரு கதை, பக்கத்து வீட்டில் பிணம் இருக்கும் போது சாப்பிட முடியாமல் தவிக்கும் ஒருவனின் கதை. நகரங்களில் பக்கத்து வீட்டளவிற்கு இருக்கும் அத்தவிப்பு, கிராமங்களில் இன்னும் அதிகம். அக்கிராமத்தில் யாராவது இறந்து போனால், பிணத்தை எடுக்கும் வரை சாப்பாடு கிடையாது. கிழவர் இழுத்துக் கொண்டிருக்கின்றார், போய்விடுவார் என்று எண்ணி மதியம் மூன்று மணிக்கே உண்டு முடித்து தயாராகின்றனர். ஆனால் அவரோ போகின்ற வழியைக் காணோம். நடுஇரவில் திருட்டுத்தனமாக உண்டு முடிக்கின்றனர். அடுத்த நாளும் ஒன்றும் காணோம், கடைசி வரை அவர் இருக்க மற்றவர்கள் போகின்றார்கள். அவர் கழுகு போலத் தன் சாவுக்கு காத்துக் கொண்டிருக்கின்றார்.
பெண்களின் தனி உலகில் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் ஆண்களுக்கு கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். அப்படி எட்டிப் பார்த்த கதை. டமாராச் செவிடை ( கதையில் சொன்னபடி ) திருமணம் செய்து கொண்ட அழகான பெண். அவளின் மனது அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற ஆண்களிடம் பாய்கின்றது. சும்மா ஒரு பார்வை, ஒரு ஏக்கம். தி. ஜாவின் மற்ற சில கதாபாத்திரங்கள் போல அத்துமீறவில்லை இன்னும். மனம் எங்கு திரிந்தாலும் கணவனின் கள்ளம் கபடமற்ற முகத்தைக் கண்டு அவள் மனம் மீண்டும் அவளிடம் வந்தடைகின்றது. மிக அருமையான கதை. ஆண்கள் மட்டும்தான் திருமணத்திற்கு பின் சைட்டடிக்க வேண்டுமா என்ன?
76. வேண்டாம் பூசணி
வயதான பாட்டி, அவரை பந்தாடும் பிள்ளைகள், செத்தால் பணமும் அவளின் பொருளும் கிடைக்கும் என்று அவரை அழைத்துச் செல்லும் மகள். பத்து நாளில் போகும் என்று எண்ணிய அம்மா, பல நாளாகியும் போகவில்லை என்று அவளுக்கு கோபம். கொல்லவா முடியும்? காத்திருக்கின்றார்கள். கடைசியில் கீழே விழும் பாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் கொல்ல முடிவு செய்கின்றான் மாப்பிள்ளை. ஆனால பாட்டி அதிலும் எஸ்கேப். கடைசியில் பாட்டி சொந்த ஊருக்கே போய்ச் "சேருகின்றாள்".
வேண்டாம் பூசணி என்பது ஏதாவது தஞ்சாவூர் வழக்குச் சொல்லா? நான் கேள்விப் பட்டதேயில்லை. தி. ஜா பல தரப்பட்ட மனிதர்களைக் கண்டுள்ளார் போல. இது போன்ற மனிதர்களை இது வரை சந்தித்ததில்லை அதற்கு கடவுளுக்கு நன்றி. படித்தவுடன் பல மணி நேரத்திற்கு மனதை சங்கடபடுத்திவிட்டது.
77. இக்கரைப் பச்சை
அத்து ஒரு புதுப் பணக்காரர். நூறு குழி நிலம், 1000 முங்கில் கொத்து, காய்கறி தோட்டம் என்று செழிப்பாக வாழும் திடீர் பணக்காரர். கதை சொல்லி மாத சம்பளக்காரன், மிச்ச மூன்று ரூபாயை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டுள்ளான். அத்துவின் மனைவியின் வீரம் அத்துவின் வேலைக்காரன் மூலம் தெரியவருகின்றது. நல்ல வேளை திருப்பி அடிக்கும் மனைவியில்லை என்று அக்கரையைவிட இக்கரையே பச்சை என்று திருப்தி கொள்கின்றான்.
78. நானும் எம்டனும்
குழந்தை இல்லாதவர்களுக்கு ஒன்று எல்லார் மேலும் ஒரு பாசம் உண்டாகும், நமக்கு இல்லையே என்ற ஏக்கம் அனைவர் மீதும் ஒரு பாசத்தை உண்டாக்கும். ஆனால் சிலருக்கு அதுவே ஒரு வெறுப்பை உண்டாக்கும், மற்றவர்களின் பாசத்தை உணர முடியாமல் ஆக்கும். வம்படியாக நன்கொடை வாங்கிக் கொண்டு போகும் லட்சாதிபதியை எதிர்த்து பேச முடியாதவர் எம்டனை பார்த்து மகிழ்கின்றார். அவருக்கு குழந்தைகள் இல்லை, திடகாத்திரமான அவன் மற்றொருவனிடம் கடி வாங்கினாலும், கடித்தவனை மன்னித்து விடும் நல்லவன். கடித்தவனை காப்பாற்ற தண்ணீரில் பாயும் எம்டன், தண்ணீரில் போகின்றான். கூட இருந்து பார்த்தவர் அவனை காப்பாற்ற முடியாமல் அழுதுகொண்டிருக்கின்றார். சடுகுடு விளையாட்டு வர்ணனையும், எம்டனின் வர்ணனையும் பிரமாதம்.
79. அத்துவின் முடிவு
அக்கரை பச்சைக்காரர் அத்து மீண்டும். வெளியில் மதிப்புடன் இருக்கும் அவரை வீட்டில் மனைவி மதிப்பதில்லை. அத்து அவளை நடுத்தெருவில் நிறுத்துவேன் என்று புலம்புகின்றார். கடைசியில் அத்துவிற்கு இருமலில் ஆரம்பித்து மரணப்படுக்கைகு போகின்றார். அப்போது கூட மனைவி வந்து பார்க்காமலிருக்கின்றாள். அத்து தன் சபதப்படி அவர் இறந்து தன் மனைவியை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்
80. பொட்டை
ஐந்து வருடங்களுக்கு முன்பு கோவாவிற்கு ட்ரக்கிங் சென்று இருந்தேன். அங்கு ஒரு சர்தார்ஜி அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார். ட்ரக்கிங் ஆரம்பிக்கும் முதல் நாள், வார்ம் அப் பிராக்டிஸ் என்று செயற்கை சுவரில் ஏறும் பயிற்சி அளித்தார்கள். நான் ஏறும் முன் எனக்கு நாக்கு தள்ளிவிட்டது. அவர் ஏற முன் வந்த போது, பயிற்சியாளர்கள் கண்ணில் ஆச்சரியம். அப்போதுதான் எங்களுக்கு தெரிந்தது அவர் ஒரு பார்வையற்றவர் என்று. பயிற்சியாளர், உங்களுடன் ஒரு உதவியாளர் ஒருவரும் ஏறுவார், அவர் உங்கள் கையை சரியான இடத்தில் வைக்க உதவுவார் என்று கூறினார். அதை மறுத்துவிட்டு, அவர் கைகளாலேயே தடவி ஏறிவிட்டர். அதுவும் படு வேகமாக.
பின்னர் அவரை நாங்கள் எங்கள் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தோம். கடைசிவரை அவருக்கு துணை அவர் நண்பர். அவர் முன்னே செல்ல, அவர் தோளில் இவர் கை வைத்துக் கொண்டு போவார். அவரின் தோளின் அசைவிற்கு ஏற்ப இவர் தன் கால்களை எடுத்து வைப்பார். அப்போதுதான் தெரிந்தது கண்ணில்லாதவர்களுக்கு ஆயிரம் கண். அவர்களின் ஒவ்வொரு புலனும் பல மடங்கு அதிகம் வேலை செய்கின்றது. கடைசியில் அவர் கூறும் போதுதான் தெரிந்தது அவர் இமயமலை மீது இரண்டு மூன்று முறை ட்ரக்கிங் போயிருக்கின்றார்.
அது போன்ற ஒரு கிழவர்தான் இக்கதையின் நாயகன், பல ஆண்டுகளாக கண் இல்லாத ஒருவர். யார் துணையுமின்றி அவர் கம்பை மட்டும் நம்பி வாழ்பவர். அதன் துணை கொண்டே உழுவது முதல் களை பிடுங்குதல் வரை செய்பவர். அவரை ஒருவன் பொட்டை என்று அழைக்க கோபம் வருகின்றது. அழைத்தவன் ஒரு பெரியவரின் தத்துப் பிள்ளை. இரவில் தத்துப் பிள்ளையின் லீலையை கையும் களவுமாக பிடிக்கின்றார்.
இக்கதைகள் அனைத்தும் அவரது கொட்டுமேளம் சிறுகதை தொகுப்பில் வந்துள்ளது. அதைப் பற்றி சிலிக்கான் ஷெல்பில்
அடுத்த பகுதி
அடுத்த பகுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக