25 ஆகஸ்ட் 2016

காலந்தோறும் நரசிங்கம் - ஜடாயு


ஜடாயு பல ஆண்டுகளாக இணையத்தில் இயங்கி வருபவர். கம்பராமாயண ரசிகர். ஆர்.எஸ்.எஸ்க்காரர். (ஆமாம் முற்போக்குவாதிகள் / அறிவுஜீவிகள்  எல்லாம் கிளம்பலாம்). ஆழ்ந்த தமிழ் புலமை கொண்டவர். அவர் எழுதிய முதல் நூல் காலந்தோறும் நரசிங்கம்

ஹிந்துத்துவம் என்பதே ஒரு கெட்டவார்த்தை என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க நமது போலி முற்போக்காளர்கள் முயன்றுவருகின்றனர். அவர்களுக்கு உதவ சில குழுக்களும் திரிகின்றன. ஸ்ரீராம் சேனா, அந்த சேனா என்று பல உதிரிகள் செய்யும் அடாவடித்தனங்களையும் ஹிந்துத்துவம் என்ற ஒரே குடையில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். எது உண்மையான ஹிந்துத்துவம்? கொஞ்சம் சிக்கலான கேள்வி. அதற்கு பதில் தர பல புத்தகங்கள் உள்ளன. ஜடாயுவின் புத்தகம் அதில் ஒன்று. 

ஹிந்துமதம் குறித்து பக்தி நோக்கில் எழுதப்படும் கட்டுரைகளுக்கோ, எழுதுபவர்களுக்கோ எவ்விதப்பிரச்சினையுமில்லை. ஹிந்துமதத்தை அரசியல், பண்பாட்டு, வரலாற்று ரீதியில் அணுகும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பிரச்சினை. இந்த நிலையில் ஹிந்துமதத்தை பற்றி ஆராய்ச்சி பூர்வமாக கட்டுரை எழுதுபவர்கள் வெகு குறைவு. அவர்களில் ஒருவர் ஜடாயு.

தமிழ் ஹிந்து (ஒரிஜினல். தி ஹிண்டு இல்லை) தளத்தில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். காலைத்தேநீருடன் இந்துத்துவா என்று வரிசையாக பல கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளிலிருந்து சிலவும், வேறு தலைப்புகளில் அதே தளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு காலந்தோறும் நரசிங்கம். இதில் வரும் பல கட்டுரைகளைப் பற்றியும் அதோடு தொடர்புடைய என் கருத்துக்கள், நினைவுகள், அனுபவங்கள் கீழே.


இதில் வரும் ஒரு கட்டுரையின் பெயரே புத்தகத்தின் தலைப்பாக இருக்கின்றது. காலந்தோறும் நரசிங்கம். ஹிந்துமதம் ஒரே இரவில், ஒரே மனிதரால் உண்டாக்கப்பட்டதல்ல. காலந்தோறும் வளர்ந்துவரும் ஒரு பண்பாடு. இந்நூலில் குறிப்பிட்டது போல, தொகுத்துக் கொண்டு வளரும் ஒரு மதம் (அ) பண்பாடு. தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம், எப்படி எல்லாம் பரிணமித்துள்ளது என்பதை பல சான்றுகளோடு விளக்கும் கட்டுரை. எத்தனை வித நரசிம்மர்கள். எப்படி நரசிம்ம வழிபாடு காலந்தோறும் வளர்ந்துள்ளது. ஒன்று நரசிம்மரின் தோற்றம், உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், சிருங்கார நரசிம்மர் என்று பல வகையாக வளர்ந்துள்ளார். அதே சமயம் சிற்பக்கலையின் வளர்ச்சியும் காட்டப்படுகின்றது. பொ.பி 2 - 3ம் ஆண்டில் கிடைத்த முதல் நரசிம்மரின் தோற்றத்திலிருந்து பல்லவர்கால நரசிம்மர் வரை நரசிம்மரின் பரிணாமத்தை வெகு நேர்த்தியாக ஆராய்ச்சி நோக்கில் எழுதியுள்ளார். மிகுந்த நேர்த்தியானதொரு கட்டுரை.

இன்னும் சில நாட்களின் விநாயக சதுர்த்தி வரப்போகின்றது. பெங்களூரில் மிகப்பெரிய ஒரு பண்டிகை என்றால் அது இதுதான். திரும்பிய பக்கம் எல்லாம் விதவிதமான கணேஷாக்கள். (இங்கு சதுர்த்தி எல்லாம் கிடையாது, கணேஷா என்றாலே பண்டிகைதான்). பாலகங்காதர திலகர், ஒரு பண்டிகையை ஒரு மாபெரும் கொண்டாட்டமாக, மக்கள் அனைவரையும் சேர்க்கும் ஒரு தேசிய விழாவாக மாற்றியவர். நூலின் முதல் கட்டுரை வினாயகரை பற்றிதான். வினாயகரும், கிருஷ்ணனும் நம் தோழர்கள். அவர்களை எப்படி வேண்டுமானாலும் உருவகிக்கலாம், ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஒரு மண் உருண்டையை பிடித்து வைத்து நீதான் பிள்ளையார் என்றால் அவர் பிள்ளையார். இந்த வருடம் கபாலி பிள்ளையார் இருந்தாலும் ஆச்சர்யப்பட முடியாது.
கட்டுரை கணபதி வழிபாட்டைப் பற்றி பல தகவல்களை கூறுகின்றது. நமது பாரம்பர்ய புரணங்களை பற்றி கூறுவதுடன், அதன் மற்ற சாத்தியங்களையும் கூறுகின்றது. பாரதியாரின் பாமாலை, முதல் முறையாக இதில்தான் படிக்கின்றேன். மணக்குள விநாயகரை பற்றிய பாடலை பற்றி விரிவாக பேசுகின்றார். எது எப்படி இருந்தாலும் இன்று கணபதி வழிபாடு என்பது அனைத்து இடங்களையும் அடைந்துள்ளது. எங்கள் ஊரில் கடந்த முறைசென்ற போது சுமார் பதினைந்து பெரிய பிள்ளையாகள். நான் பள்ளியில் படிக்கும் போது இது கிடையாது. ஆனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று பிள்ளையாரை தலையில் வைத்து கொண்டுவந்து பள்ளியில் வைத்து பூஜை செய்வார்கள். கரைப்பதும் அப்படியே ஊர்வலம். ஆனால் அது இப்போது இல்லை என்று நினைக்கின்றேன். பூஜை மட்டும். 

ஐயப்பனை பற்றிய கட்டுரை, வெவ்வேறு தொன்மங்கள் எப்படி கலந்து இன்றைய ஐயப்ப வழிபாடு வந்துள்ளது என்பதை விளக்கமாக பேசும் ஒரு கட்டுரை. சாஸ்தா வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. ஐய்யனாரும் கூட. என்னுடைய உறவினர்கள் பலருக்கு குலதெய்வம் சாஸ்தாவே. ஏதாவது ஒரு சின்ன ஊரில், தனியாக அமர்ந்திருப்பார். ஆனால் மதுரைப்பக்கம் நான் சாஸ்தா கோவில்களை கண்டதில்லை. எங்களூர் சபரிமலைக்கு அருகிலிருக்கும் பகுதி இருந்தும் சாஸ்தாக்கள் கிடையாது. கன்னடர்கள் அதிகம் என்பதால் ஜக்காலம்மனும், முத்தாலம்மனும்தான். சாஸ்தா, ஐயனார் என்னும் தொன்மங்கள் எப்படி மணிகண்டன் என்னும் வரலாற்றுடன் இணைந்து மற்றொரு தொன்மமாக மாறுகின்றது என்பதே இக்கட்டுரையின் சாரம்.

இக்கட்டுரைகள் காட்டுவது, நமது வழிபாட்டு முறை / கலாச்சாரம் மாறி மாறி வந்துள்ளது என்பதுதான். மாறுவது என்பது இயற்கை. எதுவும் நிலையாக அப்படியே இருக்காது. உணவிலிருந்து, உடையிலிருந்து அனைத்தும் மாறும் போது வழிபாட்டு முறை மட்டும் எப்படி மாறாமலிருக்கும். அப்படி மாற்றத்தை இயல்பாக எடுத்துக்கொண்டு காலந்தோறும் தன்னை புதுப்பித்துக் கொண்டு வருகின்றது ஹிந்துமதம். 

தளத்தில் தொடர் வெளியான போது நண்பர் ஆர்.வி (புத்தகங்களை பற்றிய கருத்துக்கள் ஒத்துப்போகும். ஹிந்துத்துவா குறித்த அவரது கருத்துகள் ஒத்துப்போவதில்லை :) ) எழுப்பிய கேள்விக்கு பதிலாக எழுதப்பட்ட  ஒரு கட்டுரை, ஹிந்துத்துவத்தை பற்றியது. எது ஹிந்துத்துவம் என்பதை பற்றி ஒரு பெரிய அலசல். 

இதில் உள்ள மற்றுமொரு முக்கிய கட்டுரை வேர்ல்ட்விஷன் என்னும் மதம்மாற்றி நிறுவனம் பற்றிய கட்டுரை. தமிழ் ஹிந்துவில் வந்த போதே அதைப்படித்துவிட்டு, சொந்தக்காரகள் தெரிந்தவர்கள் என்று அனைவருக்கும் அனுப்பினேன். நினைத்தப்படி இருவர் அதற்கு பணம் அனுப்பி கொண்டிருந்தனர். கட்டுரையை படித்தபின் அதை நிறுத்த போவதாக கூறினர். நம்மால் முடிந்தது. இதற்கு பின் நானும் சில தொண்டு நிறுவனங்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் என்பதை அறிந்து நிறுத்திவிட்டேன். அதன் பின் என் நம்பிக்கை போய்விட்டது. அதற்கு ஒரு தனி நன்றி. 

மகாபாரதம் ஒரு தர்ம நூல் என்றாலும் அதுவும் ஒரு பெண்களின் நூல். பாஞ்சாலியின் கோபம், அதில் வரும் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை. அரசன் மனைவியை பணயம் வைப்பதை இன்றைய அரசுகள் கனிமவளங்களை ஒப்பிடுவது போல தோன்றுகின்றது. ஆனால் அது கட்டுரை பேசுவது பாஞ்சாலியின் கோபத்தைபற்றி. பாரதியாரின் பாடலில் வரும் கேள்வி, அரசனே தர்மத்தை தவறி நடந்தால் என்னவாகும்? இன்றைய இந்தியா கிடைக்கும்.

ராமாயணம், பல நூறு ராமாயணங்கள் இருக்கின்றன. ஜைன, பெளத்த ராமாயணங்கள் கூட இருக்கின்றது. பலருக்கு ராமாயணத்தை கேவலமாக பேச வாய்ப்பளிப்பது இவ்வகையான திரிபுகள்தான். ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் ராமரை காட்டிவிட்டு போகின்றனர். ஆதிகவியின் ராமாயணம் ஒரு வரலாற்று தொன்மத்தின் அடிப்படை என்றால், கம்பராமாயணம் ராமனை அவதார புருஷனாக்குகின்றது. துளசிதாசரின் ராமமாஸ் சரிதம் முழுக்க முழுக்க பக்தி நூல். ஒரு வரலாறு தொன்மமாகி, புராணமாகி அனைவருள்ளும்  கலந்துள்ளது

காந்தியின் ராமராஜ்ஜியம் பற்றிய கட்டுரை, காந்தியின் கனவை எப்படி நேருவின் பாதை அழித்தது என்பதைப் பற்றி பேசுகின்றது. எனக்கு எந்த பெருமாள் கோவில் சென்றாலும் அங்கு எனக்கு தோன்றுவது என் ரெங்கநாதரே அங்கு அந்த உருவில் உள்ளார் என்பது, விஷ்ணுவோ, பெருமாளோ அல்ல ரெங்கநாதர் அதுவும் எங்களூ ரெங்கநாதர் மாட்டுமே. இதனாலேயே காந்தியின் ராம பக்தி என்பது ராமன் என்ற தெய்வத்திடம் இருந்ததாக என்னால் உணர முடியவில்லை. அவர் நம்பிய சத்தியம், தர்மத்தின் உருவம் ராமன். அப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது.

பேயம்மை என்னும் ஒரு கட்டுரை. பேய்களை பற்றிய கட்டுரை. பயம் வேண்டாம். அதைத்தான் அவரும் சொல்கின்றார். பேய் என்பது சிவனின், சக்தியின் வடிவம். காரைக்கால் அம்மையாரை வைத்து அதைப்பற்றி பேசும் ஒரு கோணம்.

ஹிந்து - என்ற சொல்லைபற்றி பலர் பல விளக்கம் கொடுத்துள்ளார்கள். அவற்றை அனைத்தையும் தொகுத்து அளித்துள்ளார். முடிவில் அவர் கூறுவது முக்கியமானது வெள்ளைக்காரன் இட்ட சொல்லல்ல இது, அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கிவரும் ஒரு சொல். இயல்பாக வந்தடைந்த ஒன்றை கம்பீரமாக ஏற்றுக் கொள்ளுங்கள். எவனோ வந்து எனக்கு பெயர் வைத்தான் என்று சிறுமை கொள்ள ஏதுமில்லை.

பாரதமாதாவின் பத்திரத்தின் ஏழாம் பக்கம் - மிக முக்கிய ஒரு கட்டுரை. ஜாதி சண்டைகள் எங்கு வந்தாலும், உடனே இழுத்து எறியப்படும் பெயர் மனு. ஒரு வேளை அவர் எழுதியதுதான் சட்டமாக உள்ளதோ  என்றாலும் அதுவுமில்லை. அது பின் விளைவிற்காக என்று ஓரளவிற்கு ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸை ஜாதி வெறியை தூண்டுகின்றது என்ற புலம்பலும், அவர்கள் பிராமணர்களுக்கு ஆதரவானவர்கள் என்பது எவ்வித பிதற்றல் என்று தெரியவில்லை. எத்தனை பிராமணர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கின்றார்கள். என் சொந்தக்காரர்களில் எனக்கு தெரிந்து ஒருவரும் கிடையாது. அபிமானிகள் உண்டு, ஆனால் களத்தில் இறங்கி வேலை செய்பவர்கள், உறுப்பினர்கள் எல்லாம் பிராமணர்கள் எனக்கு தெரிந்து இல்லை. ஜாதி வேற்றுமையை ஆர்.எஸ்.எஸ் தூண்டிவிடுகின்றது என்பது போன்ற முட்டாள்த்தனம் ஏதுமிருக்காது. ஆர்.எஸ்.எஸ் முயன்று வேலை செய்தால் மட்டுமே ஜாதியை ஓரளவிற்கு ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு. சில புல்லுருவிகள் எங்குமிருக்கலாம், அவர்களை வைத்து ஒரு மகத்தான ஒரு இயக்கத்தையே குற்றம் சாட்டுவது முட்டாள்த்தனமன்றி வேறு இல்லை. சுனாமியின் போதும், சென்னை வெள்ளத்தின் போதும் அவர்கள் செய்த சேவையிலிருந்து அவர்களை புரிந்து கொள்ளலாம். (ஃபேஸ்புக் தயவில் சென்னை வெள்ளத்தின் போது ஆர்.எஸ்.எஸ் பற்றிய பல நிகழ்வுகள் வெளியுலகுக்கு தெரிந்தன).

இட ஒதுக்கீடு என்ற விஷயத்தில் எனக்கு கொஞ்சம் அதிருப்தி உண்டு. கல்லூரியில் நான் யார் யாரிடமோ கடன் வாங்கி, பக்கத்து வீட்டுக்காரரின் பழைய புத்தகங்களை வைத்து படிக்கும் போது, கூட இருக்கும் சிகாமணிகளுக்கு ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் பணம். அதுவும் யாரையோ கூட்டி வந்து கையெழுத்து போட்டுவிட்டு, அடுத்த நாளே காலி செய்வார்கள். ஆனால் அனைவரும் வசதியானவர்கள், தலித்துகள் இல்லை. பார்க்கும் போது எரிச்சல் வரும். கொஞ்ச நாள் போக, நமக்கு கிடைக்காததை பற்றி நமக்கு என்ன கவலை என்ற எண்ணம் வந்தது. இக்கட்டுரை அதை வேறு கோணத்தில் பார்க்க செய்கின்றது. அதில் வரும் உதாரணம் 

"கிராமத்தில் எனக்கு சிறிதளவு விளைநிலம் உள்ளது. நான் நேரில் போய் விவசாயம் செய்வதில்லை. என் அண்ணன் பார்த்துக்கொள்கிறார். ஆனால் வயல் என் பெயரில் இருக்கிறது. ஒரு முறை நிலவளவங்கி என் பெயருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. என் நிலத்தை வைத்து வாங்கப்பட்ட கடனை அடைப்பது குறித்தது அந்த நோட்டீஸ். எனக்கு ஆச்சரியம். வயல் மீது நான் கடன் வாங்கவே இல்லை. வங்கியில் போய் விவரம் கேட்டேன். என் பெயரில் கடன் வாங்கியிருப்பது உண்மைதான் என்று தெரியவந்தது. என் பூமிப்பத்திரத்தின் 7 ஆம் பக்கத்தில் கடன் விவரம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆக, நான் ஒரு போதும் வாங்காத கடனை நான் அடைக்க வேண்டியிருந்தது." வயல் மீது வாங்கிய கடனைப் பற்றிய 7 ஆம் பக்க கதையைக் கூறிவிட்டு ஸ்ரீ நவ்லே கூறுகிறார்: "நமது பாரத மாதாவின் பத்திரத்திலும் இது போல் 7 ஆம் பக்க விவரம் என்ன என்று பார்க்க வேண்டும். நமது முன்னோர்கள் நம் பெயரில் நிறைய கடன் வாங்கியிருப்பது தெரியவரும். அந்தக் கடனை நாம்தான் அடைக்க வேண்டும். 'நமது தலைமுறை தலித்துகளை கொடுமைப்படுத்தவில்லை' என்று சொல்லி தப்பி விடமுடியாது. காரணம், நம் முன்னோர்களின் கடன் நமது பூமி பத்திரத்தின் ஏழாம் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. அதை நாம் அடைத்துதான் தீர வேண்டும். இந்த நிலத்திலிருந்து கிடைக்கிற இலாபத்தை அனுபவிக்கிற நாம் இந்த நிலத்தின் மீதுள்ள கடனை எப்படி மறுக்கமுடியும்? நாம் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் என்பதால் அதன் மீதுள்ள கடனுக்கும் பொறுப்பு ஏற்கத்தான் வேண்டும்."

இதைப்பற்றி பேசும் புத்தகம் "சங்க, மனு ஆணி மீ" (சங்கமும், மனுவும், நானும்)" . மேலும் படிக்க இங்கே 

சில கட்டுரைகள் நமது பக்தி பாரம்பர்யத்தில் உள்ள சில விஷயங்களின் நுணுக்கங்களை காட்டுகின்றது. லலிதா சகஸ்ரநாமத்தை பற்றிய ஒரு கட்டுரை. நடராஜர் பற்றிய ஒரு கட்டுரை. நடராஜ சிற்பம், அற்புதம் என்பது புரிகின்றது. ஆனால அதன் தத்துவம் எல்லாம் என் தலையுல் ஏறவில்லை. படித்ததே இல்லை. 

இறுதி கட்டுரை, மிகப்பெரியகட்டுரை. வேத பாரம்பர்யத்தை பற்றிய ஒரு கட்டுரை. கேள்வி - பதில் கட்டுரை (நமக்கு நாமே பாணி இல்லை). சைவ சிந்தாந்தம் என்பது ஒரு தனிப்பிரிவு என்பதே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியும். அதற்கும் வேதத்திற்கும் இருக்கும் (அ) இருப்பதாக கூறப்படும் முரண்பாடுகள் பற்றிய பெரிய விளக்கம்.

அப்துல்கலாம் பற்றிய  ஒரு கட்டுரை. அவரது மறைவை ஒட்டி எழுதப்பட்டது. 

வியாசரை பற்றி ஒரு முக்கிய கட்டுரை. வியாசர் என்பவர் ஒருவரல்ல என்பது ஓரளவிற்கு ஒத்துக்கொள்ள கூடியது. காலக்கணக்குப்படி பார்த்தால் வியாசரின் வயது தலைசுற்றும். இக்கட்டுரை பல விஷயங்களை அலசுகின்றது. நிலமென்னும் நல்லாள் என்னும் மற்றுமொரு கட்டுரை ''ஆக்கவும் காக்கவும் அழிக்கவும் சக்தி படைத்தவள் அவள்." என்று முடிகின்றது. எதைப்பற்றி என்று யூகித்துக் கொள்ளலாம்.

என் மதம் இது என்பதை சொல்ல தயங்கும் ஆட்களை ஒரே மதம் ஹிந்து மதமே. நமக்கு அந்த தாழ்வுணர்ச்சியை பல விதமாக நம்முள் புகட்டியிருக்கின்றார்கள். நான் ரொம்ப முற்போக்குவாதியாக்கும் என்று அனைத்தையும் எதிர்ப்பது, மற்றவர்களை விட அதிகம் நமது பாரம்பர்யத்தை கிண்டல் செய்வது, வலிய அடிக்கடி நான் நம்பவில்லை நம்பவில்லை என்று தனக்குத்தானே கூறிக்கொள்வது (ஏதாவது நடிகர் நினைவிற்கு வந்தாலோ, வராவிட்டாலோ நான் பொறுப்பல்ல) ஒரு பெரிய அறிவுஜீவித்தனம் என்று கருதப்படும் அவலம்தான் இருக்கின்றது. 

ஒருவன் ஹிந்துமதத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய விஷயத்தை கூறினாலும் போதும், அவனுக்கு உடனே அவன் ஒரு ஹிந்துத்துவா ஆசாமி, ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என்று அடித்துவிடுவது. சமீபத்தில் கூட வா.மணிகண்டன் படிப்பிற்கும் வேலைக்கும் உள்ள தொடர்பையும், பிடித்த வேலையை செய்வதைப் பற்றியும் எழுதியிருந்தார். உடனே அவருக்கும் இதே சர்ட்டிபிகேஷன் தரப்பட்டுள்ளது. காரணம் சுலபம், மணிகண்டன் படிப்பிற்கும் வேலைக்கும் தொடர்பில்லை என்கின்றார்எ =  அவர் படிக்க வேண்டாம் என்று சொல்கின்றார் = வேலை செய்ய சொல்கின்றார் = அவர் அனைவரையும் படிக்காமல் வேலை செய்ய சொல்கின்றார் = ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி = இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல். எப்படி சமன்பாடு? அடிபட்டவர்களும் கொஞ்சம் பம்பிவிடுவார்கள். எதற்கு வம்பு என்று. இந்த சூழலில் ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு பகிர்வது கூட சாத்தியமற்றதாகின்றது. 

இப்புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் பேசுவது நமது பாரம்பர்ய பண்பாட்டை. அதை வெறும் நம்பிக்கையாகவோ அல்லது ஒரு சுய பெருமையாகவோ சொல்லாமல், அறிவியல் பூர்வமாகவும், வரலாற்று ரீதியாகவும் அணுகுகின்றார். ஹிந்து மதம் சார்ந்த எந்த ஒரு விஷயத்தையும் தட்டையாக புரிந்து கொண்டு, அதை முட்டாள்த்தனமாக வியாக்யானம் செய்து அவதூறு பரப்பும் முட்டாள்களுக்கு, இந்நூலில் குறிப்பிடப்படும் தர்க்கரீதியான பதில்களை புரிந்து கொள்ளவும் மூளை இருக்குமா என்பது சந்தேகமே, அதே சமயம் நிஜமான கேள்விகளுடன் வருபவர்களுக்கு ஒரு நல்ல சவாலாக இருக்கும். இன்றைய பாரத பண்பாட்டில் இருக்கும் பல விஷயங்களின் வேர்களை புரிந்து கொள்ள வழி செய்கின்றது இப்புத்தகம். 

ஜடாயு நம்மிடம் வைப்பது நமது பாரம்பரியத்தின் பெருமையை மட்டுமல்ல, அதன் வரலாற்றையும், அரசியலையும் சேர்த்தே சொல்கின்றார். நமது பாரத பண்பாடு என்பது எத்தகையது என்று வெற்று பெருமை கொள்ளாமல், அதை புரிந்து கொண்டு பெருமை படுங்கள் என்கின்றார். இன்றைய அரசியல் நிலையில் அதை பொருத்திப்பார்த்து அதனுடைய இடம் என்ன. இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அறிவை, நமது முன்னோர்களிடமிருந்து பெற்றுக் கொள்வது எப்படி என்பதை சொல்கின்றார். இந்நூல் ஹிந்துத்துவர்களுக்கு, ஆர். எஸ். எஸ்க்காரர்களுக்கு என்று ஒதுக்கி தள்ள நினைத்தால் அதன் நஷ்டம் நமக்கே. பல பக்தி புத்தகங்களை படிக்கும் போது, அந்த பக்திக்கு பின்னால் திரண்டு எழுந்து நிற்கும் நமது பாரம்பர்ய, வரலாற்று உண்மைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஜடாயுவின் எழுத்து நடையும் மிகவும் தேர்ந்தது. சொல்ல வந்ததை அழகாக சொல்லி, தேவையான தரவுகளுடன் நமக்கு தருகின்றார். முதலில் நான் பெரிதும் வியப்பது அவரது ஞானம், ஆழ்ந்த தமிழ் புலமை. சமஸ்கிருத வல்லமையும் கொண்டவர் என்று நினைக்கின்றேன். சிறந்த இலக்கிய வாசகர். நமது பாரம்பர்யத்தின் மீதான அவரது அறிதல்கள் எனக்கு வியப்பானது. ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னால் உள்ள அவரது ஆழ்ந்த வாசிப்பு வியக்க வைக்கின்றது.  

கட்டுரைகள் அனைத்தும் தமிழ் ஹிந்துவில் இருக்கின்றன. இருந்தும் புத்தகமாக படிப்பது சுகம்.

ஜெயமோகன் எழுதியுள்ள ஒரு நல்ல அறிமுகம்.


தடம் பதிப்பகம் வெளியீடு. மிக தரமாக வெளியிட்டுள்ளார். வாங்க...

படங்கள் அனைத்தும் தமிழ் ஹிந்துவிலிருந்து, அவரது கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக