18 ஜூலை 2017

விலங்குப் பண்ணை - ஜார்ஸ் ஆர்வெல்

கம்யூனிசத்தை, கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்து பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் இந்த நூல் வித்தியாசமானது. நேரடியாக விமர்சிக்காமல், விலங்குகளை வைத்து கடுமையான விமர்சனத்தை வைக்கும் புத்தகம். George Orwell எழுதிய Animal Farm என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு, மொழி பெயர்ப்பு  என்பதா தோன்றாத நடை. நேரடியான தமிழ் நூல் போன்றே உள்ளது.

ஜோன்ஸ் என்னும் ஒருவரின் பண்ணையில் வாழ்ந்து வந்த விலங்குக்கூட்டத்தில் ஓல்ட் மேஜர் என்ற பன்றி ஒரு நாள் தன் பொன்னுலக் கனவை மற்ற விலங்குகளிடையில் சொல்லிவிட்டு மரணமடைகின்றது. அதன் பின் ஸ்நோபால் என்னும் மற்றொரு பன்றி, நெப்போலியன் என்னும் பன்றியுடன் சேர்ந்து பண்ணையை ஜோன்ஸிடமிருந்து கைப்பற்றுகின்றது. முதலில் விலங்குகளுக்கு சம உரிமை என்று கனவுடன் ஆரம்பிக்கும் விலங்குப் பண்ணையில் நெப்போலியன் கை ஓங்குகின்றது. ஸ்நோபாலை துரோகி என்று குற்றம் சாட்டி வெளியே விரட்டுகின்றது நெப்போலியன். அதற்கு தன்னுடன் ஒரு நாய்ப்படையை வைத்து அனைவரையும் மிரட்டி பணிய வைக்கின்றது. அதே சமயம் மற்றொரு பன்றியின் மூலம் விலங்குகளை அனைத்தும் அவர்களின் நன்மைக்கே என்று நம்பவும் வைக்கின்றது. மெதுவாக சர்வாதிகாரத்திற்கு செல்கின்றது நெப்போலியன். விரட்டிவிட்ட மோசஸ் என்னும் காகம் வருகின்றது. மெதுமெதுவாக பண்ணை பழைய நிலைக்கு போகின்றது. மனிதர்களின் தலைமைக்கு பதிலாக விலங்கு. 

ஸ்டாலின் மற்ற தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு ரஷ்யாவை வதைத்த கதைதான். கம்யூனசத்தை பற்றிய பல விமர்சன நூல்களை படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் கம்யூனிசத்தை பற்றி ஒன்று தெரியாமல் இருந்தாலும் கூட புத்தகம் சுவாரஸ்யம் தரும்.

மக்களை மக்களில் ஒருவனாக இருந்து ஆளப்போவதாக சொல்லி பதவியை பிடித்து, மெதுவாக மற்ற மக்களைவிட தலைவர்களாகிய நாங்கள் கொஞ்சம் மேம்பட்டவர்கள் என்று திரும்பி, உங்களுக்கு என்ன தேவை என்பது தலைவனான எனக்குதான் தெரியும் என்று ஆரம்பித்து, நான் சொல்வதுதான் உங்களுக்கு நல்லது என்று மக்களை விலங்குகளாக்கிய தலைவர்களை பற்றிய விமர்சன நூல். சுவாரஸ்யமான நூல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக