24 அக்டோபர் 2018

என்னை நான் சந்தித்தேன் - ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், புத்தகம் படிக்கும் அனைவருக்கும்  தெரிந்த பெயர், பெரும்பாலும் படித்திருப்பார்கள். சிலர் படித்திருந்தாலும் படிக்காத மாதிரி காட்டி கொள்வார்கள். சுமார் 1500 நாவல்களுக்கு மேல் எழுதி குவித்தவர், எழுத்தை முழு நேர வாழ்க்கையாக கொண்டவர்.  குற்றப் பிண்ணனியில் கதைகள் எழுதும் ஆசிரியர்களில், ராஜேஷ்குமார்தான் தலைசிறந்தவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சிறிய உதாரணம், ஜெயமோகனின் உலோகம். சாகச நாவல் என்ற பெயரில் எழுதப்பட்ட நாவல். பல இடங்களில் கண்ணை சுழட்டியது. ஆனால் ராஜேஷ்குமாரின் நாவல்கள் நம்மை கீழே வைக்க விடாது. ராஜேஷ்குமார் போலவே, சுபா, பட்டுக்கோட்டை பிராபகர், ஆர்னிகா நாசர் என்று பலர் க்ரைமை எழுதினாலும் ராஜேஷ்குமாரின் நாவல்களில் வரும் புதுமை இவர்களிடம் இல்லை. பெரும்பாலும் அரைத்த மாவு ப்ளெஸ் சண்டை ஆக்‌ஷன்.  சுஜாதா க்ரைம் எழுதினாலும் அது வேறுவகையாக தெரியும். ராஜேஷ்குமாரின் சைன்ஸ் ஃபிக்‌ஷன் வேறுவகையாக இருக்கும். 

ஒரு குற்றம் நடக்க ஆசைதான் காரணமாக இருக்கும் என்பது பலரின் எண்ணம். விழைவை மிஞ்சி, பல காரணங்கள் இருக்க கூடும், காரணமேயின்றி கூட குற்றங்கள் நிகழக்கூடும் என்பதை அவரது பல கதைகளில் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார். அவரது ஆயிரக்கணக்கான நாவலகளில் குறைந்தது சில் நூறு நல்ல நாவலக்ள் தேறும். பல சும்மா இடது கையில் எழுதிய வகையறா, பத்து பதினைந்து நிமிடங்களில் படித்துவிட முடியும். ப்ளாக்மெயில் கதைகள், தெரியாமல் கொலை செய்துவிட்டு அதை மறைக்க திண்டாடும் அப்பாவிகளின் கதைகள் என்று ஒரே பேட்டர்ன் பல கதைகளில் உண்டு. அவையெல்லாம், சரி எழுதி தொலைப்போம் என்று அரைத்தூக்கத்தில் எழுதிய வகைதான். இருந்தும் அதில் ஏதாவது ஒரு சிறிய எதிர்பாராத அம்சத்தை வைத்துவிடுவார். சிறுவயதில் அவர் கதைகளை படித்து வளர்ந்தவன் நான். அம்புலிமாமா, சிறுவர்மலரிலிருந்து ராஜேஷ்குமார் தான் அடுத்த லெவல். ராஜேஷ்குமார் நாவலல்களில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம், எல்லைமீறாத எழுத்து. தைரியமாக பதின் பருவத்தவர் படிக்கலாம். ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். உடனே, இளவயதில் குற்றம், ரத்தம், பழி உணர்ச்சி என்றெல்லாம் பேசக்கூடாது. 

ராஜேஷ்குமார் எழுதிய அவரது வாழ்க்கை அனுப்வங்களின் தொகுப்புதான் என்னை நான் சந்தித்தேன். 

அவரது நாவலைப் போலவே அவரது வாழ்க்கையும் எதிர்பாராத திருப்பங்களல் நிறைந்திருக்கின்றது. எழுத்து அவரைத்தேடி வந்துள்ளது என்றுதான் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதோடு, தோல்வி என்பதை எப்படி தீர்மானிப்பது என்ற கேள்விக்கு ஓரளவு பதிலையும் தருகின்றது. 

ஒருமார்க்கில் அவர் எதிர்பார்த்த அக்ரி படிப்பை விட்டுள்ளார், வேலைக்கு அனைத்தும் தயாரான நிலையில் அனைத்து சான்றிதழ்களையும் தொலைத்துவிட்டு வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளார், குக்கிராமத்தில் ஆசிரியர் வேலை, அதை மறுக்க போய் ஒருவருட காத்திருப்பு பிறகு அனைத்திற்கும் சம்பந்தமில்லாமல் ஊர் ஊராக செல்லும் வேலை என்று இருந்தாலும் எழுத்து அவரை விடாமல் விரட்டியிருக்கின்றது. குமுததத்திற்கு சுமார் 170 கதைகளை அனுப்பியதை படிக்கும் போது மலைப்புதான் வருகின்றது. அதை என்னவென்று சொல்வது. அவரது சிறுகதைகளின் தளம் சாதரணமானதுதான், சுஜாதா, திஜா என்று எல்லாம் ஒப்பிடமுடியாது. இருந்தாலும் ஒரே பத்திரிக்கைக்கு அத்தனை கதைகளை எழுதி அனுப்புவது என்றால் அதன் பின்னால் இருக்கும் உழைப்பு, அத்தனை கதைகளை எழுத முடிந்த அவரது கற்பனை, அனைத்தையும் விட அவர் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை, சோர்வின்மை பலவற்றை கற்று தரும்.

ரயில்வே கூலி போர்ட்டர் ஒருவர், ரயில் வந்ததையும், பயணிகள் வருவதையும் கூட கண்டு கொள்ளாமல் ராஜேஷ்குமாரின் நாவலைப் படிப்பதை கண்ட எஸ்.ஏ.பி அவரை மிகச்சரியாக மதிப்பிட்டுள்ளார். சாவி, மணியன், விகடன் பாலசுப்ரமணியன், குமுதம் எஸ்.ஏ.பி, லேனே தமிழ்வாணன் என்று பல பத்திரிக்கையுலக பெரியவர்களின் குட் புக்கில் இருந்தவர். 

எழுதுவதை முழு நேர பணியாக கொண்டு அதை வைத்து சம்பாத்தியமும் கொஞ்சம் செய்திருக்கின்றார். இன்று அது கடினம். எழுதுவதை முழு நேரமாக கொள்ள அவர் திரைப்படம் அல்லது தொலைக்காட்சியில் பணி புரிந்தால் மட்டுமே பிழைக்க முடியும். ஆனால் அவருக்கு அது சாத்தியமல்ல என்றே தோன்றுகின்றது. திரைத்துறையினர் அவருக்கு அளித்த பரிசு அப்படி.

அவரது பல நாவல்களில் திரைத்துறையினரை பலவாறு கேலி, கிண்டல் செய்வார். திரைத்துறை மீது அவர் அவ்வளவு வெறுப்படைய காரணங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றது. மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார். எழுத்தாளர்களை ஏமாற்றுவது என்பதை திரைத்துறையினர் ஒரு  கலையாகவே பயின்றுள்ளனர். ஜெயமோகன் தனக்கு நல்ல மதிப்புள்ளதாக் கூறுகின்றார், அவரது நூல்களிலிருந்து திரைப்படத்திற்கு திருட அதிகம் ஏதுமில்லை. ஆனால் ராஜேஷ்குமாரிடமிருந்து ஏராளமாகத் திருடலாம். மீண்டும் மீண்டும் அவரை ஏமாற்றியிருக்கின்றனர். அவரும் சளைக்காமல் ஏமாந்திருக்கின்றார். 

சுஜாதா தன் கதை சிதைக்கப்படுவதை பற்றி பல முறை வருத்தப்பட்டு புலம்பியிருக்கின்றார். இதில் வரும் ஒரு கிசுகிசு டைப்பிலிருக்கும் ஒரு கட்டுரையில் வரும் எழுத்தாளர் அவர்தானோ என்று சந்தேகம் கூட வருகின்றது. கதையை திருடுவது ஒன்று, கதையை சிதைப்பது மற்றொன்று. சண்டமாருதம் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதிய ராஜேஷ்குமார் அப்படம் அடைந்த கதியை நினைத்து மறுபடியும் கால் வைக்க தயங்குவார் என்றே தோன்றுகின்றது.

சுவாராஸ்யமான புத்தகம். 

இந்நூல் மாதநாவல்கள், தொடர்கதைகளின் பொற்காலத்தை பற்றிய சித்திரத்தை தருகின்றது அதோடு திரைதுறையினரின் கயமைத்தனத்தையும் காட்டுகின்றது. 

அவரது வாழ்வின் சம்பவங்கள் பல, புனைவை விட நிஜவாழ்க்கை அதிக திருப்பங்கள் நிறைந்தது, தர்க்கங்களுக்குள் அடங்காதாது என்பதை மறுபடியும் நிரூபிக்கின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக