16 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 9

முந்தைய பகுதிகள்
      செல்லுர் சொர்ணாம்பாவின் அழகு அக்கரைச் சீமை வரை பிரபலம். சிங்கப்பூரில் இருக்கும் கோவிந்த வன்னி அங்கு வரக்காரணமே அச்சொர்ணாம்பா. அவளின் ஒரு நாள் பணத்தை சம்பாதிக்க சிங்கப்பூர் வந்த கோவிந்த அதை சம்பாதித்து முடிக்க பத்து வருடங்கள் ஆகிவிட்டன. "ஒரு நாளுக்காக பத்து வருட உழைப்பா? அந்த ஒரு நாளுக்கு பின் மீண்டும் அதே உழைப்பிற்கு திரும்ப வேண்டுமே" என்று கூறும் நண்பரிடம் "அப்புறம் உயிர் வாழணும்தான் என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா?" என்னுமளவிற்கு அவளின் நினைவு. திரும்பி வந்து பார்க்கும் போது, அவளுக்கு அறுபது வயது. அவனது தவத்தின் தரிசனம் விபரீதமாகிவிட்டது


       போன பதிவில் கூறியது போல பாயசம் அவரது மாஸ்டர் பீஸ் எனறால் இது அதை விட ஒரு படி மேலே என்றுதான் எனக்கு படுகின்றது. மிக அருமையான கதை. இரண்டு சம்பவங்களை இணைத்து ஒரே மூச்சில் எழுதியதாக கூறுகின்றார் தி.ஜா. ஒரு குட்டிப் பெண், கண்காணாத சீமைக்கு ஒரு பாவடைச் சட்டையுடன் வேலைக்கு போகின்றாள். அக்குழந்தையின் பொறுப்புணர்வும், தைரியமும், சமர்த்தும் அனைவரையும் கவர்கின்றது, கரைக்கின்றது. குமாஸ்தாவின் குட்டிப் பையனை அவன் தனக்கென்று வாங்கிய பழத்தை அப்பெண்ணிடம் தர வைக்கின்றது. கதை எழுதிய விதமும், குழந்தைகளின் உலகத்தை அவர் படம்பிடித்துள்ளதும், என்ன சொல்ல. படித்து முடித்தபின் அக்குழந்தை என்னவாகும், எங்கோ நன்றாக இருக்கும், இருக்கட்டும் என்று நம்மையறியாமல் வேண்ட வைக்கின்றது. எங்காவது சிறு குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் இக்கதை நினைவிற்கு வராமல் போகாது.

83. சிவப்பு ரிக்‌ஷா 

         ஒரு தைரியமான பெண்ணின் கதை. ருக்கு ஒரு தைரியசாலியான பெண், பஸ்ஸில் சேட்டை செய்பவன் அடுத்து மருத்துவமனைக்கு செல்லும் படி செய்யும் பெண், காரில் வந்து படம் காட்டுபவனை சுற்றி விடும் பெண் கடைசியில் ஆளை விடுங்கப்பா, பஸ்ஸே வேண்டாம் என்று ரிக்‌ஷா ஏறி பறக்கின்றாள்.

84. கடன் தீர்ந்தது

       நல்லவர்களை பார்ப்பது அரிது, இக்கதையில் வரும் நல்லவரைப் போன்றவரை அனேகமாக கதையில் மட்டுமே பார்க்க முடியும். சுந்தர தேசிகர் நிலம் வாங்க எண்ணி, மொத்த சேமிப்பையும் ராமதாஸிடம் ஏமாந்து நிற்கின்றார். சட்டத்தால் அவனை ஒன்றும் செய்ய முடியாமல போனாலும், தேசிகர் அவனை மனதார மன்னித்து விடுகின்றார். அவன் சாக கிடப்பது தெரிந்ததும், அவனிடம் இரண்டனா பெற்றுக் கொண்டு அவன் கடனை தீர்த்து நல்ல வழிக்கு அனுப்புகின்றார். மிக நல்ல கதை, நல்ல கதாபாத்திர உருவாக்கம். ஒரு வகையில் தேசிகர் போல இருந்தால் பலருக்கு பிரச்சினை இராது.

85. பொய்

       வயதானவரை திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணின் சோகக்கதை. ஒரு சில பொய்கள் நினைத்து பார்க்க, எழுதிப் பார்க்க நன்றாக இருக்கும். நிஜ வாழ்வில் அது நடக்காது.

86. கோயம்பத்தூர் பவபூதி

        "காலோ ஹய்யம் நிரவதி; விபுலா பருத்வீ" இதற்கு என்ன அர்த்தம்? பவபூதி யார்? ஒன்றும் புரியவில்லை. ஆனால் கோயம்பத்தூரில் இருந்து வரும் கிழவரை விட புத்திசாலியாக இருக்க முடியுமா?. ஹரிகதை சொல்லும் ஒரு கிழவர், பழைய பணக்காரர்கள் கைவிட்டாலும் அவர் சாமர்த்தியத்தால் புதுப் பணக்காரனை வைத்து தன் பணியை முடித்துக் கொள்கின்றார்.

87. தேவர் குதிரை

       ஊர் முன்னாள் தலைவர் தேவர், அவர் குதிரை அடுத்தவன் வயலில் மேயந்ததால் அதைக் கட்டி வைக்கின்றனர். அபராதம் கட்டி அவிழ்த்து போக தேவரிடம் கூறப்படுகின்றது. தேவர் அபராதம் கட்டாமல், குதிரையை திரும்ப பெறுவதுடன் பஞ்சாயத்திற்கு ஒரு செலவை வைக்கின்றார்.


       மிக அருமையான கதை. தலைப்பு ஏதோ ஜெயகாந்தன் கதை தலைப்பு போல இருந்தாலும், தி. ஜாவின் மற்றுமொரு அருமையான கதை. பசிக்கு உணவளிப்பது என்பது மிகப் பெரிய புண்ணியம், பசி என்பது தீராத வியாதி. நம்மால் அந்த வியாதியை ஒரு பொழுதாவது தீர்க்க முடிந்தால் பெரிய திருப்தி. அப்படி பசித்து அமர்ந்தவனை, அதுவும் உணவை எடுத்து வாயில் வைத்தபின் பந்தியில் இருந்து எழுப்பினால் அது எத்தகைய பாவம். அதன் விளைவு எப்படி இருக்கும், அப்பசியின் கோபம் என்ன செய்யும். வக்கீல் தான் செய்த பாவங்களின் விளைவாக அப்பரதேசியை பந்தியிலிருந்து விரட்டுகின்றார். பாவத்தின் பயனை அனுபவிக்கின்றார்.


      ஒரு அப்பாவி, வெகுளி குழந்தை, ஒரு புத்திசாலி, சாமர்த்தியசாலி குழந்தை. இரண்டின் கதை. சாமர்த்தியசாலி அப்பாவி ஏமாளியிடம் தந்திரமாக காலண்டரை லவட்டிக் கொண்டு போகின்றது. குழந்தைகளின் உரையாடல் தவிர்த்து ஏதும் சுவாரஸ்யமில்லை.


      ஒரு இசைக் கதை. நாகஸ்வர வித்துவான் பிள்ளை அவரது மகன் தங்கவேலு. மகன் நவீன இசையையும், அப்பா பாரம்பர்ய இசையையும்  பிரித்துக் கொண்டு வாசித்து வருகின்றனர். வக்கீல் வீட்டிற்கு வருன் வெள்ளைக்காரர்களுக்கு வாசிக்க செல்லும் இருவரும், அங்கு வந்த வெள்ளைக்காரனின் ரசனையைக் கண்டு வியக்கின்றனர். மொழியில்லா நாக்ஸ்வரத்தில் வரும் நாதத்தின் அடிப்படையை, அதன் உணர்வுகளை சரியாக வாங்கிக் கொள்ளும் வெள்ளைக்காரன், அதை கடத்திய பிள்ளை இருவரையும் மொழி தாண்டி இணைக்கின்றது இசை.

அடுத்த பகுதி

2 கருத்துகள்: